பாஜகவின் பொறுப்பு அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் செயல்திட்டம் அபாரமானது. அவர்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவோ, அதிக இடங்களைப் பிடிக்கவோ தற்போதைக்கு எந்தத் திட்டமிடலிலும் இல்லை. அவர்களுக்கு எதிரான செயல்திட்டங்கள் வகுக்க வேண்டியவர்கள் அதிமுகவும், திமுகவும் தான்.
அதிமுக அதற்கான வாய்ப்புகளை முயற்சி செய்யாது. ஓட்டுக்குப் பணம் என்கிற திராவிட பார்முலா இருக்கிறது. இது திமுகவிற்கும் பொருந்தும் தான். ஆனால் தன் கட்சிக்காரர்களிடம் பணத்தைக் கொண்டு சேர்ப்பதில் கொஞ்சம் அதிகம் நேர்மையைக் கடைபிடிக்கும் கட்சியாக அதிமுகவே மெய்ப்பித்துள்ளது. கூடுதல் செயல்திட்டம் வகுக்க வேண்டிய திமுகவோ பார்ப்பனர் கிஷோரிடம் தலைமை ஆலோசனைப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டது. பாஜகவைப் பொருத்த வரை இது முதல் வெற்றி.
எந்தப் பார்ப்பனியத்தை பெரியார் எதிர்த்தாரோ அந்த அடிப்படைக் கொள்கையைக் கை கழுவியவுடன் திமுகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்ட புத்துணர்வில் பாஜக செயல்பட உள்ளது. பட்டியல் வகுப்பு பழங்குடியினரைத் தலைமைப் பதவிகளில் அமர்த்துவதாக பாஜக திரைக்கதை எழுதுகிறது.
இதன் நோக்கம் அதிகாரப் பதவிகளில் எஸ்சி, எஸ்டி மக்களை அமர்த்திட வேண்டும் என்பதல்ல. திராவிடக் கட்சிகளில் வெறுமனே அதிகாரமில்லாத் துணைப் பதவிகளைக் கொடுத்திருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய எஸ்சி, எஸ்டி மக்களிடம் குழப்பதை ஏற்படுத்தி, வாக்குகளை நாம் தமிழருக்கோ, மக்கள் நீதி மையத்திற்கோ, 49 ஓ-விற்கோ சிதறடித்தாலும் அது பாஜகவிற்கான வெற்றியாகவே அமையும்.
திராவிடத்தையும், பெரியாரையும் புகழ்வதாக சொல்லிக் கொண்டு தங்களை அறியாமல் திமுக 'பகுத்தறிவாளர்கள்' தற்போது தலைவர் அம்பேத்கரின் பௌத்த ஏற்பையும், பட்டியல் வகுப்பு பழங்குடியினரின் ஆதிக்க எதிர்ப்பையும் சீண்டியே வருகின்றனர். எஸ்சி, எஸ்டி மக்களிடம் திராவிடக் கட்சிகளுக்கான வலிமையான வாக்குவங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதைத் தனது கூட்டணிக் கட்சியான அதிமுகவிற்குத் திருப்புகிற பணியை சிறப்பாக செய்வதற்கு, திமுவின் இந்த செயல்பாடுகள் நிச்சயமாக பாஜகவிற்கு உதவிடும்.
ஆதிதிராவிடர்களுக்கு நாங்கள் இதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று அவர்களின் சுயமரியாதையை திமுகவினர் தொடர்ந்து சீண்டி வருவதை அதன் தலைமையோ, தோழமைக் கட்சிகளோ சுட்டிக் காட்டி, திருத்துவதாகத் தெரியவில்லை. "எஸ்சி, எஸ்டி மக்கள் விசுவாசத்தோடு இருக்க வேண்டும்" என்கிற மகாபாரத பார்முலாவைத் தற்போது திராவிடக் கட்சிகள் கொண்டிருப்பதை பாஜக அறுவடை செய்வதற்கான திட்டமிடலோடு உள்ளது.
தற்போது பௌத்தம் ஏற்பில் பெருக்கம் அடைந்துள்ள பட்டியல் வகுப்பினர் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. திராவிடக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ, தமிழ்த் தேசியக் கட்சிகளோ, புதுக் கட்சிகளோ பாபாசாகிப் சொன்ன அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியாது, நாம் தான் அதன் நோக்கத்தை அடைய வேண்டும் என்கிற தீர்மானத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சுயமரியாதைச் சிந்தனையுள்ள பட்டியல் வகுப்பு பழங்குடியினரின் வாக்குகள் சிதைந்தாலும் அது திமுகவையே பாதிக்கும்.
எனவே எஸ்சிஎஸ்டி மக்களிடம் நெருக்கமான நட்பையும், தலைவர் அம்பேத்கரை நெருக்கமான உறவாகவும் பழக்கிக் கொள்ள வேண்டிய தேவையை திமுக உணர வேண்டும். இந்த மனமாற்றம் உடனடியாக திமுகவிற்கு வராது என்பதற்காகத்தான் 'பௌத்தத்திற்கு எதிரான ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைப் பட்டியல் வகுப்பு பழங்குடியினரிடம் கொண்டு சென்று, அவர்களிடம் இல்லாத சுயஜாதிப் பற்றை வளர்த்தெடுக்க' பாஜக திட்டமிட்டுள்ளது.
எங்கள் கட்சியிலும் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்கிற சூத்திரச் சித்தாந்தத்தைக் கைவிட்டு, தந்தை பெரியாரின் பார்வையிலான தலைவர் அம்பேத்கரை முழு ஆற்றலோடு மக்களிடம் கொண்டு செல்லாவிட்டால் திமுகவின் ஆட்சிக் கனவுக்கு பாஜக வலிமையான சிக்கல்களைத் தரும்
- செந்தமிழ் சரவணன்