i cant breathe protestஅமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமாகிய மினிசோட்டாவின் தலைநகராக இருப்பது மினியோ பொலிசு எனும் நகரமாகும். கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு கடையில் 20 டாலர் கொடுத்து சிகரெட்டினை வாங்குகிறார் ஜார்ஜ் பிளாய்டு (46) எனும் கறுப்பினத்தவர். ஆனால் அவர் கொடுத்த பணம் போலியானது எனப் புகார் செய்கிறார் கடைக்காரர். உடனடியாக அங்கு வந்த காவலர்கள், கடைக்கு அருகில் தனது காரில் அமர்ந்திருந்த ஜார்ஜ் பிளாய்டுக்குக் கைவிலங்கிட்டு, காரின் சக்கரத்திற்கு அடியில் தள்ளி, அவரின் தொண்டையில் முழங்காலை வைத்து அழுத்துகிறான் வெள்ளையினக் காவலன் ஒருவன்.

இந்த வன்முறைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், பிளாய்டு கதறுகிறார். "என்னால் மூச்சு விட முடியவில்லை" எனக் கதறுகிறார். எனக்கு உதவுங்கள் எனக் கெஞ்சுகிறார். தண்ணீர் கேட்டுக் கண்ணீர் சிந்துகிறார். ஆனால், வெள்ளையின வெறிபிடித்த அந்தக்காவல் மிருகம் சிறிதும் இரக்கமின்றி மென்மேலும் தனது முழங்காலால் பிளாய்டை அழுத்திக்கொண்டே இருக்கிறான். இறுதியில் மூச்சு விட முடியாமல் ஒன்பது நிமிடத்திற்குள் பிளாய்டு பிணமாகச் சாய்கிறார். அவர் இறந்த பிறகும் அவரை நசுக்கிக் கொண்டிருந்த தனது முழங்காலை அந்தக் காவலன் எடுக்கவே இல்லை. அங்கிருந்த ஏனைய மூன்று வெள்ளைவெறிக் காவலர்களும் இப்படுகொலைக்கு உடந்தையாகக் கடைசிவரை உடன் இருந்திருக்கிறார்கள். பிளாய்டு படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவரது இரண்டாவது மகள் (ஆறு வயது) அவர்கள் வந்த காருக்குள்தான் இருந்திருக்கிறார் என்பதுதான் கொடுமை. இந்தப் பச்சைப் படுகொலையைச் சாலையிலிருந்த 17 வயது இளம்பெண் ஒருவர் முழுமையாகத் தன் கைபேசியில் பதிவு செய்து அதைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுகிறார்.

அவ்வளவுதான். அந்தக் காணொலியைக் கண்ட அமெரிக்க மக்கள் இனி பொறுப்பதில்லை எனப்பெரும் ஆவேசத்தோடு கொதித்தெழுந்தார்கள். இப்பொழுது அமெரிக்காவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றைப் பற்றிக் கவலைப் படாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜார்ஜ் பிளாய்டின் படுகொலைக்கு நீதி கேட்டு அமெரிக்க வீதிகளில் போராடி வருகின்றனர். போராடும் மக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் கைது, தடியடி, கண்ணீர்ப்புகைக்குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, ஊரடங்குச் சட்டம், ஊடகவியலாளர்கள் கைது, பல மாகாணங்களில் நெருக்கடி நிலை அறிவிப்பு என அமெரிக்காவே பெரும் பதற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா மட்டுமல்லாமல், கனடா, பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, லெபனான், ஆப்பிரிக்கா என உலகில் பல்வேறு நாடுகளில் இந்த நிறவெறிப் படுகொலையைக் கண்டித்து மாபெரும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து எழுச்சியுடன் நடந்து வருகின்றன. உலகெங்குமுள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இப்போராட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விரிவான செய்திகளை வெளியிடுகின்றன.

இத்தருணத்தில் காவலர்கள் கருத்தை நெறித்ததால் பிளாய்டு இறக்கவில்லை எனவும், அவருக்கு ஏற்கெனவே இதய நோய் இருந்ததால் அவர் இறந்து விட்டார் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் மருத்துவ அறிக்கை, பிளாய்டு உயிரிழந்த முறை கொலை போன்று உள்ளது என அறிவித்துள்ளது.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப் போராட்டக்காரர்களை உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்றும், திருடர்கள் என்றும், நாய்கள் என்றும், கழிசடைகள் என்றும் ஏசியதோடு, போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்குமாறு காவல்துறைக்கு ஆணை இடுகிறார். ஆனால் ஹூஸ்டன் காவல்துறைத் தலைவர் ஆர்ட் ஏஸ்விடோ, டிரம்பின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சைக் கண்டித்ததோடு, "போராட்டத்தை நல்ல முறையில் முடிப்பதற்கான பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருங்கள் என இந்த நாட்டின் காவல்துறைத் தலைவர்கள் சார்பில் தெரிவிக்க விரும்புகிறேன்" எனக் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.

போராட்டங்களை நசுக்க இராணுவத்தை அனுப்புவேன் எனக் கொக்கரித்த டிரம்புக்குப் பதிலடி கொடுப்பது போல் இராணுவ உயரதிகாரி மார்க் மில்லே ஒரு செய்தியை இராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில் "கருத்துரிமை மற்றும் அமைதியாகப் போராடுவதற்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் அமெரிக்க அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதாக உறுதி ஏற்றுள்ளோம். அதை நாம் மறக்கக் கூடாது" என நினைவூட்டி டிரம்புக்கு எதிர்நிலை எடுத்து உள்ளார். இதே போன்ற செய்தியை இராணுவத்திலுள்ள பிற அதிகாரிகளும் வெளியிட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் மாட்டிஸ் ரிப்ஸ் "அமெரிக்க மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்காத முதல் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் விளங்குகிறார். அது மட்டுமல்ல. ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக நடிப்பதற்குக் கூட அவர் ஆயத்தமாக இல்லை. சட்ட வழியிலான போராட்டங்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தும் அவரது நாசிச அணுகுமுறை குடிமைச் சமூகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையில் ஒரு பொய்யான முரண்பாட்டைத் தோற்றுவித்து விடும். போராட்டங்களுக்கு எதிராக நாம் இராணுவமயமாக வேண்டிய தேவையில்லை. சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம்" என்று தனது கடுமையான எதிர்ப்பினை அவர் தெரிவித்துள்ளார். (இந்தியாவில் இதைப் போலக் காவல்துறை மற்றும் இராணுவத் துறையைச் சார்ந்த ஏதாவது ஒரேயொரு தலைமை அதிகாரி தனது எதிர்ப்புக் குரலை அரசுக்கு எதிராக எங்கேனும் எழுப்ப முடியுமா?)

டிரம்பின் எச்சரிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு மிகுந்த ஆவேசத்தோடு எண்ணற்ற அமெரிக்கர்கள், வெள்ளை மாளிகையை நோக்கிப் பேரணியாக வருவதை அறிந்ததும், ஒரு கோழையைப் போல டிரம்ப் பூமிக்கடியிலுள்ள பதுங்குகுழியில் போய் அச்சத்தோடு ஒளிந்து கொள்கிறான். போராட்டக் காரர்கள் கலைந்து சென்ற பிறகு தான், பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்தான் டிரம்ப். அந்த அளவுக்கு இப்போராட்டம், அமெரிக்க நிறவெறி அரசை நிலை குலையச் செய்துள்ளது. வெள்ளை மாளிகைப் போராட்டத்தில் வன்முறையைப் பயன்படுத்தியதை எதிர்த்து, அமெரிக்க உளவு நிறுவனமான பென்டகனிலிருந்து ஓர் உயர் அதிகாரி பதவி விலகி இருக்கிறார். அமெரிக்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் போராட்டத்திற்கு எதிராக இராணுவத்தைப் பயன் படுத்த முயலும் டிரம்பின் போக்கை எதிர்த்துள்ளார். தவிரவும், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சிக்குள்ளேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் டிரம்பை எதிர்த்து சனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ஜோ பிடன், "அமெரிக்க மக்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்த டிரம்ப் முயல்வதை ஏற்க முடியாது." எனத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும் போப் ஆண்டவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஈரான் அதிபர் கொமேனி, கனடா அதிபர் ஜெஸ்டின் டுரோடோ ஆகியோரும் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையைக் கண்டித்துள்ளனர்.

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான நிறவெறி என்பது பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது என்பதை அந்நாட்டின் வரலாறு தெளிவு படுத்துகிறது. அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களை வந்தேறிகளான வெள்ளைக்காரர்கள் கொன்று அழித்த பிறகு, ஏவல் பணிகளைச் செய்வதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து கறுப்பின மக்களை அழைத்து வந்து அடிமைகளாக வேலை வாங்கி வந்தனர், அமெரிக்க வெள்ளையர்கள் . சொல்லொணாக் கொடுமைகளுக்குக் கறுப்பின மக்கள் உள்ளாக்கப்பட்டனர். அதை எதிர்த்து ஆபிரகாம் லிங்கன்
(1809 - 1865) குடியரசுத் தலைவரான பிறகு, 1865-ஆம் ஆண்டு அடிமை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே ஜான் வில்சு பூத் எனும் வெள்ளையின வெறியனால், லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு நிறவெறி சற்றுக் குறைந்ததே தவிர, முற்றிலும் ஒழிந்து விடவில்லை.

மார்டின் லூதர் கிங் (1929 - 1968) எனும் கறுப்பினப் பாதிரியார், கறுப்பின மக்களின் உரிமைக்காக அறவழியில் போராடினார். அவரும் வெள்ளை அமெரிக்கனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மால்கம் X (1925 - 1965) எனும் கறுப்பினப் போராளி நிறவெறிக்கு எதிரான மிகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தார். அவரும் இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் தோன்றிய கூ கிளக்ஸ் கான் (Ku Klux Khan - KKK) எனும் வெள்ளை இனவெறி இயக்கம் 1860 ஆம் ஆண்டில் நாதம் பெட்போர்டு பாரஸ்டு என்பவரால் டென்னிசி மாகாணத்தில் முதன்முதலாகத் தொடங்கப் பட்டது. இது ஒரு நவீன பாசிச இயக்கம் ஆகும். கறுப்பின மக்களை அமெரிக்காவிலிருந்து முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும், வெள்ளைத் தேசியத்தை (White Nationalism) உயர்த்திப் பிடிக்க வேண்டும், 100% "தூய்மையான" அமெரிக்காவை உருவாக்க வேண்டும் என்பன இந்த நவீன நாஜி இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளாக இருந்தன. இந்த வலதுசாரித் தீவிரவாத இயக்கம் தனது நோக்கத்தை நிறைவேற்ற வன்முறையே ஏற்றது என முடிவெடுத்து, கடந்த பல ஆண்டுகளாக எண்ணற்ற கறுப்பின மக்களைப் படுகொலை செய்துள்ளது. கறுப்பின மக்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்துவது, அவர்களது வழிபாட்டிடங்களை நாசப்படுத்துவது, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கல்வி / மருத்துவம் / பொருளாதாரம் போன்றவற்றை முடக்குவது, அவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் முயற்சிகளைத் தீவிரமாக முன்னெடுப்பது போன்றவை அவர்களது வழிமுறைகளாக இருந்தது. சட்டத்திற்கு எதிரான மது வணிகர்கள், திருடர்கள், பாலியல் குற்றவாளிகள், கறுப்பின வெறுப்பாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது இந்த இயக்கம்.

கறுப்பின மக்களைத் தவிர, யூதர்கள் / அகதிகள் / கத்தோலிக்கர்கள் / கம்யூனிஸ்டுகள் எனப் பலருக்கு எதிராகவும் இந்த கேகேகே இயக்கம் செயல்பட்டு வந்தது. அமெரிக்காவிலுள்ள சனநாயகக் கட்சியை இது ஆதரித்தாலும், மாவீரர்கள் கட்சி (Knights Party) எனும் பெயரில் அரசியல் கட்சியாகவும் இது இயங்கி வந்தது.

1915 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஒரு தேசத்தின் பிறப்பு (The birth of a Nation) எனும் ஊமைப் படத்தினால் கவரப்பட்ட இந்த இயக்கத்தினர், அப்படத்தில் வருபவர்களைப் போல் முழு நீள வெள்ளை உடை உடுத்தி, நீண்ட கூம்பு வடிவக் குல்லாய் அணிந்து கொண்டனர். மற்றவர்களை அச்சுறுத்தவும், தங்களது அடையாளத்தை மறைத்துக் கொள்ளவும் இத்தகைய வழிமுறையை மேற்கொண்டது இந்தப் பயங்கரவாத இயக்கம். இரகசிய இயக்கமாக இது செயல்படுவதால், இதன் ஆதரவாளர்களின் எண்ணிக்கை தெளிவாக வெளியிடப்படவில்லை.

இந்த இயக்கத்தின் மகளிர் அணி பெண்கள் கேகேகே இயக்கம் (WKKK) என அழைக்கப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இதில் இயங்குகின்றனர். "கண்ணுக்குப் புலப்படாத பேரரசின் மகளிர்" (Ladies of Invisible Empire) என இவர்கள் குறிப்பிடப் பட்டனர். நிறவெறி மற்றும் வெறுப்பு அரசியலைப் பரப்புரை செய்வதே இவர்களின் பணியாகும். பேரணி, கண்காட்சி, கருத்தரங்கு என்ற வகைகளில் இவர்களது பணி அமைந்துள்ளது.

கே கே கே இயக்கம், அமெரிக்காவைக் கடந்தும் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இப்பொழுது செயல்பட்டு வருகிறது.

தென்அமெரிக்காவில் இந்த இயக்கத்திற்கு ஆதரவு அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் கறுப்பின மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்யும் இவ்வியக்கத்திற்கு எதிராகக் கறுப்பின மக்கள் ஒன்றாகத் திரண்டு, இந்த வெள்ளை நிற வெறி அமைப்பினரை விரட்டி அடித்து வருகின்றனர். அரசியல் கொதிநிலைக்கு ஏற்ப, அவ்வப்பொழுது எழுச்சியும், பிறகு பின்னடைவுமாக இந்த இயக்கம் அமெரிக்காவில் இன்றும் செயல்பட்டு வருகிறது.

எண்ணற்ற கறுப்பினத் தலைவர்கள், அமெரிக்காவில் நிலவும் வெள்ளையின நிறவெறிக்கு எதிரான தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். இருப்பினும், 33 கோடி மக்கள் தொகையுள்ள அமெரிக்காவில் 76% வெள்ளை இனத்தவர்கள், 14% கறுப்பு இனத்தவர்கள், ஆசிய நாட்டினர் 6%, பல்வேறு நாட்டினர் 3% எஞ்சியுள்ள 1% பழங்குடியினர் என்பதான விகிதத்தில் மக்கள் வாழ்வதால், அமெரிக்காவின் மரபணுவிலேயே வெள்ளை இனவெறி ஊன்றிக் கிடக்கிறது. எனவே கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, வாழ்விடம், பொதுவெளி என அனைத்துக் கூறுகளிலும் வெள்ளை இனத்தவர்களுக்கும், கறுப்பு இனத்தவர்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வேறுபாடு நிலவுகிறது.

கூடுதலாகக் காவல்துறையில் வெள்ளை இன வெறியர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். எனவே வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம், கறுப்பின மக்கள் மீது கொடூரமான வன்முறையை ஏவுவதும், அவர்களைக் கொன்று வீசுவதும் வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. வரம்புமீறி இத்தகைய வன்முறைகளில் ஈடுபடும் காவல்துறையினரின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நூற்று எண்பதுக்கும் மேற்பட்ட கறுப்பின இளைஞர்கள் வெள்ளையினக் காவலர்களின் துப்பாக்கிக் குண்டிற்குப் பலியாகிக் கொண்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. நாடு முழுவதும் இப்படிப் பல்லாண்டுகளாகப் பலியாகும் கறுப்பர்களின் எண்ணிக்கையைச் சொல்லி மாளாது. மேலும் 22 இலட்சம் பேரைச் சிறையில் அடைத்து உலகிலேயே முதல் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இதில் மிகப் பெரும்பான்மையோர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில்தான் ஜார்ஜ் பிளாய்டு, நிறவெறிக் காவலர்களால் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்படும் காணொலியைக் கண்டு உலகெங்குமுள்ள சனநாயக சக்திகள் கடுங்கோபத்தில் உள்ளனர். இந்தப் படுகொலைக்கு எதிராக வெள்ளை இனத்தைச் சார்ந்த எண்ணற்றோர் வீதியில் அணிதிரண்டது பெரும் திருப்பு முனையாக அமைந்து விட்டது. "அமெரிக்காவில் கறுப்பினத்தவராகப் பிறப்பது, கொல்லப்படுவதற்கான தகுதி அல்ல" என இப்படுகொலையைக் கண்டித்து மினியோ பொலிசு நகரவைத் தலைவர் ஜேகப் பிரே எனும் வெள்ளையர் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அதைப் போலவே பிளாய்டைப் படுகொலை செய்த வெள்ளையினக் காவலனின் மனைவி, இந்தப் படுகொலைக்குப் பிறகு, அவனை மணவிலக்கு செய்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

"கறுப்பு உயிர்கள் பொருட்டாகும்" (Black Lives Matter) எனும் அமைப்பும், "பாசிச எதிர்ப்பு" (Antifa) இயக்கமும் நிறவெறிக்கு எதிரான இப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. "பிளாய்டின் உயிர்த்தியாகம் வீணாகி விடக் கூடாது" என்ற மன உறுதியோடு மக்கள்திரள் போராட்டங்களை இவை ஒருங்கிணைக்கின்றன.

"கறுப்பு உயிர்கள் பொருட்டாகும்" என்பது ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பன்னாட்டு இயக்கமாகும். 2013 ஆம் ஆண்டில் அரசுவன்முறை மற்றும் கட்டமைப்பு நிறவெறிக்கு (Structural Racism) எதிராக மூன்று கறுப்பினப் பெண் செயல்பாட்டாளர்களால் இது உருவாக்கப்பட்டது. (Alicia Garza, Patrisse Cullors and Opal Tometi) நிறவெறி எதிர்ப்பு இயக்கம், மனித உரிமை இயக்கம், சமூக இயக்கங்கள் ஆகியவற்றால் கவரப்பட்டு, மையப்படுத்தப்படாத, படிநிலைகளற்ற இயக்கமாக இது தொடங்கப்பட்டது. கறுப்பின இளைஞரைச் சுட்டுப்படுகொலை செய்த வெள்ளையினக் குற்றவாளி தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து # Black Lives Matter எனும் குறிச்சொல்லை (Hash Tag) உருவாக்கி மக்களை ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து காவல்துறை வன்முறை, நிறப் பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்துச் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், தெருமுனைப் போராட்டங்கள் மூலமாகவும் தங்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து, எதிர்ப்பினை ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தனர். பிறகு மாற்றுத்திறனாளிகள், மகளிர், திருநங்கைகள் ஆகியோரது உரிமைகளுக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாகக் கல்லூரி வளாகங்களுக்குச் சென்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஊட்டினர்.

அடிமைமுறை ஒழிப்பு, நிறநீதி, பன்மைத்தன்மை ஆகியவற்றுக்காகவும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். காவல்துறை மீது சமூகக் கட்டுப்பாடு தேவை என்பதையும், அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்பதையும் இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காகப் பேரணிகளையும், பரப்புரைகளையும் மேற்கொள்கின்றனர். எனவே இந்த இயக்கம் அமெரிக்காவில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜார்ஜ் பிளாய்டின் கொலைக்கு எதிராகவும், டிரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் இவர்கள் போராடி வருகின்றனர்.

தற்பொழுது "கறுப்பு உயிர்கள் பொருட்டாகும்" இயக்கம், அமெரிக்காவைக் கடந்து இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் பரவித் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

"பாசிச எதிர்ப்பு இயக்கம்" (Anti Fascist Movement - சுருக்கமாக Antifa) எனும் இயக்கமும் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இடதுசாரிக் கருத்தியலோடு, இறுக்கமான மையத்தலைமை இல்லாமல், மிகுந்த நெகிழ்வான அமைப்பாக இது இயங்கி வருகிறது. ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு எதிராகவும், காவல் துறை வன்முறைகளுக்கு எதிராகவும் ஆன்டிபா இயக்கம் தொய்வுறாமல் களமாடி வருகிறது. 2017 ஆம் ஆண்டு வெர்ஜினியாவில் நடைபெற்ற பேரணி மூலம் இது சமூக அரங்கினுள் நுழைந்தது.

இவ்வமைப்பில் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிய இயலாது. இதற்கென நிலையான மையத் தலைவர் யாரும் கிடையாது. அமெரிக்காவில் வளர்ந்துவரும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிர்வினையாக எழுந்த இயக்கம் இது. நிறவெறி, புலம் பெயர்ந்தோர் எதிர்ப்பு, அதிகார அத்துமீறல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை இது முன்னெடுக்கிறது.

கைப்பற்று இயக்கம் (Occupy Movement) கறுப்பு உயிர்கள் பொருட்டாகும் (Black Lives Matter Movement) போன்ற இயக்கங்களோடு ஒத்த கருத்துள்ள செயல்பாடுகளில் ஆன்டிபா இயக்கம் இணைந்து பங்கேற்கிறது. பாசிசம், நிறவெறி, வலதுசாரிக் கண்ணோட்டம் ஆகியவை விளிம்பு நிலை மக்கள் மற்றும் இனச்சிறுபான்மை மக்கள் ஆகியோரைக் குறிவைத்துத் தாக்குவது மிக அதிகமாக இருக்கிறது. எனவே பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக ஆன்டி பா இயக்கம் குரல் கொடுத்து வருகிறது. நிறவெறி மற்றும் பாசிசச் சக்திகள் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவும் பொழுது, தற்காப்பு வன்முறை தவிர்க்க முடியாதது என ஆன்டிபா கருதுகிறது.

ஆன்டிபா என்ற சொல் 1946 ஆம் ஆண்டே நாசிசத்திற்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. ஆனால், 2016 ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு பெருகி வரும் வலதுசாரி வன்முறைக்கு எதிராக அமெரிக்காவில் ஆன்டிபா இயக்கத்தில் பெருவாரியோர் இணைந்தனர். 2010 முதல் 2016 வரையில் அமெரிக்காவில் 53% பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதாகவும், அதில் 35% வலதுசாரித் தீவிரவாதிகளாலும், 12% இடதுசாரி அல்லது சூழலியல் தீவிரவாதிகளாலும் நிகழ்த்தப்பட்டதாக மெரிலாந்து பல்கலைக்கழகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே வலதுசாரிகளின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் இயக்கமாகக் கறுப்பு இனத்தவர்கள் ஆன்டிபாவைக் கருதுகின்றனர்.

மார்க்சியம், சோசலிசம், சமூக சனநாயகம் போன்ற கருத்தியல்களை ஆதரிப்பவர்களான ஆன்டிபா இயக்கத்தினர், அதிகார எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் அரசு எதிர்ப்பு ஆகியவற்றை முன் நிறுத்திப் போராடி வருகின்றனர். வலது தீவிரவாதம், வெள்ளை மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகத் துண்டறிக்கைகளை விநியோகிப்பது, மாநாடுகளை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். சமூக ஊடகங்கள், இணையம் ஆகியவற்றில் தீவிரமாகச் செயல்படுகின்றனர்.

கறுப்பு உயிர்கள் பொருட்டாகும் எனும் இயக்கமும், பாசிச எதிர்ப்பு இயக்கமும் இன்றைய டிரம்ப் அரசின் வலதுசாரி அரசுக்கு எதிராகக் கறுப்பு மற்றும் வெள்ளையின மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் கொரோனாத் தொற்று நோய் உலகிலேயே மிக அதிக அளவு அமெரிக்காவைத் தாக்கியுள்ளது. இந்நோயால் அதிக அளவு உயிரிழப்பவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாத கறுப்பினத்தைச் சார்ந்தவர்கள்தான். சான்றாக சிக்காகோ பகுதியில் 70% வெள்ளையர்களும், 30% கறுப்பினத்தவர்களும் வாழ்கின்றனர். ஆனால் கொரோனாவால் இப்பொழுது அங்கு உயிரிழந்தவர்களில் 70% கறுப்பின மக்களாவர். சிகாகோவில் மட்டுமல்ல அமெரிக்கா முழுவதிலும் கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களை அமெரிக்க அரசு முற்றிலும் கைவிட்டு விட்டது. மருத்துவ உதவியும், பொருளாதார உதவியும் கிடைக்காமல் கறுப்பினத்தவர்கள் அமெரிக்காவில் கொத்துக் கொத்தாகச் செத்து மடிவதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது தலையங்கத்தில் கண்டித்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாய்டின் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் என்பவை, அடக்கி வைக்கப்பட்ட நிறவெறிக்கு எதிரான சீற்றத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. நீண்ட நெடுங்காலமாக நிலவிவரும் வேலையின்மை, புறக்கணிப்பு, வறுமை, சமூக அவமதிப்பு ஆகியவற்றுக்கு எதிரான போரும் ஆகும். சமூகநீதி, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிரான மக்களின் உரத்தமொழிதான் அமெரிக்காவின் இன்றைய போராட்டங்கள்.

அமெரிக்காவில் வேரூன்றி விட்ட இந்த நிறவெறியை அகற்ற வேண்டுமென்றால், அமெரிக்க அரசு மற்றும் அதன் கட்டமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும். புண்ணுக்குப் புனுகு பூசுவதால், அதை ஆற்ற முடியாது. அறுவை மருத்துவம் தேவை. அதன் தொடக்கப் புள்ளியாக ஜார்ஜ் பிளாய்டின் படுகொலை அமைந்து விட்டது. அதனால்தான் ஒரு கறுப்பினப் பெண், "நான் கொல்லப்பட்டாலும் கவலையில்லை, என்னுடைய குழந்தைகளாவது வீதியில் சுதந்திரமாக நடமாடட்டும்" என்று காணொலியில் ஆவேசத்துடன் கூறுவதைக் காண முடிகிறது.

வெள்ளை இனத்தவர்களுக்கு இணையாகக் கறுப்பினத்தவர்கள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மார்டின் லூதர் கிங் ஆற்றிய உரையான "எனக்கு ஒரு கனவு உள்ளது" என்பது கறுப்பின மக்களின் முழக்கச் சொல்லாக இது வரை இருந்து வந்துள்ளது. ஜார்ஜ் பிளாய்டு உயிர் துறக்கும் முன் அவர் கதறிய சொற்களான "என்னால் மூச்சு விட முடியவில்லை" என்பது இன்று கறுப்பின மக்களின் மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. பாகுபாட்டிற்கு எதிரான, காவல் துறை வன்முறைக்கு எதிரான பொதுவான முழக்கமாக இந்தச் சொற்றொடர் பரிணாமம் அடைந்து விட்டது. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் அநீதிக்கு எதிரான முழக்கமாக இது மாறிப் போய்விட்டது.

அமெரிக்காவில் நிறவெறி அச் சமூகத்தை அரித்துக் கொண்டிருக்கிறது என்றால், தமிழகத்தில் சாதிவெறி நம்மைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இரண்டிற்கும் இடையில் அடிப்படையில் பெரிய வேறுபாடு ஒன்று இருக்கிறது. வெள்ளை நிறவெறி என்பது தோலின் நிறத்தோடு நின்று விடுகிறது. அதைத் தாங்கிப் பிடிக்க, அதன் அடித்தளத்தில் தத்துவம் ஏதும் இல்லை. ஆனால், சாதியைத் தாங்கிப் பிடிக்க இங்கு ஓர் ஆழமான தத்துவம் இருக்கிறது எனப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளராகிய தாயின் பீ குறிப்பிடுகிறார். பார்ப்பனீயம் எனும் கருத்தியல்தான் சாதிப் பாகுபாட்டிற்கு அச்சாணியாக இருக்கிறது. வருணாசிரம தர்மம், இந்துத்துவம் போன்ற வடிவங்களில் அது விழுதூன்றிப் பரந்து நிற்கிறது.

கறுப்பு X வெள்ளை என இரண்டு முரண்களோடு நிறவெறி முற்றுப் பெற்று விடுகிறது. ஆனால் இந்தியாவில் 6000 சாதிகள் அதே அளவு முரண்களோடு இங்கு சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. பாகுபாடுகள் இருந்தாலும், அமெரிக்காவில் ஆணவக் கொலைகள் இல்லை. ஆனால் இங்கு ஆணவக் கொலைகள் இல்லாத நாளே இல்லை என்ற அளவு சாதிப் பாகுபாடுகள் மலிந்து கிடக்கின்றன. எனவே நிறவெறியைக் காட்டிலும், சாதியை ஒழிப்பது என்பது பல மடங்கு கடினமான பணியாகும்.

சாதி என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானமாகவும், மேல் கட்டுமானமாகவும் வேரூன்றி உள்ளது. இது தோல் அளவிலான தளை அல்ல. மாறாக, இது மூளையில் போடப்பட்டுள்ள விலங்கு ஆகும்.

அதைப் போலவே, மத வெறியும் இங்கு உச்சத்தில் இருக்கிறது. 2014-க்குப் பிறகு மதம் என்பது ஓட்டுக்களைப் பெற்றுத் தரும் அரசியல் பகடையாக மாறிவிட்டது. சக மனிதனைக் கூசாமல் வெட்டிச் சாய்க்கும் உத்தியாக மதம் மாறி விட்டது.

மதவெறி போலவே, மொழியை வைத்து ஆதிக்கம் செய்யும் போக்கும் இன்று தீவிரமடைந்து வருகிறது. இந்து - இந்தி - இந்தியா எனும் நச்சு வளையத்தில் தேசிய இனங்கள் தங்களது இறையாண்மையை இழந்து நாசமாகி வருகின்றன.

எனவே சாதி / மதம் / மொழி ஆகிய முப்பெரும் ஆதிக்கங்களை ஒழித்துக்கட்டத் தொடர் பரப்புரை யும், தொய்வில்லாத விடாப்பிடியான போராட்டமும் தேவைப்படுகிறது. இத்தகைய போராட்டம் மாலை நேர விருந்தல்ல. இதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டி வரும். அதற்கெல்லாம் நாம் ஆயத்தமாக வேண்டும்.

தமிழறிஞர் சாலை இளந்திரையன் அவர்கள் குறிப்பிட்டது போல்,

"சேதாரம் இல்லாமல்
நகை செய்யமுடியாது
சிலரேனும் மடியாமல்
பகை வெல்ல முடியாது"

- எனும் கூற்றினை மனதில் இறுத்தி, அர்ப்பணிப்போடு இந்த மூவகை ஆதிக்கங்களையும் எதிர்த்து மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுக்கத் தமிழகம் அணியமாக வேண்டும்.

விடியலுக்குக் குறுக்குவழிகள் ஏதும் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

- கண.குறிஞ்சி

Pin It