உலகம் முழுவதும் சமூக நிலைமைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஒவ்வொரு நாடும் (அ) தேசமும் குறிப்பான சில சமூக நிலைமைகளை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் பிறப்பின் அடிப்படையிலான சாதி என்னும் ஏற்றத் தாழ்வான பாகுபாடு தனித்துவமான வகையில் உள்ளது. சாதியானது ஏற்றத்தாழ்வான பாகுபாடுகளை கொண்டிருப்பதோடு, அதன் படி நிலைக்கேற்ப ஒடுக்குமுறைகளை நிகழ்த்துகிறது. இந்த ஒடுக்கு முறைகளில் தீண்டாமை, குலத்தொழில் மட்டுமே செய்ய நிர்பந்தம், தொழிலை அடிப்படையாக கொண்ட சாதிய படி நிலை (சுகாதரமற்ற, மோசமான வேலைகளை சாதிய அடுக்கின் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும், விவசாயம், வணிகம், ஓதுதல் ஆகியன மேல்தட்டில் உள்ளவர்களுக்கும் என்றவாறு), ஊர் - சேரி என்ற சமூக இடைவெளி, அகமணமுறை என்ற எண்ணற்ற பண்பியல்புகளைக் கொண்டிருக்கிறது.

honor killing 285இந்திய சமூக அமைப்பின் அடிக்கட்டுமானத்தில் பழைய உற்பத்தி முறை (நிலக்கிழாரிய) மற்றும் உற்பத்தி உறவுகளும், மேல்கட்டுமானத்தில் அரசு எந்திரம், சமயம் மற்றும் திருமணம் உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்வுகளிலும் சாதியானது பிணைக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் சக்திகளின் மறு உற்பத்தியானது சாதி என்னும் அடையாளத்துடனே தோற்றம் கொள்கிறது. அது மீண்டும் மறுஉருவாக்கத்தில் ஈடுப்படுவதற்கு சாதி என்னும் வட்டத்திற்குள்ளே அகமண முறையின் மூலம் நிகழ்த்தபடுகிறது.

நிலக்கிழாரிய உற்பத்தி முறை காலத்தில் உற்பத்தி சக்திகளின் மறு உற்பத்தியானது சாதியக் கட்டுமானத்துடனே ஒழுங்கமைக்கபட்டு வந்தது. தொழில் பிரிவினை அடிப்படையிலான இந்த சாதியக் கட்டமைப்பானது, வெறும் தொழில் பிரிவினைகளை சார்ந்த கட்டுமானமாக இல்லாமல் ஏற்றத்தாழ்வான சமூக அடுக்குமுறையாக மாற்றப்பட்டது. இந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் சுரண்டல் ஒடுக்குமுறையோடு சேர்ந்து சமூக ஒடுக்குமுறையும் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்குமுறையில் அடிமட்டத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வர்க்க ஒடுக்கு முறையோடு தீண்டாமை உள்ளிட்ட எண்ணற்ற சமூக ஒடுக்குமுறைகளும் திணிக்கப்பட்டன.

ஒவ்வொருவரும் தான் எந்த தொழிலை செய்ய வேண்டும் என்பதை அவர் பிறந்த சாதி தான் முடிவு செய்யுமே தவிர, அவர்கள் முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது. மோசமான வேலைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தி அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதோடு, பண்ணையார்கள் தங்கள் சொந்த நிலங்களில் கூலி இல்லாத உழைப்பு சக்தியாக அவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.

தொழிற்சாலைகளின் வரவும், நகரமயமாக்கலும் சமூக அமைப்பில் ஏற்படுத்திய மாற்றத்திற்கு பிறகு, சாதியின் அடித்தளம் ஆட்டம் கண்டு வருகிறது. எந்தத் தொழில் பிரிவினைகளை கொண்டு சாதி காலூன்றி நிற்கிறதோ, அந்த தொழிலை முதலாளித்துவம் தன்னுள் ஈர்த்துக் கொண்டது. உற்பத்தியை பெருவீத உற்பத்தியாக, நவீன உற்பத்தியாக மாற்றியதன் மூலம் குறிப்பிட்ட தொழிலை குறிப்பிட்ட சாதி தான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது.

மர வேலைகள், தங்க நகை உற்பத்தி, முடி திருத்துநர்கள் (அழகு நிலையங்கள்), செருப்பு தைத்தல், வணிகம் (இங்கு எடுத்துக் காட்டிற்கு சில மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளேன்) என்று எண்ணற்ற தொழில்கள் இன்று முதலாளியமயமாகி சாதிக் கட்டுமானத்தை உடைத்து மூலதன உடைமையாளர்கள் - கூலி உழைப்பாளர்கள் என்று இரண்டு வர்க்கங்களாக பல்வேறு சாதியை சார்ந்த மக்களை மாற்றி வருகிறது.

கிராமப் புறங்களில் வசித்து வரும் மக்களிடையே இன்னமும் சாதி சார்ந்த உழைப்பு பிரிவினையும் சமூக ஒடுக்குமுறையும் நீடித்து வருகிறது. இதற்கு காரணம், இங்கு (குறிப்பாக தமிழகத்தில்) நிலக்கிழாரிய விவசாய உற்பத்தியானது சிறு, குறு, நடுத்தர விவசாயமாக மாறியதும், தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவில் இந்த மாற்றத்திற்கு உட்படுத்தபடவில்லை என்பதுமே. கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்ற கூலி உழைப்பாளர்களாக, தாங்கள் ஏற்கனவே செய்து வந்த பிறப்பின் அடிப்படையிலான தொழிலை செய்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாகி வருகிறார்கள். சில இடங்களில் வற்புறுத்தப்பட்டு வருகிறார்கள்.

தொழில் அடிப்படையிலான சாதியக் கட்டமைப்பு இன்று தளர்வாகி வந்தாலும், பழைய மரபுகளை கட்டிக் காக்க ஆதிக்க சக்திகள் முயற்சிக்கின்றன. இதன் வெளிப்பாடே, பிறப்பின் அடிப்படையிலான தொழிலை செய்ய வற்புறுத்தி சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.

பிறப்பின் அடிப்ப்டையிலான வேலைப் பிரிவினை என்பது இன்றைய சமூக உற்பத்தி முறைக்கு பொருந்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகி வருகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் குலத்தொழிலை கைவிட்டு வாழிடங்களிலிருந்து வெளியேறி நகரங்களுக்கு கூலி உழைப்பாளர்களாக மாறி வருகின்றனர். அவர்கள் நகர தொழிலாளர்களாக மாறி வருகின்றனர்.

அடிக்கட்டுமானத்தில் சாதியின் இறுக்கமானது தளர்ந்து தன்னுடைய பிடிமானத்தை இழந்து வந்தாலும், மேல் கட்டுமானத்தில் பண்பாட்டு தளத்தில் அதன் தளர்வு மெதுவாகவே நடந்து வருகிறது, நிலக்கிழாரிய உற்பத்தி முறையை புரட்சிகர போராட்டத்தின் மூலம் வீழ்த்த வேண்டிய முதலாளி வர்க்கம் அதனை வீழ்த்தாமல் அதனோடு சமரசம் செய்துக் கொண்டதோடு, நிலக்கிழாரிய மூலதனத் திரட்சியை முதலாளித்துவ உற்பத்திக்கான மூலதனமாகவும் மாற்றியது. இதனால் முதலாளித்துவமானது பழைய நிலக்கிழாரிய பண்பாடுகளின் மீது புரட்சிகரமான தாக்குதலை தொடுக்காமல் சீர்த்திருத்தவாத முறையில் தங்களுக்கு தேவையான தளங்களில் மட்டும் மாற்றம் செய்து வருகிறது.

நிலக்கிழாரிய உற்பத்தி முறையில் சாதி அடிப்படையில் நிகழந்து வந்த உற்பத்தி சக்திகளின் மறு உற்பத்தியானது, பண்பாட்டு தளத்தில் அகமண முறையாக வெளிப்படுத்தியது. இன்று உற்பத்தி சக்திகள் தங்கள் பிறப்பின் அடிப்படையிலான தொழிலை விட்டு வெளியே வந்தாலும், பண்பாட்டு தளத்தில் சொந்த சாதியை சார்ந்த அகமண முறையானது நீடித்து வருகிறது.

மேலும், சாதி அடிப்படையிலான பண்பாட்டு தளங்கள் நீடிக்க வைப்பதன் மூலம் உழைக்கும் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து வைத்து அவர்களிடையே வர்க்க ஒற்றுமையை ஆளும் வர்க்கங்கள் சீர்குலைக்கின்றன. இதனால், பழைய பிற்போக்கான பண்பாட்டு முறைகளுக்கு மாற்றாக முதலாளித்துவ ஜனநாயக பண்பாட்டை கொண்டு வராமல் இருக்கிறது. புதிய சமூக பொருளுற்பத்தி முறையானது, பழைய பண்பாட்டு தளங்களை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வரும் அதே வேளையில், கிராமப்புறங்களில் இந்த மாற்றம் மெதுவாகவே நடைப்பெற்று வருகிறது.

முன்னேறிய உற்பத்தி முறை மற்றும் அதிக வருமானங்களை தரக்கூடிய தொழில்களில் (மருத்துவம், தகவல் தொடர்பு, அரசு உயர் பதவிகள், தனியார் உயர் பதவிகள் உள்ளிட்டவை) ஈடுப்பட்டு வரும் மக்களிடையே அகமண முறை என்பது அதிகளவில் தளர்ந்து உள்ளது. அவர்கள் தங்களுடைய வர்க்க நிலைக்கு ஏற்றவாறு, தொழில்முறைக்கு ஏற்றவாறு (புதிய சாதிகளாக இல்லை) தங்கள் திருமண உறவுகளை அமைத்துக் கொள்கின்றனர்.

நகர்புறங்களிலும் அகமணமுறையை நீடித்து வைப்பதற்காக வாழ்க்கைத்துணையை தேடித் தரும் அமைப்புகள் (ஒவ்வொரு சாதிக்குமான தனித்தனியான நிறுவனங்கள், அனைத்து சாதிகளுக்குமான நிறுவனங்கள்), சாதி சங்கங்கள், சாதிய - பண்பாட்டு மையங்கள் என இயங்கி வருகிறது.

நகர்புறங்களில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினர்களில், கிராமங்களோடு பூர்வீக தொடர்புகள் இழந்தவர்கள், அகமண முறையிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களோடு பூர்வீக தொடர்புகளை வைத்துள்ள நகர்புற தொழிலாளர்களிடையே இந்த அகமணமுறை மறுப்பு என்பது குறைவாகவே உள்ளது. எனினும் பொருளுற்பத்தி முறையின் வளர்ச்சியானது இவர்களின் கிராமப்புற உறவுகளோடு உள்ள தொடர்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து வருகிறது, இந்த உறவுகளில் ஏற்பட்டு வரும் விலக்கமானது அகமண முறையிலும் வேகமான மாற்றங்களை கொண்டு வந்து உடைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

நகரங்களில் இயல்பாகவே ஆணும் பெண்ணும் சாதிக் கடந்து பழகுவதற்கும், காதலிப்பதற்குமான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில் தாங்கள் விருப்பப்பட்ட துணையுடன் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், முன்னர் குறிப்பிட்டப்படி கிராமத்துடன் பூர்வீக தொடர்பு கொண்டவர்களின் குடும்பங்களில் இத்தகைய புறமண முறைக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. திருமண வயதை அடைந்த ஆணோ அல்லது பெண்ணோ தங்களின் பெற்றோரின் விருப்பபடி அகமண முறையை தேர்வு செய்துக் கொள்கின்றனர்.

சாதியத்தைக் கட்டிக் காக்கும் அகமணமுறைக்கு மாற்றாக பண்பாட்டு தளத்தில் சாதியத்தை ஒழிக்கும் புறமண முறையை இன்றைய ஆளும் வர்க்கங்கள் ஆதரிப்பதில்லை. சாதி கடந்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது அவர்களை பாதுகாப்பதில்லை. ஏனெனில் உழைக்கும் மக்கள், இப்படியான தங்கள் சாதிய உணர்ச்சிகளை கொண்டு தங்களுக்கிடையே பகையாகி மோதிக் கொள்வது என்பது பிரதான எதிரியான உடைமை வர்க்கத்தின் மீதான பார்வை திசைத் திருப்பப்படும். இதன் மூலம் உழைக்கும் மக்களிடையே தீராப் பகைமைகள் நீடித்து நிற்பதற்கு வழிவகுக்கும்.

சாதியை மறுத்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள் மீண்டும் சாதிய அடையாளத்துக்குள் தள்ளப்படுகின்றனர். ஆண், எந்த சாதியை சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த சாதியை அடையாளப்படுத்தும் போக்கு உள்ளது. இதன் மூலம் சாதியை மறுத்து நடைபெற்ற திருமணமானது, அவர்களை மீண்டும் ஏதாவது ஒரு சாதியில் (பொதுவாக ஆண் சார்ந்த சாதியில்) ஐக்கியப்படுத்துகிறது. எனினும், இது பழைய இறுகிய சாதிய கட்டுமானங்களை உடைத்து (உற்பத்தி முறை மற்றும் பண்பாடு) ஒரு குழுவாக அடையாளப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுகிறது. தொடர்ந்து புறமண முறை நடப்பதன் மூலம் பல்வேறு சாதிகளின் ஒன்று கலப்பின் மூலம் சாதி சார்ந்த பண்பாட்டு முறை என்பது ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் உயர்ந்த பண்பாட்டு அடையாளங்கள் (முதலாளித்துவ அல்லது பாட்டாளி வர்க்க) மாற்றீடு செய்யப்படும்.

சாதி கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள் மீது பழமை பற்றாளர்கள் (குறிப்பாக சாதிய கட்டுமானத்தின் மீது ஆழ்ந்த பற்று உள்ளவர்கள், சாதிய கட்டுமானத்தைக் கொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புபவர்கள்) தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் துணையுடன் கட்டபஞ்சாயத்து மூலம் அவர்களை பிரிப்பது, தாக்குதல் நடத்துவது, படுகொலை செய்வது, தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்துவது என்று ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிறது.

சாதியை மறுத்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலானது கிராமப்புறங்களிலும், கிராமப்புறத்தோடு பூர்வீக தொடர்புடைய குடும்பங்களிலும் நடத்தப்படுகிறது. ஆதிக்க சாதியை சார்ந்த மக்களில் சிலர், தங்களுடைய சாதியின் கௌரவம், சாதி பெருமை, ஆதிக்க குணம் ஆகியவற்றை தங்களிடம் கொண்டுள்ளனர். பழைய உற்பத்தி முறையோடு தொடர்புடைய பண்பாட்டுத் தளங்கள் இன்னமும் நீடிப்பதால் தான் இத்தகைய ஆதிக்க சிந்தனை முறை இன்னமும் நீடித்து வருகிறது. நிலக்கிழாரிய கட்டத்தில் இருந்தது போன்ற சமூக ஒடுக்குமுறைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற போதிலும், பழமை பற்றாளர்கள் மற்றும் வறட்டு கௌரவத்திற்குள் சிக்கியுள்ளவர்கள் தங்களின் சாதியின் புனிதத்திற்கு(?) எதிராகவோ அல்லது சாதியை கடந்து திருமணம் செய்து கொள்வதையோ ஏற்றுக் கொள்வதில்லை. இதன் வெளிப்பாடே சாதியை கடந்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். இதில் அவர்கள் பெற்ற பெண்களையே கொலை செய்கிறார்கள்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் மீது ஆதிக்க சாதியை சார்ந்த அவர்கள் குடுமபத்தினர் அல்லது ஆதிக்க சாதியை சார்ந்த பிற நிறுவனங்கள் நிகழ்த்தும் கொலைகளை “கௌரவ கொலை” என்றே இத்தனை நாளாக இந்த சமூகமும் ஊடங்கங்களும் வெட்கமில்லாமல் எழுதியும், பேசியும் வந்தன. சமீப காலத்தில் தான் “கௌரவ கொலை” என அழைக்கக் கூடாது என்று முற்போக்காளர்களின் தொடர் அழுத்தத்தின் காரணமாக “சாதிவெறி கொலை” என்றும் “ஆணவக் கொலை” என்றும் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இது வெறும் சாதி ஆதிக்கத்தோடு மட்டும் இல்லை, ஆணாதிக்க தன்மையையும் கொண்டுள்ளது. இவ்வாறு கூறுவதால், சாதிய அடிப்படையிலான ஒடுக்கு முறையை குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக அதன் அனைத்தும் தழுவிய பார்வையையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதி கடந்து திருமணம் செய்து கொள்வதால் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் சாதிய ரீதியான ஒடுக்கு முறை மட்டுமல்ல, அது ஆணாதிக்கத்துடன் இணைந்துள்ளது. ஆதிக்க சாதியை சார்ந்த பெண் ஒருவர் ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணை திருமணம் செய்துக் கொள்ளும்போது ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணின் மீது தாக்குதல் நடத்துவது, கொலை செய்வது அல்லது அவர் குடியிருக்கும் பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிறது. முடிந்த வரை ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணை அச்சுறுத்தியோ அல்லது ஆதிக்க சாதியை சார்ந்த பெண்ணிடம் உருக்கமாக பேசியோ அவர்களை பிரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இதில் தோல்வியடையும் போது ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணை கொலை செய்வது அல்லது ஆதிக்க சாதியை சார்ந்த தங்கள் பெண்ணை சமாதனமாக போகலாம் என்று அன்போடு பேசி தங்கள் வீட்டிற்கு வரவைத்து, அந்த பெண்ணை கொலை செய்வது, அல்லது இருவரையும் கொலை செய்வது என்று தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

சாதிப் பெருமையை குலைத்து விட்டாள் என்று அந்தக் குடும்பத்தின் தந்தையோ அல்லது சகோதரனோ தான் இத்தகைய கொலை வெறித் தாக்குதலை நடத்துகின்றனர். குடும்பத்தில் உள்ள மற்ற பெண்கள், ஆண்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டியதாக உள்ளது. இயல்பாகவே ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய சமுதாயத்தில் இத்தகைய கொலை வெறித்தாக்குதலுக்கும் இந்த ஆணாதிக்க சிந்தனையும் ஒரு காரணம். இதனால் பெற்ற மகளை குடும்பத்து ஆண்களால் கொலை செய்யப்படும் போது ஏதும் செய்ய இயலாதவர்களாக பெண்கள் உள்ளனர். இதற்காக ஆதிக்கச் சாதியை சார்ந்த பெண்களிடம் சாதிய உணர்வு அறவே இல்லை என்பதல்ல. கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு அவர்களிடம் இந்த சாதியக் கௌரவம் என்பது இருப்பது இல்லை.

அதே வேளையில், ஆதிக்க சாதியை சார்ந்த ஆண், ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால், ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த பெண் மீதும், அவர்கள் குடும்பம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் குடியிருப்பு மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாலியல் வன்புணர்ச்சி, கொலைவெறித் தாக்குதல், பஞ்சாயத்து மூலம் பிரித்து விடுதல், தண்டம் விதித்தல், பெண்ணின் குடும்பத்தை ஊர்விலக்கம் செய்வது, அந்தப் பெண்ணை கொலை செய்வது என்று பல்வேறு விதமான ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்றது.. எந்த இடத்திலும் ஆதிக்க சாதியை சார்ந்த ஆண் மீது கொலை வெறித் தாக்குதலோ அல்லது கொலையோ நிகழ்த்தப்படுவதில்லை (விதிவிலக்கு வேண்டுமானால் இருக்கலாம்), தனது மனைவியோடு சேர்ந்து வாழ முடியாமல் பிரித்து விடுவது அல்லது குடும்பத்தை விட்டு வெளியேற்றுவது மட்டுமே பொதுவான நிகழ்ச்சியாக உள்ளது.

சாதி மறுப்பு திருமணத்திற்கு பிறகு பெண்கள், ஆண் எந்த சாதியை சார்ந்தவரோ, அந்த சாதிய அடையாளத்துக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆண் சார்ந்த சாதிய பண்பாட்டு அடையாளங்களை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண் ஆண் சார்ந்த சமூகத்தோடு வாழ வேண்டியுள்ளது. (தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஆணை ஆதிக்க சாதியினர் பொதுவாக ஏற்றுக் கொள்வதில்லை அல்லது பாதுகாப்பில்லை). ஆதிக்க சாதியை சார்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண் ஆண் சார்ந்த சமூகத்தோடு வாழ வேண்டியுள்ளது. ஆதிக்க சாதியை சார்ந்த ஆண் சாதியின் படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் சமூகத்தோடும் அதன் பண்பாடுகளோடும் உறவு கொள்ளுவதில்லை. மேலும், தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகளுக்கு செல்வதற்கான மனநிலை அவர்களிடம் இல்லை. சாதி மறுப்பு திருமணங்களில் சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறை மட்டுமல்ல, ஆணாதிக்க ஒடுக்குமுறையும் உள்ளது. பொதுவாகவே, சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை நிலவுகிறது. அகமண முறையின் மூலம் சொந்த சாதியில் திருமணம் செய்துக் கொண்டாலும் கூட அங்கு ஆணாதிக்க ஒடுக்குமுறை உள்ளது. சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் போதும் இந்த ஒடுக்குமுறை அதிகளவில் உள்ளது.

இவ்வாறு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துக்குள் (பொதுவாக ஆணின்) ஐக்கியப்படுவது, அல்லது குறிப்பிட்ட சாதி சமூகத்தோடு உறவுக் கொள்வது என்பதெல்லாம் பெரும்பாலும் கிராமப்புறங்களில் அல்லது கிராமப்புறத்தோடு பூர்வீக தொடர்புகளை வைத்திருக்கும் நகர்புற மக்களிடையே தான் அதிகம் நிலவுகிறது. நகர்புறங்களில் வசிக்கும் இதர மக்களிடையே சாதி சார்ந்த பிணைப்புகள் அறுந்து முதலாளித்துவ பண்பாட்டு அடையாளங்களை கடைப்பிடிக்கிறார்கள்.

சாதி கடந்து திருமணம் செய்து கொள்பவர்களில், ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணும், பெண்ணும் தாக்குதலுக்குளாகிறார்கள். ஆனால் ஆதிக்க சாதியை சார்ந்த பெண் மட்டுமே தாக்குதலுக்குள்ளாகிறார். ஆதிக்க சாதியை சார்ந்த ஆண் மீது எந்த தாக்குதலும் நிகழ்வதில்லை. எப்படி ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணும் பெண்ணும் கொலை செய்யப்படுகிறார்களோ, அதே போன்று, ஒடுக்கப்பட்ட - ஆதிக்க சாதிகளை சார்ந்த பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எனவே, இது வெறும் “சாதிய ஆணவ கொலை” என்பதாக ஒதுக்கி விடுவதை விட, “சாதிய ஆணாதிக்க கொலை” யாக இதனை பார்க்க வேண்டும்.

சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய சாதிய ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் ஒட்டுமொத்த சாதி மறுப்பு திருமணங்களை ஒப்பிடும் பொழுது குறைவான வீதத்தையே கொண்டுள்ளது. எனினும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளுபவர்கள் மீது அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது, சாதியின் பெயரால் எப்படி உழைக்கும் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களிடம் கொண்டு செல்வது, அனைத்து சாதியை சார்ந்த உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்று திரட்டுவது ஒவ்வொரு மார்க்சியவாதியின் கடமையாகும்.

முதலாளித்துவ சமூகமானது, நிலக்கிழாரிய உற்பத்தி முறையோடு கொண்டுள்ள சகோதர உறவின் காரணமாக அதன் தீமைகள் அகற்றபடவில்லை. இன்றைய முதலாளித்துவ சுரண்டல் அமைப்பையும் அதன் தொங்கு சதையாக நீடித்துள்ள பழைய நிலக்கிழாரிய அமைப்பு முறையையும் வீழ்த்தி, சாதியின் அனைத்து தளங்களும் அடித்து நொறுக்கவும், இந்த ஏற்றத் தாழ்வான கட்டமைப்புகளை வீழ்த்தவும், சமத்துவமான சமூகத்தை நிறுவுவவும் சோசலிச சமூகத்தால் மட்டுமே முடியும்.

சோசலிச சமூகம் தான் அனைத்து விதமான ஒடுக்கு முறைகளையும் துடைத்தெறியும், ஒடுக்குமுறையானது எத்தகைய வடிவங்களை கொண்டிருந்தாலும் (சாதி, மத, பாலின, தேசியஇன, இன்னும் பிற) அதனை துடைத்தெறியும். முதலாளித்துவ சமூகமானது ஏட்டளவில் மட்டுமே சமத்துவத்தை கொண்டிருக்கும், நடைமுறையில் ஏற்றத்தாழ்வை நீடிக்க வைப்பதன் மூலம் மக்களிடையே பிளவுகளை உருவாக்கி மக்களிடையே மோதலை ஏற்படுத்தி தன்னை தற்காத்துக் கொள்ளும். சோசலிச சமூகம் மட்டுமே செயலிலும் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் களையும்.

இந்தக் கட்டுரையை முடிக்கும் தருவாயில் கீற்று இணையத்தளத்தில் தோழர். புவிமைந்தன் எழுதிய "சாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி!" என்னும் கட்டுரையை வாசித்தேன். அவருடைய கருத்துக்களும் இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களில் சிலவும், ஒத்த தன்மையை பெற்றிருந்ததை உணர முடிந்தது, மேலும் தோழர்.புவிமைந்தன் சாதியின் அரசியல் காரணிகள் மற்றும் இடஒதுக்கீடு குறித்து கூறியுள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

- குறிஞ்சி