அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங்களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன?

tanjore temle 600பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச்சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழை பெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட் டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின்  பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ் சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள் தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.

வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்த தில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப் போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?

ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.

சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப் பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில் தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை  அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத் தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும் தான் 216 அடிக் கற்கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட  87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப்போரின்போது கைப்பற்றப் பட்ட  கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர் தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர்  முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடு கிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன்  சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில்  நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப் பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரிய கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என  நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரிய கோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென  4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப் பட்டது. இக்கோவிலுக்கு நந்தா விளக்கெரிப் பதற்காக 400 இடையர்கட்கு ‘சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிட மிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர் களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று,  வேதம் கற்க பாட சாலைகள், உணவு உறைவிட  வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர் களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

(தொடரும்)

Pin It