காஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்? - 5

உண்மை: காஷ்மீரில் நடப்பது ஒரு தேச விடுதலைப் போராட்டம். இதை நடத்திக் கொண்டிருப்பவர்கள் காசுமீரிகள். இது டோக்ரா வம்ச (1846) அரசாட்சியின் புறக்கணிப்புக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக திரண்டதிலிருந்து தேசிய இயக்கமாக 170 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

sheikh abdullah with nehruஜம்மு-காஷ்மீர் எனப்படும் இம்மாநிலம் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. அவை ஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் பகுதிகள். இம்மாநிலத்தில் 12க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. எனினும், காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகியவை முக்கியமான மொழிகள். இங்கு இஸ்லாமியர்கள் 70%, அடுத்து இந்துக்கள் 25%. மீதமுள்ளவர்கள் புத்த மதத்தினரும் சீக்கியர்களும். புத்த மதத்தினர் லடாக் பகுதியில் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களுக்குள் எந்தக் காலத்திலும் மத ரீதியிலான பிளவுகள் வந்தது இல்லை.

குறிப்பாக முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்குமான உறவு மிக நெருக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து காந்தியடிகள் "காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முஸ்லிமுக்கும் என்னால் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. அவர்களின் கலாச்சாரம் கூட ஒன்றுபோலவே உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காஷ்மீர் ஜம்முப் பகுதியுடன் இணைந்தது 1846இல். அப்போது ஜம்மு, டோக்ரா அரச குடும்பத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதற்கு முன்பு காஷ்மீர், சீக்கிய அரசனான ரஞ்சித் சிங்கின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்துப் பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றினர். அப்போதைய டோக்ரா அரசனான குலாப் சிங் ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க ரகசியமாக உதவியதால், ஆங்கிலேயர்கள் காஷ்மீரை ஜம்முவுடன் இணைத்து குலாப் சிங்கிடம் ஒப்படைத்தனர். இந்த ஒப்பந்தம் அமிர்தரஸ் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.

1846 இல் ஏற்பட்ட அமிர்தசரஸ் உடன்படிக்கையின் கீழ் பிரிட்டிஷாரிடமிருந்து இப் பகுதியை ஜம்மு அரசர், குலாப் சிங்கால் ரூ 27 இலட்சத்திற்கு வாங்கப்பட்டு காஷ்மீரின் புதிய மன்னர் ஆனார்.

1857 இல் காஷ்மீரை ஆண்ட குலாப்சிங் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் ரன்பீர் சிங் 1857 முதல் 1885 வரையும், அவரது மகன் பிரதாப் சிங் 1925 வரையும் காஷ்மீரை ஆண்டனர். தாத்தா, மகன், பேரன் தொடர்ந்து கொள்ளுப்பேரன் ஹரி சிங் 1925 லிருந்து தனது ஆட்சியைத் தொடர்ந்தார்.

காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் 90 விழுக்காட்டினர் இருந்த போதும் இந்து அரசரான குலாப் சிங்கின் நிர்வாகிகளில் 90%க்கும் மேல் இந்துக்கள். அவர்கள் காஷ்மீரிப் பிராமணர்களான பண்டிட்டுகள்.

அன்றைய காலகட்டத்தில் காசுமீர் மக்களுக்கு படிப்பறிவு மிகவும் குறைவு. விவசாயமும் அது சார்ந்த பிற சிறு கைத்தொழில்களும்தான் அவர்களின் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தன. மிகவும் வறிய நிலையில் மன்னராட்சியின் கீழ் வாழ்ந்து வந்தனர்.

இது குறித்து மன்னரின் வெளியுறவு மற்றும் அரசியல் ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின் அதில் வெறுப்படைந்து பதவி விலகிய அலி பியன் பானர்ஜி அவர்கள் 1929 இல் பத்திரிக்கைகளுக்கு ஒரு அறிக்கை கொடுத்தார். அதில் " மிகப் பெரும்பாலான முசுலீம்கள் முழுக்க கல்வியறிவு அற்றவர்களாகவும், கிராமப்புறங்களில் வாடுபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள், வாயில்லா ஜீவன்களைப்போல பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

டோக்ரா வம்ச ஆட்சியில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சீக்கியர்களும், இந்துக்களும் புத்த மதத்தினரும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.

மன்னர் ஹரிசிங் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மக்களுக்கு ஆடு மாடு வளர்க்க வரி, காடுகளுக்குள் செல்ல வரி என வரிச்சுமை பெருமளவில் சுமத்தப்பட்டிருந்தது. காஷ்மீர் முஸ்லிம்களும் சரி, இந்துக்களும் சரி மன்னர் ஆட்சி களையப்பட்டு முறையான பிரதிநிதித்துவ ஆட்சி தேவை என ஆங்காங்கே போராடத் தொடங்கினர்.

இந்த பல போராட்டங்களில் இந்துக்களும் சீக்கியர்களும் இசுலாமியர்களோடு இணைந்து முன்னின்று ஒன்றாகவே தம் குரல்களை எழுப்பியிருக்கிறார்கள்.

13 ஜூலை 1931இல் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிகளை போலீஸ் படை சுட்டுக் கொன்றது.

டோக்ரா வம்சத்தின் கொடூர ஆட்சிக்கான எதிர்ப்பு இயக்கமானது 1931இல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவரான ஷேக் அப்துல்லா போன்றவர்கள் எதிர்ப்பை இயக்கப்படுத்தினார்கள்.

தமக்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இயக்கம் தேவை என்பதை போராட்ட முன்னணியாளர்கள் முடிவு செய்தனர். அதனால், 1932இல் ‘ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் மாநாடு’ என்னும் விடுதலைக்கான அமைப்பு உருவானது. அதன் நோக்கம், ஆங்காங்கே ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுவந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுமாக இருந்தது.

பிறகு,1938 சூன் 24 ஆம் தேதியன்று பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் விவாதித்து, கட்சியின் பெயரை ஜம்மு - காஷ்மீர் ‘தேசிய மாநாட்டுக் கட்சி " என மாற்றினார்கள். மத வேறுபாடு பாராமல் அனைத்து மக்களையும் கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதற்கு வசதியாக கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வந்தனர்.

கட்சியின் செயற்குழு தெரிவித்த திருத்தங்களை பொதுக்குழு ஏற்றுக் கொண்டது. 1939 ஏப்பிரல் 27 அன்று தேசிய மாநாட்டுக் கட்சி தோன்றியது.

காஷ்மீரிகளின் போராட்டம் அடிப்படையில் மதச் சார்பற்ற, ஜனநாயகக் காஷ்மீரை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. முஸ்லிம் மாநாட்டுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தனது முதல் உரையில், “காஷ்மீர் மக்களின் போராட்டம் இனவாதமல்ல என்பதை நாம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளோம். இந்தக் கட்சி பல இன மக்களின் குறைகளைப் பற்றிப் பேச உள்ள மேடை. இது சகக் குடிமக்களான இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் உதவத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது. பல இன மக்களும் ஒற்றுமையுடன் இருக்கும்போதுதான் முன்னேற்றம் சாத்தியமாகும். ஒற்றுமையான வாழ்க்கைக்கு மற்ற இனத்தவரின் நியாயமான உரிமைகளை மதிப்பது முக்கியத் தேவையாகும். மீண்டும் கூறுகிறேன், காஷ்மீரிகளின் போராட்டம் இனவாதப் போராட்டமல்ல” என்றார்.

தேசிய மாநாட்டுக் கட்சிக்குப் பெருவாரியான மக்களின் ஆதரவு கிடைத்தது. 1944 இல் அக்கட்சி ‘புதிய காஷ்மீர்ப் பிரகடனம்’ (Naya Kashmiri Manifesto) என்பதை மக்கள் முன்பு வைத்தது.

அதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை; கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயம்; ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமை” போன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.

டோக்ரா ராஜாவின் கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு அமைய இருந்த சமுதாயத்தில் பெண்கள், உழைக்கும் மக்கள், மற்றும் நலிவுற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்; நிலவுடமை ஆதிக்கம் நீக்கப்பட்டு நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று முன்வைத்தது.

இந்தியாவில் பிரிட்டனுக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, காஷ்மீர் விடுதலைப் போராட்டமும் நடந்தது. வெள்ளையனை வெளியேற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் போராட்டம் நடந்த போது, நாட்டு விடுதலைக்காகவும், அதே நேரத்தில் மன்னர் ஆட்சியிலிருந்து விடுபட்டு மக்களாட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் காஷ்மீரில் போராட்டம் நடந்தது.

இவை எதுவும் இந்துக்களுக்கு எதிரான இசுலாமியர்களின் போராட்டமாக நடக்கவில்லை. முழுக்க முழுக்க இசுலாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் இணைந்த காசுமீரிகளின் போராட்டமாகவே நடந்தது.

(தொடர்வோம்)

- க.இரா.தமிழரசன்

Pin It