‘திருக்குறளும் ஆரியக் குரலே!' நூல் வெளியாவதாக விளம்பரம் வந்த உடனேயே, நாம் எதிர்பார்த்தபடி, பெரியாரைப் புகழ்ந்து கொண்டே பெரியாரியலை அழிப்பவர்கள் துடித்துப் போனார்கள். அந்தத் தமிழ்த் தேசிய, தமிழியக்காரர்களைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. பெரியார் கருத்துக்களை ஏற்று, நேர்மையாக, கடுமையாக உழைக்கும் தோழர்கள் சிலரது அன்பான அறிவுரைகளுக்கும், கடிந்துரைகளுக்கும் நாம் செவி சாய்க்க வேண்டியது அவசியம். நமது தோழர்கள் கூறிய அறிவுரைகளில் சில....
- இந்த நெருக்கடியான சூழலில் நாம் திருக்குறளை விமர்சிக்க வேண்டுமா?
- திருக்குறளை எதிர்த்தால் பொதுமக்களிடம் அந்நியமாகி விடுவோம். மக்கள் பெரியாரை எதிர்நிலையில் வைத்து விடுவார்கள்.
- திருக்குறளையும் பார்ப்பனர்களிடம் தள்ளி விடுவதா?
- எச்.ராஜா திருக்குறள் மாநாட்டை எதிர்க்கிறார். நாமும் எதிர்க்கலாமா?
- பெண்விடுதலை என்ற காரணத்திற்காக மட்டும் வள்ளுவரை எதிர்க்கலாமா?
இதுபோன்ற சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தோழர் பெரியார் எப்போதும் மக்கள் விரும்பும் கருத்துக்களைப் பேசியவர் அல்ல. மக்களுக்குத் தேவையான கருத்துக்களைப் பேசியவர். பெரியார் தொண்டர்களும் அவ்வாறே இயங்கியுள்ளனர்.
இப்போது நிலவும் கடும் அரசியல் நெருக்கடியான சூழலில், பெரியாரைச் சில தமிழ்த்தேசியக் குழுக்கள் கொச்சைப்படுத்துவதை, திரிபுவாதம் செய்வதை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? சிறு மறுப்பாவது சொல்லக்கூடாதா? “பெரியார் ஒரு திருக்குறள் ஆதரவாளர்” என்று ஒரு கடும் முரண்பாடான ஒரு கருத்தை விதைப்பது பெரியாரியலுக்கு இழைக்கப்படும் துரோகம் அல்லவா?
பெரியார் 1928 லிருந்து 1973 வரை தனது இறுதிக்காலம் வரை திருக்குறளையும், திருவள்ளுவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இடையில் சில ஆண்டுகளில் ஆதரித்துள்ளார். நாம் வெளியிடும் நூலில்கூட, 1949 சென்னை திருக்குறள் மாநாடு, 1951 திருச்சி குறள் மாநாடு இரண்டிலும் பெரியார் பேசிய பேச்சுக்களையும் வெளியிடுகிறோம். அவை குறளை ஆதரித்துப் பேசிய உரைகள். அவற்றையும் பதிவு செய்கிறோம்.
அதுபோல, பெரியாரிய உணர்வாளர்கள் என்ற பெயரில் மாநாடு நடக்கும் போது, திருக்குறள் பற்றிய பெரியாரின் முழுமையான பார்வையும் விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். திருக்குறள் பற்றிய பெரியாரின் எதிர்ப் பார்வையும் தனி அரங்கமாகவே விவாதிக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக அமையும். “திருக்குறள் பற்றிய பெரியாரின் எதிர்ப்புக் கருத்துக்கள் மிகவும் தவறானவை. அவற்றை கண்டிக்கிறோம்” என்று யாராவது அந்த அரங்கில் பேசினாலும் அதையும் வரவேற்கலாம். அவர்களது விமர்சனங்களுக்கும் இடம் கொடுக்கலாம். அதற்கு நாம் பதில் அளிக்கலாம்.
ஆனால், பெரியார் திருக்குறளுக்கு ஆதரவானவர் என்று ஒரே ஒற்றைப் பரிமாணத்தைக் காட்ட நினைப்பதும், அதையே அடுத்த தலைமுறைக்கு விதைக்க நினைப்பதும் எந்த நெருக்கடியான சூழலிலும் ஏற்றுக் கொள்ள முடியாத திரிபுவாத முயற்சியாகும். இந்த முயற்சியை அந்த மாநாட்டில் பங்கேற்கும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறோம்.
தோழர்கள் மணியரசன், சீமான் போன்ற குழுக்கள் பெரியாரின் திருக்குறள் எதிர்ப்புக் கருத்துக்களை அப்படியே வெளியிட்டு அதைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அந்த வெளிப்படையான எதிர்ப்புக்கு நாம் மறுப்புக்கூற வேண்டும். திருக்குறள் தமிழர் சமுதாய விடுதலைக்கு எதிரானது தான் என்ற கருத்தை நிறுவ வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களுக்குப் பயந்து, பெரியாரும் குறளுக்கு ஆதரவானவர் என்று கூற வேண்டிய அளவுக்கு இப்போது எந்த நெருக்கடியும் இல்லை.
மக்களிடம் அந்நியப்பட்டுவிடுவோம் - பெரியாரை எதிர்நிலையில் வைத்துவிட்டால்?
இது சரியான புரிதல்ல அல்ல. பள்ளிக்கூட மாணவர்களைத் தவிர, பள்ளிக் காலங்களைத் தவிர மற்றவர்கள், மற்ற காலங்களில் - திருக்குறளைப் படிப்பவர்கள், பின்பற்றுபவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா? சராசரிப் பொதுமக்கள் காந்தி, நேரு, நேதாஜி ஆகிய வடநாட்டுத் தலைவர்களைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, அதே அளவுக்குத்தான் திருவள்ளுவரையும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
குறளைத் தூக்கிப் பிடிக்கும் தமிழ்த்தேசியர்களில் எத்தனை பேர் வள்ளுவர் வாக்குப்படி வாழ்கிறார்கள்? வேண்டுமானால், ஆணாதிக்கக் கருத்துக்களிலும், ஜாதி ஆதிக்கக் கருத்துக்களிலும் வள்ளுவரைப் பின்பற்றுகிறார்கள் என்று கூறலாம்.
இன்றைய யதார்த்த சூழலில், திருக்குறளுக்கும், வள்ளுவருக்கும் மக்களிடம் என்ன செல்வாக்கு இருக்கிறது? ஒன்றும் இல்லை. இந்த நிலையில் குறளை எதிர்த்தால் மக்களைவிட்டு அந்நியப்பட்டு விடுவோம் என்று கூறுவது மக்களைப் புரிந்து கொண்டவர்களின் பேச்சாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் தொகை சுமார் 10 கோடி. இதில் 9.9 கோடிப்பேர் பக்தர்கள். ஏதோ ஒரு கடவுளை, ஏதோ ஒரு மதத்தை, ஏதோ ஒரு ஜாதியைக் கடுமையாகப் பின்பற்றுபவர்கள். ஜாதி, மதம், கடவுள் எவற்றையும் ஏற்காதவர்கள் அதிகப்பட்சமாக 10 இலட்சம் பேர் இருப்போம். அதாவது நமது மக்கள் தொகை 1 விழுக்காடாக இருக்கும். பெரியார் காலத்திலும் இந்த விகிதாச்சாரம் மாறி இருந்ததில்லை. ஒன்று அல்லது 2 விழுக்காடு உயர்ந்து இருந்திருக்கலாம்.
99 விழுக்காட்டு மக்கள் கடுமையாகப் பின்பற்றும் ஜாதி, மதம், கடவுளர்கள் அனைத்தையும் அக்குவேறு, ஆணிவேறாக அடித்து நொறுக்கியவர் பெரியார். 99 விழுக்காட்டு மக்களின் அசைக்க முடியாத ஆழமான நம்பிக்கைகள், உணர்வுகள், உணர்ச்சிகள், பெருமிதங்கள், பாரம்பரியங்கள், கலை, இலக்கியங்கள், பண்பாடுகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தையும் உடைத்துத் தெருவில் போட்டவர் பெரியார். தன்னை அழிவு வேலைக்காரன் என்றே அறிவித்து அழிவு வேலையில் இறங்கியவர் பெரியார்.
இன்றுவரை தமிழ்நாட்டில் அவர் அந்நியமாகவில்லை. இது பெரியார் மண் என்று தான் எல்லோராலும் பேசப்படுகிறது. ஜாதி, மத, ஆணாதிக்க எதிர்ப்பால்கூட அந்நியமாகாத பெரியார், இந்தத் திருக்குறளை எதிர்த்தார் என்று சொல்வதாலேயே அந்நியமாகிவிடுவார் என்று நாம் நினைத்தால், நாம் பெரியாரைப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் பொருள்.
இந்தக் கடவுளர்கள், மதங்கள், ஜாதிகளை விட திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தமிழ்நாட்டில் செல்வாக்கு இருக்கிறதா? கடவுள், மதம், ஜாதி போன்ற நம்பிக்கைகளைவிட திருவள்ளுவரையும், திருக்குறளையும் நம்பும் மக்கள் என்று யாராவது உயிரோடு வாழ்கிறார்களா?
அப்படியே, ஒருவேளை, இந்து மதக் கடவுளர்களைவிட, இந்து மத சாஸ்திரங்களை விட தமிழ்நாட்டில் திருக்குறள்தான் ஆதிக்கம் செலுத்துகிறது, திருக்குறள் தான் இன்றைய தமிழர்களின் பண்பாட்டை நிர்ணயிக்கிறது என்று யாராவது கூறினால், இன்றைய சமுதாயச் சிக்கல்கள் அனைத்திற்கும் திருக்குறள்தான் காரணம் என்பதும் உறுதியாகிவிடுகிறது. அப்போதும் கூட நாம் முதலில் எதிர்க்க வேண்டியது திருக்குறளைத் தானே?
“மக்களிடம் அந்நியமாகிவி டுவோம்” என்று நாம் எப்போது பயப்படத் தொடங்கி விட்டோமோ அன்றே நமது தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டோம் என்றுதான் பொருள். ஒருவேளை அரசு அடக்குமுறை இருக்கிறது, பெரியாரியலைப் பேச முடியவில்லை என்றால், அதை ஏற்றுக் கொள்ள முடியும். அரச அடக்குமுறைகளை எதிர்க்கும் வலு இன்று நம்மிடம் இல்லை. ஆனால், சிறு சிறு தமிழ்க் குழுக்களுக்குப் பயந்து பெரியாரை முழுமையாகப் பேசக்கூடத் தயங்குவது சரியல்ல.
திருக்குறளையும் பார்ப்பனர்களிடம் தள்ளி விடுவதா?
நாம் புதிதாக வள்ளுவரை எங்கும் தள்ளிவிடவில்லை. அவரே பெரியாரிடமிருந்து தள்ளி நிற்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். அவரது கருத்துக்களே முற்றிலும் ஆணாதிக்கக் கருத்துக்களாக உள்ளன. பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்கக் கருத்துக்களாக உள்ளன என்று பெரியாரே கூறுகிறார். தம் இறுதிக்காலம் வரை கூறுகிறார். அவற்றைத்தான் நாமும் கூறுகிறோம். பெரியார் வள்ளுவரைப் பார்ப்பனர்களிடம் தள்ளி விடுகிறாரா? நமக்காக வாதிடுகிறாரா?
எச்.ராஜா திருக்குறள் மாநாட்டை எதிர்க்கிறார். நாமும் எதிர்க்கலாமா?
எச்.ராஜா திருக்குறள் மாநாட்டை எதிர்க்கிறார். ஆனால் திருக்குறளை இந்துத் தத்துவம் என்று ஏற்கிறார். நாம் பெரியாரிய உணர்வாளர்கள் ஒன்றுகூடும் மாநாட்டை வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். நாமும் பங்கேற்கிறோம். மாநாடு ஒருவேளை தடை செய்யப்பட்டால், தடையை மீறி நடத்தினால், நாமும் தோழர்களோடு கைதாவோம். ஆனால், திருக்குறளை ஏற்க மாட்டோம். எச்.இராஜா-வெல்லாம் உரிமை கொண்டாடும் நிலையில் உள்ள, திருக்குறளில் உள்ள ஆணாதிக்க, பார்ப்பன, பார்ப்பனிய ஆதிக்கக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறோம்.
எச்.ராஜாவின் தலைமையான ஆர்.எஸ்.எஸ். அமைப்பே திருவள்ளுவரைக் கடவுளாகக் காட்டத் தொடங்கிவிட்டது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ ஏட்டின் ஆசிரியர் தருண்விஜய், திருவள்ளுவருக்கு கங்கைக் கரையில் சிலை வைத்துவிட்டார். சில சாமியார்களின் எதிர்ப்புகளை மீறி அங்கே வள்ளுவர் சிலை வைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பா.ஜ.க.வும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் ‘திருவள்ளுவர் திருப்பயணம்’ நடத்தினார்கள். வள்ளுவரைக் கடவுளாகவே ஆக்கிவிட்டார்கள். எச்.ராஜாக்கள் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ எதிராக இல்லை. திருக்குறள் மாநாட்டுக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்கள் திருவள்ளுவரைக் கடவுளாகக் காட்டுவார்கள். நாம் வள்ளுவரோடு சக தோழராக நின்று விமர்சிக்கிறோம்.
அம்பேத்கரையும் ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துள்ளது? அதனால் அவரையும் நாம் எதிர்ப்போமா?
அம்பேத்கர் கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ். எடுத்துக் கொள்ளவில்லை. அம்பேத்கர் படத்தை மட்டுமே எடுத்துள்ளார்கள். அம்பேத்கரின் கருத்துக்களை நாம் சரியாகப் பரப்பினால், அவர்களே அம்பேத்கர் படத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், வள்ளுவர் அப்படிப்பட்ட பார்ப்பன எதிர்ப்பாளர் அல்ல. வள்ளுவரின் கருத்துக்களே மனுசாஸ்திரக் கருத்துக்களாக உள்ளன. ஆணாதிக்கக் கருத்துக்களாக உள்ளன. வள்ளுவரின் கருத்துக்களைப் பரப்புவது பார்ப்பனர்களுக்கு எந்த வகையிலும் கேடானது இல்லை. அதனால் தான் பல பார்ப்பனர்கள் குறளுக்கு உரை எழுதிப் பரப்பியுள்ளனர். பார்ப்பனர்கள் மட்டுமல்ல; பார்ப்பனிய சைவ மதத்தைப் பரப்பும் வெள்ளாளர்களும் உரை எழுதியுள்ளார்கள். தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பெரியாருக்கு எதிராக நிற்கும் தோழர்கள் மணியரசன், சீமான் எல்லோரும் இன்றும் வள்ளுவரைக் கதாநாயகர்களாகக் காட்டுகிறார்கள். நாமும் ஏன் வள்ளுவரைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்? பெரியாரியமும், அம்பேத்கரியமும் இருக்கும்போது குறளியமும், தமிழியமும் எதற்காக?
பெண்விடுதலை என்ற காரணத்திற்காக மட்டும் வள்ளுவரை எதிர்க்கலாமா?
திருக்குறள் பெண்விடுதலைக்கு எதிராக இருக்கிறது என்பது மட்டுமே காரணமல்ல. தோழர் பெரியார் தமிழர்களின் விடுதலைக்கு எதிரானது திருக்குறள் என்றே கூறிகிறார். ஜாதி, மனு சாஸ்திர, வர்ணாஸ்ரமக் கருத்துக்கள் அனைத்தும் திருக்குறளில் உள்ளன என்று ஆதாரங்களுடன் நிறுவுகிறார் பெரியார். தனது இறுதிக்காலம் வரை அதை தொடர்ச்சியாகப் பேசுகிறார். அதன் காரணமாகவே விமர்சிக்கிறோம்.
மிக முக்கியமாக, தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஒரு தவறான போக்கு தொடங்கியிருக்கிறது. “தனித்தமிழ்நாடு வேண்டும், தமிழ்ஈழம் மலரவேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், பார்ப்பனர்கள் ஒழிய வேண்டும். அதுவரை பெண்கள் நமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும். அதுவரை பெண்ணியக் கருத்துக்களையோ, பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்கள், குடும்ப வன்முறைகள் பற்றியோ எவரும் பேசக்கூடாது. அதுவும் மேற்கண்ட கொள்கைகளுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் தோழர்களுக்கு எதிராக எந்தப் பெண்ணும் மூச்சுவிடக்கூடாது” என்ற சிந்தனை மேலோங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சிதான், இந்தத் திருக்குறள் ஆதரவுக் கேள்வியிலும் வெளிப்படுகிறது. பெண் விடுதலைக் கருத்துக்களில் மிகச் சரியாக இயங்கும் ஒருவர் பூணுால் அணிந்திருந்தாலோ, அல்லது தனது ஜாதிச்சங்கத்தில் உறுப்பினராக இருந்தாலோ நாம் ஏற்றுக் கொள்வோமா? அதேபோலத்தான் பெண்ணியக் கருத்துக்களுக்கு எதிராக இயங்கிக்கொண்டு ஜாதி ஒழிந்தால் போதும், நாடு விடுதலை பெற்றால் போதும் என்று எண்ணுபவர்களையும் பார்க்க வேண்டும்.
இறுதியாக,
வள்ளுவரோ, தொல்காப்பியரோ, இளங்கோவடிகளோ, புத்தரோ, வள்ளலாரோ, யாராக இருந்தாலும் பெரியாரின் கண்கொண்டுதான் பார்க்க முடியும். வேறு எவரது பார்வையும் நமக்கு வேண்டியதில்லை. அந்த அடிப்படையில் வள்ளுவரைப் பற்றிய பெரியாரின் இறுதிக்காலப் பார்வையை இந்நூலில் தொகுத்துள்ளோம்.
இவற்றை நாங்கள் இன்று திடீரெனக் கண்டுபிடித்து, இந்த மாநாட்டுக்காக அச்சிடவில்லை. ஏற்கனவே, தி.க, பெ.தி.க அமைப்புகள் வெளியிட்ட குடி அரசு நூல் தொகுப்புகளிலும், தோழர் பசு.கவுதமன் அவர்களின் தொகுப்புகளிலும் வெளியான கட்டுரைகள் தான். காட்டாறு ஏட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பும், பிறகு 2018 டிசம்பர், 2019 ஜனவரி, பிப்ரவரி இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு தான். கீற்று இணைய தளத்தில் திராவிடர் கழகத் தோழர் தமிழ் ஓவியா அவர்கள் தொகுத்து வெளியிட்டவைதான். கீற்று தளத்தில் இருந்து தான் நாங்களே தொகுத்தோம். அனைத்துக்கும் அமைதி காத்து, ஆதரவும் அளித்த தோழர்கள் தான் இப்போது அறிவுரைகளையும், கடிந்துரைகளையும் வழங்குகிறார்கள். ஆதரவு, எதிர்ப்பு இரண்டுக்கும் எங்களது நன்றி.
- அதிஅசுரன்