மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள மதவாத பா.ஜ.க.வின் அபாயகரமான செயல்திட்டங்களில் ஒன்று, இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை நீக்குவதாகும்.

காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புத் தகுதி வழங்கும் 370ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் கோரிக்கை, காஷ்மீரின் வரலாற்றை அறிந்தவர்களால் அபத்தமாகக் கருதப்படும். அம்மண்ணின் வரலாற்றை அறியாதவர்களால் மிக நியாயமான ஒன்றாகப் பார்க்கப்படும். இந்தச் சிக்கல்தான் பா.ஜ.க.வின் பலம். “ ஒரு நாட்டின் பல மாநிலங்களில், ஒரே ஒரு மாநிலம் மட்டுமே சிறப்புத் தகுதி உடையதாக இருக்க முடியுமா? அரசியல் சாசனத்திலேயே அவ்வாறு இருந்தாலும், அதை காலகாலத்துக்கும் அனுமதித்துக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா?” என்று பா.ஜ.க.வின் பரிவாரங்கள் தொடுக்கும் வினாவை வெகுமக்கள் பகுப்பாய்வு-க் கண்ணோட்டத்துடன் அணுகாமல் இருப்பதே பா.ஜ.க.வுக்குத் துணை செய்து வருகின்றது.

எனவே அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு மட்டுமின்றி, அயோத்திப் பிரச்சனை, பொதுசிவில் சட்டம் ஆகிய பா.ஜ.க.வின் திரிசூல செயல்திட்டங்கள் அனைத்திற்கும் பின்னால் இருக்கும் மதவெறியும், வரலாற்றை மறுக்கும் வன்முறையும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

மதவாத வன்முறைகள் மட்டுமே வாக்கு அறுவடைக்கு உதவாது என்பதைக் கடந்த கால அனுபவங்களின் மூலம் ஆழமாக உணர்ந்துள்ள பா.ஜ.க. இந்த முறை வளர்ச்சி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டது.

370ஆவது பிரிவை நீக்குவோம் என்று முழங்கிவந்த பா.ஜ.க., 2014 மக்களவைத் தேர்தலில் திறமையாகக் குரலை மாற்றியது. ஜம்முவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, 370ஆம் பிரிவினால் பயன் ஏற்பட்டுள்ளதா என்று விவாதம் நடத்துவோம் என்றார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கும் வரை வெளியிடப்படவில்லை. மக்களிடம், வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு ஆகியவற்றையே மீண்டும், மீண்டும் பேசி, தேர்தல் தொடங்கிய பிறகு, ‘திரிசூலக் கொள்கை’களைப் பட்டும்படாமலும், விஷமத்தனம் கலந்து எழுதி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது பா.ஜ.க.

மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்க வேண்டும், அதேநேரம், மோடியை முன்மொழிந்ததோடு, பா.ஜ.க.வையும் வழிநடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சையும் திருப்திப்படுத்த வேண்டும். இதில், தான் அம்பலமாக்கப்படுவது குறித்த கூச்சம் ஏதுமின்றி நடந்து கொண்டது காவிப்பரிவாரம். பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தவுடன், அதன் திட்டங்கள் துணிவாக வெளிப்படுத்தப்படுகின்றன. மத்திய அமைச்சரான ஜிதேந்திரசிங், அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை நீக்குவதற்கான பணிகளில் அரசு இறங்கும் என்கிறார்.

வரலாற்றை மறுப்பதும், புராணத்தை நிலைநாட்டுவதும் ஃபாசிசக் கட்சிகளின் பண்புகளில் ஒன்றாகும். இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராமர், பாபர் மஸ்ஜித் கட்டப் பட்டுள்ள இடத்தில்தான் பிறந்தார் என்று கூறிய பா.ஜ.க., அதன் கட்டுக்கதைகளுக்கு எதிரான வலுவான வரலாற்று ஆதாரங்கள் அனைத்தையும் நிராகரித்தது. காஷ்மீர் விவகாரத்திலோ அது நூறு ஆண்டுகளுக்குட்பட்ட வரலாற்றைப் புறந்தள்ளுகிறது.

மற்ற மாநிலங்களைவிட, காஷ்மீருக்கு மட்டும் ஏன் சிறப்புரிமை என்று கேட்கும் பா.ஜ.க., இரண்டு மாயைகளைக் கட்டமைக்கிறது. அவை,

1. காஷ்மீர் தவிர இன்னும் சில மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள சிறப்புத் தகுதியை மறைப்பது(அரசியல் சாசனப் பிரிவு 371).

2. காஷ்மீரை இநதியாவின் இதர மாநிலங்களுக்கு இணையாக நிறுவுவது.

காஷ்மீர் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல பிரிட்டீஷ் காலனி நாடாக இருந்து விடுதலை பெற்ற மண் அன்று. இந்தியாவை ஆண்ட பிரிட்டீஷ் அரசாங்கம், காஷ்மீரை ஆளவில்லை. மாறாக, காஷ்மீருக்கு ஒரு காப்பாளர் என்ற நிலையிலேயே இருந்தது. காஷ்மீர் அரசு 1846இல் பிரிட்டீஷ் அரசுடன் செய்து கொண்ட அமிர்தரசரஸ் ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவு இதை உறுதி செய்கிறது.

பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்து விடுதலை அடைந்த போது, காஷ்மீர் இரு நாடுகளுடனும் சேராமல் தனித்தே இருந்தது. எனவே நம் நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15க்கும் காஷ்மீருக்கும் சம்பந்தமே இல்லை.
காஷ்மீரில் 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் முஸ்லிம்கள். ஆனால் மன்னரோ டோக்ரா இனத்தைச் சார்ந்த ஹரிசிங். மன்னராட்சிக்கு எதிரான போராட்டமும் காஷ்மீரில் தொடங்கி இருந்தது.

பாகிஸ்தானுடன் இணையும் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்கப்படும் என ஜின்னா அறிவித்திருந்ததால், மன்னர் ஹரிசிங் முதலில் பாகிஸ்தானுடன் இணையும் யோசனையில் இருந்துள்ளார். காஷ்மீர் மக்களுக்கோ இதில் விருப்பமில்லை. எதார்த்தத்தில் பாகிஸ்தான், இந்தியா இரு நாடுகளையும் அம்மக்கள் அந்நியமாகவே பார்த்தனர். தங்களின் இன, மொழி, கலாச்சாரம் தனித்துவத்தோடு இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர்.

1939ஆம் ஆண்டு, ஏப்.27 அன்று தேசிய மாநாட்டுக் கட்சியைத் தொடங்கிய ஷேக்அப்துல்லா, தேசிய இன உணர்வுகளை எழுச்சியடைய வைத்தார். தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மத வாத சாயல் வந்துவிடக் கூடாதென்பதில், ஷேக் அப்துல்லா கவனமாக இருந்தார். அதன் முதலாமாண்டு மாநாட்டில் சர்தார் பூட்டாசிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948, அக்.24 அன்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அக்பர்கான் தலைமையில் 300 பழங்குடியினரைக் கொண்ட படை ஜம்முவில் அத்து மீறிப் புகுந்து அராஜகத்தில் இறங்கியது. இதுவே காஷ்மீரின் பெரும் பின்னடைவுக்குக் காரணமானது. மன்னர் ஹரிசிங், இந்தியப் பிரதமர் நேருவுடன் பேச, அக்.26, 1947இல் இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. இணைப்பின்போது, இந்திய அரசு காஷ்மீருக்குச் சில உறுதி மொழிகளை வழங்கியது. அதுவே இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவுக்கு அடிப்படையாகும்.

மன்னர் ஹரிசிங்கும், இந்திய அரசும் செய்து கொண்ட உடன்படிக்கை (Instrument of Accession.IOA) இரு முக்கியக் கூறுகளைக் கொண்டிருந்தது.

- பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய துறைகள் மட்டுமே இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். இவை தவிர உள்ள அனைத்துத் துறைகளின் அதிகாரங்களும் காஷ்மீர் அரசிடமே இருக்கும்.

- ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்டு, அங்கே சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டபின், மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப்படும். இதில் ஜம்மு - காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்தியாவுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்.

மேற்கண்ட ஒப்பந்தத்தின் முக்கியக் கூறுகளை நவ.2, 1947 அன்று இந்தியப் பிரதமர் நேரு வானொலியில் அறிவித்தார். இதனிடையே, ஜம்மு - காஷ்மீரை பாகிஸ்தான் அபகரிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசு 1947, டிச.31 அன்று இப்பிரச்சினையை ஐ.நா. அவைக்குக் கொண்டு சென்றது. “சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பு என்ற ஜனநாயக வழிமுறையின் மூலம் காஷ்மீர் மக்களின் கருத்தை அறிந்து, அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்ள வழிவகை செய்யப்படும்” என, ஐ.நா அவையில் இந்திய அரசு கூறியதோடு, நேரடி பொது வாக்கெடுப்பிற்கு ஐ.நாவின் மேற்பார்வையும் தேவைப்படலாம் என்றும் கூறியிருந்தது.

காஷ்மீருக்கு நேரெதிரான நிலை குஜராத் ஓரத்தில் அமைந்துள்ள ஜுனாகத் சமஸ்தானத்தில் நிலவியது. அங்கே மன்னர் முஸ்லிம். மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம் அல்லாதவர்கள். ஜுனாகத் நிஜாம், பாகிஸ்தான் பக்கம் சாய, அங்கே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மக்களின் விருப்பப்படி அது இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி, 370ஆவது பிரிவு குறித்து நடத்திய நேர்படப் பேசு விவாத நிகழ்ச்சியில், “ஜுனாகத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தியதுபோல, காஷ்மீரில் ஏன் நடத்தப்படவில்லை?” என பேரா. சுபவீ எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. தரப்பினால் பதிலளிக்க முடியவில்லை.

காஷ்மீரின் துயரங்களுக்குக் காரணமே 370ஆவது பிரிவுதான் என்று பா.ஜ.க. நெஞ்சாரப் பொய்யுரைக்கிறது. அரசியல் சாசனத்தில் சிறப்புத் தகுதி இருந்தாலும், ஏட்டில் இருப்பதற்கும், நடை முறையிலுள்ள சூழ்நிலைக்கும் தொடர்பே இல்லாத தேசத்தில், காஷ்மீரிகளின் வாழ்வுரிமையும், தன்மானமும் கேள்விக்குறி யாக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அங்கு நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். ஒருவரை தீவிர வாதி என ராணுவம் சந்தேகித்தால் போதும், கொன்று விடலாம். பாலியல் வன்முறைகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள்தான். தேசப் பாதுகாப்பு என்ற போர்வை, எல்லா அக்கிரமங்களை யும் மூடிமறைக்கப் போதுமானதாக உள்ளது.

இதயத்தில் ஈரமற்றவர்களிடமிருந்து ஆட்சியதிகாரம் இதயமே அற்றவர்களுக்கு மாறியுள்ளது. 370ஆவது பிரிவுக்கு அம்பேத்கர் ஆதரவளிக்கவில்லை என்பதை வைத்து, அவரைத் தங்களுக்குச் சாதகமாக் கப் பார்க்கும், சங்பரிவாரங்கள், அம்பேத் கரை முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா? மதமாற்றம்தான் இனஇழிவுக்குத் தீர்வு என உணர்ந்து, “சாகும்போது, நிச்சயமாக ஒரு இந்துவாக சாகமாட்டேன்” என்ற அம்பேத்கரின் கருத்தை அவர்கள் வழி மொழிவார்களா?

அன்று, துறை ஒதுக்கப்படாத அமைச்சராக இருந்த கோபால்சாமி அய்யங்கார்தான் 370ஆவது பிரிவை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை, அரசியல் சூழ்ச்சிகள் மூலம், மைய அரசுகள் நீர்த்துப் போகச் செய்துள்ளன.

- காஷ்மீர் அரசியல் சாசனம் 1939இன் 75ஆவது பிரிவின்படி, காஷ்மீர் அமைச்சர வையின் விளக்கங்களே இறுதியானவை என்ற அதிகாரம் இருந்தது. இதையும், மைய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும், மத்திய அரசு பறித்தது.

- 1958இல் 312ஆவது பிரிவில் திருத்தம் செய்து, காஷ்மீருக்கு மிகிஷி, மிறிஷி அதிகாரிகளை அனுப்பும் அதிகாரம் கொண்டுவரப்பட்டது.

- 1964இல் 356,357 அரசியல் சாசனப் பிரிவுகள் காஷ்மீருக்கு விரிவுபடுத்தப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரும் வழிமுறை செய்யப்பட்டது.

இவ்வாறு இன்னும் பல... இதுதான் சிறப்பு அந்தஸ்தின்(?) லட்சணம்.

அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவின் பல்வேறு பிரிவுகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டாலும், பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாமல் 370ஆவது பிரிவு தடுக்கிறது. பூலோக சொர்க்கம் எனப் போற்றப்படும் காஷ்மீரில், நிலங்களை வளைத்து, வளைத்து, பெரும்புள்ளிகள் வாங்கிப் போட முடியாமல் தடுப்பது 370ஆவது பிரிவுதான்.

முக்கியமாக, காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துள்ள கண்ணிதான் 370ஆவது பிரிவு.

சில முதலாளிகளுக்கு காஷ்மீரின் நிலம் சொந்தமாக வேண்டும் என்பது 370 எதிர்ப்பாளர்களின் விருப்பம். அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை நீக்கினால், காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமில்லாமல் போய்விடுமோ என்பது தேசப்பற்றுள்ளவர்களின் கவலை. 370ஆவது பிரிவை ஆதரிக்கும், கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்திரி 370ஐ எல்லா மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்கிறார்.

உண்மையில், தமிழ்நாட்டை மார்வாடிகள் உள்ளிட்ட வடவர்களின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாக்க, 370ஐப் போன்ற பிரிவுகள் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

Pin It