வண்ணங்கள் பல இருப்பதைப் போன்று மனிதர்களும் பல வகையினர் இருக்கின்றனர். வண்ணங்கள் மாறினால் அழகு மிளிரும். மனிதர்கள் குணங்களாலும் செயல்களாலும் மாறுபடுகின்றனர். மனிதர்களின் குணங்கள் மாறினால் அழிவே எஞ்சும். குணங்கெட்ட மனிதர்களை அறிவுகெட்ட மனிதர்களாக வழக்கத்தில் குறிப்பிடுவர்.
பெருந்தன்மையுடன் பிறரிடம் நடந்து கொள்ளத் தெரியாதவர்களைப் பார்த்து, "அவங் கெடக்கிறான். அறிவுகெட்டவன். கொஞ்சநாச்சும் அறிவிருந்தா இப்படி நடந்துக்குவானா?" என்று நம்மவர்கள் கூறுவதைப் பார்க்கலாம். இவர்களைத் தான் வள்ளுவர் பேதை மனிதர்களாக அடையாளங் காட்டுகின்றார்.
உண்மையில் பேதை என்பவர் யார்? அறிவிலிகளைத்தான் பேதைகள் என்று குறிப்பிடுவர். இவர்களை மூடர்கள் என்று கூறலாம். பரிமேலழகர் பேதைமை என்பதற்கு, "யாதும் அறியாமை" என்று விளக்கம் தருகின்றார் (பரி.உரை, ப., 332)
நன்மை தருவது எது? தீமை தருவது எது? என்று அறியாமல் தனக்குத் நன்மையை விட்டுவிட்டுத் தீமையை நாடுவதே பேதைமை ஆகும். தனக்குக் கேடு தருகின்ற செயல்களைச் செய்து பயன்தரும் செயல்களைக் கைவிடுவது பேதைமையாகும். துரியோதனன் நல்லவற்றை எல்லாம் கைவிட்டுவிட்டு தனக்கு அழிவைத்தரும் செயல்கள் என்னென்னவோ அவற்றை எல்லாம் செய்தான். அதனால் அவன் மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்தவர்களும் அழிந்தனர்.
பாண்டவர்களைச் சூதில் வென்று அவர்களைக் காட்டிற்கு விரட்டினான். அவர்கள் காட்டில் எவ்வாறு இருக்கிறார்கள் என்று பார்த்து ரசிப்பதற்காகச் சென்று அவமானப்பட்டான். துருவாச முனிவர் துரியோதனனைப் பார்க்க வந்தபோது அவருக்குப் பணிவிடை செய்து அவரது மனதை வென்ற துரியோதனன் அவர் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்ட போது, "என்னிடம் விருந்தினராக வந்ததைப் போன்று என் சகோதரர்களான பாண்டவர்களிடமும் தாங்கள் விருந்தினராகத் தங்களது சீடர்களுடன் செல்ல வேண்டும். அதுவும் அவர்கள் எல்லோரும் உண்டு முடித்த பின்னர் தாங்கள் அங்கு எழுந்தருள வேண்டும்" என்று வரமாகக் கேட்கிறான்.
பாண்டவர்கள் அனைவரும் உண்ட பின்னர் சென்றால் துருவாசர் உணவு உண்ணக் கேட்பார். அப்போது பாண்டவர்களால் அவருக்கு உணவளிக்க முடியாது. அதனால் அவர் கோபம் கொண்டு பாண்டவர்களைச் சபிப்பார். அவர்களது சாபத்தினால் பாண்டவர்கள் அழிவர். நாம் மகிழ்ச்சியாக எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி நாட்டை ஆளலாம் என்ற குரூர சிந்தனையுடனேயே அவரை அங்கு அனுப்புகின்றான்.
துருவாசரும் அவ்வாறே செல்கிறார். அவரால் துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கை மீற முடியவில்லை. பாண்டவர்கள் துருவாசர் வந்ததைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் கண்ணனிடம் வேண்ட அவன் கவலைப் படாதீர்கள் நான் பார்த்துக் கொள்கிறேன். முனிவரையும் அவரது சீடர்களையும் குளித்து உணவுண்ண வருமாறு கூறுங்கள் என்று கூறுகிறான்.
பாண்டவர்களும் அவ்வாறே துர்வாசரிடம் கூற அவர் தனது சீடர்களுடன் ஆற்றிற்குக் குளிக்கச் செல்கிறார். அதற்குள் கண்ணன் திரௌபதியிடம் வந்து உணவிருக்கிறதா? எங்கே பாத்திரத்தைக் கொண்டுவா? என்று கேட்கிறான். அவளும் உணவில்லை என்று கூறிக் கொண்டே பாத்திரத்தை எடுத்துவந்து கண்ணனிடம் கொடுக்கிறாள்.
பாத்திரத்தைப் பார்த்த கண்ணன் அதன் ஓரத்தில் ஒட்டியிருந்த சிறுபருக்கையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, "இது அனைத்து உயிர்களின் பசியையும் போக்கட்டும்" என்று கூறிக் கொண்டே விழுங்குகின்றான். அதன் பின்னர் கண்ணன் பீமனை அனுப்பி, "பீமா நீ சென்று துருவாசரையும் அவரது சீடர்களையும் உணவு உண்பதற்காக அழைத்துவா" என்று கூறி அனுப்பி வைக்கிறான்.
அதே சமயத்தில் ஆற்றில் குளித்த துருவாசர், அவரது சீடர்கள் அனைவரும் நன்கு உணவு உண்டதைப் போன்று உணருகிறார்கள். அவர்களுக்குப் பசியே எடுக்கவில்லை. இனி எதற்காகப் பாண்டவர்களிடம் செல்லவேண்டும். வேண்டாம் இனி நாம் திரும்பிப் போவோம் என்று நினைக்கின்றபோது, அவர்களை அழைப்பதற்காகப் பீமன் வருகின்றான்.
பீமன் வந்து விருந்திற்கு அழைப்பதைப் பார்த்த துருவாசர், "அப்பா பீமா, எங்களுக்கு இப்போது பசியில்லை. நாங்கள் சென்று வருகிறோம். நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள். என்னுடைய ஆசீர்வாதங்கள் எப்போதும் உங்களுக்கு உண்டு. நாங்கள் சென்று வருகிறோம். இதை தருமனிடம் சொல்" என்று கூறிக் கொண்டு சென்றார். பாண்டவர்கள் துருவாசரின் கோபத்திற்கு ஆளாகி அவரால் சபிக்கப்படுவர் என்று நினைத்த துரியோதனன் ஏமாற்றம் அடைந்தான்.
தனக்கு முனிவர் வரம் கொடுக்க நினைக்கின்றபோது அந்த ஆக்கத்தைப் பெற நினைக்காமல் மற்றவர்களுக்குத் துன்பம் தரவேண்டும் என்ற கருதி ஆக்கத்தைக் கைவிடுகின்ற அறியாமை நிறைந்தவனாக துரியோதனன் விளங்குகின்றான். இத்துரியோதனனைப் போன்ற மனிதர்கள் பலர் இன்று வாழ்கின்றார்கள். இவர்களைத்தான் பேதை மனிதர்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
பேதை மனிதர்களுடன் நட்புக் கொள்ளக் கூடாது. அவர்களது நட்பை விட்டுவிடுவதுதான் ஒருவனுக்கு நன்மையைத் தரும். அவ்வாறு அவர்களது நட்பைக் கைவிடுவதால் எந்தவிதமான துன்பம் ஒருவருக்கு நேராது. அதனால் இன்பமே நேரும் என்பதை,
"ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்"(கு.எ., 797)
"பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்"(கு.எ.,,839)
என்று வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். அறியாமை நிறைந்த பேதை மனிதர்களின் செயல் ஆக்கத்தைக் கெடுத்துவிடும். அதனால்தான் வள்ளுவர் இத்தகையோரை நட்புக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துகிறார்.
இப்பேதை மனிதர்கள் எவ்வாறு இருப்பர்? அவர்களது குணம் என்ன? என்பது குறித்தும் வள்ளுவப் பெருந்தகை எடுத்துரைக்கின்றார். பேதையர்கள் எதைக் குறித்தும் வெட்கப்பட மாட்டார்கள். வெட்கப்பட வேண்டியதற்குக் கூட வெட்கப்படமாட்டார்கள். எதைத் தேடிப் பெற வேண்டுமோ அதைச் செய்யமாட்டார்கள். அன்பு காட்ட வேண்டியவர்களிடம் அன்பு காட்டாமல் மிகுந்த இழிவுடன் நடந்து கொள்வர். பாதுகாக்க வேண்டியவற்றைப் பாதுகாக்காது விட்டுவிடுவார்கள். இதுவே பேதை மனிதர்களின் இயல்பாகும் என்பதை,
"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்"(கு.எ.,833)
என்று வள்ளுவர் தெளிவுறுத்துகின்றார். இக்குறட்பாவில் கூறப்பட்ட பேதை மனிதர்களின் இயல்புகள் இன்று பலருக்கும் பொருந்துகின்ற அளவில் உள்ளது. ஊழல் செய்வதற்கும், கொலை செய்வதற்கும், இழிசெயல்களில் ஈடுபடுவதற்கும், பழிபாவங்களுக்கு அஞ்சுவதற்கும் இன்று யாரும் வெட்கப்படவே மாட்டார்கள். இச்செயல்கள் தங்களின் பெருமைக்குரியவை என்றும் மனதில் நினைப்பதால் அவர்கள் இதற்கெல்லாம் வெட்கப்படமாட்டார்கள். அதனால்தான் இன்று கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஊழல் உள்ளிட்ட செயல்கள் மலிந்துவிட்டன.
அதைப் போன்று உழைத்து ஒன்றைப் பெற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இல்லாமல் போய்விடுகின்றது. இதனால் ஒழுக்கம் என்பது சிறிதும் இல்லாதவர்களாக அவர்கள் வலம் வருகின்றனர். அன்பு காட்ட வேண்டி அம்மா, அப்பாவிடம் கூட அவர்கள் அன்பு காட்ட மறுப்பவர்களாக இருக்கின்றனர். தாய்தந்தையரையும் பெண்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாகப் பலரும் இன்று உள்ளனர். முதியோர் இல்லம் பெருகுவதும், பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நிகழ்வதும் இத்தகைய பேதை மனிதர்களாலேயே அதிகம் நிகழ்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல் தன் மனையாளை விட்டுவிட்டு பிறருடைய மனைவியை விரும்பும் ஒழுக்கக் கேடு இன்று அதிகரித்துவிட்டது. இது பேதை மனிதர்களின் ஒழுக்கக் கேடான செயலாகும். இத்தகைய இழி செயலால் இன்று சமுதாயத்தில் பல்வேறு சீர்கேடுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. காமத்தின் காரணமாக பிறருடைய மனைவியை விரும்பி அவரின் வாயிலின்கண் சென்று நிற்கும் பேதைமனிதர்கள் பாவம் செய்கின்ற எல்லாரையும் விட இழிவானவர்கள் ஆவர்.
ஒழுக்கம் தவறி நடக்கும் பேதை மனிதர்கள் அனைவருள்ளும் பிறன்மனை விரும்பும் பேதையர்கள் கடைப்பட்டவர்கள் என்பதை,
"அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்"(கு.எ., 142)
என்று பிறன்மனை விரும்பும் பேதை மனிதர்களைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகின்றார். அறன்கடை நின்றார் என்று வள்ளுவர் ஏன் குறிப்பிட வேண்டும்? இதற்கு, "பிறன் மனை நயத்தல் என்ற இழிசெயல் அறத்தின் நீக்கப்பட்டமையின், ‘அறன் கடை’ என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப் பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், ‘பேதையார் இல்’ என்றார். எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது" என்று பரிமேலழகர்(பரி. உரை, ப., 63) உரை வகுக்கின்றார்.
வெட்கப்பட வேண்டிய செயல்களுக்குப் வெட்கப்படாமல் பிறன்மனை விரும்பும் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்பவர்கள், எதையும் முயன்று பெறுவதற்கு முயலாதவர்கள், பிறரிடம் அன்பில்லாதவர்கள், இழி நடத்தை உடையவர்கள் இவர்களே பேதை மனிதர்கள் ஆவர். இவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கிவிட்டு, நேர்மையான ஒழுக்கம் நிறைந்தவர்களுடன் இணைந்து இவ்வுலகம் உய்யப் பாடுபடு வேண்டும் என்ற வாழ்வியல் அறத்தை வள்ளுவர் உணர்த்துகின்றார். பேதை மனிதர்களை அறிந்து அவர்களது நட்பை ஒதுக்கி நல்லோருடன் இணைந்து வாழ்வோம். வளம்பெறுவோம்.
(தொடரும்…)
- முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை