தெள்ளுதமிழ் வள்ளுவன் திருவாய் மலர்ந்தருளிய முப்பால்நூல், தென்னாட்டவர்க்கு மட்டுமன்றி எந்நாட்டவர்க்கும் ஏற்புடைய இலக்கியமாய்த் திகழ்வது எவரும் அறிந்த உண்மை. உலக இலக்கிய வரலாற்றிலே ஈடும் இணையும் அற்ற இடத்தைப் பிடித்திருக்கும் திருக்குறள், தனது சொந்த வரலாற்றைப் பொறுத்தமட்டில் மிகமிக முக்கியமான முடிச்சுக்களை இன்னும் அவிழ்க்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறது. அவிழவேண்டிய அம்முடிச்சுக்களால், அருந்தமிழ்ப் பெருங்குலம் அளப்பரும் உண்மைகளை அறிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

வள்ளுவனின் பூர்வீகம் பற்றிய புனைகதைகளை வரலாற்று ஆய்வுகள் வெற்றிகரமாகப் புறந்தள்ளிவிட்டன. ஆதி என்ற புலைச்சி வயிற்றில் பகவன் என்னும் அந்தணனால் கருக்கொண்டவன்தான் திருக்குறளோன் என்ற தெருக்கூத்தையெல்லாம் தமிழுலகம் எப்போதோ தூக்கியெறிந்துவிட்டது. உலகப் புலவன் வள்ளுவனின் உண்மை வடிவங்களை ஐயம் திரிபு அற அறிந்திடவேண்டுமென்னும் உணர்ச்சிமிக்க உத்வேகத்தில் தமிழினம் தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. நூலறிவாளர்களின் நுண்மாண் நுழைபுலத்தாலும் கடின உழைப்பாலும் கள ஆய்வுகளாலும் கண்டறியப்பட்ட உண்மைகள், இன்றைக்கு வள்ளுவப் பெருமானின் வரலாற்று வட்டத்துக்குள்ளே புதிய வெளிச்சம் பாய்ச்சி நிற்கின்றன.

கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளிலே கரந்து கிடந்த பேருண்மைகளைக் காய்தல் உவத்தலின்றித் தமிழனின் கண்ணுக்குத் தெரியப்படுத்தி வருகின்ற செந்தமிழ் ஆய்வாளர்கள், வள்ளுவனின் பூர்வீகம் நாஞ்சில் நாடாக இருக்கவேண்டுமென்ற முடிவுக்கு வந்துள்ளனர். ‘தென்குமரி தந்த திருவள்ளுவர்’ என்னும் நூலில், பிரபல வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் இந்த முடிவை அரண் செய்திடும் வகையில் அடுக்கடுக்காக ஆதாரங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். குறள்நூலிலே குவிந்து கிடக்கும் குமரிமாவட்டத்துக்கே சொந்தமான வட்டாரச் சொற்களையும் வரலாற்றுப் பழக்கவழக்கங்களையும் வைத்து, வள்ளுவன் நாஞ்சில் நாட்டவன்தான் என்ற உண்மையை எள்ளளவும் ஐயமின்றி நிறுவியிருக்கிறார்; நிலைநாட்டியிருக்கிறார். ஆக, வள்ளுவனின் பூர்வீகம் குறித்த புனைகதைகளுக்கும் பூசல் வாதங்களுக்கும் புள்ளி வைத்தாகிவிட்டது.

இப்போது அடுத்த கட்டமாக, தமிழனின் ஆய்வுப் பார்வை வள்ளுவனின் குறட்பாக்கள் மீதே திரும்பியிருக்கிறது. ஆய்வு வரலாற்றிலேயே இது ஒரு அற்புதமான திருப்பம். வள்ளுவன் நிச்சயமாக விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தகன் என்பதில் இருவேறு கருத்து இதுவரை இல்லை. எனினும், வள்ளுவ காவியத்தின் முழுமையான விழுமியத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற சில முரண்பாடுகளை அடையாளம் காட்ட முனைவது நிச்சயமாக முட்டாள்தனமும் இல்லை.

வள்ளுவன் எழுதிய பாடல்கள் இவ்வளவுதானா? வெறும் 1330 குறட்பாக்களோடு அந்த மாபெரும் புலவன் தனது மங்காப் புகழ்ப் பனுவலுக்கு மங்களம் பாடியிருப்பானா? பொங்கிப் பிரவாகமெடுத்திருக்கும் தனது வெண்பா வெள்ளத்தில் இன்னும் ஒருசில நூறு குறட்படகுகளையேனும் அவன் ஓடவிட்டிருந்திருக்க மாட்டானா? ஐயன் வள்ளுவன்மீது இப்படியொரு ஐயம், எத்தனையோ இலக்கிய நெஞ்சங்களை மட்டுமல்ல - என்போன்ற சாதாரண தமிழ் ஆர்வலர்களின் நெஞ்சங்களைக்கூட நீண்ட காலமாக நெருடிக் கொண்டிருக்கிறது. இந்த ஐயம் எழுவதில் அப்பழுக்கற்ற நியாயம் இருக்கிறது என்பதை எண்பித்துக் காட்டுவதுதான் இந்தக் கட்டுரையின் மூலம் அடியேன் ஆற்றிட முயன்றிடும் கடமை.

ஈராயிரம் ஆண்டு முன்னர், தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு நிலைபாடு என்ன என்பதை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், சில மறுக்கமுடியாத உண்மைகள் புலனாகும். காதலும் வீரமும்தான் தமிழர் பண்பாடு என்று நாம் குத்துமதிப்பாகக் கூறித் தப்பிக்க முயல்வது கோமாளித்தனம். தமிழனின் கலாச்சாரம் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது உண்மையென்றால், அவனது பண்பாட்டில் இறைவழிபாடும் மறுவுலக நம்பிக்கையும் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டின் முன்பிருந்தே இறைவழிபாடும் மறுவுலக நம்பிக்கையும் தமிழனின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்திருக்க, அதே காலகட்டத்தில் எழுதப்பட்ட திருக்குறளில் மட்டும் அவை இடம் பெறாமல் போனது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

Valluvarஇறைவழிபாட்டைப் பொறுத்தமட்டில் வள்ளுவன் பெரிதாக ஒன்றும் எழுதவில்லை என்பது எனது ஆதங்கம். ‘கடவுள் வாழ்த்து’ என்னும் ஒரே ஒரு அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களை மட்டும் தந்துவிட்டு, ஏனைய பகுதிகளில் ஏதோ ஒப்புக்கு ‘இறைவன்’ ‘இந்திரன்’ ‘தெய்வம்’ ‘தேவர்’ ‘அமரர்’ போன்ற சொற்களை வீசிவிட்டுப் போகும் அளவுக்கு வள்ளுவன் ஓர் ஏனோதானோ எழுத்தாளன் அல்லன். நிச்சயம் இறைவழிபாட்டினைத் தலைப்பாய்க் கொண்டு எண்ணற்ற வெண்பா மொட்டுக்களை அவன் இறைத்திருக்க வேண்டும் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.

அவ்வண்ணமே, ‘மறுமை’ ‘எழுமை’ ‘அவ்வுலகு’ என்றெல்லாம் ஆங்காங்கே குறிப்பிடும் வள்ளுவன், மறுவுலக வாழ்வுபற்றி விரிவாக எழுதாமல் விட்டிருப்பானா என்ற ஐயமும் எழுகிறது. அரசியலையும் அமைச்சியலையும் களவியலையும் கற்பியலையும் கரைத்துக் குடித்திருக்கும் வள்ளுவனுக்கு மறுவுலக வாழ்வு பற்றி - அதாவது ‘வீடு’ பேறு பற்றி எழுதவா தெரியாது? சிற்றின்பத்தை - சிருங்கார ரசத்தை இத்தனைச் சீரோடும் சிறப்போடும் சிந்தை குளிரத் தந்திருக்கும் வள்ளுவனுக்கு, பேரின்பத்தை - அதாவது ‘வீடு’ என்ற விண்ணுலக வாழ்வை விரிவாக விளக்கி, முப்பாலுக்கு அப்பால் ஒரு நான்காம் ‘பால்’ தந்திருக்கவா முடியாது? வான்புகழ் வள்ளுவனுக்கு இது இயலாத செயலா என்ன?

நடுநிலையோடு சிந்தித்துப் பார்த்தால், திருக்குறள் முடிக்கப்பட்டிருக்கும் விதமே எந்த ஒரு தமிழனிடமும் அதிருப்தியைக் கிளப்பிவிடுகிறது. எத்தனை பெரிய கவிஞன்! ஆற்றல் வாய்ந்த தத்துவ ஞானி! அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிய அகில உலகச் சிந்தனைச் சிற்பி! அவன் உருவாக்கியிருக்கும் காவியம், ஒரு காமநெடி கரைபுரண்டோடும் சிற்றின்பக் கவிதையுடனா முடிய வேண்டும்? ஊடுவதையும் கூடுவதையும் முயங்குவதையும் சொல்லியா ஒரு தெய்வப் புலவனின் தீந்தமிழ்க் காவியம் இறுதிவரிகளை எழுத வேண்டும்? நிச்சயம் இருக்காது! இங்கு ஏதோ சதி நடந்திருக்கிறது என்பதை நம்மால் ஊகிக்காமல் இருக்க முடியாது! திட்டமிட்ட இலக்கியத் துரோகம் திருக்குறளுக்கு இழைக்கப் பட்டிருக்கிறது என்பதை இனியும் நம்மால் மூடி மறைக்கவும் முடியாது!

வள்ளுவன் நான்காம் பால் பாடியிருப்பான் என்பதையும், அந்த நான்காம் பால்தான் விண்ணுலகம் என்ற பேரின்ப வீடு என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில், இங்கே இரு பெரும் புலவர்கள் இயற்றியுள்ள பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கிட விழைகிறேன்.

ஒளவை மூதாட்டி இயற்றிய ஒரு வெண்பா, ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலில் காணப்படுகிறது. இதை வள்ளுவனிடமே ஒளவை பாடினாள் என்று செவிவழிச் செய்தியும் உண்டு. ஆயிரக்கணக்கான குறள் வெண்பாக்களால் வள்ளுவன் ஆக்கிய அத்தனை “பால்”களையும் ஒரே வெண்பாவில் அடக்கி வைத்திருக்கிறாள் ஒளவை. பாடல் இதோ :

“ ஈதல்அறம், தீவினைவிட்(டு) ஈட்டல்பொருள், எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொருமித்(து) - ஆதரவு
பட்டதே இன்பம், பரனைநினைந்(து) இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.”

பாடலைக் கூர்ந்து கவனித்தால், அறம்-பொருள்-இன்பம்-வீடு என்ற நான்கு பால்களையும் ஒளவை ஒரே வெண்பாவில் சொல்லி வள்ளுவனை வியப்பிலாழ்த்தியிருப்பது விளங்குகிறது. அதே வேளை, வள்ளுவனும் நிச்சயமாக நான்கு ‘பால்’கள் எழுதியிருக்க வேண்டும் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

இந்த விளக்கத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது, பெரும்புலவன் நக்கீரனின் பாடல். ‘திருவள்ளுவ மாலை’ என்னும் நூலில் காணப்படும் அந்தப் பாடல் இதோ:

“ தானே முழுதுணர்ந்து, தண்டமிழின் வெண்குறளால்,
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோற்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழியுல(கு) என்ஆற்றும் மற்று!”

இதுவும் ஒரு வெண்பாதான். நக்கீரன் இதில் ‘அறம் முதலா அந் நான்கும்’ என்று குறிப்பிட்டிருப்பது, அறம்-பொருள்-இன்பம்-வீடு என்னும் நான்கு பால்களையும்தான். நக்கீரன் மிகத் தெளிவாகச் சொல்கிறான் - வள்ளுவன் பாடியிருப்பது நான்கு பால்கள் என்று. அந்த நான்காம் பால், முன்பு ஒளவை குறிப்பிட்ட ‘பேரின்ப வீடு’ என்ற விண்ணுலகம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நக்கீரன் சிவனையே எதிர்த்த செந்தமிழ் மறவன். தமிழுக்காக, நெற்றிக் கண்ணனின் நெருப்பலைகளையே நேர்நின்று பொருதிய நெஞ்சுரம் கொண்டவன். பொருட்குற்றம் கண்டு பொங்கியெழுந்த அந்தப் பொற்றமிழ்ப் பாவலன், நிச்சயம் பொய்யை எழுதியிருக்க மாட்டான். வள்ளுவனை ஒண்ணீர் முகிலோடு ஒப்ப உரைசெய்து வழிபாடு நடத்தியிருக்கவும் மாட்டான். எனவே அவனது கூற்றை நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம். தவறில்லை! ‘அறம் முதலா அந்நான்கும்’ என்ற இடத்தில் ‘அறம் முதலா அம்மூன்றும்’ என்றுகூட நக்கீரன் எழுதியிருக்கலாம். வெண்பாவின் தளை அங்கே பிறழாது. என்றாலும் நக்கீரன் அப்படி எழுதவில்லை என்பதை நாம் இங்கே நன்கு கவனிக்க வேண்டும்.

திருக்குறளின் சீரான செழுமையை நோக்கும் போது, அந்நூலில் இடைச்செருகல்கள் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. வேறெந்தக் கவிஞனிடத்தும் காணப்படாத வள்ளுவனின் வளமைமிகு புலமை அதற்கு நிச்சயம் இடம் கொடுத்திருக்காது. ஆனால், கணிசமான முறையிலே இருட்டடிப்பு நடந்திருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறுக்கமுடியாத அளவுக்குத் திருக்குறள் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. வேண்டுவதை மட்டும் வெளியிட்டு, விருப்பத்துக்கு ஒவ்வாததையெல்லாம் வெட்டித் தள்ளி, ஓர் எழுத்தாளனின் எண்ணச் சுதந்திரத்தின் மீதே ஈட்டி எறிகின்ற இழிசெயல், இந்தக் காலத்தில் மட்டுமல்ல - வண்ணத் தமிழ் வள்ளல் வள்ளுவன் காலத்தில்கூட பெரும் வக்கிரத்துடன் கோலோச்சியிருக்கிறது. அதிகார மமதை பிடித்த ஆளும் வர்க்கத்தினரின் ஆணவத்துக்கும் அபிலாஷைகளுக்கும் பைந்தமிழ் வித்தகன் வள்ளுவனே பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை. அதனை மெய்ப்பித்துக் காட்டுகின்ற வலிமையான ஆதாரங்கள்தான் மேற்கூறிய இருபெரும் புலவர்களின் எழுத்துமூலம் யாம் பெற்றிருக்கும் வாக்குமூலங்கள்!

‘தேவர்’ என்றும் ‘செந்நாப்போதார்’ என்றும் ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றும் ‘மாதாநுபங்கி’ என்றும் பல்வேறு காரணப் பெயர்களால் அழைக்கப்படும் வள்ளுவன், “நான்முகனார்” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறான். இது, வள்ளுவன் நான்கு பால்கள் எழுதியிருந்தமையால் சூட்டப்பட்ட ஒரு காரணப் பெயராகக்கூட இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரம்ம தேவனைச் சுட்டுகின்ற ‘நான்முகன்’ என்னும் சொல், நிச்சயமாக எந்தவொரு தமிழ்ப்புலவன் பெயர்முன்னும் அடைமொழியாகத் தோற்றம் நல்க இந்துதர்மம் அனுமதித்திருக்குமா என்பது கேள்விக்குறி.

திருக்குறளுக்கு உரையெழுதியிருக்கும் பதின்மரில் முதன்மைச் சிறப்பு வகிக்கின்ற பரிமேலழகர், வள்ளுவ காவியத்தின் ஒட்டுமொத்த வனப்பையும் வகைப்படுத்தி விளக்கும் போது, “சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து வீடு” என்ற ஒரு வாக்கியத்தைப் பதிவு செய்கின்றார். உரையாசிரியரே ‘வீடு’ என்னும் உறுதிப் பொருள் குறித்து இப்படியொரு சொற்றொடரைத் தருகிறாரென்றால், படைப்பாளனாகிய வள்ளுவன் “வீடு” என்னும் பால் பாடியிருக்கவேண்டும் என்றுதானே பொருள்? காப்பியத்தில் இல்லாத ஒன்றிற்கு உரையாசிரியன் விளக்கம் எழுதிவைத்திருக்க முடியாது என்பதை நாம் இங்கு உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

இதுகாறும் யாம் கண்ட விளக்கங்கள், வள்ளுவன் நான்காவது பாலும் எழுதியிருக்க வேண்டும் என்பதனை வெளிச்சமிட்டுக் காட்டும் கலங்கரை விளக்கங்கள்!

ஆனாலும் அந்தோ! என்செய்வோம்? முப்பாலுக்கு அப்பால் வள்ளுவன் தீட்டியிருந்த அப் பால், நம் கைகளுக்குக் கிடைக்கவே இல்லை - யாரோ செய்த தப்பால்!....

- தொ.சூசைமிக்கேல்

Pin It