தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சங்க காலத்திலே வைதிக சமயமும், அவைதிக சமயங்களான சமணமும், பௌத்தமும் கருத்தியல்ரீதியில் சமூக வாழ்க்கையில் அறிமுகமாகி விட்டன. அன்றைய காலகட்டத்தில் இனக்குழுச் சமூக வாழ்க்கைச் சூழல் சிதைவடைந்து, குறுநில மன்னர்களுடன் மூவேந்தர் ஆதிக்கம் செலுத்துகிற அரசியல், பரவலாகிக்கொண்டிருந்தது. தமிழ் மொழியினால் அடையாளப்படுத்தப்படுகிற நிலவெளியானது விரிவடைந்து, அரசியலுடன் தொடர்புடையதாக மாறியது. தாய்வழிச் சமூக அமைப்பு சிதலமாகி, குடும்ப நிறுவனத்தை வலியுறுத்திடும் சங்கப் பாடல்கள், பெண் பற்றிய புதிய சொல்லாடல்களை உருவாக்கின. புறத்தில் நிலமும் அகத்தில் பெண்ணுடலும் ஆணின் துய்ப்புக்களாக உருவாக்கப்பட்ட சூழலில், பெண்ணுக்கான இலக்கணம் தனியாக வகுக்கப்பட்டது. குடும்ப அமைப்பு முன்னிலைப்படுத்தப்பட்டபோது, புதிதாக உருவாக்கப்பட்ட பெண் பற்றிய வரையறைகளும் பிம்பங்களும் தனித்து விளங்கின. அதேவேளையில் அரசியல் அதிகாரத்திற்குச் சார்பான உடல்களைத் தயாரிக்க வேண்டிய சூழலில் அறம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட விதிகளும், தண்டனைகளும் வலியுறுத்தப்பட்டன.

அன்றைய மாறிவரும் அரசியல் சூழலில் தமிழர் வாழக்கையைச் செம்மைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட அற நூல்களில் திருக்குறள் தனித்துவமானது. அற நூல் என்று கொண்டாடப்படுகிற திருக்குறள் விதிக்கிற அறங்களின் பின்னர் பொதிந்திருக்கிற அரசியலைக் கண்டறிய வேண்டியுள்ளது. அதேவேளையில் இந்தியா முழுவதும் அறம் என்ற பெயரில் மநு தருமம் முன்வைத்துள்ள கருத்துகள், ஒப்பீட்டு நிலையில் ஆய்விற்குரியன. வைதிக சநாதனத்தை வலியுறுத்துகின்ற மநு தரும சாஸ்திரம், அரசியல்ரீதியில் முக்கியமான பிரதியாகும். சநாதன தர்மத்தை முன்னிறுத்தி, பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பித்து, பால் அடிப்படையில் பெண்ணுடலை இழிவாகக் கற்பிக்கிற வைதிக சநாதனம், பார்ப்பனர்களைச் சமூக அடுக்கின் உச்சியில் வைத்திருக்கிற அரசியல், இன்றளவும் தொடர்ந்திட மநு தருமம் அடிப்படையாக இருக்கிறது. திருவள்ளுவர் மனிதர்களின் மேம்பாடு குறித்து அக்கறைகொள்ள, மநுவோ பிறப்பு, பால் அடிப்படையில் வருணாசிரம சநாதன சமூக மேலாதிக்கம் நிலவிட வழி வகுத்துள்ளார்.

திருக்குறள், மநு தருமம் ஆகிய இரு வேறுபட்ட அற நூல்களின் பின்புலத்தில் செயல்படுகிற அரசியல் அதிகாரத்தைக் கட்டுடைத்துக் கண்டறிந்திடும் முயற்சி, இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். குறிப்பாகப் பெண் பற்றிய மதிப்பீடுகளில் திருக்குறளும் மநு தரும சாஸ்திரமும் சித்திரிக்கின்ற விவரணைகள், ஒப்பீட்டளவில் தமிழர்களுக்கும் வைதிக சநாதனவாதிகளுக்கும் இடையில் நிலவுகின்ற ஒற்றுமை வேற்றுமைகளைச் சுட்டுகின்றன.

சங்க காலத்திற்குப் பிந்தைய நூலான திருக்குறள், பண்டைத் தமிழர் சமூகரீதியில் நெறியான வாழ்க்கை வாழ்வதற்கான அறங்களைக் குறிப்பிடுகின்றது. இன்றைய சட்டங்களின் தொகுப்புபோலத் திருவள்ளுவர் வரையறுக்கப்பட்ட இறுக்கமான விதிகளை வலியுறுத்தவில்லை. சராசரியான மனிதன் முயன்றால் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற முடிகின்ற ஒழுங்குகள்தான் குறள்களாக வெளிப்பட்டுள்ளன. மனித சமுதாயம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் எனத் திருவள்ளுவர் தொகுத்துத் தந்துள்ள கருத்துகள், காலந்தோறும் தமிழர் வாழ்க்கையைச் செம்மையாக்கிட முயன்றுள்ளன. திருக்குறள், தமிழரின் சட்ட நூல் என்பதைவிட அறம் சார்ந்த கருத்துகளை மக்களிடம் பரப்பி, மனமாற்றத்தை ஏற்படுத்த முயன்ற நூல் என்பதுதான் சரியானது.

வைதிக சநாதன மரபிலான நெறிகளை வலியுறுத்தும் மநு தருமம், இறுக்கமான விதிகளைக் கொண்டுள்ளது. திருக்குறளும் மநு தருமமும், அடிப்படையில் எதிரெதிர் நோக்கங்களைக் கொண்டவை. திருக்குறள் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்துகிறது. மநு தருமம், மக்களை வருண அடிப்படையில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு பிரிவுகளாகப் பிரித்து, பார்ப்பனர்களின் நலன்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்துளது. இந்தியாவெங்கும் வைதிக சநாதனத்தின் சமூக மேலாதிக்கத்தை வலுவாக நிறுவிட முயன்ற மநு தருமம், பருண்மையான வைதிக சமய அடிப்படை அரசியல் பின்புலமுடையது. இந்தியா என்ற தொன்மத்தை உருவாக்கியதுடன், அதனை நிலை நிறுத்திடும் வழக்காறுகளை வடிவமைத்ததில் மநு தருமத்தின் பங்குக் கணிசமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டதில்கூட, மநு தருமம் நுண்ணிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்து சமயம் என்ற பெயரில்        குறிப்பிட்ட ஆகமங்கள், சாஸ்திரங்கள் போன்றனவற்றை நடைமுறைப்படுத்திட மநு தருமம் குறிப்பிட்டுள்ள விதிகள், இன்றளவும் உச்ச நீதிமன்றத்தினால் வலியுறுத்தப்படுவது கவனத்திற்குரியது.

பண்டைக்காலத்தில் வைதிக சமயத்தின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் வகையில், பிறப்பு, பால் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வான சமூகத்தினை நியாயப்படுத்துமாறு வர்ணம், ஆசிரம தருமங்கள் எழுதப்பட்டன. இத்தகைய தருமங்களைத் தொகுத்தவர் மநு ஆவார். சமூக அடுக்கில் பார்பனர்களின் உச்சநிலையையும் ஆதிக்கத்தையும் பிற சமூகத்தினர் ஏற்றுக்கொள்வதற்கான பின்புலத்தினை மநு தொகுத்த மநு தரும சாஸ்திரம் உருவாக்கியது. இந்தியாவை ஆண்ட பெரும்பாலான மன்னர்கள் மநு தருமம் வகுத்த விதிகளின்படி அரசாண்டனர். பிறப்பின் அடிப்படையில் மேல்-கீழ், சுத்தம்- அசுத்தம் என விதிகளை வகுத்துத் தீண்டாமையைக் கற்பித்ததில் மநு தருமத்தின் பங்குக் கணிசமானது. சாதிய உயர்வுதாழ்வு இன்றுவரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு மநு தருமம் முக்கியக் காரணியாக விளங்குகிறது. ஒருவகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் போலவே மநு தருமம், கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

மநு தரும சாஸ்திரமானது ஆசாரப் பகுதி, விவகாரப் பகுதி, பிராயச்சித்தப் பகுதி ஆகிய மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டது. மேலும் அது படைப்பும் அதன் பான்மையும், கல்வியும் கடமைகளும், இல்லறவியல், பொருளியலும் தனிமனித ஒழுகும், உணவு, சுத்தி மற்றும் மாதர், வானப்பிரஸ்தம், அரச நீதி, நீதி நெறியும் சட்டமும், ஆண் பெண்களின் அறம், கலப்பு ஜாதிகள்- ஆபத்து தருமம், குற்றங்களின் கழுவாய், வினைப்பயன் எனப் பன்னிரண்டு இயல்களாக விரிந்துள்ளது.                

சமூகத்தில் பெண்களின் நிலை, மதிப்பீடு குறித்த கருத்துகள், அறம் அல்லது நீதியைப் போதிக்கின்ற நூல்களில் அற நூல்கள் முக்கிய இடம் பெறுகின்றன. பால் அடிப்படையில் பெண்ணை இரண்டாம் தரத்தினவளாகக் கருதுகின்ற பொதுப்புத்தியைப் பொதுவாக நீதி இலக்கியம், காலந்தோறும் நகலெடுக்கின்றது. அதில் பெண் எப்பொழுதும் ஆணின் கண்காணிப்பிற்குள் இருக்கப்பட வேண்டியவள் என்ற பார்வை வலியுறுத்தப்படுகின்றது. திருக்குறளும் மநு தருமமும் உருவாக்கியுள்ள பெண் பற்றிய மதிப்பீடுகள், இன்றைக்கும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பெண் பற்றி அரசியல்ரீதியில் கருத்தியலைப் பொதுப்புத்தியாக வடிவமைத்ததில் மநு முதன்மையானவர். பெண்ணின் இயல்புகளாக மநு விவரிக்கும் கருத்துகள் முக்கியமானவை. அவை: "மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சம்ஸ்காரங்கள், மந்திரப்பூர்வமாகச் செய்தல் யாதுமில்லை. இவர்களுக்கு வெள்ளை உள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப்போல மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர். (மநு.இ.9:17) மநு தருமம் பெண்களின் தனிப்பட்ட அடையாளத்தையும் சுயமான செயல்பாடுகளையும் ஏற்கவில்லை.

"பெண் இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மகனாலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் பெண் எப்பொழுதும் தன்னிச்சையாக இருக்கக் கூடாதவர்” (மநு.இ.9:3). பெண், தனித்து இயங்கும் திறன் அற்றவள் என்ற நிலையில் எப்பொழுதும் ஆணைச் சார்ந்திருக்க வேண்டும் என வலியுறுத்துவது, பால் அடிப்படையில் ஒடுக்குவதாகும்

பெண்களை ஒழுக்கக்கேடானவர்களாகவும் மயக்கும் குணம்கொண்டவர்களாகவும் மநு தருமம் சித்தரிக்கிறது. பாலியல்ரீதியில் ஒழுக்கக்கேடு நடந்தால் அதில் ஆணுக்குப் பொறுப்பு எதுவுமில்லை என்பது போல விவரிக்கும் மநு தருமம், பெண்களை இழிவுபடுத்துகிறது.

“தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக்குறைவாக நடந்துகொள்ள மாட்டார்கள்.”(மநு.இ.:2:213).

“எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லறத்திலேகூட எந்தப் பெண்ணும் தன்னிச்சையின்படி எச்செயலும் செய்யக்கூடாது”

(மநு. இ.5:147)

“புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் பெண்கள்”.(மநு.இ.2:214).

“பெரும்பாலும் பெண்கள் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்பட்டிருக்கிறது.” (மநு. இ.9:19)

பெண்கள் கற்பிலாதவர்கள் என்பதும் அப்பாவியான ஆண்களை மயக்கிக் காமத்தில் சிக்க வைக்கும் இயல்புடையவர்கள் என்ற மநுவின் கூற்று, வக்கிரமானது. பெண்களை மனித உயிராகக்கூட மதிக்காத மநு தர்மம், கணவன் -மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் நிலவ வேண்டிய உறவு பற்றி பெண்களுக்கு மட்டும் அறிவுரை வழங்குகிறது. ஆணின் இழிவான நடத்தை குறித்துக் கள்ள மௌனம் காக்கிறது. குறிப்பாகப் பெண் தனித்து இயங்கிடும் ஆற்றல் மிக்க மனித உயிர் என்றும் அவள் தன்னிச்சையாகச் செயல்படும் திறன் மிக்கவள் என்ற நிலையில் பெண்ணின் மனதை முற்றிலும் புறக்கணிக்கிறது.

"கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் நோயாளியாயினும் மனைவி அவனுக்குச் செருக்குற்றுப் பணி புரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்”.(மநு.இ.9:78)

"இழிநடத்தை, பரத்தையர் தொடர்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்புடைய பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக.”(மநு. இ.5:154)

கற்புடைய பெண், கணவன் சீரழிந்த பொறுக்கியாக இருந்தாலும், அவனைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் என்ற மநுவின் அறிவுரை, பெண் பற்றிய அன்றைய சமூக மதிப்பீட்டின் வெளிப்பாடாகும்

நான்கு வருணப் பாகுபாடுகள் சமூகத்தில் நிலவ வேண்டியது அவசியம் என வலியுறுத்தும் மநு, பார்ப்பனர் சமூக அடுக்கினில் பெறுகின்ற உயர்ந்த இடத்தை உறுதி செய்வதற்குப் பெண்களின் யோனித் தூய்மையை முன்னிறுத்துகின்றார். வருணக் கலப்பு ஏற்பட்டு, சாதியின் தனித்துவம் சிதலமானால், வருணாசிரமம் இல்லாமல் போய்விடும் எனக் கருதுகின்ற மநு, பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒழுக்க விதிகளை வகுத்துள்ளார். பெண்களை நம்ப முடியாமல் தவிக்கின்ற ஆணின் தவிப்பு, மநுவின் குரலாக வெளிப்பட்டுள்ளது. வேறு வருணத்துப் பெண்ணுடன் உடலுறவு கொள்கின்ற ஆணுக்கு மநு விதித்துள்ள தண்டனைகள் நிலவும் அமைப்பினைக் காப்பதற்கான வழிமுறைகள் ஆகும். “பிறன்மனை விரும்புவோரை, அவர்கட்கு அச்சம் உண்டும் பண்ணும் பொருட்டு உதடு, மூக்கு முதலியன கொய்து அடையாளம் செய்து, அரசன் ஊரை விட்டு விரட்டுக” (மநு.இ.7:351) குடும்பத்தைப் பாதுகாப்பதுபோல மநுவின் வாசகம் தோன்றினாலும், பெண்ணை மையமிட்ட வருணாசிரமம் தொடர்ந்து நிலவுவதற்கான பின்புலத்தை மநு தண்டனைகள் மூலம் நிறுவுகின்றார்.

திருக்குறள் பால் பேதமற்ற பிரதி என்ற கருத்தினுக்குப் பின்வரும் குறள் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆண் உடலையும் பெண்ணுடலையும் சமமாகப் பாவிக்கிற மனநிலை, திருவள்ளுவருக்கு இயல்பிலே இருந்தது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான்

மநுவின் பார்வையில் வெளிப்படும் பெண்ணுடல் பற்றிய கருத்தியலுக்கு மாற்றாகத் திருவள்ளுவர் பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களும் ஒன்று என்று வலியுறுத்துவது, பெண்ணிய வாசிப்பில் முக்கியமானது. உடல்கள் பற்றிய பேதங்களை முன்வைத்திடாமல், இரு உடல்களும் சமம் என்ற பார்வை, சநாதனத்திற்கு எதிரானது. மநுவின் பார்வையில் வெளிப்படும் பெண்ணுடல் பற்றிய கருத்தியலுக்கு முற்றிலும் எதிராகப் பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களும் சமம் என்ற வள்ளுவரின் குரலில், வைதிக சமயம் புனைந்திட்ட பிறப்பு, பால் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கருத்து, அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. இன்று இந்துத்துவா அரசியல் வலியுறுத்துகின்ற மத அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்து, குறளில் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. இன்னொருபுறம் இன்றளவும் சாதியத்தின் விளைவான தீண்டாமையின் காரணமாக நடைபெறுகிற ஆணவக் கொலைகள் குறித்தும், பெண்ணுடல் காரணமாக அத்துமீறப்படும் பாலியல் வன்முறைகள் குறித்தும் உருவாகியுள்ள பொதுப்புத்திக்கு எதிரான மனோபாவத்தை இளைய தலைமுறையினரிடம் உருவாக்கிடப் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் வரிகள், அடித்தளமாக விளங்குகின்றன.

கல்வி என்பது இரு பிறப்பாளராகக் கருதப்படுகின்ற பிறப்பினால் உயர் சாதியில் பிறந்த பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உரித்தானது என்று மநு தருமம் நுட்பமாக வலியுறுத்துகின்றது. வருணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் போன்றோரின் கல்வி குறித்து, மநுவிற்கு அக்கறை இல்லை. பார்ப்பனர் வருணத்தைச் சார்ந்த இளைஞர்களின் குருகுலக் கல்வி குறித்து மநு விரிவாக விளக்கியுள்ளார். கல்வியைப் பிறப்பு, பால் அடிப்படையில் அளித்திடுவதற்கு விதிகள் செய்த மநுவிற்கு எதிரான நிலையினைத் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார். பிறப்பின் அடிப்படையிலான வருணக் கோட்பாட்டினை மறுத்து எல்லோருக்கும் கல்வியை வழங்கிட முயலும் திருவள்ளுவரின் கருத்தில் பெண் கல்வியும் இடம் பெற்றுள்ளது.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்துஇலர் பாடு(குறள்:409)

கல்லாதார் உயர்சாதியில் பிறந்திருந்தாலும், கீழான சாதியில் பிறந்தவர் கற்றவர் எனில் அவருடன் ஒப்பிடுமளவு பெருமை இல்லாதவர் என்று வள்ளுவர் பிறப்பினால் உருவாக்கப்படும் உயர் சாதி- கீழ் சாதி பற்றிய புனைவைக் கல்வியை முன்வைத்துக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். மனிதன் கல்வியினால் மட்டும் முழுமை அடைவான் என்ற நோக்கத்துடன் கல்வியின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ள திருவள்ளுவர், சநாதன தருமத்திற்கு எதிரானவராக விளங்குகிறார். கல்வி, கல்லாமை பற்றிய இரு அதிகாரங்களிலும் வள்ளுவர் குறிப்பிட்டுள்ள கருத்துகள், இன்றையப் பெண் கல்வியில் முக்கிய இடம் வகிக்கின்றன.

திருக்குறள் என்பது பால் பேதமற்ற பிரதி; ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகக் கற்பினை வலியுறுத்துகின்றது; காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துகளை முன்னிறுத்துகிறது என்று அழுத்தமான நம்பிக்கை தமிழரிடையே உள்ளது. தமிழ்ப் பெண் குறளின் வழி நடந்தால், குடும்ப வாழ்வில் சிறக்கலாம் என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். மநு விதித்துள்ள பெண் பற்றிய விதிகள், தண்டனைகளுடன் ஒப்பிடும்போது, திருவள்ளுவர் குறிப்பிடும் பெண் பற்றிய அறக் கருத்துகள், மேன்மையானவை. ஆனால், பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய சில மதிப்பீடுகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ‘பெண்வழிச் சேரல்’ அதிகாரம் முன்னிறுத்தும் கருத்துகள் ஆய்விற்குரியன. திருவள்ளுவர் ஒப்பீட்டளவில் பெண்ணுக்கு முக்கியத்துவம் தந்தாலும், அவருடைய பார்வை, ஆண் மையமிட்டதாகவே உள்ளது. பெண்ணுக்குப் பணிந்து நடத்தல், பெண்ணின் பேச்சைக் கேட்டுச் செயல்படுதல், பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றுதல் போன்றவற்றைச் செய்கின்ற ஆண்களின் செயல்களைத் திருவள்ளுவர் கண்டனம் செய்கின்றார்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ணேவல் செய்வார்கண் இல்(குறள்:909)

பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்கின்ற ஆண், அறச்செயல்களைச் செய்ய முடியாது: அவனுடைய பிறவிக்கு நன்மை இல்லமல் போகும் என்ற வள்ளுவரின் வாதத்தில் பெண்ணின் அறிவையும் ஆற்றலையும் மறுக்கின்ற போக்கு உள்ளது.

பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல், பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச் செய்யவியலாது. அவனுடைய பிறவிக்கு நன்மை செய்ய முடியாது; அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும்; பெண்ணின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில் காணமுடிகிறது. திருவள்ளுவரின் குரலில் ஆண் மையவாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. ‘பெண் சொல் கேளேல்’ என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல், சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும் புறக்கணிக்கிறது.

பிறன்மனை நயத்தல் கூடாது என வலியுறுத்துகின்ற குறள்கள், தனிமனித ஒழுக்கம் என்ற நிலையில் ஆண் மேலாதிக்கத் தன்மையுடன் அமைந்துள்ளன

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு(குறள்:148)

பெண்ணுடலைப் பிற ஆண்களிடமிருந்து காத்து, புனிதமான உடலாக மாற்றி, எப்பொழுதும் கணவனின் அதிகாரத்திற்குட்பட்டிருக்குமாறு பெண் மனதை மாற்றிடும் நுட்பமான பணியைக் கற்பு என்ற சொல்மூலம் திருவள்ளுவர் செய்துள்ளார். பிற பெண்ணின் கணவனை நோக்காத ’பெரும் பெண்மை’ என்ற சொல்லாடலை ஏன் வள்ளுவர் முன்வைக்கவில்லை என்ற கேள்வி தோன்றுகின்றது. பெண்ணுக்குக் காவல் என்பதனால் பயன் இல்லை என்ற விஷயத்தில் வள்ளுவரும் மநுவும் ஒத்த கருத்துடையவர்கள். சிறை காக்கும் காப்பு என்ற கருத்தியலின் பின்னர் பெண்ணுடைய பாலியல் வேட்கையைக் கட்டுப்படுத்த இயலாது என்ற அவநம்பிக்கை பொதிந்துள்ளது.

ஆண்களுக்கான அறமாகத்தான் பிறன்மனை நயத்தல் கூடாது என்ற வள்ளுவரின் அறிவுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கணவன்-மனைவி என்ற சிறிய குடும்ப நிறுவனத்தினை முன்னிறுத்தும் நிலையில், பாலியல் அறமானது முழுக்கப் பெண்ணை நோக்கியே வள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளது. தனிமனித ஒழுக்கம் என்ற லட்சிய நோக்கிலான அறமும் பெண் குறித்த ஆண் மேலாதிக்கத்தன்மையுடன் அமைந்துள்ளது. வள்ளுவர் சித்திரிக்கும் ஆணின் ஒவ்வொரு அசைவும் செயலும் பெண்ணின்மீதான அவனது அதிகாரத்தைச் சுற்றியே இயங்குகின்றது. பெண்ணுடலைப் பிற ஆண்களிடமிருந்து காத்து, புனித உடலாக மாற்றி, கணவனுடைய ஆதிக்கத்தின்கீழ் இருக்குமாறு பெண் மனத்தை மாற்றிடும் நுட்பமான பணியைக் ‘கற்பு’ என்ற சொல்லாடலின்மூலம் அறநூல்கள் முயன்றுள்ளன. இந்நிலைக்கு திருக்குறளும் விலக்கு அல்ல.

Ôவரைவின் மகளிர்Õ அதிகாரத்தில் பொருளுக்காகப் பெண்ணுடலை ஆணின் துய்ப்புக்களமாக்கிடும் பெண்களைப் பற்றி இழிவான மொழியில் விவரித்திடும் அறக்கருத்துகள் கவனத்திற்குரியன. பொருட் பெண்டிருடனான பாலியல் உறவை இருட்டறையில் பிணம் தழுவியதென்று கண்டிக்கின்ற திருவள்ளுவரின் கருத்து, ஏற்புடையது. அதேவேளையில் பொருட்பெண்டிர் நிலவுகின்ற சமூகச் சூழல் குறித்தும் பொருட் பெண்டிராகப் பெண்கள் மாற்றப்பட்ட பொருளாதாரச் சூழல் குறித்தும் வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. சமூக ஒழுங்கு என்பது முழுக்க ஆணை மையமிட்டதாக விரிந்திடும் சூழலில் பெண்ணின் ஒழுங்கு குறித்த பார்வை அன்றைய சூழலில் இல்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது.

வள்ளுவரின் ஆண்-பெண் பாலுறவு குறித்த பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளது. காமத்துப்பால் முழுக்க ஆணின் மொழியிலமைந்த பிரதியாகும்; பெண்மொழிக்குச் சிறிதும் இடமில்லை. ‘கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ என்ற குறள், ஆண் மையப் பாலியல் விவகாரத்தைச் சார்ந்தது. இக்குறளில் ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்காக பாலியல் விழைவை அடைதல் அல்லது துறத்தல் பற்றி வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. பெண் எனப்படுபவள் ஆணினால் அறிந்துகொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்ற அணுகுமுறையில் பால் வேட்கையானது ஆணின் பாலியல் தொழில்நுட்பமாக மாற்றப்படுகின்றது. இத்தகைய ஆண் மையப் பார்வைதான் எல்லாவகையான பாலியல் அத்துமீறல்களுக்கும் வன்முறைக்கும் அடித்தளமாகும். ஒருநிலையில் பெண்ணுடலைப் போகப்பொருளாக மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கும் வள்ளுவர், இன்னொரு நிலையில் பெண்ணுடலை உரிமைகொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார். பெண்ணை முன்னிறுத்திக் காதலி அல்லது மனைவி என்ற அடையாளத்துடன் பாலியல் கொண்டாட்டத்தினை முன்மொழியும் காமத்துப்பால், ஒருவகையில் ஆண்டான் அடிமை உறவின் வெளிப்பாடுதான். பெண் தனது உடலை முழுமையாக ஆணிடம் ஒப்படைத்துவிட்டுப் பேச்சற்று இருக்கும் வரை ‘காமம்’ பற்றிய புனைவுகள் பொங்கிப் பெருகும்.

சங்கப் பாடல்கள் சித்திரிக்கின்ற பெண் பற்றிய பிம்பம், ஒப்பீட்டளவில் தனித்துவமானது. பெண் என்ற உயிர் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற கட்டுப்பாடுகளும் விதிகளும் பெரிய அளவில் இல்லை. சங்கம் மருவிய காலகட்டத்தில் பெண் பற்றிய புதிய மதிப்பீடுகள் உருவாக்கப்பட்ட சூழலில் திருக்குறள் அவற்றை முன்மொழிந்துள்ளது.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய் (குறள்:69)

மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்கின்றபோது, தாயின் மனதில் ஏற்படுகின்ற மகிழ்வைக் கொண்டாடுகின்ற குறளை மறுவாசிப்புக்குட்படுத்தினால் மகளைச் சான்றோள் என்று சொல்வது குறித்துத் திருவள்ளுவருக்கு ஏன் அக்கறை இல்லை என்று தோன்றுகின்றது.

கல்வி என்பது இரு பிறப்பாளராகக் கருதப்படுகின்ற பிறப்பினால் உயர் சாதியில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் உரித்தானது என்று மநு தருமம் நுட்பமாக வலியுறுத்துகின்றது. வர்ணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் போன்றோரின் கல்வி குறித்து, மநுவிற்கு அக்கறை இல்லை. பார்ப்பனர் குலத்தைச் சார்ந்த இளைஞர்களின் குருகுலக் கல்வி குறித்து மநு விரிவாக விளக்கியுள்ளார். கல்வியைப் பிறப்பு, பால் அடிப்படையில் அளித்திடுவதற்கு விதிகள் செய்த மநுவிற்கு முற்றிலும் மாறான நிலையினைத் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்துஇலர் பாடு(குறள்:409)

பிறப்பின் அடிப்படையை மறுத்து எல்லோருக்கும் கல்வியை வழங்கிட விழைகின்ற திருவள்ளுவர், ஒருநிலையில் பெண் கல்வியையும் ஏற்றுக்கொண்டவராகத் தோன்றுகின்றது. மனிதன் கல்வியினால் மட்டும் முழுமை அடைவான் என்ற நோக்கத்துடன் கல்வியின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ள வள்ளுவர், சநாதன தருமத்திற்கு எதிரானவராக விளங்குகிறார்.

திருவள்ளுவர் வலியுறுத்துகின்ற பெரும்பான்மையான அறக் கருத்துகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பிரதிகளாக விளங்குகின்றது. பால், சாதிரீதியில் குறிப்பிட்ட பிரிவினர்க்குக் குறிப்பிட்ட ஒழுக்கம், தண்டனை போன்ற பாகுபாடுகள் திருக்குறளில் இடம் பெறவில்லை. திருவள்ளுவர் ஆணை முன்னிறுத்தி அறங்களை வலியுறுத்தினாலும் பிரதியில் பால் அடையாளம் இல்லாத தன்மை கவனத்திற்குரியது. திருக்குறளைத் தமிழர் அற நூலாக ஏற்றுக்கொண்ட பெரியார், மநு தருமம் பற்றிக் குறிப்பிடுவது பின்வருமாறு: ’’ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனு தர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் "பிராமணன்" என்ற வகுப்பாரைத்தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை "மநு தர்மம்" என்று கூறுவதா? அல்லது "மநு அதர்மம்" என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.’’ என்ற பெரியாரின் கூற்று, மநு தருமத்தைக் கடுமையாக விமர்சிக்கிறது. (குடி அரசு நாளிதழ்,10-03-1935)

மநு தருமம், வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சமூகம், செம்மையாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட நீதி, சட்டங்கள், தண்டனைகள் பற்றிய கண்ணோட்டத்தை அழுத்தமாக வலியுறுத்துகின்றது. திருக்குறள், சமூகமாகக் கூடி வாழ்கின்ற மனிதர்களுக்கிடையில் தோன்றுகின்ற முரண்களைச் சீராக்கிடவும், செம்மையான வாழ்க்கை வாழ்வதற்கான பின்புலத்தையும் முன்னிறுத்தியுள்ளது. திருவள்ளுவர் நீதி, சட்டம், தண்டனை என விதிகளைவிட, தனிமனித மனதில் ஏற்படுகின்ற மாற்றங்களை வலியுறுத்துகின்றார். இன்றைய சிவில் சமூக வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகள், திருக்குறளில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பானது.

சான்றாதாரம்

1.          புலியூர்க் கேசிகன்(ப-ஆ). திருக்குறள்: பரிமேலழகர் உரை. சென்னை:பூம்புகார் பிரசுரம்,2014.

2.          திருலோக சீதாராம் (மொ-பெ). மநு தர்ம சாஸ்திரம். சென்னை:ஏ.கே. கோபாலன்,1999.

- முனைவர் ஆ. நளினி சுந்தரி, இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி