பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் வரிசையில் காலத்தால் முற்பட்டதும், பொருட்சிறப்பால் உயர்ந்ததுமாகத் திகழ்வது திருக்குறளாகும். இதனை ‘முப்பால்’ என்று குறிப்பிடுவர். திருக்குறளின் பெருமை பேசும் திருவள்ளுவமாலையிலும் பல பாடல்களில் திருக்குறள் முப்பால் என்றே அழைக்கப்படுகிறது. திருக்குறள் முப்பெரும் பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் என 1330 குறட்பாக்களையும் கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த நூலாகும். வெண்பாக்களால் ஆன முதல் நூலும், ஒரே நூலும் இதுதான் என்ற பெருமையும் மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி அச்சமுதாயம் உயர்வு பெற இந்நூலைப் போன்று உலகில் வேறு எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்ற பெருமையும் உலகில் முதன்முதலாக எழுதப்பட்ட தன் முன்னேற்ற நூல் என்ற பெருமையும் குறளுக்கு உண்டு.

திருக்குறளின் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார், பெருமை, அறன் வலியுறுத்துதல் ஆகிய நான்கு அதிகாரங்களும் பாயிரமாகத் திகழ்கின்றன. வள்ளுவத்தின் தொடக்கமாகத் திகழும் பாயிரத்திலேயே அறம் வலியுறுத்தல் செய்கிறார் வள்ளுவர்.

valluvar 305அறம் தான் உயிருக்கு ஆக்கத்தையும், சிறப்பையும், செல்வத்தையும் கொடுக்கக் கூடியது என்றும், வள்ளுவர் அத்தகைய அறத்தை அன்றறிவாம் என்னாது ஒல்லும் வகையெல்லாம் ஓவாது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.  தனி மனிதனின் வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் மற்றும் அன்பு வாழ்விற்கு இலக்கணம் அமைத்த நூல் என்பதும் இந்நூலின் சிறப்பாகும். 

ஆத்திச்சூடி 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல்களில் ஒன்றாகும். சிறுசிறு வார்த்தைகளால் சிறுவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும்படி படைக்கப்பட்ட எளிமையான நூலாகும். சமுதாயத்தில் நல்லொழுக்கத்திற்கும், அறத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய வல்லமை பெற்றது ஆத்திச்சூடியாகும். அன்றைய காலக் கட்டங்களில் இருந்த திண்ணைப் பள்ளிகள் முதல், இன்றைய நவீனக் கல்விமுறை வரை தமிழ்க் கற்பிக்கும் போது முதலில் உயிரெழுத்துக்களைத் தான் கற்றுத் தருகின்றனர். அவ்வாறு அன்றும் இன்றும் ஆசிரியர்கள் ஔவையின் ஆத்திச்சூடியைக் கொண்டு தான் தமிழ்க் கற்பிக்கின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

நீதி நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படும் திருக்குறளும், பிற்காலத்தில் இயற்றப்பட்ட ஆத்திச்சூடி ஆகிய இவ்விரண்டு நூல்களும் வாழ்வியல் சிந்தனையை வலியுறுத்த எழுதப்பட்டவையாகும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான குறட்பாக்கள் ஆத்திச்சூடி வரிகளுடன்  ஒலிக்கத்தக்கவையாகும். அதே போன்று குறளுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையிலும் அளவிலும் ஆத்திச்சூடி குறுகியதாகும். பாரதியார், பாரதிதாசன் போன்ற அறிஞர்கள் ஆத்திச்சூடி இயற்றி­யிருந்தாலும் ஔவையின் ஆத்திச்சூடி காலத்தினால் முந்தையது எனும் காரணத்தினால் குறளுடன் ஒப்பிடப்படுகிறது. திருக்குறளும் ஔவையின் ஆத்திச்சூடியும் எவ்வாறு வாழ்வியல் களங்களை உணர்த்துகின்றன என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 அறம் வலியுறுத்தல்

அறத்துப்பாலில் இடம் பெற்றுள்ள குறட்பாக்கள் அனைத்தும் முதலில் தனி அறத்தையும், பின்னர் பொருள் ஈட்டும்போது  பின்பற்ற வேண்டிய அறங்களையும் வலியுறுத்துகின்றன. “அறம், பொருள், இன்பங்களாகிய திரிவர்க்கங்களைப் பற்றிக் கூறாமல், அவற்றின் அறத் தத்துவங்களை மட்டும் அறி­விப்பதால். அறன் ஒன்றையே அறிவிப்பதாகும். இதுவே திருவள்ளுவர் கருத்து”1 என்று ச.தண்டபாணி தேசிகர் குறிப்பிட்டுள்ளார். வள்ளுவர் அறத்திற்கென்று தனியொரு அதிகாரத்தைப் படைத்துள்ளார். அதில் அரசனுக்குரிய அறம், இல்லற அறம் என்பன போன்ற அறங்களைக் குறிப்பிட்டுள்ளதின் மூலம் அறமே மனித வாழ்வில் தலையாயது என அறுதியிட்டுக் கூறுகிறார் எனலாம். அறனை வலியுறுத்தி, “சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு! ஆக்கம் எவனோ உயிர்க்கு என்றும், அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை என்று அறத்தின வழிப்பெற்ற பொருளைப் பற்றியும் கூறுகின்ற போது புற இன்பங்கள் கூட அறத்தின் வருவனவே எனவும், அறத்தான் வருவதே இன்பம்”2 எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அறத்துப் பாலில் மூன்றில் ஒரு பகுதியில் அறம் பற்றிய கருத்துக்களைக் குறிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். ஆனால், ஔவையார் ஆத்திச்சூடியில் அறம் பற்றிக் கூறும்போது, “அறம் செய விரும்பு”(1), அறனை மறவேல்”(3) என இவ்விரு வரிகளில் கூறியுள்ளார். மனித சமுதாயம் அறனைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தைத் திருக்குறளில் காணமுடிகிறது.

அறம் பற்றி வள்ளுவர் பல குறள்களில் வலியுறுத்தும்போது, ஔவையார் ஒரே வரியில் தன் கருத்தினைக் கூற முற்படுவதற்குக் காரணம் ஆத்திச்சூடி எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.  அவ்வாறிருந்தும் அறம் மனிதனுக்கு வாழ்வியலுக்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்தால் தான் முதலில் அறம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் எனவும் கருத இடமுண்டு.

தம் படைப்புகளில் அறத்தை முதன்மைப்படுத்தும் கருத்தினில் வள்ளுவரும், ஔவையாரும் ஒன்றுபடுகின்றனர்.

“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல”3

அறம் மட்டும் தான் நிரந்தரம். அவ்வறத்தினால் வரும் இன்பம் மட்டுமே நிலையான இன்பத்தினைத் தரும் என்கிறார் வள்ளுவர். ஔவையாரும் அத்தகைய நிலையான இன்பம் இவ்வுலகினருக்கும் வேண்டும் என்பதால் தான் “அறம் செய விரும்பு” என்கிறார். ஔவையின் ஆத்திச்சூடியைப் படிக்கின்றபோது அவருக்கு முன் எழுந்த திருக்குறளிலுள்ள பல குறள்களும் நினைவிற்கு வருகின்றன. சான்றாக,

“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை”4

என இக்குறள் மூலம் பின்னர் செய்வோம் என்றிராமல் வாழ்க்கை தொடங்கியதிலிருந்தே அறத்தை மறக்காமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்கின்றபோது, அவ்வறம் ஒருவர் இறக்கின்ற போதும் துணையாக வரும். ஔவையார் “அறனை மறவேல்”5 என்று தருமத்தை ஒருபோதும் மறவாமல் செய் என வலியுறுத்துகிறார். வள்ளுவரும் ஔவையாரும் அறத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

வெகுளாமை

வள்ளுவர் சினத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, சினம் தானாகவே ஆறிவிடும் என்று விட்டுவிட்டாமல் அடக்கி வாழ வேண்டும் என்று கூறுகின்றார். அவ்வாறு அடக்கவில்லை எனில்,

“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்”6

என்ற குறளின் மூலம் சினம் எனும் நெருப்பு தன்னை மட்டுமல்ல தன்னைச் சார்ந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரையுமே அழித்துவிடும் என்கிறார். ஒருவன் தனக்குத் தீமை வரக்கூடாது என எண்ணினால் தன் மனதில் சினம் தோன்றியவுடனே அடக்கிவிட வேண்டும். அவ்வாறில்லையெனில் அச்சினம் தனக்கே அழிவை உண்டாக்கும் என்பது வள்ளுவர் வாக்காகும்.  

மேலும், சினம் மிகுந்தவர் செத்தவரோடு ஒப்பிடப்படுவர் என்று 310வது குறள் கூறுகிறது. வள்ளுவர் சினம் பற்றி “வெகுளாமை” எனும் ஒரு அதிகாரத்தைப் படைத்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். ஆனால், ஔவை ஒருவருக்கு கோபம் வருகின்றபோது அவர்தம் சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும்.  அது எல்லோருக்கும் நல்லதல்ல. ஆகவே கோபம் தணிய வேண்டியதாகும் எனவும், சினம் நிரந்தரமானதல்ல, அது தானாகவே ஆறிவிடும் என்று “ஆறுவது சினம்”7 என ஒரே வரியில் சினத்தின் தன்மையைக் குறிப்பிடுகிறார். வள்ளுவர். சினத்தை அடக்க ஒருவன் முயல வேண்டும் என்கிறார். ஔவையோ அது தானாகவே ஆறிவிடும், அதைக் கடின முயற்சி செய்து அடக்க அவசியமில்லை என்கிறார்.

ஈதலின்பம்

குறளில் இல்லையென்று கேட்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுக்க வேண்டும் என்று “ஈகை” எனும் அதிகாரத்தில் கூறியுள்ளார்.

“வறியார்க்கொன்று ஈவதே ஈகை” என்று இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே ஈகை எனும் 221-வது குறள் யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என எடுத்தியம்புகிறது. அதேபோல்,

“இலன் என்னும் எவ்வம்உரையாமை ஈதல்   

குலன் உடையான் கண்ணேஉள”8

என்று தன்னிடம் யாசிப்பவனுக்கு இல்லை என்னும் துன்பம் தரக்கூடிய வார்த்தையைக் கூறாமல், தன்னால் கொடுக்க முடிந்ததை உடனே கொடுப்பவன் நல்ல இனத்தைச் சேர்ந்தவன் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஔவையார்.

“இயல்வது கரவேல்”

“ஈவது விலக்கேல்”9

என்று உன்னிடம் இரப்பவருக்கு உன்னால் முடிந்ததை ஒளிக்காமல் கொடு. அதேபோல் கொடுப்பவர்களை நீ தடுக்காதே எனவும் கூறியுள்ளார்.

வள்ளுவர் ஏழைகளுக்குக் கொடு என்கிறார். ஆனால் ஔவை யாருக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறாமல் உன்னால் இயன்றதைக் கொடு என்கிறார். வள்ளுவர் யாருக்குத் தரவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆனால், ஔவையாரோ இயன்றவரைக் கொடு என்கிறார்.  கொடுக்க நினைப்பவர்களுக்கெல்லாம் கொடு என்கிறார்.

விருந்தோம்பல்

தன்னைத் தேடி வரும் விருந்தினர்களை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என வள்ளுவர் விருந்தோம்பல் எனும் அதிகாரத்தில் விளக்கியுள்ளார்.

“வித்தும் இடல்வேண்டும் கொல்லோ, விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்”10

எதுவாக இருந்தாலும் பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். அது இறவாத நிலைக்கு உயர்த்தும். தேவாமிர்தமாக இருந்தாலும் விருந்தினர்களுக்கு முகமலர்ச்சியோடு உணவளித்தபின் மீதமிருப்பதை உண்ண வேண்டும் எனவும், பசி என்று வந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து அவர்கள் பசியை நீக்கி பின் தான் உண்பவனைப் பசி என்ற கொடிய துன்பம் தீண்ட இயலாது என்று 227-வது குறள் அறிவுறுத்துகிறது. ஔவை “ஐயமிட்டு உண்”11 என்று இரப்பவர்களுக்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண், அதிலும் ஏழைகளுக்கும், குருடன், முடவன் முதலானவர்களுக்களுக்கும் பிச்சையிட வேண்டும் என்கிறார். இக்கருத்தினில் இருவரும் ஒன்றுபடும் தன்மையுடன் திகழ்கின்றனர்.

வையம் வாழ வாழ்

ஒப்புறவுடன் ஊரோடு இணைந்து வாழ வேண்டும் என்பதை வள்ளுவர் ‘ஒப்புரவறிதல்’ எனும் அதிகாரம்  மூலம் உலகினுக்கு எடுத்துரைத்துள்ளார். மழை எவ்வாறு கைமாறு கருதாமல் பெய்கின்றதோ அதேபோன்று பிரதிபலன் கருதாமல் ஒருவன் தன்னுடைய கடமையைச் செய்து உலகத்தாருடன் ஒத்து வாழ்தல் வேண்டும் எனவும், தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களே மற்றவர்களுக்கும் என்று பிறருடைய துன்பத்தை உணர்ந்து உதவி செய்கிறவன் தான் உயிருள்ள மனிதன். அந்தத் தன்மை இல்லாதவன் செத்த பிணத்திற்குச் சமமானவன் என்பதை,

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்”12

எனக் குறிப்பிட்டுள்ளார் ஔவையார் ஆத்திச்சூடியில்,

“ஒப்புறவு ஒழுகு”

“தேசத்தோடொத்து வாழ்”

“ஊருடன் கூடி வாழ்”

முதலான தொடர்களின் மூலமாக உலக வழக்கத்தை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்தி மக்களுடன் பகையில்லாமல் நன்மை, தீமைகளில் கலந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்கிறார்.

நட்பாராய்தல்

வள்ளுவர் ஒருவருடன் நட்பு கொண்டு பழகும் முன்னர் அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அந்நட்பானது தீமையை உண்டாக்கும்.  ஆகவே பலமுறை ஆராய்ந்து நண்பனைத் தேர்ந்தெடுக்காமல் செய்து கொள்ளும் தீய நட்பு ஒருவனுக்கு அவன் சாகிற வரையில் துன்பம் தந்து கொண்டேயிருக்கும் என்கிறார்.

“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இன்னும் அறிந்தியாக்க நட்பு”14

என ஒருவனை நண்பனாக ஏற்கும் முன்னர் அவனுடைய குணத்தையும், அவன் குடும்பம், அவனின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் அறிந்த பின்பே நட்பு கொள்ள வேண்டும். இதைப்போன்று ஔவையார்.

“இணக்கமறிந்து இணங்கு,"

"கூடிப்பிரியேல்,"

"சேரிடமறிந்து சேர்”15

என உலகில் பிறருடன் பழகுகின்றபோது நமக்கு இணங்கக் கூடிய பண்பு அவரிடமும், அவருக்கு இணங்கக்கூடிய பண்பு நம்மிடமும் இருக்க வேண்டும்.  எனவே, இருவர் கருத்தும் முற்றிலும் ஒரே மாதிரியாய் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் அமையாது எனக் கூறுகிறார். ஔவையாரும் வள்ளுவரைப் போன்று ஒருவருடைய நல்ல குணங்களை, செய்கைகளைத் தெரிந்த பிறகே நட்பு கொள்ள வேண்டும் எனவும், நல்லவரோடு நட்பு செய்துவிட்டுப் பின் அவரைப் பிரியாதே என்றும், நீ நட்புகொள்ள எண்ணும் மனிதர்கள் நல்ல குணங்கள் உடையர்வர்களா என நன்காராய்ந்து அதன் பின்னர் பழக வேண்டும் என்கிறார்.

காலமறிதல்

ஒருவர் செய்த நன்மையை எக்காலத்திலும் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை, வள்ளுவர் “செய்நன்றியறிதல்”, “காலமறிதல்”; எனும் அதிகாரகங்களின் வழி விளக்குகிறார்.  சான்றாக,

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மானப் பெரிது”16

என்று ஒருவர் செய்த உதவி சிறிது என்றாலும், அது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தை எண்ணி இவ்வுலகினைவிடப் பெரியதாக அவ்வுதவியை எண்ண வேண்டும். இதனையே, ஔவையார், “நன்றி மறவேல்”(21) என ஒருவர் உனக்கு செய்த உதவியை எப்போதும் மறக்காதே என்கிறார். “பருவத்தே பயிர் செய்”(22) எனும் ஔவையின் வரிகள் “காலமறிதல்” எனும் அதிகாரத்தில் வரும் “ஞாலம் கருதினும் கைகூடும் காலம்” (484) என்ற குறள் வரியோடு ஒப்பிடத்தக்கதாகும். வள்ளுவர் காலங்கருதி காத்திருந்து வாய்ப்பான காலம் வந்தவுடன் காரியத்தைச் செய்தால் உலகம் முழுவதையும் வசப்படுத்த விரும்பினாலும் முடியும் என்கிறார்.

வள்ளுவமும் ஆத்திச்சூடியும் மனித மேம்பாட்டையும், தனிமனித ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் கருவூலங்களாக இருக்கின்றன. வாழ்வியல் அறங்களை மனிதச் சமுதாயம் கடைப்பிடிக்கும் போதுதான் உலகம் உய்ய வழிபிறக்கும் எனும் உண்மையை உணர்த்துகின்றன.

சான்றெண் விளக்கம்

1.            ச.தண்டபாணி தேசிகர், திருக்குறள் அமைப்பும் அழகும், ப.25

2.            திருக்குறள், குறள் 31, 32

3.            மேலது. குறள் 39

4.            மேலது, குறள் 36

5.            ஔவையார், ஆத்தி. 30

6.            திருக்குறள், கு. 306.

7.            ஔவையார், நீதிநூல் அ.வ. 02

8.            திருக்குறள், குறள் 223

9.            ஔவையார் கழக உரை ஆத்தி. 3,4

10.         திருக்குறள், குறள். 85

11.         ஔவையார், ஆத்தி. வ.09

12.         திருக்குறள், குறள்.211,214

13.         ஔவையார், ஆத்தி.10,62,104

14.         திருக்குறள், குறள் .793

15.         ஔவையார், ஆத்தி. 19,37,51

16.         திருக்குறள், குறள் 16

- தி.சுமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி