வ.உ.சிதம்பரத்தினை ஒரு அப்பாவியான, அகிம்சா தேசபக்தராகத் தமிழருலகம் அறிந்திருப்பதைவிடவும் குறைவாகவே அவரை ஒரு தமிழ்ப் பணியாளராக அறிந்து வைத்துள்ளது. ‘ஜேம்ஸ் ஆலன்’ என்பவரின் சில சிறு ஆங்கில நூல்களைத் தமிழுக்கு அவர் மொழி பெயர்த்துள்ளதைக் கொண்டுதான் அவரது இலக்கிய மற்றும் தமிழ்ப் பணிகள் மதிப்பிடப்படுகின்றன. இதில், வ.உ.சியின் திருக்குறள் குறித்த செயல்கள் விரிவான ஆய்விற்குரியவை. ஆனால், அவ்வாறான ஆய்வுகள் இதுவரை நடைபெறவில்லை. இனியும் நடைபெறுமா என்பது சந்தேகமே.

வ.உ.சியும் திருவள்ளுவரும்

vocதிருவள்ளுவரை வ.உ.சி மிகவும் நேசித்தார். நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் மக்கள் வாழ் வதற்கான முறைகளைச் சொன்னவர் என்பது திருவள்ளுவர் குறித்த அவரது மதிப்பீடாகும். திருவள்ளுவரை அவர், தெய்வப்புலவன் என்றல்ல, தெய்வமே என்றே குறிப்பிடுகிறார். இருப்பினும் திருவள்ளுவரது கருத்துக் களை அப்படியே ஏற்பதற்கும் சில வரையறைகளை அவர் முன்வைக்கிறார்.

“திருவள்ளுவர் ஓர் கவி. ஒப்பற்ற அறிஞர். நானும் அவரைக் கடவுள் என்றே போற்றுகிறேன். அவர் நூலில் வாள் என்றும், வில் என்றும், வேல் என்றும் இருக்கிறதே யன்றித் துப்பாக்கியென்றாவது பீரங்கியென்றாவது இல்லை. இப்பொழுது யுத்தத்திற்குச் சாதனங்களாகத் துப்பாக்கியும் பீரங்கியுமேயிருக்கின்றன. யுத்தத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் நேரிடின் என்ன செய்வது? வள்ளுவர் துப்பாக்கியைப் பற்றியும் பீரங்கியைப் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை. எனவே அச்சாதனங்களைக் கொண்டு போர் புரியமாட்டேன். வள்ளுவருக்கு என்ன புத்தியில்லையா? அவரைக் காட்டிலும் நாம் என்ன மேதாவிகளாகிவிட்டோமா? என்று இப்பொழுது ஒருவன் கூறிக் கொண்டிருப்பானானால் அது எவ்வளவு மூடத்தனம் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்” என்பது வ.உ.சியின் சொற்கள்.

இது திருக்குறளில் இல்லாதவற்றைச் செய்ய மாட்டேன் எனப் பிடிவாதமாகக் கூறுகின்ற திருக்குறள் அன்பர்களுக்கான கேள்வியாகவும் கொள்ளலாம். அதோடு, தமக்கு முன்காலத்தில் வாழ்ந்தவர்களின் கருத்துகளைப் பின்பற்றுவதற்கான அளவுகோலாகவும் கொள்ளலாம்.

திருக்குறளை அப்படியே கடைப்பிடித்து வாழ எண்ணுவது அறியாமை. காலமாறுதல்களை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வதே அறிவார்ந்த செயல் என வ.உ.சி கருதினார் என நாம் எண்ணுவதற்கு இது ஒரு சான்றாக உள்ளது. இது ஒரு முற்போக்கான கருத்துதான் என்பதை தமிழறிஞர்கள் ஒப்புக்கொள்வார்கள் என நம்பலாம்.

வ.உ.சியின் நேசத்திற்கு உகந்த நூற்களில் முதலிடம் திருக்குறளுக்கு உண்டு. அதை மிகவும் நேசித்தார். மக்களுக்குப் பயன் தரக்கூடிய கருத்துக்கள் திருக்குறளில் உள்ளதாக அவர் நம்பினார். வ.உ.சியின் இந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது.

“அது மக்கள் அடைதற்குரிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும், அவற்றை அடையும் நெறிகளையும் ஞாயிறு போல விளக்குகின்ற ஓர் அருமையான நூல்” என்கிறார்.

அவரறிந்த அரசியல் பார்வையின்படி நாட்டு மக்களுக்கான அரசியல் வேலைகளில் அவர் உண்மை யான அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தார். எனவே, மக்களுக்குப் பயன்படக்கூடிய அவசியமான நூல் என அவர் கருதிய திருக்குறளின் மீது நேசம் இருந்ததில் வியப்பு எதுவும் இருப்பதற்கில்லை.

பல உரைகள் இருந்தபோதிலும் வ.உ.சியும் திருக்குறளுக்கு உரை எழுதினார். இது எப்படி நடந்தது? திருக்குறளைப் புரிந்து கொள்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாக அவர் கருதினார். புரிந்து கொள்வதில் எளிமை வேண்டும் என்பதை மட்டும் அவர் பிரச்சினையாக எண்ணவில்லை. தவறில்லாமல் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் முக்கியப் பிரச்சினையாக எண்ணியிருந்தார்

“திருக்குறளை நேரிய பொருளோடும், பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன்” என உரை எழுதவேண்டும் என அவர் எண்ணியதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.

1. பதிப்பித்தது, 2. உரை இயற்றியது, 3. வழிநூல் இயற்றியது, 4. மொழி பெயர்த்தது, 5. மாறுபட்டது எனத் திருக்குறள் குறித்த வ.உ.சி.யின். செயற்பாடுகளை ஐந்தாகப் பிரிக்கலாம்.

பதிப்பித்தது

வ.உ.சிக்கு முன்புவரை திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தவர்கள் 1. தருமர், 2. மணக்குடவர்,

3. தாமத்தர், 4. நச்சர், 5. பரிமேலழகர், 6. பருதி -

7. திருமலையர், 8. மல்லர் கவிப் பெருமாள், 9. காளிங்கர் ஆகிய பதின்மர் ஆவர். (பதின்மர் என்றால் ஒன்பது பேர் என்று பொருள்.)

திருக்குறளை வ.உ.சி வாசிக்கத் தொடங்கியது பற்றி அவர் குறிப்பிடும்போது, “அப்பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வுரையைச் சில வருடங் களுக்கு முன்னர் யான் படிக்கத் தொடங்கினேன்.”

என அப்போது எளிதினில் கிடைத்த உரையான பரிமேலழகரின் உரையினை வாசித்ததாகக் குறிப்பிடு கிறார். பரிமேலழகரைப் படிக்கத் தொடங்கிய அவருக்கு அவ்வுரையானது மனநிறைவைத் தரவில்லை. மாறாக, அவருக்கு சில சந்தேகங்கள் உண்டாகின. இதை, “அப்பொழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று” என அவர் கூறுவதிலிருந்து புரிந்துகொள்ளலாம். மேலும், “அது முதல், தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன்” எனக் கூறுவதிலிருந்து பரிமேலழகரின் உரை குறித்த அவரது அதிருப்தி அதிகமானதாகவே இருந்திருக்கிறது என்பதையும் அறியலாம்.

பிற உரைகள் குறித்து வ.உ.சியின் கருத்தென்ன?

பரிமேலழகர் உரை மற்றும் மணக்குடவர் உரைகளைத் தவிர வேறு மூன்று உரைகள் கையெழுத்துப் பிரதிகளாகத் தமிழ்நாட்டில் சென்னை அரசாங்கக் கையெழுத்துப் புத்தக சாலை உள்ளிட்ட சில இடங்களில் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார். அவற்றையும் வாசிக்கிறார். இம்மூன்றும் யாருடைய உரைகள்? “அவற்றிற் காணப்படும் சமயக் கோட்பாடு, தமிழ் நடை முதலியவற்றைப் பார்த்து, யான் அவரைத் தருமர் உரை, தாமத்தர் உரை, நச்சர் உரை எனக் கருதுகிறேன். அவை முறையே அவ்வுரையாசிரியர் களால் இயற்றப்பெற்றவை என்பதற்கு வேறு சான்று ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது” என்று யூகிக்கிறார்.

பிறகு அவருக்கு மணக்குடவரின் உரை கிடைக்கிறது. அதைப் படிக்கிறார். அது அவருக்கு திருப்தியைத் தருவதாக இருந்துள்ளது. இதை, “அது வள்ளுவர் கருத்துகளைத் தெள்ளென விளக்குவதாகவும் இனிய செந்தமிழ் நடையில் எழுதப் பெற்றதாகவும் தோன்றிற்று” எனக் கூறுகிறார். ஆனால், இந்த வாசிப்பு அவரை இன்னொரு திசையில் தள்ளுகிறது. அதுதான் திருக்குறள் ஆராய்ச்சி.

மணக்குடவர் எழுதிய உரையினையும் பரிமேலழகர் எழுதிய உரையினையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். திருக்குறள் அமைக்கப்பட்டுள்ள முறையிலும் பொருள் கொள்ளப்பட்டுள்ள முறையிலும் பலவிதமான தவறு களும் முரண்பாடுகளும் இவ்வுரைகளில் இருப்பதாக அவர் கருதுகிறார். மேலும் கூடுதலான கேள்விகள் அவருக்கு எழுகின்றன. அவருக்கு உண்டான ஐயங்களைப் பொதுமக்களுக்குச் சொல்லவேண்டும் என எண்ணு கிறார். அவ்வாறு சொல்வதன் மூலம் இரு உரை களுக்குமான வேறுபாடுகளை மக்கள் புரிந்து கொள்ளுவ தோடு புதிய உரைகளும் உருவாவதற்கு வாய்ப்புகள் உருவாகும் எனவும் அவர் கருதுகிறார். இதை, “இருவரின் இவ்வேற்றுமைகளைக் காண்பார் திருக்குறளின் பெருமையையும் அதன் மூலபாடங்கள் வேறுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிவதோடு குறள்களுக்கு இருவரும் உரைத்துள்ள பொருள்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும் புதிய பொருள்கள் உரைக்கவும் முயலுவர்” என்பதிலிருந்து அறியலாம்.

பதிப்பித்தலுக்கான காரணம்

காண்பதற்கு அரிதாக உள்ள மணக்குடவர் உரையினை அவர் பதிப்பிப்பதன் மூலம் தனது இவ் விருப்பம் நிறைவேறலாம் என அவர் கருதுகிறார். எனவே, மணக்குடவர் உரையினைப் பதிப்பிக்க அவர் முடிவு செய்கிறார்.

திருக்குறளைப் படித்து அதன்படி நடந்து, வாழ்க்கையில் மேம்படவேண்டும் என்பதிலிருந்து திருக்குறளை தமிழ் மக்கள் இலக்கியமாகவே அவர் கருதியுள்ளார் என்பது தெரிகிறது. அவ்வாறு கருதியதால் தான் அதைத் தமிழ் மக்கள் அனைவரும் தெளிவாகக் கற்றுணர்ந்து கொள்வதோடு, வாழ்க்கையிலும் அதைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என அவர் கருதி யுள்ளார். அதனாலேயே பரிமேலழகரின் உரையினை விடச் சிறந்ததாக அவர் கருதிய மணக்குடவர் உரையினை அவர் பதிப்பித்துள்ளார். திருக்குறள் மக்கள் அனைவரிடமும் போய்ச் சேரவேண்டுமென்பதே அவர் மணக்குடவர் உரையினைப் பதிப்பித்ததின் நோக்கமாக இருந்துள்ளது.

உரை எழுதக் காரணம்

இதுவரையிலும் கிடைத்துள்ள உரைகளில் பரிமேலழகர் மற்றும் மணக்குடவர் எழுதியுள்ள உரைகளானது பரவாயில்லை என்றாலும் அவற்றிலும் ஏனைய உரைகளிலும் சில குறைபாடுகள் இருப்பதாக வ.உ.சி. கருதியுள்ளார்.

மிக நீண்ட விளக்கங்களைக் கொண்டிருப்பது; மிகவும் பழமையான சொற்களைக் கொண்டிருப்பது; தவறான மூலங்களைக் கொண்டிருப்பது; நுணுக்கமாகச் சிந்திக்கும்போது ஏற்றுக்கொள்ள இயலாத விளக்கங் களைத் தருவதாக அமைந்திருப்பது ஆகியவை இவ்வுரைகளில் வ.உ.சி. கண்ட குறைகளாகும்.

உரைகள் குறைகளுள்ளவையாக இருப்பதைக் கண்டு வ.உ.சியின் மனம் அலை மோதுகிறது. சரியான உரை வேண்டும் என எண்ணுகிறார். அதற்கான வழி என்ன? “திருக்குறளை நேரிய பொருளோடும் பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன்” எனத் தாமே ஒரு உரை எழுதுவதுதான் அதற்கான வழி எனும் முடிவுக்கு வருகிறார்.

வ.உ.சி திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்குகிறார். அப்போது, திருக்குறளை அமைப்பதிலும் விளக்குவதிலும் சில மாற்றங்களைச் செய்கிறார்.

மாற்றங்கள் செய்யக் காரணங்கள் என்ன?

திருக்குறளின் மூலப்பிரதி என எதுவும் இல்லை. எனவே, அதைப் பின்வந்தவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற வாய்ப்பு இல்லை. திருக்குறள் அமைக்கப் பட்டுள்ள முறையும் தரப்படும் விளக்கமும் பழங்காலத்தி லிருந்து தொடர்ச்சியாக மாறுபட்டு வந்துகொண்டிருக் கின்றன என்பதைத் திருக்குறளின் அமைப்பில் உள்ள பலவிதமான மாறுதல்கள் மூலம் அறியலாம். உரை யாசிரியர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங் களைச் சேர்ந்தவர்களாக இருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இவற்றுள் எதைச் சரியானது என எதை ஏற்பது? இருப்பதிலேயே முன்னதாக வந்த உரையைத் தான் ஏற்கமுடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சரி, அமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு இதைக் காரணமாகக் கொண்டாலும் பொருளில் ஏற்படுகின்ற மாறுபாடுகளுக்கு ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

“மூல ஏடுகளிலிருந்து பெயர்த்தெழுதுவோர் செய்யும் பிழைகளால் இப்பாட வேறுபாடுகள் பெரும்பாலும் இடம் பெறுகின்றன. திருக்குறள் போன்ற பழமை வாய்ந்த நூல்கள் மக்களிடையே பெரிதும் வழக்கில் உலவுமானால் அவற்றில் பாட வேறுபாடுகள் மிகுதியாக இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் மிகுதி. மொழி, இனம், கொள்கை, வடமொழிப்பற்று, வடநூற் பற்று, தன்மதம் நிறுவுதல் எனப் பல காரணங்களால் மூலநூல்களின் பாடங்களை உரையாளர்கள் மாற்றியமைத்தல் உண்டு” என்றும்; “எனவே, மிகப் பிற்பட்ட காலத்தில் வந்த பரிமேலழகர் கொண்ட பாடங்களே உண்மையானவை என்று கொள்வதற் கில்லை” என்றும், இறுதியாக ஒரு நூல் சொல்கின்ற கருத்துகளுக்கு ஏற்ப அதிலுள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதுதான் அந்நூலின் உண்மையான பொருளை அறிவதற்குச் சிறந்த வழியாகும் என்றும் ஆய்வாளர் குமரவேலன் கூறுகிறார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு, என்னும் வள்ளுவ வாக்கினுக்கேற்ப குமரவேலன் கூறும் முறை யானது சரியானதே என நாம் கொள்ளலாம். மாற்றம் நடந்துள்ளது சரி. வ.உ.சி செய்த மாற்றங்கள் என்ன?

வ.உ.சி செய்த மாற்றங்களும் அதற்கான காரணங்களும்

1.            இடைச் செருகல் நீக்கல் 2. அமைப்பு, பொருள் ஆகியவற்றில் மாற்றம் என இரண்டு அம்சங்களில் திருக்குறளில் மாற்றங்களைச் செய்கிறார் வ.உ.சி.

இடைச்செருகல் நீக்கல்

திருக்குறளின் தொடக்க அதிகாரங்களாகக் காணப் படுபவற்றில் மூன்று அதிகாரங்கள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையல்ல, அவை இடைச் செருகல்களே என, “அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று ஆணித்தரமாக மறுக்கிறார் வ.உ.சி.

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு ஆறு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1.            இப்பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற் செறிவும் பொருட் செறிவும் இல்லை.

2.            இப்பாடல்களின் பொருள்கள் பல தடை களுக்கு இடம் கொடுக்கின்றன.

3.            மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5.            துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றி யிருக்க முடியாது.

6.            மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

இருப்பினும் இவை மூன்றும் திருவள்ளுவரால் எழுதப்பட்டதுதான் என்று நம்பி அவற்றைத் திருக் குறளுடன் இணைத்துப் பார்க்கின்றவர்களின் மனம் நோகாமலிருப்பதற்காக அவற்றைத் தனது உரையிலிருந்து நீக்கிவிடாமல், அதற்கு “இடைப்பாயிரம்” எனத் தனியாகப் பெயரிடுகிறார் வ.உ.சி.

இயல் அமைப்பில் மாற்றங்கள்

ஏனைய உரையாசிரியர்கள் போலவே வ.உ.சி.யும் அறம், பொருள், இன்பம் என மூன்று இயல்களாகவே பிரிக்கிறார். இருப்பினும் இயல் அமைப்பில் சிறு வேறுபாடுகளைச் செய்துள்ளார்.

அறத்துப் பாலில்:

பரிமேலழகர் பகுத்துள்ள முறைக்கு மாறாக வ.உ.சி. இடைப்பாயிரத்தில் மூன்று, பாயிரத்தில் ஒன்று, இல்லறவியலில் இருபது, துறவறவியலில் பனிரெண்டு, வீட்டியலில் ஒன்று, ஊழியலில் ஒன்று என அதிகாரங்களை மாற்றியமைக்கிறார்.

மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தை வீட்டியல் எனும் தலைப்பில் தனி இயலாக ஆக்கியுள்ளார்.

இல்லறவியலில் இருந்த வெஃகாமை, பயனில சொல்லாமை எனும் அதிகாரங்களை துறவறவியலுக்கு மாற்றுகிறார். இவ்விரண்டு அதிகாரங்களிலும் உள்ள கருத்துகள் இல்லறத்தில் உள்ளவர்களுக்கானதல்ல. மாறாக, துறவு மேற்கொள்வோர்க்கே உரியது என வ.உ.சி கருதுவதால் இவ்வாறு அவர் மாற்றியமைத்துள்ளார்.

அதுபோலவே, துறவறவியலில் இருந்த கள்ளாமை, வாய்மை என்னும் அதிகாரங்களையும் இல்லறவியலுக்கு மாற்றுகிறார். இவ்விரண்டு அதிகாரங்களிலும் உள்ள கருத்துகள் இல்லறத்தில் உள்ளவர்களுக்கே தவிர, துறவறம் பூண்டவர்களுக்கு அல்ல என வ.உ.சி கருதுவதால் இவ்வாறு அவர் மாற்றியமைத்துள்ளார்.

 பரிமேலழகரும் மணக்குடவரும் நச்சரும் பதினேழாவது அதிகாரமாக, அழுக்காறாமை என்னும் அதிகாரத்தைக் கொண்டனர். தாமத்தர் அழுக்காறாமை என அதன் பெயரினை அமைத்தார். இதையே தருமர் அழுக்காறாமை என அமைத்தார். வ.உ.சி.யும் இதையே ஏற்று, அழுக்காறாமை என அமைத்துக் கொண்டிருக்கிறார்.

பொருட் பாலில்:

அரசியல் (25) அங்கவியல் (32) ஒழிபியல் (13) என மூன்று இயல்களாகப் பரிமேலழகரும், அரசியல் (25) அமைச்சியல் (10) பொருளியல் (5) நட்பியல் (5) துன்பவியல் (12) குடியியல் (13) என ஆறு இயல்களாக, மணக்குடவரும், பரிப்பெருமாளும் அமைத்தனர்.

வ.உ.சி, அரசியல் (25) அமைச்சியல் (10) அரணியல் (2) பொருளியல் (1) படையியல் (2) நட்பியல் (17) குடியியல் (13) என ஏழு இயல்களாக, அமைத்துக்கொண்டார்.

காமத்துப் பாலில்:

பரிமேலழகர், களவியல் (7) கற்பியல் (18) என இரண்டு இயல்களையும் காளிங்கன் ஆண்பாற் கூற்று (7) பெண்பாற் கூற்று (12) இருபாற் கூற்று (6) என மூன்று இயல்களையும் மணக்குடவர் மற்றும் பரிப் பெருமாள் ஆகியோர் அருமையிற்கூடல் (3) பிரிந்து கூடல்  (18) ஊடிக்கூடல் (4) என மூன்று இயல் களையும் கொண்டனர். வ.உ.சி.யும் தனது உரையினை ஆண்பாற் கூற்று (4) இருபாற் கூற்று (11) பெண்பாற் கூற்று (10) என மூன்று இயல்களாகவே அமைத்துக் கொண்டார்.

பொருள் மாறுபாடு

திருக்குறளுக்கு முதல் உரை எழுதிய மணக் குடவரின் உரையிலிருந்து மட்டுமல்ல, அதன் பின்னர் எழுதிய காளிங்கர் மற்றும் பிற திருக்குறன் உரை யாசிரியர்களிடமிருந்தும் பரிமேலழகரும் மாறுபட்டு உள்ளார் எனக் குமரவேலன் கூறுகிறார்.

மணக்குடவரின் உரையிலிருந்து அறம் 84, பொருள் 105, இன்பம் 32 ஆக மொத்தம் 221 இடங்களிலும் காளிங்கரின் உரையிலிருந்து ஏறத்தாழ 215 இடங்களிலும் மேலும் தருமர், தாமத்தர், நச்சர் முதலானோர் பாடங்களிலிருந்தும் பரிமேலழகர் வேறுபட்டுள்ளார்.

வ.உ.சி தரும் பொருள் மாறுபாடு

வ.உ.சி. தான் செய்துள்ள பாட மாறுபாடுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அறப்பாலில் 76 குறள்களில் என் உரை பரிமேலழகர் உரைக்கு வேறுபடுகின்றது: 12 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக மறுக்கின்றது. 5 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக ஆமோதிக்கின்றது. மீதக் குறள்களில் என் உரையும் அவர் உரையும் ஒத்திருத்தல் கூடும். அறப்பாலில், பரிமேலழகர் கொண்டுள்ள மூலப்பாடங் களுக்கு வேறாக 151 மூல பாடங்களை மணக்குடவரும் மற்றும் மூன்று உரையாசிரியர்களும் கொண்டுள்ளார்கள். பரிமேலழகர் கொண்டுள்ள மூல பாடங்களுக்கு வேறாக 74 மூல பாடங்களை யான் கொண்டுள்ளேன். அவற்றில் 30 பாடங்கள் முந்திய உரையாசிரியர்கள் கொண்டுள்ள பாடங்கள், மீதம் 4 பாடங்கள் தான் யானாகக் கொண்டுள்ள பாடங்கள்” என்றே குறிப்பிடுகிறார்.

பரிமேலழகரின் உரையிலுள்ள பிழைகளுக்குக் காரணமென்ன?

“அப்பரிமேலழகர் பாடங்கள் ஏடு பெயர்த்து எழுதியோரால் நேர்ந்த பிழைப்பாடங்கள் என யான் கருதியதே” எனக் கூறுகிறார். தன்னைப் போலவே, தமிழறிஞரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் இதே காரணத்தால் பல பிழைகள் மூலத்தில் புகுந்துள்ளன என்று கருதியிருப்பதாகவும் வ.உ.சி குறிப்பிடுகிறார்.

Pin It