திருநெல்வேலி மாவட்டம் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில், வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறக்கும்போது (05 செப்டம்பர்,1872) தஞ்சை மாவட்டம் சூரியமூலை எனும் ஊரில் பிறந்த (19, பிப்ரவரி,1855) உ.வே.சாமிநாதையர் மாயூரத்தில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து தமிழ் பயின்றுகொண்டிருந்தார். காலம், இடம் எனும் வேறுபாடுகளைக் கடந்து ஒட்டப்பிடாரத்தில் பிறந்த சிதம்பரம் பிள்ளையையும், சூரியமூலையில் பிறந்த சாமிநாதையரையும் நெருங்கிப் பழக வைத்தது, தமிழ்ப் பணியில் முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இருவரின் பேருழைப்புதான்.
1908இல் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்ற சிதம்பரம் பிள்ளை 1912இல் விடுதலை பெற்று வெளியே வந்தார். இந்த நான்கு ஆண்டுகாலச் சிறைவாழ்க்கையில் தமிழின் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்தையும், தமிழ் இலக்கிய நூல்களுள் பெருமதிப்புப் பெற்று விளங்கிய திருக்குறளையும் ஆராய்ந்து தெளிந்திருக்கிறார் என்பதை அவர் வரலாறு வெளிப்படுத்துகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரையில் அச்சுருவாகி பொதுவெளிக்கு வராமல், ஓலைச்சுவடிகளில் இருந்த தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையை அச்சிட்டுத் தமிழ் ஆய்வுலகிற்கு அளித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. எழுத்ததிகார, சொல்லதிகார இளம்பூரணர் உரைச் சுவடிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1868) அச்சுருவாகி வெளிவந்துவிட்டன. 1920இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகார அகத்திணை, புறத்திணையியல் ஆகிய இரண்டு இயல்களுக்குரிய இளம்பூரணர் உரைப் பகுதியை மட்டும் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். பொருளதிகாரத்திற்குரிய இளம்பூரணர் உரைப் பகுதி முழுவதையும் முதன் முதல் வ.உ.சி. தான் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.
வ.உ.சி.1910ஆம் ஆண்டு கோவைச் சிறையில் செக்கிழுத்துக் கொண்டிருந்த சூழலுக்கு நடுவே தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய இரு நூல்களை முழுவதுமாக ஆராய்ந்து தெளிந்திருக்கிறார். அதன் விளைவாக அந்நூல்களுக்குள்ள பழைய உரைகளின் கடின நடையை வ.உ.சி. அறிந்திருக்கிறார். அதனால் தொல்காப்பியத்திற்கும் திருக்குறளுக்கும் எளிய அமைப்பில் உரை எழுத எண்ணியிருக்கிறார். சிறை வாசத்திலிருந்து விடுதலைபெற்று வெளியே வந்த பின்னர் எளிய உரையையும் எழுதத் தொடங்கியிருக்கிறார்.
சென்னை எழும்பூரில் வசித்தகாலத்தில், ஒருநாள் தொல்காப்பியத்திற்குத் தாம் எழுதிய உரையைப் பூர்த்தி செய்யக்கருதித் திருமணம் செல்வக்கேசவராய முதலியாரிடம் எடுத்துச் சென்று ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். அப்போது செல்வக்கேசவராய முதலியார், தொல்காப்பிய இளம்பூரண அச்சுப்புத்தகம், சொல்லதிகார ஏட்டுப்பிரதி, பொருளதிகார ஏட்டுப்பிரதி சிலவற்றை வ.உ.சி. அவர்களுக்கு அளித்திருக்கிறார். அவைகளைப் பெற்றுவந்து படித்துப்பார்த்த பிறகு இளம்பூரணர் உரையின் எளிமை சிதம்பரம் பிள்ளையைக் கவர்ந்துகொள்கிறது. பிறகு தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவதைக் கைவிட்டுவிட்டு இளம்பூரணர் உரைச் சுவடிகளை அச்சில் பதிப்பிக்கும் பணியைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்.
1920ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் அச்சிட்டு வெளிப்படுத்தும் பணியை மேற்கொள்ளத் தொடங்கி, 1921இல் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரண்டு இயல்களைக் கொண்ட முதல் தொகுதியை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். சென்னையில் வசித்த காலத்தில் தொடங்கிய தொல்காப்பியப் பதிப்புப் பணியின் ஒருபகுதி கோவையில் வசித்த காலத்தில் நிறைவுற்றிருக்கிறது. கோவில்பட்டியில் வசித்த காலத்தில் எழுத்ததிகார இளம்பூரணர் உரைச் சுவடியை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். அப்பதிப்பு 1928இல் வெளிவந்திருக்கிறது.
பொருளதிகார இளம்பூரணர் உரைச் சுவடி ஏடுகளை எஸ். வையாபுரிப்பிள்ளை, தி. நா. சுப்பிரமணிய அய்யர், த. மு. சொர்ணம்பிள்ளை இவர்களிடமிருந்து வ.உ.சி. பெற்றிருக்கிறார். அதை, பதிப்புரையில் நன்றியோடு பதிவு செய்திருக்கிறார்.
பொருளதிகாரத்தின் எஞ்சிய ஏழு இயல்களுக்குரிய இளம்பூரணர் உரைப் பதிப்புப் பணியை வையாபுரிப்பிள்ளையுடன் இணைந்து மேற்கொண்டிருக்கிறார். 1933இல் களவியல், கற்பியல், பொருளியல் எனும் மூன்று இயல்களைக் கொண்ட பகுதியை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். இப்பதிப்பு வெளிவந்த காலத்தில் இவர் தூத்துக்குடியில் வசித்து வந்திருக்கிறார். அதன் பின்னர் 1936இல் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் எனும் நான்கு இயல்களைக் கொண்ட பொருளதிகார இளம்பூரணர் உரையின் இறுதிப் பகுதியை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.
வ.உ.சி.யின் தொல்காப்பியப் பதிப்புப் பணியினையும் அவரின் உரை இயல்புகளையும் பற்றி அறிஞர் வையாபுரிப்பிள்ளை இவ்வாறு ஓரிடத்தில் குறிப்பிட்டுப் போற்றுகிறார்.
வ.உ.சி. யின் விடுதலையின் பின், அவர் ஒரு புது மனிதராக மரிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இதுவரையும் தேசிய விஷயங்களில் உழைத்து வந்தவர் இப்பொழுது தமது தாய் மொழியாகிய தமிழின் பொருட்டு உழைக்க முன்வந்து சென்னையிலேயே சில ஆண்டுகள் தங்கினார். அப்பொழுது தொல்காப்பியத்தை இவர் கற்றுக்கொண்டிருந்த சமயம். எந்த நூலை எடுத்தாலும் இவர் முன்பிருந்த நூலாசிரியர்கள் கூறியதனை அலசிப் பார்த்துப் புதிய உரை காணுவதிலே முயன்று வருவார். இலக்கணம் முதலிய விலங்குகளை யெல்லாம் இவர் அறவே களைந்து எறிந்துவிடுவார். துணிகரமும், உணர்ச்சி வேகமும், எதனையும் தன்னிலையிலிருந்து நோக்கும் நேர்மையும் இவரது முக்கியமான இயல்புகள். எளிமையாக உரைகளிருத்தல் வேண்டும் என்ற பெருங்கருத்துக் கொண்டவர். தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் இயற்றிய உரை எளிதாக இருத்தல் கண்டு அதனை அச்சிடும் தொழிலில் இவர் முயன்றார். இதனைத் தெரிந்த நெல்லை அறிஞர் ஒருவர் இவருக்கெனப் பிரதிகள் சிருஷ்டித்துக்கொடுக்க முன்வந்தனர். என்னிடம் இளம்பூரணர் உரைப் பிரதி இருப்பதாகத் தெரிந்து எனக்கு வ.உ.சி. 1913-இல் ஒரு கடிதம் எழுதினார். இக்காலம் முதல் வ.உ.சி. யும் நானும் நெருங்கிய இலக்கியத் தோழர்களாய்விட்டோம். தொல்காப்பியம் பற்றி எனக்குப் பல விஷயங்களை எழுதி வந்தார்கள். நானும் இவர்களுக்குப் பல கடிதங்கள் எழுதியுள்ளேன். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இவர்களால் வெளியிடப்பெற்றது. பொருளதிகாரத்தில் முதல் இரண்டு இயல்களும் இவர்களே பரிசோதனை செய்து வெளியிட்டார்கள். இவ்விஷயத்தில் சென்னையில் இவர்களுக்கு உதவிபுரிந்து வந்தவர்கள் திரு. செல்வக்கேசவராய முதலியார் முதலியவர்கள் நாங்கள் இலக்கியத் தோழர்களாயிருந்தும், பல ஆண்டுகளாக ஏகதேசமாகவேனும் சந்தித்து வந்தோம் என்றுகூட கூறமுடியாது. கடிதப் போக்குவரத்திலேயே எங்கள் நட்பு அமைவுற்றது. (எஸ். வையாபுரிப்பிள்ளை, நான் கண்ட வ.உ.சி., தமிழ்ச் சுடர் மணிகள், 1959, பக். 379-380)
தாம் மேற்கொள்ளும் பணிகள் செம்மையாக நிறைவேற்ற எண்ணி, உரிய அறிஞர்களை நாடி, வேண்டிய உதவிகளைப் பெற்று செய்திருக்கிறார் என்பது வையாபுரிப்பிள்ளை கூற்றால் விளங்குகிறது. வ.உ.சி. தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு இதழாசிரியர் வாவிள்ளா இராமஸ்வாமி சாஸ்த்ருலு பதிப்பகத்தார் பொருளுதவியும், வெளியீட்டிற்கு வேண்டிய உதவிகளையும் செய்து பெருந்துணை புரிந்துள்ளனர்.
தொல்காப்பிய எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரத்திற்குரிய நச்சினார்க்கினியர் உரைச் சுவடிகளைச் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்து வெளியிட்டதைப் போன்று, தொல்காப்பியம் முழுமைக்குமான இளம்பூரணர் உரைச் சுவடிகளைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்ற பெருவிருப்பம் வ.உ.சி. கொண்டிருந்திருக்கிறார். அவர் கருதியவாறு எழுத்து, பொருள் ஆகிய இரு அதிகாரங்களுக்குரிய இளம்பூரணர் உரைச் சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடவும் செய்திருக்கிறார். சொல்லதிகாரப் பகுதியை அவர் வாழ்நாளின் இறுதிவரை வெளியிட முடியாமல் போனது நமக்குப் பேரிழப்பாகும்.
தொல்காப்பியத்தை மதித்துப் போற்றிய அளவிற்குத் திருக்குறள் மீதும் அளவற்ற மதிப்பு வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது. தொல்காப்பியத்தைக் கற்றுத்தேர்ந்து அதன் உரைகளின் இயல்புகளைக் கண்டு மதிப்பிட்டு ஆராய்ந்ததைப் போன்று திருக்குறளையும் கற்றுத் தேர்ந்து அதன் உரைகளைக் கற்றுத் தெளிந்திருக்கிறார். கோயமுத்தூர் சிறையில் வ.உ.சி. யைச் சந்தித்த பரலி சு. நெல்லையப்பரிடம் கூறப்பட்டதாக நெல்லையப்பர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதை அறிஞர் பெ.சு. மணி ஓரிடத்தில் கூறியிருக்கும் இந்தக் கருத்து, வ.உ.சி. திருக்குறள் மீது எந்தளவு மதிப்பு வைத்திருந்திருந்தார் என்பதைப் புலப்படுத்துகிறது.
தமிழறிகளெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும், யான் அவரை பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை (நவபாரத சிற்பிகள் - வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப. 244).
தொல்காப்பியத்திற்கு உள்ள உரை (நச்சினார்க்கினியர்) மிகவும் கடினமான தன்மையைக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து எளிய உரை எழுதக் கருதி இளம்பூரணர் உரையின் எளிமையைக் கண்டு உரை எழுதுவதை கைவிட்டுவிட்டு அந்த உரைச் சுவடியைப் பதிப்பித்து வெளியிட்டதைப் போன்று, திருக்குறள் பரிமேலழகர் உரையைப் படித்துவிட்டு அதன் தன்மையை உணர்ந்து திருக்குறளுக்கு எளிய உரையை எழுதத் தொடங்கி மணக்குடவர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
திருக்குறள் மணக்குடவர் உரை வ.உ.சி.யை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அதனால் அந்த உரைச் சுவடியை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார். அறத்துப்பால் பகுதியை மட்டும் கொண்ட அப்பதிப்பு 1917இல் வெளிவந்திருக்கிறது. வ.உ.சி. பதிப்புத்துறையில் ஈடுபட்டு முதன் முதல் பதிப்பித்து வெளியிட்ட நூல் திருக்குறளாகும். இந்தக் காலத்தில் ஆசிரியர் பணியிலும் பதிப்புத்துறையிலும் ஈடுபட்டு உழைத்துவந்த உ.வே. சாமிநாதையர் அவர்கள் மகாமகோபாத்தியாய, திராவிட வித்யாபூஷணம் முதலான பட்டங்களைப் பெற்று பெரும்புகழுடன் விளங்கியிருந்தார்.
வ.உ.சி. திருக்குறள் உரைகளுள் பரிமேலழகர் உரையை வெகுவாக வெறுத்திருக்கிறார் என்பதற்கு, அவர் உரை எழுதிப் பதிப்பித்த திருக்குறள் விருத்தியுரைப் பதிப்புகளில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இருந்தும் எஸ். வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டுள்ள இந்தக் கருத்து கவனத்தை ஈர்த்து நிற்கிறது.
1926ஆம் ஆண்டு இறுதியில் நான் சென்னைத் தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியனாக வந்து சேர்ந்தேன். அப்போது வ.உ.சி. அவர்கள் வக்கீலாகத் தொழில் புரியத் தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டார்கள். ஒருமுறை சென்னை மயிலாப்பூரில் இந்து மத பரிபாலன சபையின் கமிஷனராக இருந்த திரு. டி. கே. சிதம்பரநாத முதலியாரவர்கள் வீட்டிற்கு நானும் எனது நண்பர் பி.ஸ்ரீ. ஆச்சார்யாவும் சென்றிருந்தோம். அப்பொழுது அங்கே வ.உ.சியும் இருந்தார். இவர்களோடு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு முக்கியமாகத் திருக்குறளின் உரையைப் பற்றியதாக இருந்தது. பரிமேலழகர் உரை பல இடங்களில் பிழையாகவுள்ளது எனவும், முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் இயற்றியன அல்ல எனவும் பிள்ளையவர்கள், தங்களுக்கு இயற்கையாயுள்ள ஆவேசத்தோடு பேசினார்கள். நான் இவர் பேச்சினிடையில் புகுந்து, சிறிதும் உணர்ச்சிக்கு இடங்கொடாதபடி, பரிமேலழகர் உரையின் போக்கைப் பற்றியும், பொதுப்படை அதன் சிறப்புகளைப் பற்றியும், முதல் நான்கு அதிகாரங்களின் அமைப்பைப் பற்றியும், சில வார்த்தைகள் பேசினேன் (எஸ். வையாபுரிப்பிள்ளை, நான் கண்ட வ.உ.சி., தமிழ்ச் சுடர் மணிகள், 1959, பக். 380 - 381).
திருக்குறளையும் அதன் பழைய உரைகளையும் நன்கு கற்று, ஆராய்ந்து தெளிந்து புதிய உரை எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் கோவை சிறையில் இருந்த காலத்திலேயே வ.உ.சி. க்கு ஏற்பட்டுவிட்டது. 1908, மார்ச்சு 12இல் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் செல்கிறார். சிறைக்குச் சென்று ஆறு மாதம்கழித்து 1908, செப்டம்பர் 14ஆம் நாள் திருக்குறளில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டு உ.வே.சாமிநாதையருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதுகுறித்து 1940இல் சென்னைப் பிரஸிடென்ஸி கல்லூரி நூற்றாண்டுவிழா மலருக்காக எழுதிய கட்டுரையில் உ.வே.சா. இவ்வாறு குறிப்பிட்டு நினைவுகொண்டிருக்கிறார்.
“ஸ்ரீமான் ஜே. பி. பில்டர் பெக் துரையவர்களுக்குப் பின் பிரின்ஸிபாலாக இருந்த ஸ்ரீமான் ஜே. எச். ஸ்டோன் துரையவர்களும் எனக்குப் பலவித அனுகூலங்களைச் செய்திருக்கிறார். அவர் மிக்க கருணையுடையவர். பகைவர்களுக்கும் நன்மையே செய்ய விரும்புபவர். அவர் கும்பகோணத்திலும் இருந்தார். அப்போதே அவருடைய பழக்கம் எனக்கு உண்டு. அங்கே அவர் இருந்த காலத்தில் மாணாக்கர்கள் கல்வியில் அபிவிருத்தியடைவதோடு தேகப் பயிற்சியிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டுமென்னும் விருப்பமுடையவராதலின் முதல் முதலாகக் காற்பந்து (திஷீஷீt ஙிணீறீறீ), கிரிக்கட் முதலிய விளையாட்டுக்களை மாணாக்கர்களுக்குப் பழக்குவித்தார்; ஒரு வருஷம் ஷேக்ஸ்பியர் இயற்றிய ‘நடுவேனிற் கனவு’ என்னும் நாடகத்தையும் அடுத்த வருஷம் ‘வெனிஸ் வணிகன்’ என்னும் நாடகத்தையும் ஆங்கிலத்தில் மாணாக்கர்களைக் கொண்டு நடிக்கச் செய்தார்; அவ்விரண்டு நூல்களையும் தமிழிலும் மொழிபெயர்க்கச் செய்தார். அவருக்கு அம் மகாகவியினிடத்திருந்த அபிமானமும் ஈடுபாடும் அப்போது வெளியாயின. பிரிஸிடென்ஸி காலேஜில் அவர் இருந்த காலத்தில் ஒரு சமயம், காலஞ்சென்ற தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் பிள்ளை, சிறையிலிருந்து திருக்குறளிற் சில சந்தேகங்களை எனக்கு எழுதியனுப்பி விடையெழுத விரும்பினார். சிறையிலுள்ள அவருக்கு நான் கடிதம் எழுதுவது உசிதமாக இருக்குமா என்று ஸ்டோன் துரையைக் கேட்டேன். ‘அவசியம் எழுதவேண்டும் சிறைச்சாலைக்குள் ஒருவருடைய பழக்கமும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் உதவிசெய்வது அவசியம். ஆனால் கடிதத்தை நீங்கள் நேரே அனுப்ப வேண்டாம். எழுதி என்னிடம் கொடுங்கள்; நான் சிறையதிகாரி மூலம் அவருக்கு அனுப்பிவிடுகிறேன்’ என்றார். நான் அங்ஙனமே செய்தேன்” (என்னுடைய ஞாபகங்கள், நினைவு மஞ்சரி, இரண்டாம் பாகம், 1942, பக். 199-201)
திருக்குறள் முழுவதற்கும் உரையெழுத வேண்டும் என்று திட்டமிட்டு முதல் பகுதியாக அறத்துப்பாலுக்கு உரையெழுதி 1935இல் வ.உ.சி. வெளியிட்டிருக்கிறார். அப்பதிப்பில் காகிதம், மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியம் என்று பதிவுசெய்து சுதேசிய உணர்வை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
உ.வே.சா. அவர்களின் பதிப்புப் பணிகளை நன்கு கண்டுணர்ந்து வந்த காரணத்தில் சிறையிலிருந்த வ.உ.சி. மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த உ.வே.சா. அவர்களுக்குக் கடிதம் எழுதி தமக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டுத் தெளிந்திருக்கிறார். உ.வே.சா., வ.உ.சி. எனும் இரு பேராளுமைகளின் நட்பு அத்துடன் முடிந்துபோகவில்லை. ஆண்டுகள் பல கடந்தும் தொடர்ந்திருக்கிறது. உ.வே.சா. அவர்களுக்கு மார்ச்சு 6, 1935இல் நடைபெற்ற எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்த கீழ்வரும் வாழ்த்துப் பாடலை வ.உ.சி. எழுதி அளித்து நன்றி பாராட்டியிருக்கிறார்.
உலகெலாம் புரக்கு மொருதனிக் கடவுளின்
நலனெலா நிறைந்துள நற்றமிழ் நாட்டில்
திருவா வடுதுறை மருவிவாழ்ந் திருந்த
திரிசிர புரமகாப் பெரியநல் வித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளைபால் மேவி
அமிழ்தினு மினியநந் தமிழிலக் கியமும்
தமிழிலக் கணமுந் தகவுறக் கற்றுச்
சென்னைமா காணக் கல்லூரி சேர்ந்து
தலைமைத் தமிழ்ப்பண் டிதராய் நின்று
தாழ்மா ணாக்கர்க்குத் தமிழ்நூ லுணர்த்தி
ஒப்புயர் வற்றநற் புகழினைப் படைத்தீர்!
தமிழ்நாட் டிற்பல இடங்களி லரங்குள்
ஒளிந்துசெல் லரித்து மறைந்திருள் கிடந்த
சங்க நூல்களைக் கண்டுடனெடுத்துச்
செல்லினை யகற்றி வல்லுந ருடனிருந்
திரவு பகலாப் பரிசோ தித்துக்
குற்றங் களைந்து குறைபெய் தவற்றை
அழகிய காகிதத் தச்சிட் டளித்து
நமதுமுன் னோர்கள் தமதுயர் கல்வி
அறிவொழுக் கறமர சாட்சித் திறனெலாம்
நாமும் பிறரும் நன்கறிந் துவக்கும்
படியருள் புரிந்த குலமுயர் பெரியீர்!
மகாமகோ பாத்தி யாயர், திராவிட
வித்தியா பூஷணம் தாக்ஷி ணாத்திய
கலாநிதி டாக்டர் எனும்பல பட்டம்
தாங்கி நிற்குஞ் சாமி நாத
அய்ய ரவர்களே! அறிவுசால் நீங்கள்
எண்பது வருட மிருநிலத் தமர்ந்து
தமிழ்மக் களுக்குந் தமிழ்மொழி தனக்கும்
இடைவிடா துழைத்திவ ணேற்ற மளித்த
நன்றியை யென்று நாமற வோமே.
நீங்கள்
இன்னும் பல்லாண் டிவ்வுல கிருந்து
தமிழ்மக் களுக்குந் தமிழ்மொழி தனக்கும்
உழைத்து மேன்மே லுதவி செய்து
வரும்படி யாக வலிமையு நலனும்
எல்லாம் வல்ல இறைவன்நுங் கட்குத்
தரும்படி யவனருட் டாள்போற் றுவனே,
தூத்துக் குடிவாழ் ஒட்டப் பிடாரம்
சிதம்பரம் என்னும் திருக்குற ளன்பனே.
(பிரம்மஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் சதாபிஷேக வரலாறு, 1936, பக். 172-173)
வ.உ.சி. திருக்குறள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் இந்த வாழ்த்துப்பாவின் இறுதி இரண்டடியில் உள்ள தூத்துக் குடிவாழ் ஒட்டப் பிடாரம், சிதம்பரம் என்னும் திருக்குற ளன்பனே என்று தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் பேரார்வமிக்க சான்று இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது.
ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் (1872 - 1942) பதிப்புத்துறையில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைச் சுவடியிலிருந்து பெயர்த்தெழுதிப் பதிப்பித்தும், பல்வேறு இதழ்களில் தாம் எழுதி வெளியிட்டிருந்த உரைநடை ஆக்கங்களைத் தொகுத்துப் பதிப்பித்தும் வெளியிட்ட உ.வே.சாமிநாதையர் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் பதிப்பித்து வெளியிட தம் வாழ்நாளின் இறுதிவரை முயற்சிக்கவில்லை என்பதை அவர் வரலாற்றின்வழித் தெரிந்துகொள்ள முடிகிறது. கால் நூற்றாண்டு காலத்திற்கும் குறைவான காலம் மட்டுமே (1917 - 1936) பதிப்புத்துறையில் ஈடுபட்டு வந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய இரு நூல்களின் மீது மட்டுமே மிக கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதை வரலாறு வெளிப்படுத்துகிறது.
இருவருக்குமான நட்பு, இந்த வேறுபாடுகளின் வழியே ஒன்றுபடுவது காலத்தின் விளைவுகளாகும். அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட இங்குள்ள பழம் வரலாறுகளை மீள்வாசிப்பு கொள்வதற்குத் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் வ.உ.சி. புரிந்துகொண்ட தன்மையும், மறைந்துகிடந்த பழந்தமிழ் நூல்களைக் கண்டு வெளிப்படுத்த
உ.வே.சா. சங்க நூல்களையும் காப்பிய நூல்களையும் பதிப்பித்து வெளியிட்ட தன்மையுமாகவே இவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இருவேறுபட்ட நிலைப்பாடுகள் பழந்தமிழ் நூல்கள் மீளாக்கம் பெறுவதற்கு வழிவகுத்தது என்பதுதான் வரலாறாகும். இருவேறு துருவங்களில் பயணித்து நூல் பதிப்புப் பணியில் வேண்டிய உதவிகளைப் பெற்று ஒன்றுபட்டு உழைத்த இருவரின் நட்பு தமிழ்போல் நிலைத்துப் புகழ்பெற்று விளங்குகிறது.
துணைநின்ற நூல்கள்
1) சம்பத், ஆர். என். - மணி, பெ.சு. தமிழில்: பெ.சு. மணி. 1995. நவபாரதச் சிற்பிகள் - வ.உ.சிதம்பரம் பிள்ளை, புது தில்லி, பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு.
2) வையாபுரிப்பிள்ளை, எஸ். 1959 (மூன்றாம் பதிப்பு). தமிழ்ச் சுடர் மணிகள், சென்னை: பாரி நிலையம்.
3) சுந்தர ஐயர். வே. 1936. பிரம்மஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் சதாபிஷேக வரலாறு, சென்னை: லா ஜர்னல் அச்சுக்கூடம்.
4) சாமிநாதையர், உ.வே. 1942. நினைவு மஞ்சரி (இரண்டாம் பாகம்), சென்னை: கபீர் அச்சுக்கூடம்.
(16, ஜூன், 1868, (விபவ - ஆனி, 4) உ.வே.சா. அவர்களுக்குத் திருமண நாள்; மனைவி: மதுராம்பாள்; அப்போது உ.வே.சா. அவர்களுக்கு வயது 14; மனைவி மதுராம்பாளுக்கு வயது 8; பெண்வீட்டாரின் ஊரான மாளாபுரத்தில் திருமணம் நடைபெற்றது)