நம்மில் பலர் கொடை கொடுத்த வள்ளல்களைக் குறை கூறுவதே வேலையாகக் கொண்டோம். "பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தானா? பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்தானா? வேடிக்கையாக இல்லையா?" என்போம். அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் வரலாற்றில் இடம் பெற்றார்கள். அஃதெப்படி, வறுமையில் வாடும் புலவனுக்கு யானையைப் பரிசளித்தார்கள் என்று தன்னறிவு மேம்படாச் சிலர் கேட்பதுண்டு. யானை என்றால் யானை மட்டுமல்ல பரிசில், அதைப் பராமரிக்க வேலையாட்கள், அதன் உணவுக்கு வேண்டிய செல்வங்கள் யாவும் கொடுப்பார்கள். வள்ளல்கள் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியா ஈர நெஞ்சினர்.

ஈண்டு, நாஞ்சில் வள்ளுவன் பற்றி ஒளவையாரும் குறை கூறுவது போல வஞ்சப் புகழ்ச்சியாகப் புகழ்கின்றார். ஒளவையார் பாணர் குடியில் பிறந்தவர். சங்க காலத்தில் வாழ்ந்தவர். கடையேழு வள்ளல்கள் காலத்தில் வாழ்ந்தவர். அதியமான் நெடுமான் அஞ்சியின் நண்பர். அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி ஒன்றைப் பரிசிலாகக் கொடுத்தான். அதனால் அதியனை அவர், “வாழிய பெரும! நீலமணி மிடற்றொருவன் போல வாழி!” என்று பாடினார். காரி எனும் வள்ளல் இவரின் தமிழைக் கேட்கும் பொருட்டுக் காலந்தாழ்த்த, வயலில் களை வெட்டப் பணித்துக் களைக் கொட்டு ஒன்றைப் பரிசளித்தான். மழையில் நனைந்து வந்த ஒளவைக்கு ‘நீலி’ என்பாள் “நீலச் சிற்றாடை” ஒன்றை உடுத்தக் கொடுத்தாள் என்று பெருமைபடப் பாடிய ஒளவையார், நாஞ்சில் வள்ளுவனை,

“தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவர்
வலைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆகத் தான் பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கியோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உளது கொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே” (புறம் 140) என்று பாடுகின்றார். 

இப்பாடலின் பொருளாவது செம்மையான நாவன்மை கொண்ட புலவன் நாஞ்சில் வள்ளுவன் (செந்நாப்புலவர்), பெரிய பெரிய பலா மரங்கள் நிறைந்தது இவனது நாஞ்சில் மலைநாடு, இவன் புலவனா, வள்ளலா? புலப்படவில்லை. நல்ல வளையல்களை அணிந்த விறலியர்கள் எம் இல்லத்தின் பக்கலுள்ள படப்பையில் முளைத்திருந்த கீரையைச் சமைக்கப் பறிக்கிறபோது, அருகிலிருந்தவளிடம், இக்கீரையோடு சேர்த்துச் சமைப்பதற்குச் சிறிது துவரை அரிசி (துவரம்பருப்பு) வேண்டினள். இதனை அறிந்த நாஞ்சில் வள்ளுவன், தன்னுடைய பெருமையை எண்ணிப் பார்த்து, ஒரு யானை சுமக்க முடியாத அளவு துவரை அரிசியைக் கொடுத்தான்.

இவ்வாறு ஒருவருக்கு இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்ற கொடைத் தன்மையும் உளதோ? தெளிவில்லாது கொடுக்கிறானா? இல்லை நாங்கள் தெளிவில்லாமலிருக்கிறோமா? புரியவில்லையே! என்று பெரியோனாகிய வள்ளுவனைக் குறை கூறுமாற்றுப் போல் புகழ்பாடினார்.
இப்பாடல் “பாடாண்திணையும்”, பரிசில் விடைத் துறையுமாகும்.

“இரங்கு முரசின் இனம்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர்யான் அவா அறியேனே
நீயே முன்யான் அறியுமோனே
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந! (புறம்-15)

நாஞ்சில் வள்ளுவனை முதலில் அறிந்தேன். அதனால் மூவேந்தர்களைப் பாடுதற்கு எமக்கு இசைவில்லை என்கிறார் ஒருசிறைப் பெரியனார் என்னும் புலவர்.

வள்ளுவன் வானளாவிய புகழொடு வாழ்கிறான் என்பதில் ஐயமில்லைதானே?

“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று”

ஆக, அரசியல் தலைவர்கள் அன்றும் இன்றும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

“சாலைகளில் மூட்டை மூட்டையாய்
வீதிகளில் எச்சில் தட்டுக்களோடு
எப்போது வருவார்கள் என்று
ஆரத்தி எடுக்க இம் மண்ணின் தாய்மார்கள்!
இனி எப்போதுமே வரப் போவதில்லை
இவர்கள்” - இது சிவகவியின் புதுக்கவிதை

- முனைவர் கா.காளிதாஸ், புதுக்கோட்டை.

Pin It