உலகம் உய்வதற்கு ஏற்ற வழிகளைக் காட்டியவர்கள் பலர். தாம் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளையே அவர்கள் மற்றவர்களுக்குக் கூறினர். அவ்வாறு வாழ்ந்து காட்டி, அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தவர்களுள் முதன்மையானவராகத் திகழ்பவர் திருவள்ளுவராவார். வாழ்வில் தாம் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களை அவர் தனது குறட்பாக்களின் வழி நமக்கும் அடையாளம் காட்டுகின்றார். அவர் காட்டுகின்ற மனிதர்கள் உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
சான்றோர்கள் மனிதர்களை பண்பின் அடிப்படையில் பலவிதமாகப் பகுத்துக் கூறுவர். உத்தமன், உத்தமோனுத்தமன், பாவி, மகா பாவி என்று நான்கு வகையாக மனிதர்களை பெரியோர்கள் பகுத்துக் கூறுகின்றனர். உத்தமன் என்பவன் யார்? எனில் நல்லவற்றைச் செய்பவன். அதாவது எப்போதும் நல்லவற்றைச் செய்பவன் யாரோ அவன் உத்தமனாவான்.
உத்தமோனுத்தமன் என்பவன் தனக்குத் தீங்கு செய்பவருக்கும் நல்லதையே நினைப்பவன். உத்தமனிலும் மிகச் சிறந்தவன் என்று கூறுவர். பாவி என்பவன் பிறருக்கு எப்போதும் தீங்கு செய்பவன். அதாவது எப்போதும் பாவத்தைச் செய்து கொண்டிருப்பவன். மற்றவர்களின் பாவங்களைச் சம்பாதிப்பவன் எவனோ அவன் பாவியாவான்.
தனக்கு நல்லது செய்தாலும் அவருக்கு உடனடியாகத் தீங்கு செய்பவன் மகாபாவியாவான். அதாவது பால்குடித்த தாயின் மார்பகத்தையே அறுத்தெரிபவன் எவனோ அவனே மகாபாவியாவான். இவை அனைத்தும் வடநூலார் குறிப்பிடுகின்ற மனிதர்களாவர். ஆனால் வள்ளுவர் இவற்றைவிட மனிதர்களின் உள்ளத்தைப் படித்து அதன் வழி மனிதர்களை பல்வேறு வகையாகப் பகுத்துரைக்கின்றார். அவர் கூறுகின்ற மனிதர்கள் விசித்திரமானவர்கள், வேடிக்கையானவர்கள். இன்னும் சொல்லப் போனால் இருந்தும் இறந்தவர்கள். மனிதர்கள் எவ்வாறெல்லாம் இருப்பார்கள் என்பதை பண்பின் வழியாகத் திருவள்ளுவர் தனது திருக்குறளில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
வள்ளுவர் காட்டுகின்ற மனிதர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவன், சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பவன் - மக்கட் பண்பில்லாத மனிதனே ஆவான். அத்தகைய மனிதர்கள் வள்ளுவர் காலத்தில் மட்டுமே வாழவில்லை, தற்காலத்திலும் மிக அதிகமாக வாழ்கின்றார்கள்.
மரத்தைப் போன்ற மனிதர்கள் யார்? ஏன் மரம் போன்ற மனிதர்கள் என்று வள்ளுவர் சுட்டுகின்றார்? மரமும் மனிதனும் ஒன்றா? அவ்வாறெனில் மரம் இழிவானதா? என்ற பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. மரம் எல்லாப் பலன்களையும் கொடுக்கும் எனினும் பிறரது துன்பத்தை உணரும் திறனற்றது. பிறர் படும் துயரினை அறிந்து அதனைப் போக்க வல்ல பண்பு மரத்தினிடம் இல்லை. அக்காரணம் கொண்டே வள்ளுவப் பெருந்தகை மக்கட் பண்பில்லாத மனிதர்களை மரத்தைப் போன்ற மனிதர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
பண்புடைமை அதிகாரத்தில்,
"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லாதவர்" (குறள் எண், 997)
என்று மரம் போன்ற மனிதர்களை வள்ளுவர் நமக்கு அடையாளம் காட்டுகின்றார்.
இக்குறட்பாவிற்கு, "நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர் அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரே ஆயினும் ஓரறிவிற்றாய மரத்தினை ஒப்பர்" என்று பரிமேலழகர் உரை எழுதுகின்றார்.
இதற்கு, "ஓரறிவு-ஊற்றினை அறிதல், உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது, ஏனையது விசேட அறவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட் பண்பு இன்மையின் அதுதானும் இல்லை என்பதாயிற்று." என்றும் சிறப்பாக பரிமேலழகர் விளக்கம் எழுதுகின்றார்.
"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே" - (தொல்., பொருள், மரபு.,நூ.எ., 1526)
"புல்லும் மரனும் ஓர் அறிவினவே" - (தொல்., பொருள், மரபு, நூ.எ.,1527)
என்று தொல்காப்பியம் ஓரறிவு உயிராகிய மரத்தின் இயல்பை உணர்த்துகின்றது. உடம்பால் மட்டுமே உணரக் கூடியது மரம். உணர்வால் உணரக் கூடிய தன்மை அதனிடம் இல்லை. மற்றவர்கள் உற்ற துன்பத்தை மக்களாகிய ஆறறிவு உடையவர்கள் மனதாலும், பார்ப்பதாலும் அறிந்து கொண்டு வருந்தி அவர்களது துன்பத்தைக் களைய முயலுவர். அவர்களே மக்கட்பண்பு உடையவராவர். அத்தகைய பண்பு இல்லாதவர்கள் மரத்தைப் போன்றவர் ஆவார்.
இதனைக் கருத்தில் கொண்டே வள்ளுவர் மக்கட் பண்பு இல்லாதவர்களை மரத்தைப் போன்ற மனிதர்கள் என்று குறிப்பிடுகின்றார். பாஞ்சாலி சபதத்தில் திரௌபதியின் கூந்தலைப் பற்றி சபை நடுவே துச்சாதனன் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி, அவளது ஆடையைப் பற்றி இழுத்து மானபங்கப்படுத்துகின்றபோது அங்கிருந்த அவையோர் ஒன்றும் கூறாமலும் தடுத்து நிறுத்தாமலும் வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தார்கள். துச்சாதனனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை. தங்கள் கண்ணெதிரே நடந்த அக்கொடுமையை கண்டும் காணாமல் நின்றவர்களைப் பாரதியார்,
"நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?"
என்று மரத்திற்கு ஒப்பாகக் கூறி இழிவுபடுத்துகின்றார்.
பிறர் துன்பங்கண்டு அதனைப் போக்காது கண்டும் காணாது யார் இருக்கின்றார்களோ அவர்கள் மக்கட் பண்பில்லாத மரத்தைப் போன்றவர்கள் ஆவர். அவர்கள் எத்தைகய அறிவுடையவராக இருந்தாலும் நற்குணங்கள் இல்லாதவர் மரங்களைப் போன்றே பிறரால் கருதி மதிக்கப்படுவர்.
கௌரவர்களின் அவையில் பாஞ்சாலியைக் கொண்டு வந்து நிறுத்தி துச்சாதனன் அவளது ஆடையைப் பற்றி இழுத்து அவளை அவமானப்படுத்துகின்றான். பாஞ்சாலி தன்மானத்தைக் காக்க ஒவ்வொருவரிடமும் மன்றாடிப் புலம்பிக் கதறி கேட்கிறாள். அச்சபையில் அறிவில் சிறந்த வீரம் மிகுந்த பீஷ்மர், ஆச்சாரியார் துரோணர், விதுரர் உள்ளிட்ட பலரும் இருக்கின்றனர். பாஞ்சாலியின் வீரம் செறிந்த கணவன்மார்கள் இருக்கின்றார்கள். யாருமே துச்சாதனன் செய்கின்ற தவறைத் தடுக்க முன்வரவில்லை. அப்படியே பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலைப் பிடித்து இழுக்கின்றான்.
தன்னால் முடிந்தவரைப் போராடிப் பார்த்த பாஞ்சாலி அவையிலுள்ளோர் தன்னைக் காப்பாற்ற முயலாத நிலையில் கண்ணனைத் தஞ்சமடைந்து வேண்டுகிறாள். கண்ணன் அவளது மானத்தைக் காக்கின்றான். பாஞ்சாலியின் மானம் காப்பாற்றப்படுகின்றது. இந்தச் சூழலில்தான் மக்கட் பண்பில்லாத, உணர்வில்லாத அந்த அவையோரைப் பார்த்து பாரதி நெட்டை மரங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
இதனைப் பின்வரும் கதையொன்று நன்றாக விளக்குகின்றது.
அந்தக் கொப்பளங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டன. "உன்னிலும் நான் உயரம்" என்றது ஒன்று.
"உன்னிலும் நான் பருமன்" என்றது மற்றொன்று.
இரண்டின் சண்டையும் மனிதனின் காதில் விழுந்ததும் அவனுக்குக் கோபம் வந்தது.
அவன் அவற்றைப் பார்த்து, "எனக்கு தாங்க முடியாத துன்பத்தைக் கொடுத்துக் கொண்டு தற்பெருமையா பேசுகிறீர்கள்?" என்று கூறியவாறே அவை இரண்டையும் நசுக்கித் தள்ளினான்.
இந்தக் கதையில் வரும் கொப்பளங்களைப் போன்றுதான் பலர் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றியோ, துன்பத்தைப் பற்றியோ கவலைப்படாமல் தற்பெருமை பேசிக் கொண்டு மற்றவர்களுக்கு எப்போதும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மக்கட் பண்பில்லாதவர்கள். அவர்களால் மற்றவர்களுக்குக் கேடுதான் விளையுமே தவிர நற்பலன் ஒன்றும் விளையாது.
மக்கட் பண்பில்லாத, மனிதனுக்குத் துன்பத்தைத் தரும் கொப்பளம் போன்ற அவர்களை வள்ளுவர் மக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களாக இருந்தாலும் அவர்கள் மரத்திற்குச் சமமாவர், அவர்கள் மரம் போன்ற மனிதர்களாவர். இத்தகையவர்களை பார்த்து அறிந்து நடந்து கொள்ளுங்கள் என்று நம் அனைவருக்கும் அத்தகைய பண்புடைய மனிதர்களை அடையாளம் காட்டுகின்றார் வள்ளுவர்.
வள்ளுவர் கூறிய அத்தகைய மக்கட் பண்பில்லாத மனிதர்களை அடையாளம் கண்டு நடந்து கொள்வோம். மனிதர்கள் மீது அன்பு கொண்டு விளங்கும் மனிதர்களாக வாழ்வோம்.
(தொடரும்)
- முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை