மௌரியப் படையெடுப்பு:

      கி.மு. 297 வாக்கில் பிம்பிசாரன் மகத ஆட்சியில் அமர்ந்தவுடன் தக்காணப் படையெடுப்பைத் தீவிரப்படுத்தினான். மௌரியப்படை தக்காணத்தின்மீது படையெடுத்து வந்த போது அவர்களுக்கு வடுகர்கள் துணையாக இருந்து ஆதரவு தந்தனர். மௌரியப்படையில் சேர்ந்துகொண்ட கோசர்களும், வடுகர்களும் தென்பகுதியில் இருந்த அனைத்து அரசுகளோடும் போர் செய்து வென்று வரலாயினர். மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணைகொண்டு துளுவ நாட்டைத்தாக்கி அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியைக் கைப்பற்றிக் கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினரையும், சோழநாட்டின் எல்லையிலுள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர் பழையனையும் படிப்படியாகத் தாக்கத்தொடங்கினர். சேரர் எல்லையிலுள்ள நன்னனை முதலில் தாக்கித் தோற்கடித்த பின் அவர்கள் அதியன் மரபினர்களைத் தாக்கத் தொடங்கினர். போர் வெற்றி தோல்வி இல்லாமல் தொடர்ந்தது.       

சதிய புத்திரர்கள்:

      cheran 350அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை தக்குதல் நடத்தினர். தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் மேற்குக் கடற்கரையில் உள்ள குதிரை மலை முதல் கொங்குநாடு வரை அதியன்கள் மரபினர் ஆண்டு வந்ததால் தான் அவ்வழியே படையெடுத்து வந்த மௌரியப்படைகளை அவர்கள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். தொடக்கத்தில் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் இருந்த சோழ பாண்டிய படைத்தலைவர்களோடு இணைந்து போரிட்டு மௌரியப் படைகளை தடுத்து நிறுத்துவதில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில் அவர்களின் அரசகுல வடமொழிப்(பிராகிருதம்) பெயரில் சதிய புத்திரர்கள் என மூவேந்தர்களுக்கு இணையாக இடம்பெற்றனர். இந்த அதியன் மரபினரும், சோழ நாட்டெல்லையில் உள்ள அழுந்தூர்வேள் திதியனும், பாண்டிய நாட்டின் எல்லையிலுள்ள மோகூர்ப்பழையனும் மௌரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

மோகூர்த் தலைவன்:

     இறுதியில் அதியன்மரபினரும், திதியனும் மோகூர்த் தலைவனும் எல்லையோர அனைத்துத் தமிழ் அரசுகளும் ஒன்றினைந்து மோரியர்களைப் போரில் தோற்கடித்துத் தங்களது எல்லையைவிட்டு துரத்திவிடுகின்றனர். மோரியர்படை பின்வாங்கி துளுவநாட்டை அடைந்து பாழிநகரில் நிலைகொள்ளுகிறது. துளுவநாட்டு வெற்றிக்குப்பின் மௌரியரது எல்லைப் பகுதிப் படைத்தலைவர்களே வடுகர்களின் துணையோடு போரிட்டு வந்தனர். ஆனால் அவர்களால் தமிழக எல்லையில் உள்ள குறுநில மன்னர்களை, வேளிர்களை வெல்ல இயலவில்லை. தமிழகத்தின் எல்லையில் மௌரியப்படைகளின் தோல்வி மௌரியப்பேரரசைத் தட்டி எழுப்பியது.

      மௌரியப்பேரரசின் பெரும்படை திரட்டப்பட்டது. பெரும் போருக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றன. துளுவ நட்டையும், எருமை நாட்டையும் கடந்துவரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச் செப்பனிட்டு மௌரியப்பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதைகள் அமைக்கும் பணி குறித்தும் வடுகர்கள் வழிகாட்டியாக இருந்து மௌரியர்களுக்கு உதவியது குறித்தும் மோகூர்த்தலைவன்மேல் பகைகொண்டு மௌரியர் படையெடுத்து வந்தது குறித்தும் மாமூலனாரும், பிற சங்கப்புலவர்களும் தங்கள் பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் முடிந்தவுடன் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி தமிழகத்தின் மீது படையெடுக்கத்தயாராகியது.

சோழர்களின் முதன்மை:

     தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, சோழன் இளஞ்செட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத்தலைவர்களை, வேளிர்கள், சிற்றரசர்களை மட்டும் இப்பெரும்போருக்கு பொறுப்பாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை ஒன்றுதிரட்டி தனது தலைமையில் பெரும்படையைத்திரட்டுகிறான். இப்போர் தமிழகப்போராக தமிழகக் கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி சேர பாண்டியவர்களிவிட சோழர்கள் பெரும் புகழடைகின்றனர். அசோகன் கல்வெட்டுகளிலும் அதன் காரணமாகவே பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெறுகின்றனர் எனலாம். ஆகவே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கு அசோகன் கல்வெட்டுகள் ஒருவிதத்தில் மறைமுக ஆதாரங்கள் ஆகின்றன எனலாம்.

வல்லம்போர்:

      தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள் தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வட பகுதி முழுவதும் மௌரியப் பெரும்படையால் தாக்கப் பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில் நடந்த பெரும் போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெரும் தோல்வி அடையச் செய்து துரத்தி அடித்தான். வல்லம் போர் குறித்து அகம் 336இல் பாடிய பாவைக் கொட்டிலார் என்கிற பெண்பாற் புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர் தங்களை ஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர். கி.மு.3ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட இப்பாடலில் குடும்ப மகளிர்கள் ‘கள்’ அருந்தி தங்கள் கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது குறித்த குறிப்பு வருகிறது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

      வல்லம் போருக்குப் பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக்கொண்டேயிருந்தனர். ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நிலையில் தான் பாண்டியர் படைகளுக்குத்தலைமை தாங்கிய, இளைஞனாக இருந்த நெடுஞ்செழியன் மௌரியர்களின்பெரும்படை ஒன்றைத் தோற்கடித்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என பெயர் பெற்றான். முதல் கரிகாலனுக்குச் சம காலத்தவனாகவும், சேரன் செங்குட்டுவனுக்கு முந்தையவனாகவும் அவன் இருந்தான். ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் கி.மு.290 வாக்கில் மௌரியப்படையை எதிர்த்துப் போரிடும்பொழுது 25 வயது இளைஞனாக இருந்தான் எனலாம். அதன்பின் சுமார் 20 வருடம் கழித்து தனது 45ஆவது வயது வாக்கில் வேந்தனாகிறான். ஆகவே ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனின் வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 270-245 ஆகும். ‘தமிழகம் ஒன்றாக இருந்து பார்க்கும் வகையில் வட ஆரியப்படையை எதிர்த்து வெற்றி பெற்ற நெடுஞ்செழியன்’ என்கிறது சிலப்பதிகாரம்-(6). ஆகச் சோழன் தலைமையில் பாண்டியர்களும், சேரர்களும் மௌரியப்படையை பலமுறை தோற்கடித்தனர். இறுதியில் தொடர்ந்து அடைந்து வந்த தோல்விகளால் தாக்குப் பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு மௌரியப்படை பாழி நகருக்குப் பின் வாங்கியது.

செருப்பாழிப் பெரும்போர்:

      இளஞ்செட் சென்னி போரைத் தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரைப் படையெடுத்துச்சென்று பெரும் வெற்றிபெற்றான். இளஞ்செட்சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் அகம் 375இல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்பவடுகர் என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு. வடக்கே வாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார். ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருகிற புதிய வடுகர்கள் என்பதால், அவர்களை வம்பு வடுகர் என்கிறார். பாழி நகரில் நடந்த இறுதி பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக அரசுகளைப் படை கொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்துகொண்டு நிரந்தரமாகப் பின் வாங்கினர். தமிழகத்தைக்கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.297இல் பிந்துசாரரின் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப்பெரும்போர் கி.மு.288 வாக்கில் முடிந்ததாகக் கணிக்கப் பட்டது. இந்தப் பெரும் போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு கல்வெட்டுகளிலும் சோழர்களை முதன்மைப் படுத்தியுள்ளான்.

தெற்குப் பிரச்னை :

        கொ.அ.அன்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின் ஆகிய இரு இரசிய வரலாற்று அறிஞர்கள், அசோகன் இளவரசனாக இருக்கையில் உஜ்ஜயினியின் அவந்தி மாநிலத்திற்குத் தனது தந்தையால் அனுப்பப்பட்டு அப்பகுதியை அவன் நிர்வகித்து வந்தான் எனவும், அசோகன் ஆட்சிக் காலத்தில் தனிப்பட்ட தெற்குமாநிலம் அமைக்க, பிந்துசாரன் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த “தெற்குப் பிரச்னையே” காரணம் எனவும், பிற மாநில ஆட்சித் தலைவர்கள் குமாரர்கள் என்று பட்டம் பெற்றிருந்தபோது, தெற்கு மாநில ஆளுநர் மட்டும் ஆர்யபுத்ர(பட்டத்து இளவரசர்) என்கிற பட்டத்தைப் பெற்றிருந்தான் எனவும் கூறியுள்ளனர்-(7). பிந்துசாரரின் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த தெற்குப் பிரச்னை என்பது தமிழகக் கூட்டணி அரசுகளிடம் மௌரியப் பேரரசு பெருந்தோல்வி அடைந்ததும், பேரரசின் தெற்கிலுள்ள தமிழக அரசுகளிடமிருந்து எப்பொழுதும் பேரரசுக்கு ஆபத்து இருப்பதையுமே சுட்டிக் காட்டுகிறது எனலாம். தக்காணத்தின் துவக்கத்தில் அவந்தி மாநிலம் இருப்பதால் தமிழகப் படையெடுப்பு குறித்த முழு விவரத்தையும் அசோகன் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

         மொழிபெயர்தேயம் எனப்படும் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள பல காவல்அரண்கள் தொடர்ந்து தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததும் ஒரு காரணம் ஆகும். மேலும் முதல் கரிகாலன் பிம்பிசாரன் இறந்தபின் வடதிசைப் படையெடுப்பை நடத்தி கிருட்டிணா நதிக்குத் தெற்கிலுள்ள தக்காண அரசுகளை, வாகைப்பறந்தலைப் போரின்மூலம் தோற்கடித்து தக்காணப்பகுதிகளில் தமிழரசுகளின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தியது தான் மிக முக்கிய காரணமாக இருக்கலாம். மௌரியர்கள் பயந்தது போலவே, கி.மு.232 இல், அசோகர் இறந்தவுடன், சாதவாகனர்கள் தமிழக அரசுகளின் ஆதரவோடு தனி அரசாகினர் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது நல்லது.

        அசோகன் தனது கல்வெட்டில் அதியமான்களை மூவேந்தர்களுக்கு இணையாகச் சதிய புத்திரர் எனக் குறிப்பிட்டதும், சோழர்களை முதன்மைப் படுத்தி பாண்டியர்களை இரண்டாம் இடத்தில் வைத்ததும், மௌரியர்களால் தமிழகம் கைப்பற்றப்படாமல் இருந்ததும், செருப்பாழிப் போர், வல்லம்போர், மௌரியப்படையெடுப்பு முதலியன குறித்தச் சங்க இலக்கியக் குறிப்புகளும், மாமூலனார் அவர்களின் மொழிபெயர் தேயம் எனப்படும் தக்காணப்பகுதி தமிழக மூவேந்தர் களின் பாதுகாப்பில் இருந்தது என்கிற குறிப்பும்(அ-31) தமிழக அரசுகள் மௌரியப்பேரரசை முறியடித்து வெற்றிபெற்றதை உறுதிசெய்கின்றன.

வின்சென்ட் சுமித்&காரவேலன் கல்வெட்டு:

    மேலும், மௌரியப்பேரரசின் தெற்கு எல்லை, மேற்கில் கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கில் வடபெண்ணை ஆற்றில் இருந்த நெல்லூர் வரையிலும் இருந்தது என்கிற வின்சென்ட் சுமித் அவர்களின் குறிப்பும், அசோகப் பேரரசு மற்றும் கி.பி.150இல் இந்தியா முதலியன குறித்த இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற வரைபடங்களும், கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டில் உள்ள 1) தமிழக அரசுகளின் ஐக்கிய கூட்டணி மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது என்கிற குறிப்பும், 2) கலிங்கத்தின் இரண்டாவது பெரிய துறைமுக நகரான பித்துண்டா தமிழரசுகளின் பாதுகாப்பு அரணாக இருந்தது என்கிற குறிப்பும் மௌரியப்பேரரசை எதிர்த்துத் தமிழகம் பெற்ற வெற்றியை உறுதி செய்கின்றன. செருப்பாழிப்போருக்குப்பின் 113 ஆண்டுகள் கழித்து கி.மு. 165 வாக்கில் வெட்டப்பட்ட கலிங்கமன்னன் காரவேலனின் கல்வெட்டு, மறைமுகமாக தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணி குறித்தும் கலிங்கத்தின் புத்துண்டா நகரை தங்கள் காவல் அரணாக வைத்திருந்த தமிழரசுகளின் கடற்படை வலிமை குறித்தும்பேசுகிறது(8) புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்ட் சுமித் அவர்கள் அன்று மௌரியர்களிடம், கடற்படை என்பது இராணுவத்தின் ஒரு அங்கமாக இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஆனால் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைக்கொண்டிருந்தன எனவும் சொல்லியிருப்பது(9) காரவேலன் கல்வெட்டு மூலம் உறுதிப்படுகிறது. 

வரலாற்று மாணவன் அறிய வேண்டியது:                              

      தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் முனைவர் க.இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ள, கி.மு.1000 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் ஏற்பட்ட தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி, சங்க கால தமிழ் மக்களின் தொழில் நுட்பத் திறன், அவர்களின் பொருள் உற்பத்தி, அவர்களுடைய உலகளாவிய வணிகத்தின் மேன்மை முதலியன பற்றியத் தரவுகள், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் படையை தோற்கடிக்கும் அளவு வலிமை மிக்கதாக இருந்திருக்க முடியும் என்பதை உறுதிப் படுத்துகின்றன. ஆதலால் சோழன் இளஞ்செட் சென்னியின் தலைமையிலான தமிழக அரசுகள், தமிழகத்தின் மீது படையெடுத்த மௌரியப் படையை, பாலி நகரில் தோற்கடித்து பெரும் வெற்றிபெற்றன என்பது நடந்து முடிந்த, புகழ்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆகவே மௌரியப் படை கி.மு 300க்குப்பின் தமிழகத்தின் மீது படையெடுத்ததும், அப்படையெடுப்பை சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்செட் சென்னி தலைமையிலான தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணிப் படை முறியடித்ததும், பாழி நகரில் தமிழரசுகளின் படை பெற்ற இறுதி வெற்றியும் வரலாற்று மாணவன் அறிய வேண்டிய விடயமாகும்.

மாமூலனாரும் வேந்தர்களின் காலமும்:

     பழமொழி நானூற்றின் ஆசிரியர் மூன்றுரையரையனார், புலவரும் தனது மாமனுமாகிய இரும்பிடர்த் தலையாரிடம் கல்வி கற்று, முதல் கரிகாலன் சிறப்புப் பெற்றான் எனக் குறிப்பிடுகிறார்(10). முதல் கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது அவனைவிட இரு தலைமுறைகள் மூத்த முதியவராக இருந்தவர் அவனது ஆசிரியர் இரும்பிடர்த் தலையார். அன்று அரச குடும்பச் சிறுவர்களுக்கு அறிவும் அனுபவமும் உடைய வயதானவர்களைத்தான் ஆசிரியராக நியமிப்பர். இரும்பிடர்த் தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியை புறம் 3இல் பாடியுள்ளார். இந்தப் பாண்டியன் பெரும்பெயர் வழுதியை, குடவாயிற் கீரத்தனார் அகம் 315ஆம் பாடலில் பாடியுள்ளார். ஆதலால் குடவாயிற் கீரத்தனாரும் இரும்பிடர்த் தலையாரும் சம காலத்தவர் ஆகின்றனர். இந்த குடவாயிற் கீரத்தனார் அகம் 44ஆம் பாடலில் பெரும்பூட்சென்னி என்கிற சோழ வேந்தனைப் பாடியுள்ளார். குடவாயிற்கீரத்தனாரும், இரும்பிடர்த் தலையாரும் சமகாலத்தவர் என்பதால் குடவாயிற்கீரத்தனாரால் பாடப்பெற்ற சோழன் பெரும்பூட்சென்னியும், பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் சமகாலத்தவர் என்பதோடு முதல்கரிகாலனை விட இருதலைமுறைகள் மூத்தவர்களும் ஆவர். அதாவது முதல்கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில், குடவாயிற்கீரத்தனார், இரும்பிடர்த் தலையார், சோழன் பெரும்பூட் சென்னி, பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆகிய நால்வரும் முதல்கரிகாலனை விட இரு தலைமுறைகள் மூத்தவர்கள் ஆவர்.

            மாமூலனார், இரண்டாம் பத்துக்குரிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும்(அ-55,127,347), அவனது தந்தை உதியன் சேரலாதனையும் (அ-65,233) பாடியுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் போரில் வென்ற முதல் கரிகாலனையும்(அ-55) அவர் பாடியுள்ளார். மாமூலனாரை விட இளையவரான பரணர் முதல் கரிகாலனையும்(அ-125,246,376), இமயவரம்பன் மகன் சேரன் செங்குட்டுவனையும்(5ஆம்,ப.ப.; பு-369; அ-212,396)பாடியுள்ளார். ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை அவர் பாடவில்லை. ஆகவே முதல் கரிகாலனுடன் போரிட்ட இமயவரம்பன், முதல் கரிகாலனைவிட மூத்தவன் எனவும், இமயவரம்பனின் மகன் சேரன் செங்குட்டுவன் முதல் கரிகாலனைவிட இளையவன் எனவும் அறியலாம்.

         இத்தரவுகளின் மூலம் சோழன் பெரும்பூட் சென்னியைவிட இரு தலைமுறைகள் இளையவனான முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில் அவனைவிட மூத்தவனான இமயவரம்பன் நெடுஞ்செரலாதன் இரண்டாம் தலைமுறை எனவும், இமயவரம்பனின் தந்தை உதியன் சேரலாதனும், சோழன் பெரும்பூட் சென்னியும் முதல் தலைமுறை எனவும் அறியலாம். அதாவது முதல் கரிகாலனைவிட பெரும்பூட் சென்னியும், உதியன் சேரலாதனும் இரு தலைமுறைகள் மூத்தவர்கள் ஆவார்கள். முதல் தலைமுறை உதியன் சேரலாதன், இரண்டாம் தலைமுறை இமயவரம்பன் நெடுஞ்செரலாதன்,, மூன்றாம் தலைமுறை முதல்கரிகாலன் ஆகிய மூவரையும் பாடிய மாமூலனார் இடைப்பட்ட இமயவரம்பன் காலத்திய, இரண்டாம் தலைமுறை ஆகிறார்.

    பரணர் சேரன் செங்குட்டுவனையும், முதல் கரிகாலனையும், பாடியுள்ளதோடு, முதல் கரிகாலனின் மகன் உருவப் பஃறேர் இளஞ்செட் சென்னியையும்(பு-4), பாடியுள்ளார். சேரன் செங்குட்டுவன் இமயவரம்பனின் மகன் என்பதால், இமயவரம்பனுடன் போரிட்ட முதல் கரிகாலன் சேரன் செங்குட்டுவனைவிட மூத்தவன் ஆகிறான். அதே சமயம், முதல் கரிகாலனின் மகன் உருவப்பஃறேர் இளஞ்செட் சென்னி, சேரன் செங்குட்டுவனைவிட இளையவன் ஆகிறான். ஆகவே முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில் சேரன் செங்குட்டுவன் நான்காம் தலைமுறை ஆகிறான். உருவப்பஃறேர் இளஞ்செட்சென்னி ஐந்தாம் தலைமுறை ஆகிறான்.

          பெரும்பூட்சென்னி முதல் தலைமுறை என்பதாலும், முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை என்பதாலும், பெரும்பூட் சென்னியின் மகனும், முதல் கரிகாலனின் தந்தையும் ஆன செருப்பாழி எறிந்த இளஞ்செட் சென்னி இரண்டாம் தலைமுறை ஆகிறான். செருப்பாழி எறிந்த இளஞ்செட் சென்னி இரண்டாம் தலைமுறை என்பதால் மாமூலனாரும், இமயவரம்பனும் அவர் காலத்தவர் ஆகின்றனர். மௌரியப் படையை கி. மு. 297முதல் கி.மு.288 வரை போராடி வென்ற இளஞ்செட் சென்னியின் காலத்தவர் மாமூலனார் என்பதால், அவர் இந்தக் காலத்துக்குச் சிலகாலம் முன்பும் சிலகாலம் பின்பும் வாழ்ந்தவர் எனலாம். அதாவது கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு எனலாம். முதல் தலைமுறையைச் சேர்ந்த சோழன் பெரும்பூட் சென்னி, உதியன் சேரலாதன் போன்றவர்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டு ஆவர். அதே சமயம் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாமூலனார் போன்றவர்கள் கி.மு. 3ஆம், 4ஆம் நூற்றாண்டு ஆவர். முதல் கரிகாலன் போன்ற மூன்றாம் தலைமுறையையும், சேரன் செங்குட்டுவன் போன்ற நான்காம் தலைமுறையையும் சேர்ந்தவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம்.

கல்வெட்டுகள், நாணயங்களின் காலம்:

        கீற்றில் வெளியிடப்பட்டுள்ள ‘சேரன் செங்குட்டுவனும் கயவாகுவும்’ குறித்தக் கட்டுரையில், பாலைபாடிய பெருங்கடுங்கோ தான் புகளூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பொறையர் குலச் சேர அரசன் எனவும் இவனும் மாமூலனாரும் சம காலத்தவர்கள் எனவும் புகளூர் கல்வெட்டின் காலமான கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு என்பது தான் இவர்களது காலம் எனவும் கண்டறியப்பட்டது. அது போன்றே மாமூலனாரை விடப் பரணர் இளையவர் எனவும், பரணரால் பாடப்பட்டவர்கள் தான் சம்பை கல்வெட்டின் அதியமானும், சேரன் செங்குட்டுவனும் எனவும், சம்பை கல்வெட்டும், அசோகன் கல்வெட்டும் சமகாலத்தவை எனவும் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவைகளின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் சம்பை கல்வெட்டின் அதியமான், அதியமானைப் பாடிய பரணர், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவன் ஆகிய அனைவரும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் கண்டறியப்பட்டது. தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் முதலியன சங்ககால இறுதிக்கால வேந்தர்களால் வெளியிடப்பட்டவைகள். இந்த நாணயங்களின் காலத்தைக் கொண்டும் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே சேரன் செங்குட்டுவன், அவனைப்பாடிய பரணர் ஆகியவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் பரணரை விட முதியவரான மாமூலனாரின் காலம் கி.மு.4ஆம் 3ஆம் நூற்றாண்டு என்கிற கணிப்பு உறுதியாகிறது. ஆகவே மாமூலனாரின் காலக்கணிப்பு என்பது சங்ககால இலக்கியப் பாடல்கள், புகளூர் கல்வெட்டு, அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு, மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் ஆகிய பல்வேறு தரவுகளின் காலத்தையும் கணக்கில்கொண்டு கணிக்கப்பட்டதாகும்.

மாமூலனாரின் இறுதிக் காலம்:  

       செருப்பாழிப்போர் நடைபெற்ற இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், இளஞ்செட் சென்னியின் புகழ் பரவியதைப் பொறுக்க மாட்டாத சிலர் அவனைச் சூழ்ச்சி செய்து கொன்று விடுகின்றனர். அதன்பின் அவனது மகன் முதல் கரிகாலன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நடத்திய போர் தான் முதல் வெண்ணிப்பறந்தலைப் போர் ஆகும். இப்போர் செருப்பாழிப் போருக்குப்பின் சில வருடங்கள் கழித்து நடந்தது என்பதால் அதன் காலம் கி.மு. 283 வாக்கில் எனக்கொள்ளலாம். அதன்பின் முதல் கரிகாலனுக்கும், சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே கி.மு.275 வாக்கில் நடந்த போர் தான் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போராகும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இப்போரில் தோல்வியடைந்து, முதுகில் விழுப்புண் பெற்று, நாணி, வடக்கிருந்து உயிர் துறந்து பெரும் புகழடைந்தான். சேரனாடு பெரும் இழப்பைச் சந்தித்தது. முதல் கரிகாலன் தமிழகத்தின் பேரரசனாக உயர்ந்தான். இப்போர் குறித்தும், சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தது குறித்தும் வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவரும், கழார்த் தலையாரும், மாமூலனாரும் பாடியுள்ளனர்-(11).

        கி.மு. 275 வாக்கில் நடைபெற்ற, மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போர் குறித்துப் பாடிய பாடலே மாமூலனாரின் இறுதிப்பாடலாகும். ஆகவே மாமூலனாரது இறுதிக்காலம் என்பதை முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போருக்குப்பின் 5 வருடங்கள் கழித்து கி.மு. 270 வாக்கில் எனக் கொள்ளலாம். மாமூலனாரின் தொடக்க காலம் கிட்டத்தட்ட கி.மு.355 என முன்பே முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாமூலனார் அவர்கள் வாழ்ந்த காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு. 355 முதல் கி.மு. 270 வரையான சுமார் 85 வருடங்கள் எனலாம். கி.மு.4ஆம் நூற்றாண்டின் இடையில் பிறந்த மாமூலனார் தனது இளவயதில் நந்தர்களையும், முதல் தலைமுறையைச் சேர்ந்த உதியஞ் சேரலாதனையும், கி.மு. 270க்கு முன் தனது இறுதிக் காலத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சோழன் முதல் கரிகாலனையும் இடையில் மௌரியர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார். ஆகவே பல்வேறு தரவுகளைக் கொண்டு ஏரணக் கண்ணோட்டம், பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்ட சுமாரான காலமே மாமூலனாரின் காலமாகும்.

காலக்கணிப்புக்கான ஆதாரங்கள்:

     புகளூர் கல்வெட்டு, அசோகன் கல்வெட்டுகள், சம்பைக் கல்வெட்டு முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மாமூலனாரும் பிற சங்கப் புலவர்களும் நந்தர்கள் குறித்தும், மௌரியர்கள் குறித்தும், பாடிய பாடல்கள், செருப்பாழிப் போர், வல்லம் போர் குறித்தச் சங்கப் புலவர்களின் பாடல்கள், மொழிபெயர் தேயம் எனப்படும் தக்காணப் பகுதி தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்கிற மாமூலனாரின் குறிப்பு போன்ற சங்க இலக்கியச் சான்றுகள் ஆகிய மேலே தரப்பட்டுள்ள பல்வேறு வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டதுதான் மாமூலனாரின் காலம் ஆகும்.

இக்கட்டுரை கீழ்க்கண்ட முடிவுகளை முன்வைக்கிறது.

1.சங்ககாலப் புலவர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளையும், நிகழ்காலப் புரவலர்களையும் மட்டுமே பாடினர்

2.வட இந்தியாவில் கிமு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மௌரியர்கள், நந்தர்களை வீழ்த்தி, மகத அரசைக் கைப்பற்றிய போதும், மௌரியர்கள் கிமு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்தபோதும் மாமூலனார் வாழ்ந்து வந்தார்.

3.அசோகன் கல்வெட்டில் சோழர்கள் முதன்மை பெற்றதும், சதிய புத்திரர்கள் இடம்பெற்றதும், தமிழரசுகள் சுதந்திரமான அரசுகளாக குறிக்கப்படுவதும், வல்லம்போர், பாழிப்போர் குறித்தச் சங்ககாலப் பாடல்களும் கிமு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோழர் தலைமையிலான தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியால், மௌரியப் பேரரசு தோற்கடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.

4.சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் ஆகியவர்களுக்கு இரு தலைமுறைகள் முந்திய, மாமூலனாரின் காலம் சுமார் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டாகும்.

5.சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் ஆகியவர்களுக்கு இரு தலைமுறைகள் முந்தியவரும், மகதத்தில், மௌரியர்கள் நந்தர்களை வீழ்த்தி, மகதஆட்சியைக் கைப்பற்றியபோது வாழ்ந்தவருமான மாமூலனாரின் காலம் சுமார் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டாகும்.

பார்வை:

6.சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், 23-கட்டுரைக்காதை: கட்டுரை வரி; 14, 15.

7.’இந்தியாவின் வரலாறு’ கொ.அ.அன்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின் இரசிய அறிஞர்கள், தமிழில் முன்னேற்றப் பதிப்பகம், 1987, பக்: 93, 104.

8.en.m.wikipedia.org/wiki/kalinga_india,   Hathigumpha inscription of kharavela of kalinga.

9.வின்சென்ட் சுமித், அசோகர், 2009, பக்:79 தமிழில் சிவமுருகேசன். 10.ஔவை.சு.துரைசாமிபிள்ளை, புறநானூறு-1, ஜூலை-2009, பக்:31.        

11.வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவரின் புறநானூற்றுப்பாடல்: 66; கழார்த்தலையார் அவர்களின் புறநானூற்றுப் பாடல்: 65; மாமூலனார் அவர்களின் அகநானூற்றுப்பாடல்: 55.

குறிப்பு: அ-அகநானூறு; பு-புறநானூறு; ப.ப.-பதிற்றுப்பத்து.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It