வெடிகுண்டு தாக்குதல் நடந்த இடமான அவந்திபோரா பகுதி இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 200-250 கி.மீ. தொலைவில் உள்ளது. அவந்திபோரா கிழக்கு - எல்லைக்கோடு மேற்கு. அதாவது கிட்டத்தட்ட சென்னையில் இருந்து திருச்சி தொலைவு.

indian army in Kashmirநமது வீடு இருக்கும் தெருவிற்கு போலிஸ் அடிக்கடி வந்தாலோ அல்லது டிராபிக் சிக்னல்களில் போலிசாரைப் பார்த்தாலோ அதிக நெருடலாக இருக்கும். Something wrong எனத் தோன்றும். பாதுகாப்பு அற்ற நிலை போல் உணர்வோம். அதுவும் தினந்தோறும் இதே நெருக்கடியான சூழல் என்றால் வாழ்க்கையே பெருஞ்சுமை தான். உலகே இருண்டு கிடக்கும்.

தமிழ்நாட்டைப் போன்று காஷ்மீர் மாநிலம் பரப்பளவில் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் ஒன்று. இந்திய ராணுவம் காஷ்மீர் முழுவதும் சிதறியும் ஆங்காங்கே குழுமியும் இருக்கிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழும் ஒரு கோடி மக்கள் இதே நெருக்கடிக்குள் 70 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் பற்றி அதிகாரப் பூர்வ தகவல்களை இந்திய அரசு தராவிட்டாலும் கிட்டத்தட்ட 7 லட்சம் முதல் 10 லட்சம் ராணுவ வீரர்கள் இருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் (independent agencies) தெரிவிக்கின்றன. 10 காஷ்மீரிகளுக்கு ஓர் ராணுவ வீரன் என்ற அளவில் உள்ளதாக நம்பப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் நான்கு பெரும் போர்களையும், கணக்கிலங்கடா துப்பாக்கி சத்தத்தையும் காஷ்மீர் மக்கள் கண்டுள்ளனர்.

இந்தக் கண்காணிப்பு, சுற்றிவளைப்பு, துப்பாக்கிச் சூடு அனைத்தும் எவ்வளவு பதட்டத்தை உருவாக்கும்? அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? நிம்மதியாக இருக்க முடியுமா?

காஷ்மீர் பனிமூட்டம் கொள்ளை அழகு. ஆனால் அதைவிட கொடுமையானது அந்தப் பனிமூட்டத்திற்கு இடையில் நீங்கா பதட்டத்துடன் வாழும் ஒரு கோடி மக்களின் வாழ்வு.

காஷ்மீர் ஆப்பிள் சுவையானது. அந்த ஆப்பிளை விளைவிக்கும் காஷ்மிரியின் மனநிலை அமைதியற்றது.

சிலிர்க்கும் பனி, கொஞ்சும் இயற்கை, ஓங்கிய உயர்ந்த மரம், அடர்ந்த அழகிய வெண்பனிக்காடு, பனித்துளி தழுவும் புல்வெளி, எங்கெங்கு காணினும் பசுமை, மலை, மழை, ஆறு, சலசலவென ஓடும் சிற்றோடை... காஷ்மீரைப் பற்றி கேட்கவே இனிமை.

இந்த மலை, பசுமை, இயற்கை என எல்லாவற்றிலும் ராணுவம் கேம்ப் அமைத்து துப்பாக்கிகளோடு சுற்றினால் சிலிர்க்கும் பனியை ரசிக்க முடியுமா? சிற்றோடை நீரில் கால் நனைக்கத் தோன்றுமா?

ஒருபுறம் திறந்தவெளிச் சிறைச்சாலை என்றால் மறுபுறம் மூடப்பட்ட வெளிப்படைத்தன்மையற்ற விசாரணைக் காவல் நிலையங்கள். வெளியூர் ராணுவம் விசாரணை என்ற பெயரில் நம்மைப் பிடித்து காவலில் மாதக்கணக்காக அடைத்து வைத்து சித்தரவதை செய்தால் ராணுவத்தை, காவல்துறையைப் பார்த்தால் என்ன தோன்றும்? கண்காணிக்கப்பட்டும், விசாரிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் இருக்கும் நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா?

அந்த சூழலை எழுதும்போதே உள்ளம் நடுநடுங்குகிறது, பதறுகிறது. கண்கள் மூடி இருண்மை மட்டுமே புலப்படுகிறது. காஷ்மீர் வொன்டர்புல் காஷ்மீர் எனப் பாட முடியுமா? பொழியும் புதுவெள்ளை மழையில் நனைந்து நனைந்து ரசிக்க இயலுமா?

வாரந்தோறும் சினிமா பற்றி யோசிக்க முடியுமா? 7 வயது குழந்தையை நடன வகுப்பிற்கு அனுப்புவது பற்றி யோசிக்க முடியுமா?

18 வயது மகனை பொறியியல் கல்லூரியில் சேர்க்க விண்ணப்பம் வாங்கத் தோன்றுமா?

குடும்பத்தோடு காரில் பசுமையான மலைப்பிரதேசங்களில் லாங் டிரைவ் போக இயலுமா?

முதுமையில் வரவிருக்கும் நோய்த் தடுப்பிற்காக மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர நாற்பது வயது நபர் சிந்திப்பாரா? பணி ஓய்வுக்காலத்தில் பென்சன் பணத்தைப் வைத்துக்கொண்டு எப்படி வாழ்வது என திட்டமிடத் தோன்றுமா? 50 வயதில் மகன் - மகளுக்கு திருமணம் செய்து அடுத்த சில ஆண்டுகளில் பேரக்குழந்தைகளை கொஞ்சி விளையாடும் மனநிலை இருக்குமா?

பால் ஹார்மோன் சுரக்கும் 14 வயது சுட்டி இளைஞனுக்கு 12 வயது எதிர்வீட்டு இளம் பெண்ணை கண்டதும் காதல் உணர்வு சுரக்குமா?

சென்னையில் வாழும் இளைஞனுக்கு பசுமை நிறைந்த தேனி மாவட்டம் கிராமம் கொள்ளை அழகு. ஓரு நாளைக்கு ஒரே ஒரு பேருந்தை மட்டுமே பார்க்கும் பதின்ம வயது கொட்டாம்பட்டி இளைஞனுக்கு சென்னையின் பரபர போக்குவரத்து நெருக்கடி திரில்லிங்.

ஸ்ரீநகரில் வாழும் இளைஞன் பதன்கோட்டிற்கு போனால் அதன் இயற்கையை ரசிப்பானா? இல்லை ஸ்ரீநகருக்கும் பதன்கோட்டிற்கும் வேறுபாடின்றி நிறைந்துள்ள ராணுவத்தைக் கண்டு அச்சமுறுவானா?

நாம் பயணிக்கும் சாலையில் நேரில் விபத்தைக் கண்டாலே அதிர்ச்சியில் இரண்டு வாரம் அந்த சாலையில் பயணிக்கவே தோன்றாது நமக்கு. ஊரியில் வாழும் 80 வயது முதியவர் 4 பெரும்போர்களையும், ரத்த ஆற்றையும் இறந்து குவிந்து கிடக்கும் மனித பிணக்குவியலையும் கண்டிருப்பார். அந்த மனிதர் தன் முதுமையின் அழகை வாழ்ந்து கழிக்க முற்படுவாரா?

நான்கு பெரும்போர்கள், 10 லட்சம் ராணுவம். விளைவு? ரத்தம், உயிரிழப்பு, ஊனம்... துயரம், துயரம்.

கடந்த 30 ஆண்டுகளில் கிட்டதட்ட 17,000 காஷ்மீரத்து மக்கள் தற்கொலை செய்துள்ளதாக தனியார் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. தினந்தோறும் ஒரு காஷ்மீரி தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக இந்திய குற்றப்பதிவு அமைப்பின் (NCRB) புள்ளிவிபரம் கூறுகிறது. ஆயிரக்கணக்கான விசாரணை காவல்நிலையங்களில் எண்ணற்றோர் எலக்ட்ரிக் ஷாக், பாலியல் வன்புணர்வு உட்பட தாங்க முடியாத சித்தரவதையை விசாரணை என்ற பெயரால் இந்திய ராணுவத்தினால் அனுபவித்து வருவதாக விக்கிலீக்ஸில் வெளியான ICRC அறிக்கை கூறுகிறது.

இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை அச்சுறுவதற்காகவும், அவமானப்படுத்தவும் பாலியல் வன்புணர்வை ஓர் உத்தியாக பயன்படுத்துகிறது என பேராசிரியர் வில்லியம் பேக்கர் என்பவர் கூறுகிறார். மக்கள் தொகையில் ஒரு சதவித மக்கள் வாழும் காஷ்மீருக்கு 10 விழுக்காடு நிதியை இந்திய அரசு ஒதுக்குகிறது. 2000-16 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஓர் காஷ்மீரிக்கு சராசரி 91,300 ரூபாய் என்ற அளவிலும், அதே காலகட்டத்தில் ஒரு உத்தரப் பிரதேசனுக்கு சராசரி 4300 ரூபாய் என்ற அளவிலும் இந்திய அரசு நிதி ஒதுக்குவதாக இந்து நாளிதழின் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அவ்வளவு பணமும் துப்பாக்கி, வெடிகுண்டு, பீரங்கி என செலவாகிறது.

கொலைகள், கற்பழிப்பு, கணிக்க முடியாமல் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, பல்வேறு அறிக்கைகள், கூக்குரல்கள், எதிர்ப்பு, கண்ணீர்க் கதைகள், பெல்லட் குண்டுகள், கல்வீச்சு இவற்றின் பொருள் விளக்கமாக காஷ்மீரம் விளங்குகிறது என்றால், காஷ்மீரின் பிரச்சினை இப்போதாவது புரிகிறதா?

இவற்றையெல்லாம் மீறி தேசபக்தி என்ற பெயரில் துப்பாக்கி குண்டின் சத்தத்தை ரசிக்க முடியுமா? அப்படி ரசிக்க முடியுமெனில் நம்மைவிடக் கொடுமையான சாடிஸ்ட் எவரும் இந்தப் பூமியில் இருப்பார்களா?

- சு.விஜயபாஸ்கர்

Pin It