நாம் எப்போதுமே ஏக்கம் நிறைந்த மனிதர்களாகவே இருக்கிறோம்.

ஏக்கம் தான் நம்மை இயக்குகிறது என்று நம்புகிறேன். மனதை இறந்த காலத்தில் அலைய விடுவது தான் வாழ்வின் பெரும்பங்காக இருக்கிறது.

"நாஸ்டால்ஜியா" என்றொரு ஆங்கில வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். பழைய நினைவுகளின் தொடர்பானது அது. நாம் பயன்படுத்திய பழைய பொருள்கள் பற்றியது. கடந்து வந்த நாட்களின் நினைவுகளில் தங்கி விட்ட கூற்று அது. நம்மில் எப்படி நினைவுகள் இருக்கிறதோ அதைப் போலவே நாம் பயன்படுத்திய பொருள்களிலும் அதன் நினைவுகள் இருக்கும்....என்பது அறிவியல். நம் நினைவுகளில் கூட நாம் இருப்போம் என்பது மெய்ஞானம். அந்த நினைவுகளை மீண்டும் ஒரு முறை மீட்டிப் பார்ப்பது அற்புதமான ஆகச்சிறந்த சுவாரஷ்யம். அப்படி என் வாழ்வில் இருந்து சில "நாஸ்டால்ஜியா" நிகழ்வுகள் பற்றியோ.... பொருள்கள் பற்றியோ இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நாஸ்டால்ஜியா- ஒன்று

pensமுதலில் பேனாக்கள் பற்றி உங்களிடம் கூற எனக்கு அத்தனை இருக்கிறது.

நான் ஒரு பேனா விரும்பி, பேனாப் பித்தன், பேனா சேகரிப்பவன். இந்த ஸ்டாம்ப் கலெக்சன் மாதிரி பேனா கலெக்சன் செய்பவன். கிட்டத்தட்ட ஆயிரம் பேனாக்கள் என்னிடம் இருக்கின்றன. எல்லாமே நான் எழுதித் தீர்த்தவை தான். எழுதுவேன். முடிந்த பிறகு அதை அதற்கென இருக்கும் பெட்டியில் போட்டு வைத்து விடுவேன். அப்படி நான் ஒன்றாம் வகுப்பில் எழுதிய பென்சில், பேனாக்கள் கூட இன்னும் வைத்திருக்கிறேன். அந்தப் பெட்டியைப் பற்றி சொல்ல வேண்டும். எல்கேஜி செல்கையில் புத்தகம் கொண்டு சென்ற சதுர வெண்கலப் பெட்டி அது. (80களில் பிறந்தவர்களுக்கு அந்தப் பெட்டி பற்றி தெரியும்) அது இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதைத் திறக்கையில் எல்லாம் ஒரு குட்டி விஜி உள்ளிருந்து எழுந்து வந்து என்னைப் பார்த்து சிரிப்பான். அவன், பேனாக்களின் மத்தியில் அமர்ந்து எதையோ கிறுக்கிக் கொண்டே இருப்பான்.

ஒரு முறை என் அப்பா ஊரிலுந்து வந்த போது எனக்கு ஒரே பேனாவில் சிவப்பு இங்க்கும் நீல இங்க்கும் வருகிற டைப் பேனா ஒன்றைப் பரிசளித்தார். அதை சட்டையில் வெளிப்புறமாக குத்திக் கொண்டு (அதுதான் அப்போது பேஷன்) செல்ல என் எதிரி சத்யராஜ் அதைப் பிடுங்கி கீழே போட்டு தரையில் உராய்ந்து விட்டான். அதுவரை அவனைக் கண்டால் ஒரு பயம் கூட இருந்ததுண்டு. ஆனால் என் அப்பா வாங்கித் தந்த பேனாவை இப்படி பண்ணிட்டியேடா என்று வந்த ஆத்திரத்தில் அடித்து துவம்சம் செய்து விட்டேன். அதன் பிறகு என்னிடம் அவன் வாலாட்டுவதில்லை. அது மட்டும் இல்லாமல் பள்ளியில் ஏதாவது பிரச்சினை என்றால் என்னிடம் வந்து புகார் சொல்லும் அளவுக்கு வளர்த்து விட்டது அந்தப் பேனா மேட்டர் தான். அப்போது நான் 5 வது படிக்கிறேன். இப்போது அந்த எதிரி நல்ல நண்பன்.

பேனாக்களில் முத்தெடுக்க கற்றுக் கொண்டது எப்படியோ காலம் எனக்குள் எனக்காக நிகழ்த்திய மாற்றம். இப்போதெல்லாம் பேனா என் ஆறாம் விரலாகிப் போனது கதை கதையாம் காரணமாம் என்று கூட சொல்ல முடியும். நான் பேனாக்களையே நண்பர்களுக்குப் பரிசளிக்கிறேன். எனக்கும் என் நெருங்கிய நண்பர்கள் பேனாக்களையே பரிசளிக்கிறார்கள். நான் பேனாக்கள் முனைகளில் உருள்கிறேன். பேனாக்களில் தலையில் தான் என் கிரீடத்தை வைத்திருக்கிறேன். எத்தனை எழுத்துக்களை மூளைக்குள் இருந்து விரல் வழியே வெளிக்கொண்டு வந்து உருவம் கொடுத்திருக்கிறது பேனாக்கள். அவைகள் தன்னை உருக்கி உருக்கியே வார்த்தைகள் செய்கின்றன. முதல் முதல் அப்பாவுக்கு எழுதிய கடிதம் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. காதலிக்கு எழுதிய கடிதம் இதயத்தில் இருக்கிறது.

"எத்தனை கடிதங்கள்.. எத்தனை பயோ டேட்டாக்கள்....எத்தனை கையெழுத்துக்கள்.....எத்தனை கதைகள்....எத்தனை கவிதைகள்...." பேனாக்கள் வழியே உருவானவன் நான். நீங்களும் கூட உங்கள் பேனாக்களில் உங்களை துளிகளாக்கி வைத்திருக்கலாம். காலம் கனியாத பொழுதொன்றில் அது எங்கேயோ உங்களை சேமித்துக் கொண்டே இருக்கலாம். இத்தொடர் அவைகளை மீட்டெடுத்து உங்களிடம் தந்தால் அதுவே ஆகச் சிறந்த பொக்கிஷமாகும் எனக்கு.

பொருள்களை மட்டுமல்ல நிறைய நினைவுகளை இந்த நாஷ்டால்ஜியா தொடர் பொத்தி பொத்தி வைத்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் அனுபவங்களால் நிறைந்தவன் தான். அனுபவங்களின் கூட்டு பொதுவில் இருக்கிறது. அது பொதுவாகவே எல்லாரையும் இணைக்கிறது. உங்களையும் இத்தொடர் என்னோடோ அல்லது உங்களோடோ இணைக்கும் என்று தான் நம்புகிறேன்.

எப்போது எழுதினாலும் இங்க் வரும் என்பது தான் பேனாக்களின் நம்பிக்கை. எப்போது எழுதினாலும் எழுத்து வரும் என்பது தான் என்னைப் போன்ற பேனா கிறுக்கர்களின் நம்பிக்கை.

நம்பிக்கைதானே நானும் நீங்களும்...!

தொடரும்...

- கவிஜி

Pin It