சமகால உலகமயமாக்கல் சூழலில் சிக்கித் திணறும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் வெகுமக்களின் எதிரிகளை அடையாளப்படுத்த, இனம் கண்டுகொள்ள, அவர்களைச் சமூக, பொருளாதார, சமய, பண்பாட்டுத் தாக்குதல்களிலிருந்து காக்கப் பெரியாரிய மற்றும் மார்க்சிய முன்னெடுப்புகள் அவசியம்.

எது மார்க்சியம்? எது பொதுவுடைமை? எது மார்க்சியப் பொதுவுடைமை? எது பெரியாரியப் பொதுவுடைமை? எது தமிழர்களின் பண்டைய மரபில் உதித்த பொதுவுடைமைக் கருத்தியல்? போன்ற கேள்விகளை நாம் இன்று எழுப்பும் வேளையில், கடந்த பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் விளைந்த சமமற்ற சமூக, சமய, பொருளாதாரச் சூழல்களில் எழுந்த அறிவார்ந்த எதிர்வினைகளுக்குச் சொந்தக்காரர்களான எண்ணிலடங்காப் பேராசான்களில் இருவர்தான் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டால், சமமற்ற புனிதப்படுத்தலி லிருந்து இவர்களையும், இவர்களின் கருத்தியல்களையும் நாம் காப்பாற்றி, நமது அறிவார்ந்த, ஆனால் சார்புத் தன்மை யிலிருந்து விடுதலை பெறாத நிலைகளிலிருந்தும், நாம் நம்மையும், நாம் எந்த வெகுமக்களின் சமூக, பொருளாதார, சமய, பண்பாட்டு விடுதலையைப் பற்றிச் சிந்திக்கிறோமோ அவர்களையும் கடையேற்றம் செய்ய இயலும்.

இல்லையேல், காலத்தால் முந்திய நிலையில், 2600 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய சமூகப் போராளிகளில் முக்கிய மானவரான புத்தரை அவரது சீடர்கள் புனிதப்படுத்தி, அவரது கருத்தியல் எதிரிகள் விரும்பிய நிலையில், அவரைக் கடவு ளாக்கம் செய்து, அவரைச் சமூகச் சீர்திருத்தவாதி என்ற நிலையிலிருந்து தள்ளியதுபோல், திருவள்ளுவரைப் பொதுவு டைமை ஆசானாகப் பார்க்காமல், மார்க்சின் - பெரியாரின் முன்னோடியாகப் பார்க்காமல், பெரியார் விமர்சித்த இலக்காக வும், மார்க்ஸ் மட்டும்தான் பொதுவுடைமைக் கருத்தியலின் தந்தை என்று பார்ப்பதும் புனிதப்படுத்தி வளர்த்தெடுக்கப்படும் வைதீக மரபுக்குச் சற்றும் மாறுபட்டதல்ல. 19ஆம் நூற்றாண்டில் தோன்றி, தமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை, அடுத்த தலைமுறைகள் மறந்த கருத்தியல்களை, அழுத்தமாகவும், புதிய கருத்தியல் நீரோட்டங்களாகவும் அவற்றை உருவாக்கித் தந்தவர்தான் பெரியார் என்பதை உணர்தல் அவசியம்.

மகாவீரர், புத்தர், மக்கலி கோசலர் ஆகிய மூவர் கட்ட மைத்த பொதுவுடைமைத் தளங்கள்தான் அன்றைய சமணம், பௌத்தம் மற்றும் ஆசீவகம். வேதங்களில் விளைந்த ஏற்றத் தாழ்வுகளின் பொதுவுடைமைக் கருத்தியல் எதிரிகள் இவை. அதனால்தான், இந்த எதிர்வினைகள் நமது மண்ணில், எந்த வெகுமக்களின் நலனுக்காக இவை தோற்றுவிக்கப்பட்டனவோ அதே மண்ணில், அதே மக்களால் அழித்தொழிக்கப்பட்டன, மறக்கப்பட்டன அல்லது வைதீகமாகி, புனிதமாகி, பொதுவு டைமைக்கு எதிரான தளங்களாகி மாறிப் போயின. சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவை சமயத் தளங்கள் மட்டும் அன்று.

சங்க இலக்கியங்களும், தமிழ்ச் சித்தர்களின் இலக்கியக் கொடைகளும் இலக்கியங்கள் மட்டுமன்று. அவை ஆதிப் பொதுவுடைமைத் தளங்கள். மிகவும் காத்திரமான ஆதி வெகு மக்கள் தொடர்பியல் தளங்கள். இந்த ஆதிப் பொதுவுடைமைத் தளங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தொடர்பியல் சூழல்கள் நமக்கு இன்று பல படிப்பினைகளை உணர்த்தும் பாங்கு வியப்புக்குரியது. நாம் அவற்றைச் சரியாக அணுகினால் குறிப்பாக, இந்தியத் துணைக்கண்டம் முழுக்க வியாபித் திருந்த இந்தச் சமய / பொதுவுடைமைத் தளங்கள், தங்களின் வீழ்ச்சியைக் காணும் வரை சந்தித்த சில ஆயிரமாண்டுகள், பல நூற்றாண்டுகள் சார்ந்த வரலாறைத் தொடர்பியல் வரலாறாக, சமூகத் தொடர்பியல் வரலாறாக, இந்தியத் துணைக் கண்டத்தின் பொதுவுடைமை மரபின் வரலாறாக நாம்  ஆய்ந்து தெளிதல் வேண்டும்.

உதாரணமாக, சங்க இலக்கியத் தளங்களை வெறும் இலக்கியத் தளங்களாக அணுகாமல், அன்றையத் தமிழர் களின் பொதுவுடைமைக் கருத்தியல் கொடைகளாகப் பார்க்கப் பழக வேண்டும். நமக்குத் தமிழ் ஆசிரியர்கள் சிலாகித்துக் கற்பித்த,

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல,

அன்பு உடை நெஞ்சம்தாம் கலந்தனவே”

என்று இயம்பும் குறுந்தொகையின் 40ஆவது பாடல், அதி அற்புதமான பொதுவுடைமைக் கருத்தியலைத் தன்னகத்தே கொண்டுள்ளதை நாம் மாற்றுப் பார்வையில், மாற்றத்திற் கான பார்வையில் பார்த்தால்தான் தெரியும். இப்பாடலில், அனைத்து சமமற்ற சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணி களையும் அழித்தொழிக்கும் நிலையிலிருக்கும் இயற்கைச் சூழலில் பொதுவுடைமைக் கருத்தியல் காதலால் தோற்றுவிக் கப்பட்டது உண்மையான பெயர் தெரியாத சங்க கால அறிஞரால்.

பெரியாரின் சுயமரியாதைக் கருத்தியலில் விளைந்த சுயமரியாதை மணங்கள் சார்ந்த மனங்களின் இணைவு “செம்புலப் பெயல் நீரின்” தன்மையைப் போற்றும் பொது வுடைமைக் கருத்தியல் என்பதில் அய்யமில்லை. இங்குப் பொதுவுடைமை பற்றிய தப்பிதமானப் புரிதல்களிருந்தும் நாம் தப்பிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.

பெரியாரின் பொதுவுடைமைக் கருத்தியல் நம் மண்ணில் தோன்றிய எண்ணிலடங்காச் சமூகப் பொதுவுடைமைக் கருத்தியல்களின் வெளிப்பாடு. 19ஆம் நூற்றாண்டின் தொடக் கக் காலத்தில் பிறந்து, பெரியார் பிறப்பதற்கு முன் மறைந்த தமிழ்ச் சித்தர் மரபில் கடைசியாகத் தோன்றிய ஆகச்சிறந்த தத்துவஞானி, சமூகச் சீர்திருத்தவாதி இராமலிங்க வள்ளலார் (5.10.1823-30.1.1874). இவரும் பெரியாரின் கருத்தியலுக் கான வித்தை விதைத்தவர். பெரியார் காங்கிரஸ் இயக்கத்தி லிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைக் கட்டமைத்த வேளையில், அவர் முதலில் கையகப்படுத்த நினைத்த தொடர்பியல் தளம் ‘குடிஅரசு’ இதழ். அதன் முதல் நாள் பிரதியில், முதல் பக்கத்தில் அரங்கேறிய பொன்மொழி “சாதி இராமல் ஒழிக என்றார் இராமலிங்க அடியார்”. (‘ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார்’, கோபாலன், 2013, பக்.8).

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே

இந்தப் புரட்சி கருத்துக்குச் சொந்தக்காரர் இராமலிங்க அடிகள். “சாதிகள் ஒழிய வேண்டும், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற சனாதன தருமம் ஒழிய வேண்டும்” என்று போராடிவந்த பெரியார் தம்முடைய ‘குடிஅரசு’ இதழில் வள்ளல் பெருமான் இராமலிங்கனாரின் புரட்சிக் கருத்துக்கு முதலிடம் தந்தார் (மேற்படி நூல், ப.9).

சித்தர்கள் அன்றைய சமூக சீர்திருத்தவாதிகள். அதனால் தான், புத்தரை அவரது சீடர்கள் புனிதப்படுத்தியது போல, வைதீகம் போட்டத் திட்டப்படி, சித்தர்களைச் சித்திகளுக்குச் சொந்தக்காரர்கள், சித்த மருத்துவத் தளத்தை வளர்த்தெடுத்த வர்கள் என்ற குறுகிய பார்வையில் மட்டும் பார்த்தோம்; அவர்களின் சமூகச் சீர்திருத்த மற்றும் பொதுவுடைமைக் கருத்துகளைச் செவிமடுக்க மறந்தோம். பெரியார் தம் கருத்தியல் தளத்தின் ஆணிவேராக நிலைநிறுத்திய சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவை தமிழ்ச் சித்தர்கள் பல நூறாண்டுகளாகக் கட்டமைத்த மரபில் தோன்றியது.

ஆனால், மார்க்சியப் பொதுவுடைமை வாதம், வரலாற்று ரீதியாக எழக்கூடிய மூலதனம் சார்ந்த வர்க்கப் போராட்ட வரலாற்றை மையப்படுத்துவது. அதன் ஆணிவேர் நூற் றாண்டுகளாகக் கடந்த கருத்தியல் தளங்களில் உதயமாக வில்லை எனலாம். மார்க்சின் கருத்தியல் அவரது காலத்தில் சந்தித்த தொழிற்சாலைகள் சார்ந்து இயங்கிய உழைப்பாளி களின் உழைப்பு மூலதனவாதிகளுக்கு எவ்வாறு மடை மாற்றம் செய்யப்படுகிறது என்பதைப் பற்றியது. உழைப் பாளியைச் சுரண்டும் மூலதனப் பெருக்கங்களை எவ்வாறு வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பார்வையில் அணுகலாம் என்று சொன்னதன் ஆணிவேர் அய்ரோப்பாவின் ஆதிக் கருத்தியல் தளங்களில் இல்லை எனலாம்.

மேலும், மார்க்சின் பார்வையில் பொதுவுடைமை பொருளாதாரப் பொதுவுடைமையை மட்டும் குறிப்பதாகிறது. இக்கருத்தியலில் குறைப்பாட்டைக் கண்டவர்களில் முக்கியமான வர்கள், புதிய மார்க்சியவாதிகள் என்றழைக்கப்பட்ட பிராங்பர்ட் அறிஞர்கள். முக்கியமாக, ஹார்கைமர் மற்றும் அடர்னோ. இவர்கள் களைய விரும்பியது, பண்பாட்டுத் தொழிற்சாலை களை. ஏனென்றால், பண்பாட்டுத் தொழிற்சாலைகள், பொரு ளாதாரப் பார்வையில் இயங்கினாலும், பண்பாட்டை மூலதன மாக மடைமாற்றம் செய்யும் காரணத்தினால் எவ்வாறு வெகுமக்களை ஏமாற்றுகின்றன; சமமற்ற நிலைகளில் வைத்திருக்க உதவுகின்றன என்பதைப் புதிய மார்க்சியப் பார்வையில் இவர்கள் ஆய்ந்த காரணத்தினால் விளைந்த கருத்தாக்கம்தான் “பண்பாட்டுத் தொழிற்சாலை”. தொழிற் சாலைகள், அவற்றின் உற்பத்தித் தளங்கள், மூலதனம், உழைப்பு, மதிப்பு, உபரி மதிப்பு, ஏனைய பிற செவ்வியல் மார்க்சியக் காரணிகளின் துணைகொண்டு எவ்வாறு மார்க்சின் செவ்வியல் பொருளாதாரப் பொதுவுடைமைத் தளத்தைக் குறைபாடு உள்ள கருத்தியல் தளமாக வைத்திருக்கின்றன என்று நமக்குப் புரிய வைத்த கருத்தாக்கம் இது.

நமது மண்ணில் இயங்கிய புதிய மார்க்சிய வாதிகளில் முதன்மையானவர் தந்தை பெரியார். பொதுவுடைமைக் கருத்தியல், மார்க்சியத் தளத்திலிருந்து வெளியே வந்து, இந்திய மண்ணுக்குச் சொந்தமான சாதியக் காரணிகளை மையப்படுத்தி இயங்காதவரை உண்மையான பொதுவு டைமை சாத்தியமில்லை என்று சூளுரைத்தவர் பெரியார். அவரது கருத்தியல் மார்க்சியத்தை விஞ்சியது. ஏனென்றால், ஆதிப் பொதுவுடைமை மரபுகளான சமணம், பௌத்தம் மற்றும் ஆசீவகச் சமய மரபுகளிலும், சங்ககாலத் தமிழர்களின் பொதுவுடைமைக் கொள்கைகளிலும் தனது கருத்தியல் வேர் களை நிலைநிறுத்திக் கொண்டது பெரியாரியம். அதனால் தான் “ஆம்! ஆம்! பொதுவுடைமைப் பிரச்சாரம் நிறுத்திக் கொண்டேன்...” என்று பெரியார் முழங்கினார். அதற்குக் காரணம், அவர் பொதுவுடைமைத் தோழர்களை வெறுக்கவில்லை. பொதுவுடைமை இயக்கத்தை ஆதரிப்பதால், சுயமரியாதை இயக்கத்திற்கு அரசாங்கத்திடம் இருந்து வரக்கூடிய நெருக்கடி களுக்கு அஞ்சி அங்ஙனம் பேசவில்லை. சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தெடுப்பது நெருக்கடி மிகுந்த காலகட் டத்தில் மிக முக்கியமானதாக அவரால் பார்க்கப்பட்டதன் காரணம்தான் அவரை 21.3.1936 அன்று திருத்துறைப்பூண்டி சுயமரியாதை மாநாட்டில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் பேச வைத்தது.

“மாமிசம் சாப்பிடுவதனால் எலும்பைக் கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டுமா? என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் நமது சமதர்மமும், பொதுவுடைமையும் போலிப் புலி வேஷம் போல் விளம்பரத்தில் காட்டுவதில் பயனில்லை. சர்க்கார் உத்தரவை மீறுவதே சமதர்மமாகிவிடாது. உத்தரவு மீறினவர்களின் கதியை நாம் பார்த்துவிட்டோம். ஆரம்பத்தில் மேல்சாதி - கீழ்ச்சாதி கூடாதென்று சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தோம். அதற்கு அனுகூலமாகவே ஏழை பணக்காரத் தன்மை கூடாதென்றோம். அதைத்தான் நாம் சமதர்மம், பொதுவுடைமை என்றோம். சர்க்கார் பொதுவுடைமை கூடா தென்றால் விட்டுவிட்டு மேல்சாதி - கீழ்ச்சாதி கூடாதென்கிற வேலை செய்வதில் என்ன தடை இருக்கிறது. மற்றும் மூடப் பழக்கம் ஒழித்தல், மதத் தொல்லை ஒழித்தல் முதலிய காரியங்கள் செய்வதற்கு மார்க்சும் இல்லாமல் போகவில்லை” (‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’, வே. ஆனைமுத்து, 2009, ப.1185-1194).

அவர் விரும்பிய, தேடிய பொதுவுடைமை அன்றும், இன்றும் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தினரால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதுதான் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள், இரண்டு மூன்று மாநில மக்களைத் தவிர, பெரும் பான்மை மக்களிடம் சென்றடையாமல் இருப்பதற்குக் காரணம் எனலாம். அவர் விரும்பிய பொதுவுடைமை புத்தர் மையப் படுத்திய கடவுளற்ற, ஆன்மாவை மையப்படுத்தாத, மூடநம்பிக் கைகளற்ற, ஏற்றத்தாழ்வற்ற மனிதநேயம் சார்ந்து இயங்கும் தளம். அது வெற்றுப் பொருளாதாரத் தளம் மட்டும் அன்று.

அவர் விரும்பிய பொதுவுடைமைத் தளத்தில் இயங்கும் உழைப்பாளிகள் வர்ணாசிரம முறைப்படி இயங்கும் சாதியத் தொழிற்பாடுகளுக்குத் தங்களைப் பறிகொடுத்த மனிதர்கள், தொழிற்சாலைகளில் இயங்கும் உழைப்பாளிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டது கார்ல்மார்க்சின் பொதுவுடை மைக் கருத்தியல். மார்க்சிய வரையறையில் “யார் தொழிலாளி?” என்ற கேள்விக்கான விடையை பெரியார் இந்தியச் சாதியச் சூழலுக்குப் பொருந்தாத வரையறையாகப் பார்த்தார்.

“எங்கள் தொண்டு யாவும் தொழிலாளர்களுக்காகவே தான். நாங்களும் தொழிலாளிகள்தாம். ஆகவே, வாய்ப்பினால் மாத்திரம் தொழிலாளிகளல்லாமல் பிறவியினால், சட்டத்தினால், சாஸ்திரங்களால், கடவுள்களால், கடவுள் சிருஷ்டியினால் நாங்கள் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்ட தொழிலாளிகள்தாம் திராவிடர்கள். இப்போது தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உண்மைத் தொழி லாளிகளில் 1000-த்தில் ஒரு பாகமாகத்தான் இருப்பார்கள்” (மேற்படி நூல், ப.948) என்ற புரட்சிகரமான வரையறையை வகுத்தார்.

கார்ல்மார்க்சு, அவர் படித்த பல்கலைக்கழகங்களின் அறிவுத் தளத்திலும், அவர் வசித்த நாடுகளின் சூழல்களில் தொழிற் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தினாலும் விளைந்தவர். தொழிற்புரட்சி மூலதனம், உழைப்பாளி, சந்தை, மதிப்பு, உபரிமதிப்பு சார்ந்து இயங்கும் உற்பத்தித் தளங்களை வெகுவாக உருவாக்கிய காலகட்டத்தில் தோன்றியவர் கார்ல் மார்க்சு. ஹெகலியத் தத்துவ மரபின் மாணவர் என்பதால், அவரால் இயங்கியல் பார்வையில் இந்த உற்பத்தித் தளங்கள் எவ்வாறு வரலாற்றுப் பொருள் முதல்வாதக் காரணிகளுக்குத் தீனிபோடுகின்றன என்பதை அதி அற்புதமான கருத்தியல் களமாக வார்த்தெடுக்கிறார். அவரது காலத்திலும் அதன் பிறகும் அய்ரோப்பாவில் பொதுவுடைமை இயக்கங்கள் பல்கிப்பெருக ஆரம்பிக்கின்றன.

லெனினது வரவால் முதலும் கடைசியுமான பொதுவுடைமைப் புரட்சி அன்றைய சார் மன்னராட்சியை ஒழித்து, சோவியத் ஒன்றியம் என்ற மக்கள் மாமன்றத்தால் நடத்தப்பட்ட ஆட்சி அரங்கேறுகிறது. வெகுவிரைவில், அதே மண்ணில், லெனினின் மறைவுக்குப் பிறகு, தலைக்கீழ் மாற்றங்கள் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கினாலும், அதன் பின் வந்த தலைவர்களாலும் அரங்கேறுகின்றன. முடிவில், 1989-இல் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாக உடைந்து சிதறும் வேளையில், கார்ல் மார்க்சின் சிலைகள் உடைக்கப் படவில்லை. லெனினின் சிலை உடைக்கப்படுகிறது. காரணம், மார்க்சை ஒப்பிடும் பொழுது லெனின் தவறானவர் என்றல்ல. இருவரும் பொருளாதார வாதத்தைமட்டுமே நம்பிய பொது வுடைமையை நம்பினார்கள்; முன்னிறுத்தினார்கள். லெனின் அதன் செயற்முறை வடிவத்தின் வெற்றிகரமான சிற்பி என்ப தால் அவரது சிலைகள் அவரது கருத்தியல் எதிரிகளின் கோபத்தை எதிர்கொண்டன.

இன்றும், அன்றும் பெரியார் அவரது கருத்தியல் எதிரி களுக்குச் சிம்ம சொப்பனம். ஏனெனில், மார்க்சுடன் ஒப்பிடும் போது அவர் மார்க்சை விஞ்சிய தொடர்பியலாளர், அனைத்துத் தட்டு மக்களையும் தனது இடைவிடாத சுற்றுப்பயணங்கள், சொற்பொழிவுகள், போராட்டங்கள், செய்திக் கட்டுரைகள், தலையங்கங்கள், கடிதங்கள் மூலமாக, தனது பொருளாதாரம் மட்டும் பேசாத பொதுவுடைமைக் கருத்தியலால் கவர்ந்தார். கோபம் கொள்ளச் செய்தார். புத்தர், மகாவீரர், மக்கலி கோசலர், வள்ளுவர், வள்ளலார் விட்டுச் சென்ற சமூகப் பொதுவுடைமை மரபை வளர்த்தெடுத்தார். அவர்களைப்போல், வெகுமக்கள் விரும்பியதை, செய்ததை, நம்பியதை மாற்றுப் பார்வையில் பார்த்தார். தான் பார்த்து, தெளிந்து அறிந்ததை, அவர்களும் பகுத்தறிவு கொண்டு அறிந்து, தெளியப் பரப்புரைகள் செய்தார். பரப்புரைகளைச் செய்தது மட்டுமன்றி, தனது சமூகச் சூழலில், தான் வாழ்ந்த காலத்தில் சுயமரியாதை, திராவிடம், இன-மொழி உணர்வு, பகுத்தறிவு, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பல தளங்களைச் சார்ந்து தனது கருத்தியல்களை வளர்த்தெடுத்து அவற்றின்பால் உணர்வு கலந்த அறிவுத் தெளிவை வெகுமக்கள் மனங்களில் விதைத்தார்.

கார்ல் மார்க்சின் கருத்தியல் வட்டம் பெரியது, அறிவார்ந்தது, ஆகச்சிறந்தது. இன்றளவும் மூலதனவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் கடைத்தட்டு மக்களின் விடுதலைக்கான சாளரங் களைப் பற்றிச் சிந்திக்க வைக்கும் ‘பொதுவுடைமைக் கருத்தியல் சூரியன்’ மார்க்சு எனலாம். ஆனால், நமது நாட்டிற்கு இந்தக் கருத்தியல் சூரியன் குறைபாடுள்ள கதிரவனாக மட்டுமே இயங்க முடியும் என்று தீர்க்கமாக நம்பியவர் பெரியார். அதனால்தான், அவர் செயலாக்கம் தர விரும்பிய விடுதலைத் தளங்கள், பொருளாதாரப் பொதுவுடைமையை நம்பி இருக்க வில்லை. அவரது எழுத்துசார் எழுச்சிகளும், பேச்சுசார் கிளர்ச்சி களும் நம் மண்ணின் ஆதிப்பொதுவுடைமைவாதிகள் வளர்த் தெடுத்த சமூகப் பொதுவுடைமைத் தொடர்பியல் முறைமை களை வளப்படுத்தி, அவரது காலச்சூழலின் சமூகச் சிக்கல் களுக்கு ஏற்ப அவற்றைச் சுயமரியாதை, திராவிடம், இன-மொழி உணர்வு, பகுத்தறிவு, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு சார்ந்து செம்மைப்படுத்தி, வெகுமக்களை அவர்தான் பெரியார், அவர் மட்டும்தான் பெரியார் என்று ஏற்றுக்கொள்ள வைத்தது.

அவரது கொள்கைகளை ஏற்காதவர்கள் கூட, அவரை ஏற்றுக்கொண்டனர். அவர் நேர்மையாளர், பண்பாளர், அறிவாளி, மக்கள் நலன் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குபவர் என்று கருதினர். எனது தந்தை, பள்ளி மாணவனாக இருக்கும் பருவத்திலேயே பெரியாரியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டனாகச் செயல்பட்டு இறுதிக் காலத்தில் அவரது அனுபவங்களைத் தொகுத்து “ஆடும் பருவத்திலே எனை ஆட்கொண்ட பெரியார்” என்ற நூலை எழுதியவர். இந்நூலில் “ஆர்.எஸ்.எஸ்.சில் இயங்கிய அவரது தாய்மாமன் துளசிங்கம் என்பவர் என் தந்தையார் திராவிட கழகத்தில் பணியாற்றுவதை விரும்பவில்லை. தடுக்க நினைத்தார்” என்று பதிவு செய்கிறார். தனது தந்தையிடம் பல அச்சுறுத்தல்கள் தரும் தகவல்களை  அவர் சொன்ன போதும், எனது தாத்தா ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றிய நபரிடம், “பெரியார் வயதில் மூத்தவர்; யாதொரு தீய பழக்கமும் இல்லாதவர்; பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்; பல தலைவர் களால் மதிக்கப் பெறுபவர். அப்படிப்பட்டவரோடு அவன் பழகுவதை நான் பெரிய பேறாகக் கருதுகிறேன்” என்று கூறியது அவரைப் போன்ற எண்ணிலடங்காத் தமிழ்ப் பெரியோர் ஏற்றுக்கொண்ட தீர்மானமானக் கருத்து எனலாம்.

பெரியாரது தொடர்பியல் வெற்றிகள் ஏராளம். அவற்றின் ஒரு அடையாளம்தான் இது. ஜேம்ஸ் காரி என்ற தொடர்பியல் அறிஞர் தொடர்பியல் முறைமைகளை இரு தன்மைகளால் வகைப்படுத்துவார். ஒன்று, பரப்புரை செய்வது, ஊடகங்கள் செய்ய விழைவது. மற்றொன்று, பரப்புரையின் உள்ளடக்கத்தைப் பார்வையாளன் / வாசிப்பவன் மையப்படுத்தாமல், தனது சூழலில் தன்னையும், தன்னை வந்து சேர்ந்த தகவலையும் பொருத்திப் பார்த்து தனக்கும், தனது சூழலுக்கிடையேயான உறவையும் உணர்தல், அறிதல், தெளிதல் ஆகும். பெரியாரின் தொடர்பியல் வெற்றிகளுக்கான காரணிகள் அவரது கருத்தியல் வளங்களில் இருந்தாலும், அவரது பரப்புரைகளின் உள்ளடக்க முறைமைகளில் இருந்தாலும், அவற்றின் முக்கிய மான காரணி ஜேம்ஸ் காரி சுட்டிக்காட்டிய இரண்டாவது தொடர்பியல் தன்மையான ‘சடங்கு’ப் பார்வையைக் கட்டமைப்பதில் இருக்கிறது எனலாம். இங்கு ‘சடங்கு’ப் பார்வை என்பது தட்டையான பொருளில் அடையாளப்படுத்தும் மூட / சமய நம்பிக்கைகள் சார்ந்த பார்வை அன்று. சூழலில் நம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறோம் என்பது பற்றியது. ஒற்றுமை உணர்வுடன், பங்களிப்பையும், பகிர்த லையும், கருத்தியல் நிலைப்பாடுடன், நமக்கு வந்துசேரும் தகவல் களை வைத்து எவ்வாறு கையகப்படுத்துகிறோம் என்பதாகும்.

கார்ல் மார்க்சின் தொடர்பியல் தளங்கள் நான்கு வகைப் படும். முதல் மூன்றும் அச்சுப் பண்பாட்டில் விளைந்தவை. அவை அவரது புனைவு எழுத்தாக்கங்கள், அவரது உயர் கல்விசார் அணுகுமுறைகளால் விளைந்த முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கான எழுத்தாக்கங்கள் மற்றும் அவரது இதழியல் எழுத்தாக்கங்களால் விளைந்த கட்டுரைகள். 1930-களின் இடைப்பகுதியில் சிறு புதினங்களை எழுதத் தொடங்கி, பின் னாளில் பல்கலைக்கழக வேலைக்காக முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு, பின் அவரது புரட்சிகரமான சிந்தனைகளால், அத் தகைய வேலை வாய்ப்புகள் சாத்தியமில்லை என்றுணர்ந்து, இதழியல் தளம் பக்கம் திரும்பிய வேளையில், மார்க்ஸ் ‘ரைன்லண்ட் நியூஸ்’, ‘ஜெர்மன்-பிரெஞ்ச் அனல்ஸ்’, ‘நியூயார்க் டெய்லி டிரிபூயூன்’ மற்றும் ‘நியூயார்க் சன்’ செய்தித்தாள்களில் 1842 முதல் 1862 வரை பலல நாடுகள் / நகரங்களை விட்டுத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட / துரத்தப்பட்ட நிலைகளிலும் பணியாற்றினார்.

மார்க்சின் சொற்பொழிவுகள் நான்காம் வகை. அவரது 27 சொற்பொழிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை எட்டு ஆண்டுக்கால அளவில் (1864-1871) நிகழ்த்தப்பட்டவை. அவரது இரண்டாவது வகை எழுத்தாக்கங்கள், அவரது ஜெனா பல்கலைக்கழகத்திற்கான முனைவர் பட்ட ஆய்வேட்டில் தொடங்கி அவரது கருத்தியல் தளங்களை ஆலமரமாக வளர்த்தெடுத்தன. ‘மூலதனம்’, ‘கம்யூனிச அறிக்கை’ மற்றும் ‘செர்மனியக் கருத்தியல்’ அவரது அதிமுக்கியமான இரண்டாம் வகை எழுத்தாக்கங்கள். இவற்றில்தான் மார்க்சியம் என இன்றைய தலைமுறையும் சிலாகித்துக் கொண்டாடும் கருத்தியல் அண்டம் தோன்றியது.

கார்ல் மார்க்சு பிறந்து 200 ஆண்டுகளாகியும் அவர் உயிர்ப்புடன் நம்முடன் உலாவுகிறார், கடைத்தட்டு மக்களின் பொருளாதார விடுதலைக்காக நம்மைக் கருத்தியல் மற்றும் போராட்டக் குரல் எழுப்பச் செய்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது இரண்டாம் வகை எழுத்தாக்கங்கள்தான்.

தந்தை பெரியார் இந்தியாவில் / தமிழகத்தில் தோன்றிய காரணத்தினால், ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளை நிகழ்த்தி தான் பேச்சுவழித் தொடர்பியல் பண்பாட்டு மாந்தர் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். அதேவேளையில், அச்சு ஊடகங்கள் சார்ந்து வெகுவாக இயங்கினார். ‘குடிஅரசு’ மற்றும் ‘விடுதலை’ அவரது இதழியல் திறன்களினால் வளம் பெற்றன. நேரிடையான, இயங்கியல் பார்வையில் தோற்று விக்கப்பட்ட வாதப்போர் தொடர்பியல் முறைமை தமிழகத்தின் சமணம், பௌத்தம், ஆசீவகம், வைதீகம், சாங்கியம், வைசோடிக சமயத்தினரிடம் மூண்ட சமய அரசியல் தொடர்பியல் சூழல் களில் வளர்த்தெடுக்கப்பட்டது.

தமிழர்களின் ஆதி இயங்கியல் தொடர்பியல் மரபைப் பற்றி அறிய வேண்டுவோர், ‘நீலகேசி’ (1936/1984) எவ்வாறு தனது சமயத் தத்துவத்திற்கு எதிரானவர்களை இயங்கியல் தொடர்பியல் பார்வையில் எதிர்கொண்டு வீழ்த்தினாள் என்பதைப் படிக்க வேண்டும். தமிழர்களின் ஆதித் தொடர்பியல் மற்றும் பேச்சுவழிப் பண்பாட்டு மரபுகளுக்குச் சொந்தமான இந்த முறைமை, பெரியாரால் தனது பேச்சு, எழுத்து மற்றும் போராட்டத் தொடர்பியல் தளங்களுக்கு அச்சாணியாக மாற்றப்பட்டது. போராட்டங்களும், கிளர்ச்சிகளும் தொடர்பியல் தளங்களாகப் பெரியாரால் வளர்த்தெடுக்கப்பட்டன.

பெரியாரின் எழுத்துசார் போராட்ட வடிவம் அவரது பேச்சு வழி வாத முறைமைக்குச் சொந்தம். மக்களுடன் தனது சொற்பொழிவுகளில் பேசியது போலவே அவர் எழுதினார். முக்கியமாக, தனது கருத்துகளை ஆணித்தரமாகச் சொல்ல விழையும்போது, அவர் பேசியது போலவே எழுதினார் என்று சொல்லலாம். உதாரணமாக, “... நமது தொண்டில் இதைத் தவிர வேறு இரகசியம் ஒன்றுமில்லை. ஆதலால், இவற்றிற்கு எதிராக உள்ளவர்கள் எம்முறையிலாவது நம்மோடு போராடட்டும். அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், சூழ்ச்சி முறை மாத்திரம் வேண்டாம் என்கிறோம். அதாவது, பவுத்த சமயத்தை அழிக்க, சிலர் பவுத்த மதத்தி லேயே சேர்ந்து துரோகம் செய்தது போல், நம்முடன் கூட இருப்பவர்கள் போல் காட்டிக் கொண்டும் நம்மையே சதா புகழ்ந்து கொண்டும் வேறுவிதமாக அயோக்கியதனமாக யாரும் நடக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம். நாம் எழுதுவதற்கோ, பேசுவதற்கோ யோக்கியமாகச் சமாதானம் சொல்லத் தயாராகவே இருக்கின்றோம்” (‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’, வே. ஆனைமுத்து, ப.4313).

இந்திய இதழியலின் எழுத்துத் தன்மை, அதன் போராட்ட குணம், மக்களுக்கான குரலாக அந்த எழுத்துத் தன்மை வெகுவாக மாறியது. நெருக்கடி காலகட்டத்திலும் அதற்குப் பிந்தையக் காலகட்டத்திலும் என்று நான் சொல்வதுண்டு. காரணம், அருண்சோரி என்ற பொருளாதாரம் படித்த, இதழியல் எழுத்துக்குச் சற்றும் பரிச்சயம் இல்லாத ‘வெளி நபர்’, இந்திய இதழியலின் போராட்ட வடிவமாக அதன் எழுத்துசார் அணுகு முறைகளைத் தலைக்கீழாக மாற்றினார், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாளின் ஆசிரியராக அவர் பணியாற்றிய காலத்தில். எப்படியெனில், அதுவரை தலையைச் சற்றிச் சுற்றி, வலம் வந்து இலக்கை அடைந்த வண்டுபோல் அல்லாமல், நேரிடை யாக இலக்கை எட்டிய வண்டைப் போல் அருண் சோரி எழுதினார். இதற்குக் காரணம், அவருக்கு வாய்த்த முதலாளியும் (ராம்நாத் கோயங்கா), அவருக்கு பிடித்த தாக்குதல் இலக்கும் (இந்திரா காந்தி). பெரியாரின் எழுத்தாக்கங்களை ஆய்வு செய்யும் போது புலப்படுவது, அருண்சோரி பிறப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்பே, 1920-களிலேயே, அருண்சோரி கனவிலும் கண்டிராத, செய்யாத, செய்ய இயலாத இதழியல் எழுத்துத் தாக்குதல்களைப் பெரியார் கையாண்டார் என்ற உண்மையாகும்.

பெரியாரின் உடலும், ஆடையும் அவற்றை அவர் பேண மறுத்ததும் அவரது தொடர்பியல் முறைமைகளில் முக்கியமா னவை. “தினமும் குளிக்கமாட்டார்” என்று பெரியாரது உடல் சார்ந்த தூய்மை பற்றிக் குறிப்பிடுவார்கள். அதற்குச் சொல்லப் பட்ட காரணம், “குளிப்பதற்கான நேரத்தை மக்கள் தொண்டிற் காகச் செலவிடலாம் என்று அவர் நினைத்ததுதான்” என்று நாம் அறிவோம். அவரது ஒழுங்கற்ற ஆடைகள் ஆடை வடிவமைப்புக் கலையைப் புறம் தள்ளியவை எனலாம்.

அவர் அணிந்த லுங்கி, கடைத்தட்டு மனிதனின் ஆடை, இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான ஆடை என்ற பார்வைகளை உடைத்துத் தொடர்பியல் முறைமை எனலாம். அவரது விருப்ப மான அசைவ உணவு அவரது மூப்பை மீறிய நலத்தை அவருக்கு அளித்து; அகவை 94 வரை ஓய்வின்றி உழைக்க உதவி செய்தது எனலாம்.

மார்க்சின் முகமும், தாடியும் அவரது தொடர்பியல் முறை மைகளின் அடையாளமாகிப் போன காட்சிப் படிமங்கள். பெரியாரின் முகமும், தாடியும் கண்ணாடியும் அவரது தொடர் பியல் முறைமைகளின் அடையாளமாகிப் போன காட்சிப் படிமங்கள். பெரியாரும், மார்க்சும் தொடர்பியல் பார்வையில் அண்டமாக விரிபவர்கள். அவர்களது கருத்தியல்களில் நாம் அணுக வேண்டியது அவர்கள் நேரிடையாகப் பேசாத, எழுதாத, ஆனால் கட்டமைத்த தொடர்பியல் கருத்தியலும் அடக்கம் என்பதே இக்கட்டுரையின் மையக் கருத்து ஆகும்.

Pin It