தேர்தலிலே போட்டியிடாத பெரியார் - நாடாளுமன்றத்தில், அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தார் என்று, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குறிப்பிட்டார்.
டிசம்பர் 24 ஆம் தேதி கோவையில் குத்தூசி குருசாமி படிப்பகத்தைத் திறந்து வைத்து தோழர் தா.பாண்டியன் ஆற்றிய உரை:
சென்ற இதழின் தொடர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் கேடு முட்டுக்கட்டை இதுதான்! இங்கே பிறக்கிற குழந்தைக்கு அறிவு இல்லை; இளைஞனுக்குத் திறமை இல்லை என்று சொல்ல முடியாது. மிகத் திறமையோடு, சமுதாயத்தில் சரி பகுதியாக இருந்த பெண்களை இங்கே மதவாதிகள் ஏடெடுத்துப் படிப்பது தீட்டு என்று சொல்லிவிட்டார்கள்.
அவர்களுக்கு என்னென்ன தடைகள், விலங்குகள் போட முடியுமோ அவ்வளவையும் போட்டான். இதுவும் போதாது என்று ஆண்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சூத்திரர்கள் என்று ஒதுக்கி அவர்களையும் ஏட்டைத் தொட விடாமல் தள்ளி வைத்தான். அறிவைக் கருக்கி விட்டால் பிறகு அடிமைகளாக்கி விடுவது எளிதானது.
இதிலே ஒரு ஆச்சரியம், இப்போது அரசியல்வாதிகளையோ, கொலை செய்தவர்களையோ குற்றத்துக்காக ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் தள்ளிவிடுகிறார்கள். ஆயுள் தண்டனை, கடுமையான தண்டனை என்று சொன்னாலும், 14 வருடங்கள், அதிலும் நன்னடத்தை, தலைவர் பிறந்த நாளுக்காக, அரசு அறிவிப்பு என்று, இந்த தண்டனைக் காலம் மேலும் குறைகிறது.
அல்லது பிரஞ்சுப் புரட்சியின்போது நடந்தது போல, மக்களே சிறையைத் தகர்த்து, சிறையிலிருப்பவர்களை வெளியே கொண்டு வந்து விடலாம். இப்படி கட்டிடத்திலே நான்கு சுவர்களுக்குள் இரும்புக் கதவுக்குள் பூட்டப்பட்டவன், அது உடைபடுகிறபோது, வெளியே வந்து விடுவான். ஆனால் நம்பிக்கையினாலேயே மூடத்தனத்தில் சிக்குண்டு போனவன், சாகும் வரையிலே, அதிலிருந்து விடுபடவே மாட்டான்.
இவனை அடிமையாக்க சுவர்கள் தேவை இல்லை; இரும்புக் கதவுகள் தேவையில்லை; பூட்டு தேவை இல்லை; அவனே தன்னைத் தானே அடிமையாக்கிக் கொண்டு சாகும் வரையில் இருப்பான்; சாகப் போகும்போதும், சொர்க்கத்துக்கா நரகத்துக்கா என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பான்.
ஏதோ ஈரோட்டுக்குப் போவதற்கு அடுத்த பேருந்தில் ஏறப்போவது போல! படித்தவன்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. படித்தப் பல்கலைக்கழகத்திலே பட்டம் பெறுவதால், சமூக அறிவைப் பெற்று விடுகிறான் என்றால், அது தவறு. பெயருக்குப் பின்னால், அதிகப் பட்டங்களும் இருக்கும், நெற்றியிலும் பட்டை இருக்கும். இதற்கு ஒரு தனிப் பாசறை வேண்டும்; தனிப் பயிற்சி வேண்டும். அது எப்போது வரும்?
மனித குலம் முழுமையும் மனிதராக நேசித்து, அதன் விடுதலைக்குப் போரிடும் போதுதான் அந்த சிந்தனை வரும். அவன் தான் சிறையிலிருந்து விடுபட்ட மனிதனாக இங்கே வாழ்வான். உண்மையில் அந்தச் சிந்தனை அடிமையிலிருந்து விடுபட்டவர்கள் தான் இங்கே திரண்டிருக்கிறீர்கள்; மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதற்குத்தான் நாம் போராடுகிறோம். அப்படி சிந்தனைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக எழுதியவர்தான் குத்தூசி குருசாமி. அதற்கு வழிகாட்டியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
பொதுவுடைமை இயக்கத்தின் நண்பர்களுக்கும் நான் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்தார். அவர் அவ்வப்போது, அரசியலில் எடுத்த ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடுகளை வைத்து, அரசியல் கூட்டணி கணக்குப் போடுகிறோமே, அதைப்போல, பெரியாரை மதிப்பிடக் கூடாது. தந்தை பெரியார் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. ஈரோட்டு நகர சபைத் தலைவர் பதவியைத் தவிர!
அவரோடு நான் விவாதித்தும் இருக்கிறேன். அவரோடு விவாதிக்கும் அளவுக்கு எனக்கு வயதும் இல்லை; தகுதியும் இல்லை; என்றாலும், வேண்டுமென்றே அவரிடம் கேட்டேன், சமுதாயத்தைத் திருத்த வேண்டும் என்றால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டாமா? எழுதிக் கொண்டே இருந்தால் போதுமா? கோட்டையிலிருந்து சவுக்கால் நான்கு அடி கொடுத்தால் தானே திருந்துவார்கள்? அதை ஏன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். “போய் அங்கிருந்து திருத்தலாம் என்று நினைக்கிறாய்; அங்கு போகிறவனையே திருத்த முடியாது என்று நான் நினைக்கிறேன்” (பலத்த சிரிப்பு - கைதட்டல்) என்று சொன்னார் பெரியார்.
கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு சொன்னார். “நான் உன்னைச் சொல்லவில்லை; பயப்படாதே; கம்யூனிஸ்டுகள் எந்தத் தண்ணீரில் மூழ்கினாலும் கரையாத கற்கள்தான்; எனவே நீங்கள் தப்பி விடுவீர்கள். ஆனால், எனக்கு எவனை எல்லாம் அனுப்பினால் திரும்ப மாட்டான், என்பது தெரியும்; எனவே எதற்கு சோதனை? வேண்டாம் என்று விட்டு விட்டேன்” என்றார்.
தேர்தலுக்கே போக வேண்டாம் என்று சொன்னவர்; நான் போட்டியிட மாட்டேன்; என்னைப் பின்பற்றுகிறவர்களும் போட்டியிட மாட்டார்கள் என்று சொன்னவர்; ஆனால் அவர் பங்கேற்காத தேர்தல், ஏதாவது நடந்திருக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒரு கட்சியைத் தோற்கடிப்பதற்கே நிற்பார். ஒரு கட்சியை வெற்றி பெற வைப்பற்கே, ஒவ்வொரு தேர்தலிலும் பிரச்சாரம் செய்வார். எனவே அவர் போட்டி போடவில்லை. அவரது கொள்கைக்காக எது நல்லது என்று நினைக்கிறாரோ, அவர்களை போட்டியிட வைப்பார்.
1952 இல் கம்யூனிஸ்டு கட்சிகள் சந்தித்த அடக்குமுறைக்குப் பிறகு, முழு மூச்சாக கம்யூனிஸ்டுகளை ஆதரித்தவர் பெரியார். அதைவிட, 1930களிலேயே கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். முதன்முதலாக வெளியிட்டவர், சோவியத் நாட்டுக்குப் போய் திரும்பி வந்தவர், தமிழ்நாட்டில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தியவரே அவர் தான்.
சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தியவர் அவர். இது இப்போது, ஒரு நாகரிகமாகிவிட்டது. காலை 4 மணிக்கு புரோகிதத் திருமணத்தை நடத்திவிட்டு, 7 மணிக்கு தலைவரை அழைத்து, சீர்திருத்தத் திருமணத்தை நடத்துகிறான். முதல் சடங்கு ‘விவாக முகூர்த்தபடி’ நடந்து வருகிறது. பிறகு அரசியல் தலைவர்கள் நிச்சயித்தபடி, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்காக நடக்கிறது. இந்த போலித்தனம் இப்போது அதிகம்.
ஆனால், சீர்திருத்தத் திருமணம் என்பதை சிந்தித்துக்கூட பார்க்க முடியா காலத்தில் முதன்முதலாகத் துவங்கியவர் தந்தை பெரியார். அதற்குப் பிறகு மேடையிலேயே குழந்தைகளுக்குப் பெயர் வைக்கத் துவங்கியவரும் தந்தை பெரியார் தான். அப்படிப் பெயர் சூட்டும்போது, தமிழ்க் குழுந்தைகளை அவரது கையிலே தூக்கிக் கொடுத்தபோது, அவர் தான் முதன்முதலில் ‘மாஸ்கோ’ என்று பெயர் சூட்டினார். குத்தூசி குருசாமி மகளுக்கு ‘ரஷ்யா’ என்று பெயர் சூட்டினார்.
லெனின், ஸ்டாலின் என்றெல்லாம் பெயர் சூட்டினார். கூட்டத்திலே எவரும் கேள்வி கேட்கலாம் என்ற பழக்கத்தையும் அவர்தான் ஏற்படுத்தினார்.
ஒருவன் கேட்டான்: “நகரத்தின் பெயரையும், நாட்டின் பெயரையும், ஆண், பெண் இருபாலருக்கும் சூட்டுகிறீர்கள்; லெனின், ஸ்டாலின் என்று வேறு மொழியில் சூட்டுகிறீர்கள். இது எப்படி சரியாகும்?” என்று கேட்டான். கேள்வி கேட்டவன், துண்டு சீட்டில் தனது பெயரை பழனி என்று எழுதியிருந்தான். பெரியார் அதைப் பார்த்துவிட்டு, “கேள்வி கேட்ட அய்யா எழுந்திருங்க! உங்க பேரு என்னங்க!” என்றார். ‘பழனி’ என்றான். ‘ஏம்பா அது ஒரு பாறையாச்சே; ஒரு மலையின் பேரை வைக்கலாம்; நான் ஒரு நகரத்தின் பெயரை வைக்கக் கூடாதா’ என்று கேட்டார். இப்படி பெயர் வைப்பதில்கூட ஒரு புதுமையைப் புகுத்தி, தமிழகத்துக்கு வழி காட்டியவர் பெரியார்.
இந்தியாவின் முதல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டபோது, நாடாளுமன்றத்தில், ஒரு திராவிடர் கழக உறுப்பினர் உண்டா? இல்லை. இந்தியாவிலுள்ள சட்டமன்றம் எதிலாவது, திராவிடர் கழக உறுப்பினர் உண்டா? இல்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினர் இல்லை; ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை; ஆட்சியில் பங்கு இல்லை; கூட்டணியில் இல்லை; தெருவிலே போராட்டம் நடத்தி, டெல்லி ஆட்சியை சட்டத்தையே திருத்த வைத்தார் (பலத்த கைதட்டல்) அரசியல் இயக்கத்தை எப்படி இயக்குவது என்பதை புரிந்து கொண்ட தமிழகத்தின் தலைசிறந்த வழிகாட்டி தந்தை பெரியார் தான். இன்றைக்கும் அவரிடமிருந்து வெளியேறியவர்கள்கூட, போட்டி போட்டுக் கொண்டு, பெரியாருக்கு ஏன் சொந்தம் கொண்டாடுகிறார்கள்? அதுதான் ஊற்று. அந்த ஊற்றிலிருந்து வெளி வந்ததுதான் சுயமரியாதை இயக்கத்தின் பல பிரிவுகள்.
பொதுவுடைமை இயக்கமும் அந்த ஊற்றிலிருந்து பெற்ற பலன்கள் அதிகம். எனவே அது வற்றாமல் இருக்கவும், மேலும் மக்களை வழி நடத்தவும், அந்த ஊற்று செழிப்படைய எங்கள் பங்கும் என்றும் உண்டு. தேர்தல் உறவுகளுக்காக அல்ல. கொள்கையில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளால், நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதையும் எடுத்துக் கூறி, இந்தப் படிப்பகத்தைத் திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பைத் தந்ததற்காக நன்றி கூறி விடை பெறுகிறேன்.”