கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி நந்தமிழ்க்குடி என்பர் நம் முதுமக்கள். புவியானது கல்லும், மண்ணும், கடலும், வானும் கொண்டதே! அவ்வாறிருக்கப் பிற்றை என்னை இவ்வாறுரைத்தனர்? அஃதாவது, கல்லில் கலைகள் உண்டாதற்கு முன்பும், மண்னைச் சுட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முன்பும், தமிழ்க்குடிப் பெருமக்கள் வீரமுடையவர்களாகத் திகழ்ந்தனர் என்பதை உரைக்கவே இவ்வாறு மொழிந்தனர்? ஆதித்தமிழன் கண்ட அறிவியல் கூறுகளில் முதன்மையானது சக்கரமே.

உலகப் பெரும்புலவர் வள்ளுவனார் தாமியற்றிய திருக்குறளில்,

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்” (505) என்கிறார்.

பெருமையுடையவர் ஆற்றுவார் அருமையுடைய செயல்கள் (975), பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாமம் தன்னை வியந்து (978) என்று பெருமைக்கும் சிறுமைக்கும் வேறுபாடு காட்டினார். கருமம் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு (578) என்றார்.

“கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல்.(1021)”

 thiruvalluvarஈண்டு, கருமம் என்பதற்குப் பொருள் காண்போமாகில் நல்ல செயல்களைச் செய்ய ஒருபோதும கை ஓயமாட்டேன் என்னும் பெருமையைக் காட்டிலும் பீடு(புகழ்) உடையது வேறொன்றும் இல்லை!. ஆதலால், “எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்; எண்ணுவம் என்பது இழுக்கு”(467) என்றும் “நன்றாற்றலுள்ளும் தவறுண்டு; அவரால், பண்பு அறிந்து ஆற்றாக் கடை(469) பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செயல்களும் பண்புகளுமே “கட்டளைக் கல்” ஆகும் எனக் கூறினார். கட்டளைக்கல்: என்பது கட்டு+அளை + கல் எனப்பிரிக்கலாம். ஈண்டு, கட்டு ஸ்ரீ ஒழுங்கான, அளை ஸ்ரீ சேறு, சகதி (சக்கையற்ற சகதி, குழைவு மண்) எனப் பொருள்படும்

கட்டளை என்பதற்கான விளக்கம் கூறுகையில், “தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் இரண்டாம் பாடலிலேயே “குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி; வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு”(502) என்கிறார்.

மேலும் இன்றும் நம் தமிழ்ச் சமூக நடத்தைப் பண்பாட்டு விதிகளைக் காணுங்கால் “கட்டுச் செட்டு” என்கிற வழக்குச் சொல்லைக் காண்கிறோம். பண்பாடும், மரபும், ஒழுக்கமும், ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதது.

வள்ளுவர் கூறும் “கட்டளைக்கல்” என்பது “செங்கல்” அன்றி வேறாகா. அஃது, பொற்கொல்லர் வைத்திருக்கும்  உரைகல் ஆகா. பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றும், பணத்தைத் ‘தருப்பு’ என்றும், தன் இனத்தாரைச் ‘சிமிளான்’ என்றும், உரைகல்லை ‘மூசைக்கல்’ என்றும் குழூஉக் குறியாகக் கொண்டுள்ளனர். ஈண்டு, உரைகல்வேறு; கட்டளைக்கல் வேறு என்பதை நாமறிதல் நன்றாம்.

மதுரைக்காஞ்சியில் வரும் பாடலில் “சூடுறு நன்பொன் சுடரிழை புனை நரையும்; பொன்உரை காண்மரையும்” எனும் பாடல்வரி வழி அறியலாம். பொற்கொல்லர் உரைத்தல், கரைத்தல், நனைத்தல், உடைத்தல், அறுத்தல், இராவுதல்(கடாவுதல்) போன்ற பரிசோதிப்பு முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.

‘மாழை’யாகிய பொன் பயன்பாட்டில் இல்லாத சுடுமண்கால (வுநசசயஉழவவய Pநசழைன)த்திலிருந்தே தமிழரின் வாழ்வியலில் செங்கல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்கின்றனர் வரலாற்றுப் பேரறிஞர்கள். ஆகையால்தான் சுடுமண் செங்கல்களும், மட்கலன்களில் எழுத்துப் பொறிப்புக்களும், சுடுமண் மணிகளும் அணிகலன்களும் தொல்லாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இன்றுங்கூட நந்தமிழர்கள் இல்லத்தில் யாராவது இறக்க நேரிட்டால், அவர்களுக்குப் படையல் இடும் (கருமம் + ஆதி ஸ்ரீ கருமாதி) வழக்கம் உள்ளது. ஒரு செங்கல்லை எடுத்து இறந்தவரின் பீடும் பெயரும் எழுதிக் கருமாதிப் படையலில் நிறுத்துவது வழக்கம். இதற்குக் கட்டளை நிறுத்துவது என்று பெயர். அக் கல்லுக்குக் கருமாதிக்கல் என்றும், தண்ணீர் வைக்கும் கலயத்திற்குக் கருமாதிக் கலயம் என்றும் பெயர் இருப்பது சான்றாகக் கொள்க.

கட்டம் என்பது வரையறை(எல்லை) உடையது. நீலம், அகலம், பருமன் என்ற முப்பரிமாணங்களை வைத்துக் கூறப்படுவது.

நந் தமிழர் காலங் காலமாகச் செவி வழி கேட்டு வாய்மொழியாகப் பயிலும் பழமொழிகளைக் காண்போமெனில் தெற்றென விளங்கும்.

‘உரைப்பார் உரைத்தால் உரைகல் தேயும்’ (நா.வழக்)

ஆனைக்கட்டளை அரைமுழம் -

ஆனைக்குட்டிக்கட்டளை பத்து முழம் (நா.வழக்)

இப்பழமொழிகளில் கட்டளை என்பது கல்லினைக் குறிக்கிறது. ‘கட்டு’ எனும் வேர்ச்சொல் நெருக்கம், அடுக்கு, தொகை, மிகை, திரள் என்னும் பொருளில் வரும். இதனால்தான் கெட்டியான தரையைக் கட்டி கட்டாந்தரை, என்கிறோம். செங்கலால் அமைந்த இல்லத்தைக் கட்டடம் என்றும், ஒரு காலத்தைக் குறிப்பிடும்போது காலக்கட்டம் என்றும் அழைக்கின்றோம். கட்டடம் கட்டும் தொழிலாளிகள் கட்டுக்கலவை, பூச்சுக்கலவை, குழைவு போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். ஆகவே, திருவள்ளுவர் குறிப்பிடும் கட்டளைக் கல் என்பது. வெந்தகல்லாக இருந்தாலும் (செங்கல்) வேகாக் கல்லாக (பச்சை வீட்டுக்கல்) இருந்தாலும் கட்டளையில் வைத்து அறுத்த மண்ணால் செய்யப்பட்ட கல்லையே குறிக்கின்றது.

                வண்டல், கரம்பை(களிமண்), செம்மண், மணல் போன்றவை சரியான அளவில் கலந்து, மிகச்சரியான அளவு நீர்விட்டுக் குழைத்துத் தட்டுப் பலகையில் அள்ளிவந்து, கட்டளையைச் சமதளத்தில் வைத்து அளையை அள்ளிக்கட்டளையை நிரப்பிக் (குழைவு மண்) கையால் அறுத்துக் கட்டளையைத் தூக்குகிறபோது, கல்லானது அச்சுக் குலையாமல் இருக்க வேண்டும். பின்னர் அக்கல்லைப் பக்குவமாகக் காயவைத்து சூளையில் வைத்துக் கட்டளையாக அடுக்க வேண்டும்.(ஆறு கட்டளை, எட்டுக்கட்டளை, பன்னிரண்டு கட்டளை என அடுக்கி, சூளையைச் சேறுகொண்டு பூசிமெழுகி அடுப்பில் தீயிட்டுக் குறிப்பிட்ட நாளில் சூளைச் சூடு குறைத்துப் பிரிப்பர். அதிலும், வெந்தகல்லும், வேகாவரிக்கல்லும் பிரித்து ஒதுக்கப்படும். வெந்தகல்லே வீடுகட்ட உதவும்.

இது போலவே ஒருவனை அரச கடமைக்கு அமர்த்தவோ பணிக்கவோ மனம் வாக்கு காயங்களில்,

“அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

                  திறம் தெரிந்து தேறப் படும்”.(குறள்-501)

என்று திருவள்ளுவரே தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் குறளாகவே வைத்துப் பாடுகின்றார்.

பெரும்பாணாற்றுப் படை“ஈருடை இருந்தலை ஆரச்சூடி பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்”(பெரும்பாண் 220-21) பாடல்குறிப்பிடும் பொன் உரைக்கும் உரைகல் மட்டுமே சிறுவர்கள் உடம்பினில் மகரந்தத்துகளுக்கு உவமை கூறவந்த சொல்லாகும். ஐங்குநூறு(263)வது பாடல் உரைகல்லில் பொன்னுரைத்தாற்போலப் பன்றியின் உடலில் தினை உள்ளதைப் பாடியது. குறுந்தொகை(192-வது)ப் பாடல் குறிப்பிடும் உரைகல் உவமை குயிலின் சிறகிற்கு உவமையாயிற்று. ஐங்குநூறு(215)வது பாடல் குறிப்பிடும் உரைகல் உவமை தும்பியின் உடலுக்கு உவமையாகி வந்தது. இப்புலவர் பெருமக்கள் யாவரும் சிறுவர்கள் உடலையும், பன்றியின் உடலையும், குயிலின் சிறகையும், தும்பியின் உடலையும் பற்றி மேம்போக்காகப் பொன்னுரைக்கும் உரை கல்லுக்கு (கட்டளை) உவமை சொன்னார்களன்றி ஒருபோதும் பக்குவப்பட்ட குணத்திற்கு உவமை சொன்னாரில்லை.

ஈண்டு, குழந்தைகளின் குணமும், குயிலின் குணமும், வண்டின் குணமும், பன்றியின் குணமும் அரச கடமைக்கு ஏற்புடைத்தாமோ? அதனால் தான் “வள்ளுவப் பெருந்தகை பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்” என்று பாடியுள்ளார்.

வடவர்தந்த வான்கேழ்வட்டம் (நெடுநல்வாடை) சந்தனச் சாந்தம் உரைக்கும் உரைகல், மாதரார் மஞ்சல் உரைக்கும் கல், மழிக்கும் கத்தி உரைக்குங்கல், ஆப்பீ அளைந்து உரைக்குங்கல் (தீற்றுக்கல்) அவலெறி உலக்கை பரவுங்கல் (பெரும்.226), காளைதினவொடுக்கக் கொற்றிக்கல்(குறுந்), வரப்பைக்காட்டும் கட்டளைக்கல், நடுகல், கருங்கல், செம்புரைக்கல், பாலை நிலத்துப்பார்கல், பாராங்கல், குண்டுக்கல், படிக்கல், சானைக்கல், நீலக்கல், மாணிக்கம், வைரக்கல், மரகதக்கல், சிக்கிமுக்கி, திருகைக்கல், அம்மிக்கல், குழவிக்கல், ஆட்டுக்கல், சுமைதாங்கிகல்,

                “இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத

                 கரும்பெனக் கவினிய பெருங்குரல் ஏனல்”

பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்

உடன்ற அன்னை அமரா நோக்கமும்” (அகம்:11-12)

வள்ளுவன் சொன்ன “கட்டளைக்கல்”லுக்கு வகையாகுமோ? ஈடாகுமோ? “உரைப்பார் உரைத்தால் உரைகல் தேயும்” “ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்” “கல் தேயும் தேயாது சொல்”.

நீலமணிமிடற்றெம் சிவனைப் போல

வாழிய பெரும்! வள்ளுவ நீயும்!

- முனைவர் கா.காளிதாஸ்

Pin It