thiruvalluvar 450தமிழில் திருக்குறள் ஒரு சிறந்த நீதி நூல், திருவள்ளுவர் எழுதிய இந்த நூலினுக்குப் பரிமேலழகர் தந்த உரையானது விழுமியதாகப் போற்றப்படுகின்றது. பரிமேலழகர் உரைக்குக் கூட ஒரு உரையானது காணப்பட்டு நிலவுகின்றது. இந்த வகையான உரைக்கு டீகை என்று பெயர். நுண்பொருள் மாலை என்ற பெயரினில் திருமேனி  இரத்தின கவிராயர் என்ற அறிஞர் பரிமேலழகர் உரைக்கு டீகை வகையான ஓர் உரை கண்டுள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை, தமிழ்ச் சங்கத்தில் உயர்புலவராக விளங்கிய மகாவித்துவான் ரா. ராகவையங்கார் அவர்கள் உரை தேற்றம் என்ற நூலைப் பரிமேலழகர் உரைக்குத் தெளிவுரையாக நல்கி உள்ளார்.

ஊர்    

பரிமேலழகர் வாழ்ந்த ஊர் காஞ்சிபுரம் என்று தொண்ட மண்டல சதகம் சொல்கின்றது. திருக் காஞ்சி வாழ் பரிமேலழகர் என்று அந்த நூல் சுட்டுகின்றது. சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள ஏட்டுப் பிரதியில் பரிமேலழகர் உரை பற்றிப் பேசும்போது ஒக்கை, ஒக்கூர் என்று அந்தப் பிரதி காட்டுகின்றது. மதுரை மாவட்டத்தில் அப்படி ஓர் ஊர் உண்டு. ஆதலால் ஒக்கூர் காவலன் என்று புகழ்ந்து உரைக்கப் படுகிறார்.

காலம்--திருவள்ளுவர்

திருவள்ளுவருடைய காலம் கி.பி. 20 அல்லது  கி.பி. 30 என்று கணக்கிடுவதை விட்டு, அவருடைய சிந்தனை அகன்று விரிந்து இருந்த காலமாகக் கி.பி. 001இல் இருந்து கி.பி. 500 வரைக்கும் திருவள்ளுவரது காலம் என்று கொள்வது உசிதமானது. அந்தக் கால கட்டத்தினில் தமிழகத்தினில் யவனருடைய மெய்யியல் வீறு கொண்டு உலவியது. வணிகம் புரிய வந்த யவனர் கடவுள் இல்லை என்று உரைப்போரை எதிர்த்தனர். சிலை வணக்கத்தை எதிர்த்தனர். பிற கடவுளரை மெய்யான கடவுள் என்று மதிக்க வில்லை. இதற்கான ஆதாரங்கள் நமக்கு இங்குக் கிடைக்கவில்லை. ஆனால், யவனர் அவர்களது தாய் நாடுகளில் தொகுத்தும், வகுத்தும் பாதுகாத்தனர். அவை இன்றும் உண்டு. கிரேக்கம், எகிப்து நாடு களில் உள்ள நூலகங்களில் அவை அணி செய்கின்றன. அன்றைய யவனருடைய கருத்தியல்கள் இன்றும் பேணப்பட்டுத் திகழ்கின்றன. அவர்கள் சித்திரிக்கும் கடவுள் படைக்கும் ஆற்றல் நிறைந்தவர். உருவம் இல்லாதவர்.

தமிழ்நாட்டினில் மணிமேகலை காப்பியத்தில் கந்திற் பாவை வருவது உரைத்த காதையில்(92--102) நான்கு கருத்தியல்கள் உரைக்கப் படுகின்றன. ஒன்று, உருவம் இல்லாத கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கின்றது. இரண்டு, உருவம் உள்ள கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கின்றது. மூன்று, வினையில் நீங்கியவன் உலகத்து உச்சியில் இன்பமுடன்  திகழ்வான். நான்கு, பூதங்கள் சேர்க்கையால் அனைத்தும் உள்ளன  என்பன அவை. இந்தக் கருத்தியல்களைப் போதித்த சான்றோர்கள் அப்போது வஞ்சி மாநகரினில் நிலவினர். திருவள்ளுவருடைய காலநிலையினில் இந்த நான்கு கருத்தியல்கள் மேலோங்கித் திகழ்ந்ததாகக் கொள்ளலாம். இந்த நான்கினில் யவனருடைய  உருவம் இல்லாத கடவுளைத் ‘தன்னுரு இல்லோன்’ எனவும், உருவம் உள்ள கடவுளை "இறைவன் எங்கோன்" எனவும் மணிமேகலை சுட்டி உரைக் கின்றது. இந்த நான்கு கருத்தியல்கள் திருவள்ளுவர் காலத்தில் ஒளியுடன் விளங்கின.

ஆனால், திருவள்ளுவர் படைப்புத் திறன் கொண்ட படைப்புக் கடவுளைப் போற்றவே இல்லை. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்(1062) என்பது அனைவரும் அறிந்ததே. உயிரானது பிறப்பு நிலையில் இருந்து பிறவா நிலை அடைய வேண்டும் என்ற பொருளில் தான் தன்னுடைய முப்பாலினை உலகுக்கு நல்கினார். பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு(358). சமணர் மற்றும் பௌத்தர் கூட பிறப்பினைப் பேதைமையானது என்று விவரித்தனர். இவர்கள் கூட மீண்டும் பிறக்காமல்  இருப்பதற்காகவே ஐந்து புலன்களையும் வெல்ல ஓர் இடம் நாடினர். உடல் வேறு, உயிர் வேறு, இரண்டும் தனித்தனி என்ற நிலையினில் மட்டுமே உயிர் மட்டும்  மீண்டும் பிறக்காமல் இருப்பதை நாட இயலும். அப்படி ஒரு ஞானத்தைக் காண இயலும். இந்தப் பிறவா நிலையே உயிரினது குறிக்கோள் எனத் திருவள்ளுவர் தமது நூலினை இயற்றினார். படைப்புக் கடவுளை அவர் உடன்படவே இல்லை. அப்படிப்பட்ட கடவுளிடம் இருந்து வந்து மீண்டும் இந்தக் கடவுளை அடைவதே பிறப்பின் நோக்கம் என்பதை  அவர் போற்றவே இல்லை.

அதே நேரத்தில், கணவன், மனைவி, மக்கள், சந்ததி  இல்லறத்தின் அணிகலன்  எனப் போற்றினார். இது சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்த ஒன்று, ஏனென்றால் சமண ஞானியான குந்தகுந்தர் திருக்குறளினை அளித்தார் என்ற கருத்து சமண சமூகத்தில் இன்றும் வலிமையோடு நிலவுகின்றது. குந்தகுந்தர் திகம்பரர், கருத்தியல் பாங்கினில் திகம்பரர் தமது சொந்தத் தவவாழ்வினில் பெண்ணையும், சந்ததியையும் போற்றுவது இல்லை. பிறவா நிலை எய்த வேண்டும் என்பதற்காகப் பிறப்பிக்காமல் திகழ்பவர்கள். ஆனால், திருவள்ளுவர் இல்லறவியல் கண்டார். நன்மக்கட் பேற்றை மன்னுயிர்க்கு எல்லாம் இனிது எனப் போற்றினார்.

காலம்--பரிமேலழகர்

திருவள்ளுவருக்குப் பிறகு, கி.பி. 900--கி.பி. 1400 எனப் பொதுவாகப் பரிமேலழகருடைய காலத்தை உரைப்பது உசிதமானது. அந்த நூற்றாண்டுகளில் வைணவ ஆச்சாரியர் வாழ்ந்தனர். ஆச்சாரியர் களுடைய கருத்தியல் விதந்து காட்டத்தக்கது. அவர் திருமாலினுடைய மேனி அழகிலும், செயல் அழகிலும், குண அழகிலும் ஆழ்ந்து ஆழ்ந்து பரவசப் பட்ட ஆழ்வார்களது பாடல்களில் விளங்கும் நுண்பொருளை உணர்ந்து விவரித்தனர். ஆச்சாரியர் அப்படி உணரும் பொழுது தேகாத்ம வாதத்தையும், சுதந்தர சிந்தனையையும், பிற கடவுளரையும் மறுத்தபடி உணர்ந்தனர். இது மிகவும் குறிப்பிடத் தக்கது. இந்த மூன்று கருத்தியல்களை முன்னிட்டுக் கொண்டு பரிமேலழகரது திருக்குறள் உரையினை உற்று நோக்கினால், இந்த மூன்று கருத்தியல்கள் அதில் பொலிவு பெறவில்லை. ஆனால், நாத முனிகள் எழுதிய யோகரகசியம் நூலினைச் சார்ந்து, யோக முதிர்ச்சியை வாழ்வியல் எல்லையாகத் தமது தமது உரையினில் மேற்கொண்டார்(343.353.359). இது பரிமேலழகர் உரை பற்றிய பொதுவான மதிப்பீடு.

பரிமேலழகர் தமது உரையினில் சாங்கியத்தை உடன்பட்டுக் கொள்கிறார். நீத்தார் பெருமை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு(27). இந்தக் குறட்பாவினது உரையினில் மூலப்பகுதி (மூலப்பிரகிருதி) மற்றும் புருடன் எந்த ஒன்றில் இருந்தும் தோன்றாமை யானும் என்று விவரித்தார். மூலப்பிரகிருதி, புருடன் (ஆன்மா) இவை இரண்டும் அநாதியானவை. இவை கடவுளால் தோற்றுவிக்கப்படாதவை. என்றும் இருப்பவை. இஃது ஈஸ்வர கிருஷ்ணரது சாங்கிய தத்வ காரிகா நூலில் உள்ள மூன்றாவது சுலோகம். இருந்தாலும், பரிமேலழகர் பரிபாடலில் திருமாலைப் படைப்புக் கடவுளாகப் போற்றினார். 

நியாயம், சமணம் ஆகியவற்றின் வழிநின்றும் கூடப் பரிமேலழகர் தம்முடைய உரையைப் பொலிவு செய்தார். நல்ஆற்றான் நாடிஅருள் ஆள்க. பல்ஆற்றான் தேரினும் அஃதே துணை(242). நல்ஆற்றான் என்ற சொல்லினுக்கு அளவைகளானும் நன்றான நெறி என அளவையியலையும் உடன் இணைத்துக் கொண்டார். மேலும், தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முன்சொல் விளக்கத்தில் அமைச்சர் முதலானோரைப் பிறப்பு, குணம், அறிவு செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் அளவைகளான் ஆராய்ந்து தெளிதல் என்று அளவியல் சூழ்ந்த முறையியலைக் கைக் கொண்டார். காட்சி, அனுமானம், பிறர் கூறும் பேச்சுக்கள் இவை மூன்றும் சமணநெறியின் அளவை களும் ஆகும். அருத்தாபத்தி, அனுபலப்தி ஆகிய நியாய உறுப்புக்களைப் பரிமேலழகர் கையாள வில்லை. சமண நெறியினை அனுசரித்துக் கொண்டார்.  அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார். களவின்கண் கன்றிய காதலவர்(286) என்ற குறளினில் பயிலப்படும் அளவின்கண் நின்று ஒழுகல் என்ற தொடருக்குத் தனக்குப் போதுமான, சிக்கனம் அளவில் வாழாதவர், வரம்புக்குள் நிறுத்தி வாழாதவர் களவு செய்கிறார்கள் என்று தற்காலத்தில் பொருள் உரைப்பர். பரிமேலழகர் உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறி என்று அளவையியலை, தர்க்கவியலைக் கைக் கொண்டார்.

உயிர்ப் பொருள், இதனுடன் அநாதியாகவே வருகின்ற நல்வினை, தீவினைக்கு உற்ற விளைவுகளையும், அவற்றான் உயிரானது நாற்கதியுள் (நரகர், விலங்கு, மக்கள், தேவர் பிறப்புகளில்) பிறந்து, இறந்து வருதலையும், அது செய்யாமல் (அவ்வாறு வராமல்), அவற்றைக் கெடுத்தற்கு (பிறப்பு, இறப்பை) உபாய மாகிய யோக ஞானங்களையும், அவற்றான் அஃது (உயிர்) எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல் என்று விரிவுரை தந்தார். இப்படி அறிவதற்குச் சமண ஞானியர் ‘தரும தியானம்’ என்பர். பிறப்பு, இறப்பு மீண்டும் பிறப்பது என்பதில் இருந்து விடுபட உயிரினை அளவையியல் முறைப்படி அளந்து அறிய சமண நெறியினில் யோகஞானம் வழியை அளந்து நிற்பவர் களவு செய்ய விழையார் என்பது பரிமேலழகர் உரை நுட்பம். தரும தியானம் என்பது சமணர் போற்றும் ஒழுக்கம். “தத்துவார்த்த சூத்திரம்” சமண ஞானியான உமாஸ்வாதி போதித்தது. “பிரவசன சாரம்” குந்தகுந்தர்  உரைத்தது. இவைகளில் தரும தியானம் விளக்கப்பட்டு உள்ளது. இவைகளை அனுசரித்து பரிமேலழகர் உரை கண்டார். பிறப்பு, இறப்பு வினைகளில் இருந்து விடுபட சமண ஞானம் கண்டவர் களவுத் தொழில் செய்யமாட்டார்.

சங்கரர் மற்றும் பௌத்தத்தை மறுத்தல்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு(355). கண் முன்னே ஒரு பொருள் உள்ளது. அது எந்தவொரு இயல்பினைக் கொண்டதாகத் தோன்றினாலும். அப்படித் தோன்றியபடியே பார்த்து அறியாமல். அந்தப் பொருளின்கண் நின்று உள்ள உண்மையாகிய பொருளைக் காண்பதே மெய்யுணர்வு எனப் பரிமேலழகர் உரை காண்கிறார். ஒரு பொருளை ஐம்புலனால் உணர்ந்ததை அறிவு என ஏற்காமல், அந்தப் பொருளின் கண்ணே பொலியும் மெய்ப் பொருளினை அறிவதே மெய்யுணர்வு ஆகும். ஒரு பொருளின் உள்ளே துலங்குவதே மெய்ப்பொருள் என்பது பரிமேலழகரது உரையினது உட்கிடை, கண்முன்னே தோன்றும் ஒரு பொருளில் பலவற்றைக் கற்பித்துக் கொண்டு உலகத்தார் நிலவுகின்றனர், அந்தக் கற்பிதங்களைக் கழித்து விட்டு உண்மையைக் காண்பது என்பது அவரது அணுகுமுறை, கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பது அந்தத் தலைவன் பெயர்.

இதனில்,(கோ) அரசன் என்பது ஓர் சாதி, சேரமான் என்பது குடி, (யானைக்கண்) வேழ நோக்குடையான் என்பது வடிவம், சேய் என்பது இயற்பெயர். மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பது சிறப்புப் பெயர். இவை ஒரு பொருளின்கண் தோன்றியுள்ள கற்பனைகள். காதினால் கேட்கப்படும் அல்லது கண்ணால் காணப்படும் பொருளை அப்படியே உணரக் கூடாது. இதனை நிலம் முதல் உயிர் ஈறாக உள்ள தத்துவங்களின் தொகுதியாக உணர வேண்டும். அதன் பிற்பாடு, நிலம் முதலாகக் கொண்டு தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றால், காரணம், காரியம் இரண்டும் இன்றி முடிவாய் நிற்கும். இதனுள், பரிமேலழகர் சங்கர அத்தியாச வாதம், பௌத்த பஞ்ச கற்பனை, சாங்கிய சற்காரிய ஒடுக்கமுறை ஆகியனவற்றைக் கைக்கொள்ளுகின்றார்.

கண்முன்னே தோன்றும் ஒரு பொருளை இன்னொன்றாகக் காண்பது அத்தியாசம், காணப்படும் ஒன்றின்கண் நிலவும் பொருள், பெயர், சாதி, குணம், தொழில் ஆகியனவற்றைப் பஞ்சகற்பனை எனத் திந்நாகர் உரைத்தார். இஃது ஒன்று இன்னொன்றாகத்  தோன்றுவதே ஆகும். இதில் இருந்துதான் சங்கரர் தமது அத்தியாச வாதத்தை உருவாக்கிக் கொண்டார். மூலப்பிரகிருதியில் இருந்து நிலம் முதலானவை தோன்றி, மீண்டும் தோன்றியவாறே ஒடுங்கி காரண, காரிய அற்ற நிலையில் முடியும் என்பது சாங்கியக் கபிலர் விளக்கம். பரிமேலழகர் ஒரு பொருளின் மெய்யுணர்வான நிலை என்பது காரண-காரியம் அற்ற முடிவுநிலை எனச் சாங்கியம் தழுவி உரை கண்டார். பொருனை அறியத் திந்நாகர் வழி சென்றால் சூன்யத்தில் முடியும், சங்கரர் வழி சென்றால் மாயையில் முடியும், கபிலர் வழி சென்றால் மூலப்பிரகிருதியில் முடியும், இப்போது உயிர்--புருடன்--பிறவா நிலையை எய்தும்.

உலகாயதத்தை மறுத்தல் 

பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு(351).  இந்தக் குறட்பாவினில் பயிலப்படும் உணரும் மருள் என்ற சொற்றொடருக்கு விபரீதமாக உணர்தல் எனப் பரிமேலழகர்  உரை கண்டார். தற்காலத்தில் தவறாக உணரும் மயக்க உணர்வு, பிறழ்ந்து உணரும் மயக்கம் எனப் பொருள் தந்தனர். பரிமேலழகர், விபரீத உணர்வாவது மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும், மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்நூல் வழக்கு எனத் துணிதல் என உரை கண்டார். இந்த மயக்க நூல்கள் பரிமேலழகர் காலத்தில் நிலவின.  இவைகளை எழுதியவர் உலகாயத நெறியினர். இந்த விபரீத உணர்வை நீக்கி இருவினைப் பயன்களை உணர்ந்து மறுபிறப்பைத் தடுத்த படி இந்தப் பிறப்பை உணர வேண்டும். இந்தப் பிறப்பு துன்பமானது, இதை இன்பம் என்று உணர்தல் மயக்கம். குற்றியை மகன் என்றும், இப்பியை வெள்ளி என்றும், இவ்வாறே ஒன்றனைப் பிறிது ஒன்றாகத் துணிதல் விபரீதம். இஃது அத்தியாச வாதம். இருக்கும் ஒன்றினில் இன்னொன்றை ஏற்றிக் காண்பது அத்தியாசம். சங்கரர்  கடைபிடித்தது. இவரது கயிற்று அரவு விளக்கம் உலகப் பிரசித்தம்.  பரிமேலழகர் உலகாயத நெறியினை மறுக்கப் போய் சங்கர நெறியைக் கைபிடித்து தமது உரைக்கு மேன்மை தேடிக் கொண்டார்.

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க தன்நெஞ்சு(281). எள்ளாமை என்ற சொல்லினுக்குப் பிறரால் இகழப் படாமை என்று தற்காலத்தில் பொருள் தந்துள்ளனர். வீட்டினை இகழாது எனப் பரிமேலழகர் உரை தந்தார். வீட்டினை இகழ்தலாவது? காட்சியே அளவையாவது என்றும், நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின் கண்ணே, அறிவானது மதுவின்கண் களிப்புப் போல வெளிப் பட்டு அழியும் என்றும், இறந்த உயிரானது பின் மீண்டும் பிறவாது என்றும், இன்பமும், பொருளும்  ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். உடம்பு அழியும் போது உயிரும் அழியும். உயிரானது வீடுபேறு அடையாது. இப்படி உலகாயதம் உரைக்கும் நூல்களைக் கற்று, அவற்றினைச் சார்ந்து நின்று வீடு பேற்றினை இகழ்தல் என்பது பரிமேலழகரது உரைநயம். புறத்தே போகாது அகத்தேயே மடங்கி ஒரு தலைப்பட்டு உயிரையே உள்நோக்கி வாழும் துறவறத்தினர், உடல் வேறு. உயிர் வேறு, இரண்டும் தனித்தனி எனத் திகழ்பவர். இவரைப் போற்றும் பொருட்டு. உடலும், உயிரும் பிரிவற்றவை, உடல் மறைந்தால் உயிரும் மறையும் என உரைக்கும் உலகாயதரை மறுத்துப் பரிமேலழகர் உரை எழுதினார்.  உலகாயதம் உரைக்கும் நூல்கள் மயக்க நூல்கள். பரிமேலழகரது கருத்துப்படி இவை ஞானம் தரும் மெய்ந்நூல்கள் அல்ல.

நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும் புல்லறிவு ஆண்மை கடை(331). நில்லாதவற்றை என்ற சொல்லினுக்கு நிலை இல்லாதவைகள். மாறும் பொருள்கள் என்று தற்காலத்தில் பொருள் கொண்டு உள்ளனர். நிலையுதல் இலவாகிய எனப் பரிமேலழகர்  பொருள் கண்டார். இந்தப் பிரபஞ்சம், இதில் நிலவும் பொருள்கள் தோன்றிக் கெடுவன. பிறந்து அழிவன. இதுவே நிலையாமை. இஃது ஒரு திறத்தார் கருத்தியல். இந்தப் பொருள்கள் தோன்றிக் கெடுவன அல்ல, பிறந்து அழிவன அல்ல. இஃது இன்னொரு திறத்தார் கருத்தியல். இப்படி இரண்டு கருத்துத் திறத்தார் இந்தக் குறட்பாவில் காட்டப் படுகின்றனர். நிலையாமைக் கருத்தியலாளர் பலராவர். இந்தப் பொருள்கள் எல்லாம் கானல் நீரினில் தோன்றும் புனல் என மயங்குவர். இந்த மயக்கம் நீங்கி மெய்யுணரும் போது கயிற்றினில் பாம்பு போலப் பொய் என்பார் ஒரு தரப்பினர். இவர் வேதாந்திகள். நிலைவேறு பட்டு வருதலால் கணந் தோறும் பிறந்து இறக்கும் எனச் சொல்லுபவர் ஒரு தரப்பினர். இவர் பௌத்த நெறியினர்.

ஒருவாற்றான் வேறுபட்டும். ஒருவாற்றான் வேறுபடாமையும் உடையதால் நிலையானவை, நிலையற்றவை என இருதன்மையும் ஒருங்கே கொண்டு உள்ளன எனச் சொல்லுபவர் ஒரு தரப்பினர். இவர் சமண நெறியினர். இவர்கள் எல்லாரும் பொருள்கள் நிலையற்றவை என்பதில் உடன்பாடு கொண்டனர் அவர். இவர் களுக்கு மாறானவர் உண்டு. தோற்றம் உடையன கேடு அடைவது இல்லை என உரைப்பவர் அவர். இவர் உலகாயத நெறியினர். இப்படி இரு திறத்தார் இந்தக் குறட்பாவினால் பேசப்படுகின்றனர். திருவள்ளுவர் நிலையாமையைப் போற்றி இந்தக் குறட்பாவினை அமைத்துள்ளார். அதோடு மட்டும் அல்லாது பொருள்கள் நிலையானவை என உரைப்பது இழிபானது. துறவியர் ஏற்க மாட்டார்.

இது திருவள்ளுவர் சித்திரம். இதனைப் பரிமேலழகரும் இழிபு என்பதை ஏற்றபடியே புல்லறிவு என விரிவுரை கண்டார். இந்தப் புல்லறிவானது பிறவித் துன்பத்திற்கு அடிகோலும். இந்தப் புல்லறிவாளர் செல்வத்தையும். அதை அனுபவிக்க உடம்பையும்  பற்றுக் கோடாகக் கொள்ளச் செய்யும் என்பது பரிமேலழகர் நுட்பம். இப்படிப் பற்றுக் கொண்டவர் உலகாயத நெறியினர். இல்லாளோடு கூடி வாழும் இல்லற நெறியினரும் கூட. செல்வத்தையும், உடம்பினையும்  போற்றி வாழ்பவர்கள் இவர்கள். பிறவி என்பது இவர்களுக்கு ஏற்புடையதே, இன்ப மானதே. செல்வத்தை ஈட்டுவதுவும், சந்ததியை ஈன்று புறம் தருவதுவும் இந்த நெறிதனில் பொலிவு பெற்றதாகும். துறவியர் இவற்றைத் துறந்தவர். ஆதலால், இவற்றைப் போற்றும் இல்லறம் மற்றும் உலகாயத நெறியினரைப் புல்லறிவாளர், கடையது, இழிபு எனத் துறவியர் துறப்பர். என்றாலும், சந்ததி போற்றும் இல்லறத்தார் துறவியர்க்குத் துணை யாகவே நிற்பர். உலகாயத நெறியினர் துறவியரை வெறுத்ததாகத் தரவுகள் இல்லை. பரிமேலழகர் துறவியரைப் போற்றி, உலகாயத நெறியை விலக்கினார். இஃது அவரது உரை நுட்பம்.

பரிமேலழகரது கருத்தியல் பொலிவு

அடல்வேண்டும் ஐந்தின் புலத்தை, விடல் வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு(343). வீடு பேறு அடைய விழைபவர் ஐம்பொறிகளுக்கு உரிய ஐம்புல நுகர்வுகளையும் விட்டுவிட வேண்டும். துன்பமும், பாவமும் தரும் தம்மோடு உடன் வராத நுகர்வுப் பொருள்களின் மேல் மனத்தினைச் செலுத்தாமல் ஞான யோகங்களின் பால் செலுத்த வேண்டும். கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார், தலைப்படுவர் மற்று ஈண்டு வாராநெறி(356). வீடு பேறு அடைந்த பின்னர், மீண்டும் இந்த உலகினில் வந்து பிறக்காத நெறிகளை ஒருவர் அனுபவம்  உடைய தேசிகர்பால் உபதேசமொழிகளைக் கேட்டு, மெய்ப் பொருளை உணரவேண்டும். அப்போது அவர் மீண்டும் இந்த உலகினில் பிறக்காத வழியைக் காண்பர், ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின், வானம் நணியது(353). இந்தப் பிரபஞ்சம் மற்றும் உலகத்துப் பொருள்கள் உண்மையோ, பொய்யோ என இந்த இரண்டினில் எது உண்மை என்ற விவாதத்தில், எல்லாச் சமய நூல்களும் பேசுவது இயல்பு. அவை முதலில் பிறர் கருத்தியலை மறுத்து விட்டுத் தமது கருத்தியலை உண்மை நிலை என நிறுத்தும்.

இந்த நூல்களில் காட்டப்படும் கருத்துப் பொருள்களை பரிமேலழகர் வகைப்படுவது சிறப்பானது. ஒன்று: மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை என்பது, இஃது உலகாயதம். இரண்டு: இல்லை என்பது,  இதனை விரித்து இல்லையெனில் கானல்நீரோ, கயிற்றல் பாம்போ என விளக்கம் கோருவது. இது வேதாந்தம். உலகாயதம் அல்லது வேதாந்தம் இந்த ஒன்றினில் துணியாது நிற்பது.  சமய நூல்கள் கூறுகின்ற பொருள் களுள் எந்தக் கருத்து உண்மை என நிகழ்வது ஐயம். யோக முதிர்ச்சி உடையார் தமது அனுபவத்தான் ஒன்றினில் துணிவு பெற்று, ஐயம் நீங்கி மெய் உணர்ந்தவர் ஆவர். அனுபவ உணர்வால் அடிபடப் பட இன்றைய நிலையினில் கடந்தகால உலகியல் உணர்வுகள் சிதைந்து(தூர்ந்து) நீங்கப் பெறுவதினால் ஐயம் நீங்கித் தெளிந்தவர் ஆவர். பொருள்கள் உண்மை அல்ல பொய் என்று உணர்ந்த இப்படிப் பட்ட யோக முதிர்ச்சி உடையவர்களுக்கு வீட்டு உலகமானது இந்த உலகினை விட அண்மையானது, ஐயஉணர்வு உடையவர் இந்த உலகினில் மீண்டும் மீண்டும் பிறப்பர் என்பது பரிமேலழகரது உரைநயம், உலகம் உண்மையானது என்று கூறும் உலகாயதம் நாடுவோர் மீண்டும், மீண்டும் பிறப்பர் என்பது அவரது உரையின் உட்கிடை.                         

புக்கில் அமைந்தின்று கொல்லோ, உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு(340). உடம்புகளுக்குள் ஒதுங்கி இருந்து வெளியே போன உயிர்க்கு எப்பொழுதும் இருப்பதற்கான ஒரு இல்லம் இது வரையிலும் அமையவில்லை போலும் எனப் பரிமேலழகர் உரை கண்டார். ஓர் உயிரானது பல உடம்புகளுள் வாழ்ந்து வெளிவரும். உயிரினுக்குப் பல பிறவிகள் உண்டு என்பது இந்த உரையின் மூச்சு. முட்டை உயிருள்ள கருவோடு கூடிச் சேர்ந்தே வந்தது. ஆனால் கருவானது பறவையாக வளர்ந்த உடன் முட்டையைத்  தனியே விட்டு விட்டுப் பறந்து போனது(338).

முட்டை ஓட்டைப்  பரிமேலழகர் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் முட்டையை உடம்பாக உரைக்கின்றார். அந்த நிலையினில், முட்டையானது அசேதனம். அநித்த மானது. நிலையாமையானது. உயிரானது சேதனம். நித்தமானது. மேலும், அஃது அருவமானது என்பது அவரது உரை நுட்பம். உடம்பினுள் ஒதுங்கி இருந்த உயிரானது, வாதம் முதலான நோய்கள் நிலவும் வரை உயிரானது உடம்பினுள் இருக்கும். நோய்கள் சினந்து வெகுண்ட போது உயிரானது விட்டுப் போய்விடும்.  விட்டுப் புறப்படாது புகுந்து ஒதுங்கி இருக்க ஓர் இல்லம் அமைந்தால் பிறருடைய இல்லங்களுள் ஒதுங்காது. அப்படி ஓர் இல்லம் இல்லை என்பது பரிமேலழகர் உரையின் உட்கிடை. உயிரானது நித்தமாயது, நிலையானது.

உடம்பானது அநித்தமாயது, நிலையற்றது. இப்படிப்பட்ட, உடம்புகளுக்கு இறப்பும், பிறப்பும் மாறி மாறி வருவன. ஆதலால், உயிர் என்ற பறவைக்கு நிலையாக இருப்பதற்கு ஓர் இல்லம் இதுநாள்வரை அமையவில்லை எனத் திருவள்ளுவர் வியப்பான வினாவினைக் கைக் கொண்டார். பரிமேலழகரும் நுட்பமான உரை கண்டார். உடம்பும், உயிரும் வினை வசத்தால் கூடி உள்ளன, அல்லாமல்  இரண்டிற்கும் நட்பு இல்லை என்பது அறிக எனப் பரிமேலழகர் அறிவுறுத்தினார் (338). ஆகவே, உயிரோடு கூடி இருப்பதோர் உடம்பும் இல்லை. உடல்களுக்குப் பிறப்பும். இறப்பும் மாறிமாறி வருகின்றன. மாறிமாறி வரும் இவை இரண்டும், உயிரினுக்கு உரியன அல்ல(340). இவை விதந்து நோக்கத்தக்கன. பரிமேலழகரால் தமது உரையினில் முதல்நிலையில் வைத்து மறுக்கப்பட்ட உலகாயதமானது உரைக்கும் கருத்தியலை நோக்குவது ஈண்டுச் சீரியது. உடம்பின் பண்பாக இணைந்தே பிறக்கும் உயிரானது உடம்பு இறக்கும் போது உயிரும் அழியும். இன்னொரு உடலில் ஒதுங்காது, அதே சமயத்தில் இன்னொரு உயிருள்ள உடம்பைச் சந்ததியாகப் புறம் தந்து அழியும், இஃது உலகாயதம்.

உடல் தனி, உயிர் தனி என்பது திருவள்ளுவர் கருத்தியல். எனினும், உடம்பொடு உயிரிடை என்ன, மற்று அன்ன மடந்தையடு எம்மிடை நட்பு என்பது அவர் சித்திரிக்கும் காதற் சிறப்புரைத்தல் (1122). பரிமேலழகர் இதனில் பிரிவு அச்சம் என்பதை உணர்ந்தார். இது காதல் அணைப்பின் நுட்பம். தலைமகன், தலைமகள் இருவரது இந்தக் கூட்டம் தெய்வப் புணர்ச்சி. இந்தத் தெய்வமானது காமக் கடவுள் ஆகலாம்(1197). உடல், உயிர் உறவைக் குறித்துப் பரிமேலழகர் கருத்து விதந்து சுட்டுவதற்கு உரியது. இரண்டும் தொன்று தொட்டு வேற்றுமை யின்றிக் கலந்து வருதல், இன்ப துன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என அந்த உறவிற்கு விரிவுரை கண்டார். உடல் மற்றும் உயிர் இவை ஒன்றுக்கு ஒன்று இன்றியமையாத இணைப்பு உறவுடன் திகழ்வன. இந்த உடலும், உயிரும் படைப்புக் கடவுளால் படைக்கப்பட்டவை என்பதற்குத் திருவள்ளுவர் ஆதரவு இல்லை. பரிமேலழகரும் அதனை அனுசரித்துக் கொண்டார். உடல் மற்றும் உயிர் இரண்டும் தொன்று தொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல் என்ற பரிமேலழகர் விளக்கமானது உலகாயதத்திற்கு வலிமை தருவதாகும். அநாதி காலமாகவே உடலும், உயிரும் ஒன்றாக இணைந்தவை என்பது உலகாயதம்.

யோகமுதிர்ச்சி எனப் பரிமேலழகர், வெளிப் பொருள்களை விட்டுவிட்டு ஐம்புலன்களும் தம்வயத்தவை ஆதல் என விளக்கி அப்போது மனமானது மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணையின் கண் நிற்கும் என்று உரை விளக்கம் கண்டார்.(354). இஃது அட்டாங்க யோகம் சார்ந்தது. ஆசனம், இயமம், நியமம், இருப்பு (பிராணாயாமம்), பிரத்தயாகாரம்(உயிர்நிலை), தாரணை, தியானம், சமாதி என்பன அவை. இவற்றைப் பரிமேலழகர் ஏற்றார்(359). இந்த யோகநெறி ஒழுக்கமானது  நாதமுனி அவர்கள் உரைத்த யோக ரகசியம் மற்றும் அவருடைய மருமகன் கீழையகத்து ஆழ்வான் எழுதிய ஸ்ரீ தர யோக கல்பகத்திரு ஆகியவற்றைச் சார்ந்தது ஆகலாம். இவற்றின் பயிற்சியில் பரிமேலழகர் உரைக்கும் உயிரினது வீடு பேற்று விளக்கத்தினை திருக்குறள் உரை நுட்பத்தில் போற்றி இருக்கலாம். ஏனெனில், இந்த நூல்கள்  கிடைப்பது இன்று அரிதாக உள்ளது. இந்த நூல்களது பயிற்சி இன்று விளக்கமுற்றால் பரிமேலழகரது உரை நுட்பம் உணர்ந்து மகிழ மேலும் ஒளி கிட்டும். 

Pin It