முன்னுரை

purananooruசங்க இலக்கியங்களில் காதல், போர், வீரம், கொடையை மட்டுமின்றி மனிதநேயத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றன. சங்ககாலப் புலவர்கள் நுண்ணறிவும், ஆழ்ந்த சிந்தனையும், மனித நேயம் கொண்டவர்களாகத் திகழ்ந்திருந்தனர். மனிதன் மற்ற உயிர்களிடத்தில் காட்டும் அன்பு மனிதநேயம். மனிதன் என்ற சொல்லானது மனம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகும். இத்தகைய மனதை உடையவன் தான் மனிதனாகிறான். மனதில் பலவகை எண்ணங்கள் தோன்றினாலும் நல்ல எண்ணங்கள் ஒருவனை மனிதனாக்குகின்றன. இத்தகைய சிறப்புப் பெற்ற மனிதனின் பண்புகளை வெளிப்படுத்துவது மனிதநேயம். சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை மனிதநேயத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவ்வுலகத்தில் மனிதநேயம் பற்றிய எண்ணங்களும், மனிதநேயம் மிக்கவர்களாக வாழ வழிகாட்டும் சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ள மனித நேயம் பற்றிய செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மனித நேயம்

மனிதனை மனிதன் மதிக்க வேண்டுமானால் மற்றவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அன்புதான் இன்பத்தின் ஊற்றுக்கண். அவ்வின்ப ஊற்று மனித இனத்தில் படிந்துள்ள குற்றங்களைப் போக்கி மனிதனது பெருமையையும் உரிமையையும் மதிக்கும் வகையில் போற்றப்படுவது மனிதநேயம் ஆகும். மனம் என்ற சொல்லுக்கு நெஞ்சு, விரும்பு ஆகிய பொருள்களையும், நேயம் என்பதற்கு அன்பு, நன்மை, உறவு, பக்தி என்ற பொருள்களையும் தருகிறது. நாடு, மொழி, இனம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைக் கடந்து மேலோங்கி நிற்பது மனிதநேயம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

வாழ்வியல் சிந்தனைகள்

மனிதனின் வாழ்வும், தாழ்வும் நிலத்தைப் பொறுத்து அமைவது இல்லை. அந்நிலத்தில் வாழக்கூடிய நன்மக்களைக் கொண்டு அமைவது. மனிதனை மனிதனாக மதிக்கப் பெற்று மனித நேயம் மிக்கவனாக வாழ்கின்ற நிலம் நன்மை பயக்கும் என்று சங்ககாலப் புலவர்கள் அனைத்து காலத்திற்கும் பொருந்துமாறு தங்களுடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். மனிதன் இவ்வுலகில் பொறுப்பு மிகுந்தவனாக இருக்க வேண்டுமென்பதை,

“நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே”
(புறம்: பா.எண்.187)

என்ற பாடலில் ஒளவையார் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மனிதன் பெரியோரையும், சிறியோரையும் வியத்தலும், இகழ்தலும் செய்யக் கூடாது என்ற பண்பையும், மனிதனின் வாழ்க்கை நெறியையும் கணியன் பூங்குன்றனார்,

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா...
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
(புறம். பா.எண் 192)

என்று மனித நேயத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. பசி, பிணி, பகை ஆகிய மூன்றும் மக்களைத் துன்புறுத்தக் கூடியது. உலக உயிர்கள் வாழ உணவு தேவைப்படுகிறது. பாரகம் அடங்கலும் பசிப்பிணி நீங்க வேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளதை,

“பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியம் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி”
(சில. இ.வி ஊ.எ.கா 72-73)

இவ்வரிகள் உணர்த்துகின்றன.

புலவர்களின் வறுமை நிலை

புலவர்கள் வறுமை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். இவர்கள் இடம் விட்டு இடம் பெயரக் கூடிய தன்மையுடையவர். புரவலன் வாழும் இடத்தைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்று தன்னுடைய வறுமையைப் போக்கிக் கொள்ளக் கூடியவர் என்பதை,

“ஈ என இரத்தலோ அரிதே, நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்...”
(புறம்: 154.8-10)

இப்பாடல் வரிகள் தெளிவுப்படுத்துகிறது. மேலும் வள்ளுவரும்,

வறியார்க் கொன்றீவதே ஈகை மற்றெல்லாங்
குறியெதிர்ப்பை நீரது டைத்து (குறள்.221)

இக்குறள் மூலம் குறிப்பிடுகிறார். இது போன்றே சாத்தனாரும்,

“ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்..” (மணி. 11:92)

இப்பாடல் மூலம் உணர்த்துகிறார். மேலும் புலவர்களின் வறுமை நிலையை,

“பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும்!”
(புறம்: பா.எண்389)

என்ற பாடலடிகளால் இலைமறையாகச் சுட்டப்படுகிறது.

புரவலர்களின் பண்பு

புரவலன் தன்னை நாடி வரும் அனைத்து இரவலர்களுக்கும் அளவில்லாது கொடுத்தனுப்பும் பண்பு நிறைந்தவன். போரில் பகைவர் யானை அணிந்திருந்த ஓடைப் பொன்னைக் கொண்டு வந்து தன்னிடம் வரும் பரிசிலர்களுக்கு வழங்கிய புரவலரின் மாண்பை,

“அருஞ்சமம் ததையத் தாக்கி, பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே”
(புறம்- பா.எண் 326)

என்ற பாடலடிகளால் அறிய முடிகிறது. மேலும் மணிமேகலை கையில் இருக்கும் அமுதசுரபி தெய்வபாத்திரம் என்றும் அனைவருக்கும் இடையறாது பொருள்களை வழங்கக் கூடிய சிறந்த பண்புகளைப் பெற்றது என்பதை,

“ஐயக் கடிஞை அம்பல மருங்கோர்
தெய்வந் தந்தது திப்பிய மாயது”
(மணி. 19-150-151)

என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. இரவலர்களின் பசிபோக்கும் புரவலர்களின் சிறப்பை,

“பாண் உவப்பப் பசி தீர்த்தனன்”
(புறம்-பா.எண் 239)

என்ற பாடலடிகள் சிறப்பித்துக் காட்டுகின்றன.

புரவலர்களின் கொடை

புரவலர்கள் தங்களிடம் செல்வம் மிகுதியாக இருக்கும் சமயங்களில் இரவலர்களுக்கு மிகுதியான பொருள்களையும், வளம் இல்லாத காலங்களில் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கும் தன்மையுடையவர்களாக விளங்கியுள்ளனர். தலைவன் ஒருவனின் சிறிய இல்லத்திற்கு நாடி வரும் இரவலர்களின் தகுதியறிந்து கொடை வழங்குவதில் வல்லவனாகத் திகழ்ந்தான் என்பதை,

“வரிசையின் அளிக்கவும் வல்லன், உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே”
(புறம்.331)

என்ற பாடலடிகளால் அறியப்படுகிறது. வேந்தன் இரவலர்க்குப் பரிசாகத் தேரையும் கொடுத்தான் என்பதை,

“ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்டமாரி உறையினும் பலவே”
(புறம்: பா.எண்.123)

இப்பாடலில் மன்னனின் கொடைச்சிறப்பு வலியுறுத்தப்படுகிறது.

புலவர்களின் நட்பு

கோப்பெருஞ்சோழனோடு பிசிராந்தையார், பொத்தியார் ஆகியோர் உயர்ந்து கொண்டிருந்தனர். இச்சோழ மன்னன் பிசிராந்தையாரை, இகழ்விலன், இனியன், நெருங்கிய நட்பினை உடையவன், புகழ்அழிய வரும் பொய்மையை விரும்பாதவன் என்று புகழ்ந்துரைக்கிறார். இதிலிருந்து அவர்களும் புலவர்களும் மேன்மையான நட்பு கொண்டிருந்தனர் என்பதை,

“வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே” (புறம்- பா.எண்.217)

என்று பொத்தியார் இவ்விருவரையும் வியந்து பாடுகிறார். மேலும் வள்ளுவரும்,

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும் (குறள்-785)

இக்குறள் மூலம் புகழ்ந்துரைக்கிறார். நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியது இல்லை. இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்னும் உரிமையை வெளிப்படுத்துகிறது.

புரவலர்களின் விருந்தோம்பல்

விருந்தோம்பல் என்பது புதியோர்க்கு உணவளித்தல் ஆகும். அரசர்கள் வரும் விருந்தினர்க்கு உணவு அளிப்பதற்கு முன்னதாக அவர்களின் அழுக்குடைய பழைய ஆடையை நீக்கிப் புதிய ஆடையை வழங்கி உண்ணுவதற்கு அறுசுவை உணவினை படைத்தளிப்பான் என்பதை,

“நீல்நிறச் சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே”
(புறம்- பா.எண்.385)

என்ற புறநானூற்றுப் பாடலடிகளால் அறிய முடிகிறது. மேலும் நாலடியாரில்,

“உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழல் பயந்தா அங் கறப்பயனும்
தான் சிறிதாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்”
(நாலடி- பா.எண்.38)

இப்பாடலில் விருந்தோம்பும் பண்பு சிறப்பாகக் கூறப்படுகிறது.

தொகுப்புரை

இயற்கையோடு வாழ்ந்த மனிதன் தன்னையும், தன்னைப் போன்ற பிற உயிர்களையும், அவ்வுயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தினை களைத்து நல்வழிப்படுத்துதல் மனிதநேயம்.

மனிதன் மனிதனாக நன்மக்களைக் கொண்டு மனிதநேயம் மிக்கவனாக வாழ்ந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

புரவலர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்று தங்களுடைய வறுமையைப் போக்கினர் என்பதை புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது.

புரவலன் அளவில்லாது பொன்னும் பொருளும் கொடுத்து உதவும் பண்பு நிறைந்தவன் என்பது சுட்டப்படுகிறது.

மன்னனின் அளவற்கரிய கொடைச்சிறப்பால் இரவலர்கள் மகிழ்ந்து புகழ்ந்து பாடியதை இப்புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.

புலவர்களின் நட்பு மேன்மையுடையதாக இருந்துள்ளது. அரசர்களிடம் பரிசு பெறுவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் அவர்களை நல்வழிப்படுத்துபவர்களாக புலவர்கள் இருந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.

அரசர்கள் இரவலர்களுக்கு புதிய ஆடையை உடுத்தக் கொடுத்து பொன் மற்றும் வெள்ளியாலான கலத்தில் ஊன் கலந்த உணவை உண்ணத் தந்துள்ளனர் என்பது புகழ்ந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் மனிதநேயப் பண்புகள் புறநானூற்றுப் பாடல்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.

- க.பேபி

Pin It