அவ்வளவு எளிதில் யாரும் அதைக் கடந்துவிட முடியாது. அத்தகைய கொடூரங்கள் நிறைந்த வன்முறை வெறியாட்டம் அது. வார்த்தை வெளியால் இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு வக்கிரங்கள் சூழ்ந்தது. ஆனால் அதை மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு செய்து முடித்து, தமிழ்ச் சமூகத்தை பல நூற்றாண்டு காலம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது சாதிவெறி. மக்கள் நாயக சிந்தனையாளர்கள் “நாம் வாழ்வது இருபத்தோறாம் நூற்றாண்டில்தானா?” என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே வேதனையோடு குமுறிக் கொண்டிருக்கிறார்கள்! மாந்தனின் உடலில் பாய்ந்து உயிர்வளர்க்க வேண்டிய உதிரம், மக்கள் குடியிருந்த இல்லத்திலும் - வாயில்களிலும் - வீதிகளிலும் சிதறியோடி உறைந்து கிடப்பதைக் கண்டு தூக்கம் தொலைத்த பலரில் நானும் ஒருவன். அப்படி என்னதான் குற்றமிழைத்துவிட்டார்கள் அந்தக் கச்சநத்தம் தேவேந்திரகுல வேளாள சமுதாய மக்கள்?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் அமைந்துள்ள கச்சநத்தம். அதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சிறிய கிராமம். தற்போதைய கோரச் சம்பவத்தால், கச்சநத்ததோடு கூடவே சிவகங்கை மாவட்டத்தில் அவ்வப்போது நிகழும் தொடர் சாதிவெறியாட்டங்களும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கச்சநத்தம் கிராமத்தில் தேவேந்திரகுல மக்கள் சுமார் 40 குடும்பங்கள், நான்கு குடும்பங்கள் அகமுடையார் சாதியினர். அந்தக் கிராமத்தைச் சுற்றி ஆவரங்காடு, மாரநாடு, ஆளடிநத்தம் என சுமார் 800 குடும்பங்களாக அகமுடையார் சாதியினர் அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள். அதுவே “தீவு” போல இருக்கும் கச்சநத்தம் தேவேந்திரகுல மக்களுக்கு ஆபத்தானதாகவும், அகமுடையார்களுக்கு சாதிவெறியாட்டம் போடவும் வாய்ப்பாகிப் போனது.

katchanatham shanmuganathans houseகச்சநத்தம் நெல், வாழை, பருத்தி, கரும்பு என எப்போதும் பசுமையாய் காட்சியளிக்கும் அழகிய கிராமம். ஏனெனில் சுமார் 25 “பம்ப் செட்டுகள்”, வற்றாது நீர் சுரக்கும் கிணறுகள், 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள்; இவை அனைத்துக்கும் உழுகுடி மக்களான தேவேந்திரகுல வேளாளர்களே உரிமையானவர்கள். வேளாண்மை அவர்களின் உயிர்த்தொழில். எனவேதான் சாதிய நெருக்கடிகள் சூழ்ந்த போதும் அதை எதிர்கொண்டவாறே தங்கள் மரபான உழவையும் மேற்கொண்டார்கள். இப்படியாக உழுது - வியர்வை கொட்ட உழைத்ததன் பயனாக தற்பொழுது இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்டோர் அரசின் பல்வேறு பணிகளில் கோலோச்சி வருகிறார்கள்.

காலங்காலமாக அடிமை வாழ்வை மேற்கொண்ட மக்கள் இன்று கல்வியிலும் - வேலைவாய்ப்பிலும் - பொருளாதார வளர்ச்சியிலும் இவ்வாறான முன்னேற்றத்தை அடைந்ததோடு, தங்களது சொல்லாட்சிக்கும் கட்டுப்பட மறுக்கிறார்களே என்கிற சாதிவெறியும், பேரெரிச்சலும் சில அகமுடையார் சாதியினருக்கு ஒருசேர இருந்திருக்கிறது. எனவேதான் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருக்கிறார்கள்!

இந்நிலையில்தான் கச்சநத்தத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் திருவிழா நடக்கிறது. இக்கோவில் கச்சநத்தம் தேவேந்திரர்களுக்கு மட்டுமான குலசாமி. அந்தத் திருவிழாவின் போது தங்களுக்கு எவ்வித மரியாதையும் வழங்கவில்லை என கச்சநத்தம் அகமுடையார்கள் புளுங்கியிருக்கிறார்கள். சில ஆண்டுகளாகவே அகமுடையார்கள் சாதித்திமிரோடு, தேவேந்திரர் மக்கள் வளர்க்கும் கோழியை திருட்டுத்தனமாக அடித்துத் தின்பது; குலை தள்ளி பூவும் காயுமாக தளைத்து நிற்கும் வாழைமரத்தை சொல்லிக்கொள்ளாமல் வெட்டிக் கொல்வது; பால்பிடித்து விளையும் பருவத்தில் இருக்கும் பயிருக்கு கண்மாய்த் தண்ணீரை விடமறுப்பது; நடுவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்கும் நாற்றுகளைப் பிடுங்கிக் கொள்வது; வயதில் மூத்தவர்களைப் பெயர் சொல்லி அழைப்பது; எடுத்த எடுப்பிலேயே சாதியைச் சொல்லித் திட்டுவது இப்படியான அட்டுழியங்களைச் செய்து வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் திருவிழாவிற்கு மறுநாள் 26.05.2108 அன்று கச்சநத்தம் சாலையோரத்தில் பேசிக் கொண்டிருந்த தெய்வேந்திரன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது ஈருருளி வாகனமென்று மோதுவதைப் போலச் சென்றதால், “யாருடா இது இவ்வளவு வேகமா போறது” என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டது வாகனத்தில் சென்ற சுமனுக்குக் கேட்டுவிட, உடனே சாதிவெறி தலைக்கேற, “எங்களைப் பேசுற அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்திருச்சா?” என்று சொல்லியவாறே வீட்டிலிருந்த வாளை எடுத்துத் தாக்க முற்படுகிறார். (சுமனுக்கு இதனால் உண்டான கோபம் மட்டுமல்ல, ஏற்கெனவே பூட்டிகிடந்த கச்சநத்தம் மகாலிங்கம் வீட்டின் மாடிப்படி வழியாக இறங்கி நண்பர்களோடு சேர்ந்து சாராயம் குடித்துவிட்டு கும்மாளமிட்ட சுமனிடம், அவ்வீட்டின் உரிமையாளர் மகாலிங்கம் இது குறித்து கேட்டுக் கொண்டிருந்தபோது, தெய்வேந்தரனும், பிரபாகரனும் அருகிலுள்ள வீட்டின் திண்ணையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்ததை அப்போதே சுமன் முறைத்துப் பார்த்திருக்கிறான்) அக்கம் பக்கம் நின்றவர்கள் ஓடி வந்து அவனைத் தடுத்து சமாதானம் பேசி அனுப்பி விடுகிறார்கள்.

சாதிவெறி ஆணவத்தை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வம்பிழுக்க முயலும் சுமனின் இந்தப் போக்கு தொடர்ந்தால், அதுவே தமக்கும், தமது சமுதாய மக்களுக்கும் பேராபத்தாகிப் போய்விடும் என்பதையுணர்ந்த தெய்வேந்திரன் தன் நண்பர் பிரபாகரனோடு சென்று திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் புகார் செய்கிறார். கச்சநத்தம் கிராமம் பழையனூர் காவல் சரக்கத்திற்குள் வருகிறது. ஆனால் கடந்த காலங்களில் நடந்த சாதியச் சிக்கல்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார்களுக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காததால் இம்முறை திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தை அணுகியிருக்கிறார்கள். அதனையடுத்து காவல்துறை விசாரணைக்கு வந்திருக்கிறது. சுமன் தலைமறைவாகி விடவே அவனின் தந்தையைக் கண்டித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டவர்கள் இன்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, தனது தந்தையையே கண்டிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்களே என்கிற நியாயமற்ற கோபமும், சாதிவெறியும் கைகோர்த்துக் கொள்கிறது. திட்டம் தீட்டுகிறார்கள் சுமனும் அவன் தம்பி அருணும். பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆட்களையும், ஆயுதங்களையும் தயார் செய்வதோடு கூடவே ஒரு பெண்ணையும் தங்களோடு அழைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெண்தான் இரவில் தூங்கிக் கொண்டிருந்த ஆட்களை இலாவகமாக வெளியே வரச் செய்வதற்கான ‘சேவை’யைச் செய்தவள். ஏனெனில் ஆண்கள் கதவைத் தட்டினால் அந்த மக்கள் யாரும் கதவைத் திறக்க மாட்டார்களாம்.
27.06.2018 அன்று இரவு 9 மணியிருக்கும் உழைத்த மக்கள் களைப்போடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தவாறே தூக்கத்திற்குத் தயாராகிறார்கள். சிலர் உறங்கியும் விட்டார்கள். கதவுகள் எப்போதும் போல் தாழிடப்பட்டிருக்கின்றன.

ஊரின் தென்பகுதியிலிருந்து வந்த சுமார் பதினைந்து பேர் கொண்ட கும்ப‌லொன்று, மின்மாற்றியில் தெருவிளக்கைத் துண்டித்து விட்டு, வீட்டுக்குள் இருந்தவர்களை இழுத்துப்போட்டு சகட்டுமேனிக்குத் தாக்குகிறது. கும்பலின் கைகளில் இருந்த வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இளைஞர்களின் தலையிலும் உடலிலும் மாறி மாறி இறங்குகின்றன. உதிரம் வழிந்தோட தன் வீட்டின் வாசலில் சரிந்தவாறே சாதிவெறிக்கு தன் இன்னுயிரைக் காவு கொடுக்கிறார் பெரியவர் ஆறுமுகம்(65). அந்தக் கும்பல் கொலை செய்ய வந்தது ஆறுமுகத்தையன்று. இந்திய இராணுவத்தில் பணியாற்றும் தெய்வேந்திரனே அவர்களின் இலக்கு. ஆனால் எதார்த்தமாக அவர் வெளியூர் சென்றுவிடவே, “அவன் இல்லைன்னா என்ன, அவன் அப்பனை வெட்டுங்கடா” என்ற அந்தப் பெண்மணியின் சாதிவெறி தெறிக்கும் குரலைக் கேட்டு இத்தகைய வன்மத்தை அரங்கேற்றியது. மேலும் தெய்வேந்திரன் தனது திருமணத் தேவைக்காக வைத்திருந்த 35 பவுன் நகையையும், ரூபாய் 3,70,000 பணத்தையும் அள்ளிச் சென்றுவிட்டது அந்தக் கொலைகாரக் கொள்ளைக் கும்பல்.

கச்சநத்தம் கிராம மக்களை வட்டிக்கொடுமையிலிருந்து மீட்டதோடு மாணவர்கள் - இளைஞர்களுக்கு உதவியும், வழிகாட்டியுமாய் விளங்கியும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி சிறப்பான சேவை புரிந்த 30 வயதே நிரம்பிய துடிப்பான இளைஞன் சண்முகநாதன் (எ) மருதுவின் செயல்பாடு ஆதிக்க சாதி இளைஞர்களுக்கு உறுத்தலைக் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் வெளிப்பாடுதான் கொலை பாதகர்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுமார் 68 இடங்களில் வெட்டி சண்முகநாதனின் உடலைச் சல்லடையாய்த் துளைத்தெடுத்திருக்கிறார்கள். சண்முகநாதன் சமூக நலனில் அக்கறையுள்ளவராகவும், மனிதநேயம் கொண்ட மாண்பாளராகவும் இருந்திருக்கிறார். கடந்த 2015 - இல் கடலூர் மாவட்டமே பெரும் வெள்ளத்தில் சிக்கி, மக்கள் உணவுக்கும் இன்னபிற அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடிய தருணத்தில் அம்மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற வேட்கையில், தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தம் தந்தையாரோடு கடலூர் சென்று அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இப்படியான தமிழ்ச்சமூகம் அறியா சமூக சேவகரை நாம் சாதிவெறிக்குத் தின்னக் கொடுத்திருக்கிறோம்.

இப்படுகொலைச் சம்பவத்தில் கொடுங்காயமுற்று மருந்துவமனையில் மறைந்த சந்திரசேகரன் உள்ளிட்ட யாவருக்கும் உடலில் 10 இடங்களுக்கும் அதிகமான வெட்டுகள் விழுந்திருக்கிறன. சாதிவெறி வஞ்சகர்களின் கோழைத்தனமான தாக்குதலுக்கு தனசேகரன் (52), சுகுமாறன்(23), மலைச்சாமி(60), தெய்வேந்திரன்(20), மகேஸ்வரன் (18) ஆகியோர் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அழைத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகே 108 ‘அவசர’ சேவை வாகனமும் வந்திருக்கிறது.

சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ருத்ர தாண்டவமாடிய சாதிவெறிக் கொடூரர்கள் அவ்விடத்தை விட்டுக் கடந்து போகும் வரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவேயில்லை. தகவல் கொடுத்து ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகே அவர்கள் முகம் காட்டியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்த சுமனுக்கு எதிராக கச்சந்தம் மக்கள் கொடுத்த எந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்காததற்கு காவல்துறையில் பணியாற்றும் சிலர், சுமன் கூட்டாளிகளின் கஞ்சா கடத்தலுக்கும், இதர சமூக விரோதச் செயலுக்கும் உடந்தையாகவும், கச்சநத்தம் போன்ற சம்பவங்களுக்கு சூத்திரதாரியாகவும் இருந்திருக்கக்கூடும். இந்த லாபி கும்பல் கடந்த ஆண்டுகளில் சில காவல்துறை கறுப்பு ஆடுகளின் ஆசியோடு காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரை தீர்த்துக் கட்டியிருக்கிறது. பலரை படுகாயத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை ஒரு நேர்மையான காவல் அதிகாரி வாயிலாக நாளேடுகளில் வெளியானதைப் படித்தோம். (நன்றி: தினகரன் - 03.06.18) எனவேதான் கச்சநத்தம் படுகொலை சம்பவம் குறித்து தொடக்கத்திலேயே தகவல் கொடுத்தும் காலம் கடந்து வந்து தங்கள் ‘தொழில் தர்மத்தை’ நிலைநாட்டியிருக்கிறார்கள்.

கச்சநத்தம் கிராம மக்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சாதி ஒழிப்பு - முற்போக்கு - இடதுசாரி இயக்கங்கள், சில சமுதாய இயக்கங்கள் இணைந்து மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் சாலைமறியல் செய்தும், பிறகு நான்கு காத்திருப்புப் போராட்டம் நடத்தியதன் விளைவாக, அரசுத்துறை உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கொடுங்காயமுற்ற மூவரை மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வீரமரணமடைந்த மூவருக்குமான நிவாரணத் தொகையை உயர்த்தி தலா 15 இலட்சமாக வழங்குவதாக தமிழக முதலவர் அறிவித்தார்.

மனிதாபிமானமற்ற இந்தக் கொடுங்தாக்குதல் சம்பவத்தை சில ஊடகங்கள், அவசர அவரசமாக செய்தி வெளியிடுவதாக நினைத்துக் கொண்டு “இருதரப்பு மோதல்”, “கலவரம்” எனக் குறிப்பிட்டு உண்மையை உள்நோக்கத்தோடு மூடிமறைத்து வருகின்றன. இதனை அப்பட்டமான சாதிய பயங்கரவாத படுகொலைச் சம்பவம் என உலகுக்குச் சொல்ல மறுக்கின்றன.

நாட்டின் சட்டஒழுங்கைக் கட்டிக்காக்கும் பொறுப்புகளைத் தாங்கிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்படுகொலைச் சம்பவத்தை கண்டிக்காது, ஆழ்ந்த அனுதாபத்தை மட்டும் தெரிவித்துவிட்டு சாதிவெறிக்குத் தூபம் போடுகிறார்.

நாட்டின் எந்த மூலையில் எலி கீச்சிட்டாலும்கூட சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக தாறுமாறாக அறிக்கைவிடும் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கச்சநத்தம் படுகொலை நிகழ்வைக் கண்டிக்காது முகத்தைத் திருப்பிக்கொண்டு, ஆதிக்க சாதியினரின் ஓட்டு வங்கிக்கு குந்தகம் வராத வண்ணம், “இருதரப்பு மோதல் - அமைதி - நல்லிணக்கம்” என உண்மைக்குப் புறம்பாக உள‌றிக் கொட்டுகிறார்.

தேர்தல்வாத அரசியல் கட்சிகளில் இடதுசாதி இயக்கங்களைத் தவிர ஏனைய கட்சியினரின் அறிக்கைகள் வெறும் இரங்கல் தெரிவிக்கும் சம்பிரதாயங்களாக மட்டுமே இருந்தது. தே.மு.தி.க உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் அதையும் கூட செய்யவில்லை. தேவேந்திரகுல மக்களின் வாக்கு வங்கியை கிஞ்சித்தும் மதிக்காத கயமைத்தனம் இதில் அடங்கியிருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயே வல்லாதிக்கத்திற்கு எதிராக தென்னாட்டு மக்களை அணிதிரட்டுவதற்காக, மருதுபாண்டியர்கள் வெளியிட்ட “ஜம்புத்தீவு பிரககடனம்” வரலாற்றுச் சிறப்புமிக்கது. இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. அப்பிரகடனம் தமிழர்களின் ஒற்றுமையின்மையைப் பேசுவதோடு சகல சாதியினரையும் போர்க்களம் நோக்கி அறைகூவி அழைக்கிறது. அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் பண்பும், அரசியல் தெளிவும் மருதுபாண்டியர்களிடத்தே இருந்திருக்கிறது. ஆனால் மருதுபாண்டியர்களின் படத்தை வாகன முகப்புகளிலும், மேலாடைகளிலும், பதாகைகளிலும் போட்டுக் கொண்டு அவரின் வாரிசுகளாக தங்களைப் பறைச்சாற்றிக் கொள்ளும் அகமுடையார் சாதியினரோ, கச்சநத்தம் போன்ற சம்பவங்களின் மூலமாக தமிழின ஓர்மைக்கு தொடர்ந்து தடைக்கல்லாக இருந்து வருகிறார்கள். சாதிவெறியோடு சமூக விரோதிகளாக அலையும் தரிசுகளுக்கு அவரின் படத்தையோ, அடையாளத்தையோ பயன்படுத்திக்கொள்ள எந்த வகையில் அருகதையிருக்கிறது என்று தெரியவில்லை.

மருதுபாண்டியர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால் கச்சநத்தம் தேவேந்திரகுல மக்களுக்கு எதிராகவா வாளெடுத்திப்பார்கள்? மாறாக நம் அன்னைத் தமிழ் மண்ணை அபகரித்து - சூழ்ந்து நிற்கும் பன்னாட்டு ஏகபோக பெருமுதலாளிகளுக்கு எதிராக, தமிழ்த்தேசம் காக்கும் வேள்வியில் அல்லவா தங்களை ஐக்கியப்படுத்திருப்பார்கள் அல்லது தலைமையோற்றிருப்பார்கள்?

சாதியக் கண்ணோட்டம் என்கிற ஒற்றைக் குறியீட்டுக்காக மட்டுமே மருதுபாண்டியர்களை அடையாளப்படுத்தி வலம்வரும் அகமுடையார்கள் மருதிருவரின் கொள்கைக்கு எதிரான குள்ளச்சிந்தையாளர்கள்! சாதியத்தின் வேர்களுக்கு நீர்ப்பாய்ச்சும் தமிழின விரோதிகள்!

இப்படியான, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை சாதியச் சட்டகத்திற்குள் அடைத்துவைத்து சிறுமைப்படுத்திய ‘பெருமை’ அகமுடையார் சாதியினரையே சாரும்.

கச்சநத்தம் படுகொலைக்குப்பிறகு சில சாதிவெறியர்கள் சமூகவலைதளங்களில், வீரத்தை நிலைநாட்டிவிட்டதைப் போன்று புள‌ங்காகிதம் அடைந்து கொண்டார்கள். வீரமென்றால் எதுவென்றே அறியாத வீண‌ர்கள் அவர்கள். வீரமென்பது உடல் சார்ந்ததோ, ஆயுத பலத்தையோ சார்ந்தது மட்டுமல்ல, அதை யாருக்கு எதிராகப் பயன்படுத்திகிறோம் என்பதில்தான் அதன் உள்ளீடான பொருள் அடங்கியிருக்கிறது. இந்த வகையில் ஏகாதிபாத்திய வல்லூறுகளுக்கு எதிராக வாள் சுழற்றிய மருதுபாண்டியர்கள் தனிப்பெரும் வீரர்கள்! நித்தரையின் மயக்கத்தில் இருந்த கச்சநத்தம் தேவேந்திரகுல மக்கள் மீது அறிவிக்கப்படாத சாதிவெறிப் பயங்கரவாதத்தை நிகழ்த்திக் காட்டிய அந்த சாதிவெறியர்கள் மகா கோழைகள்!

சங்கம் அமைக்கும் உரிமை, அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக 44 உயிர்களை ஈவிரக்கமின்றி எரித்துக் கொன்ற பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு 44 துண்டுகளாக சிதறி மாண்டுப் போனான். ஏனெனில் அறத்திற்கெதிரான வன்செயல் புரிந்த கொடியவர்கள் வீழ்ந்து போனதுதான் கடந்தகால வரலாறு!

- தங்க.செங்கதிர்

Pin It