dalit sankar with his wife kausalya

தருமபுரியில் இளவரசன் - திருச்செங்கோட்டில் கோகுல்நாத் - இன்று உடுமலை அருகே சங்கர்! இன்னும் எத்தனை எத்தனை  உயிர்கள் போகுமோ, எப்போதுதான் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனம் நம்மை விட்டு விலகுமோ என்று நெஞ்சம் பதைக்கிறது.

     சங்கரும், கவ்சல்யாவும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தனர். மனம் ஒன்றியதால் மணம் முடித்தனர். சாதிகள் வேறு என்பதால் பெற்றோர்கள் ஏற்கவில்லை. எட்டு மாதங்களாகத் தனியே வாழ்ந்தனர். இப்போது அந்தப் பெண் கருவுற்றிப்பதாகச் சொல்கின்றனர்.

     கருவுற்ற பெண்களிடம் கனிவோடு நடந்து கொள்வது மனிதப் பண்பாடு. ஆனால் மனித நாகரிகம், மனிதப் பண்பாடு ஆகியனவற்றிற்கு நேர் எதிரான சாதி வெறி இருவரையும் பட்டப் பகலில் வெட்டிச் சாய்க்க முயன்றுள்ளது,  சங்கர் கொல்லப்பட்டார். கவ்சல்யா இப்போது மருத்துவமனையில், உயிருக்குப் போராடியபடி!

     இந்தப் படுகொலை, உடுமலைப்பேட்டைப் பேருந்து நிலையம் அருகில் பட்டப்பகல் இரண்டு மணிக்கு மிக வெளிப்படையாக நடந்துள்ளது. அங்கேயிருந்த  புகைப்படக் கருவியில் அது பதிவாகியுள்ளது. கொலை செய்து முடித்துவிட்டு, நிதானமாகத் தங்கள் வண்டியில் ஏறி அந்தக் கொலைகாரர்கள் செல்வதை நாம் படத்தில் பார்க்க முடிகிறது.

      சாதி வெறியும், செயலற்று இருக்கும் தமிழக அரசின் நிலையும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளன.. வெட்கம் ஒருபுறம், வேதனை மறுபுறம்! கடந்த சில ஆண்டுகளாகவே இவை போன்ற கொடூரங்கள் தமிழ் நாட்டில் நடந்தேறிக் கொண்டுள்ளன. கையாலாகாத அரசும் அதற்கு ஒரு காரணம்.

       இந்தக் காட்டுவிலங்காண்டித் தனத்தையும், கைகட்டி நிற்கும் தமிழக அரசையும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப் பட வேண்டும் என்னும் தமிழகத்தின் குரலை எதிரொலிக்கிறது!

- சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

Pin It