தியாகி இமானுவேல் பேரவையின் நிறுவனத் தலைவர் தோழர் பூ.சந்திரபோசு அவர்களுடன் ஒரு நேர்காணல்
என்னைப் பற்றி...
அன்றைய பிரிக்கப்படாத இராமநாதபுரம் மாவட்டம், இன்றைய சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், வாணி ஊராட்சி, மொச்சியனேந்தல், கிராமத்தில் நினைவில் வாழும் திரு.பூலான், நினைவில் வாழும் திருமதி. மீனாட்சி அம்மாள் ஆகிய இணையர்களுக்கு நான்காவது மகனாக 1955ஆம் ஆண்டு பிறந்ததாகவும், ஆனால் பள்ளிச் சான்றிதழில் 1956-ஆம் ஆண்டு என்றும், பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு சகோதரர்கள், எங்களது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பம். நான் எனது கிராமத்தில் இருந்து தென்மேற்கில் உள்ள பரமக்குடி நகரத்தின் வைகை ஆற்றிற்கும் வடகரையில் உள்ள எமனேசுவரத்தில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நகர்மன்றப் பள்ளியில் படித்தேன்.
9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பரமக்குடி நகரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்தேன்.
இரு ஆண்டு இடைவேளைக்குப் பின்பு மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரியில் புகுமுக (PUC) வகுப்புவரை படித்துள்ளேன்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக மின் கணக்கீட்டாளராகப் பணிபுரிந்து பணி நிரந்தர உத்தரவு வழங்கப்பட்ட பின்பு அப் பணியை விட்டுவிட்டேன். 1948-ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் பணிக்குத் தேர்ச்சி பெற்று அரசுப் பணி உத்தரவு கிடைத்தவுடன் அப் பணியையும் விட்டுவிட்டேன். இடைப்பட்ட காலங்களில் விவசாய வேலைகள் பார்த்ததோடு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக மின்கம்பங்கள் செய்யும் ஒப்பந்தப் பணியிலும் பணியாற்றினேன்.
பெற்றோர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். என் அண்ணன் தொலைதொடர்புத் துறையில் இந்திய அரசில் பணிபுரிந்தார். மற்ற எவரும் அரசுப் பணிக்குச் செல்லவில்லை. மாறாக விவசாய வேலைகளைச் செய்து வந்தனர். பெற்றோர்கள் இருவரும் ஒரு தம்பி உட்பட அண்ணன் இருவரும் இயற்கை எய்தி விட்டனர். என்னுடைய அண்ணன் ஒருவரும், தம்பி ஒருவரும் தனிக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது யாரும் கிராமத்தில் குடியிருக்கவில்லை. பரமக்குடி நகரத்தில் ஒரு பகுதியான எமனேசுவரம் பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.
அரசியலுக்குள் வந்ததற்கான சூழல்...
எங்களின் கிராமத்தில் நான் படிக்கின்ற பொழுது நாற்பது குடும்பத்தினர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அனைவரும் அட்டவணைப் பிரிவில் ஒன்றான பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்களே. ஒரு குடும்பம் மட்டும் வண்ணார் சமூகத்தைச் சார்ந்ததாகும். கிராமச் சூழல் காரணமாகச் சாதியப் பாகுபாடுகள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
எங்கள் கிராமத்தின் தென்பகுதியில் மறவர், கோனார், பள்ளர், அருந்ததியர், வேளாளர், வெள்ளாளர் போன்ற சமூகத்தினர் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வரும் பெரும்பச்சேரி என்ற கிராமம் உள்ளது. இதில் மறவர் மற்றம் கோனார் சமூகத்தினரே பெரும்பான்மையானவர்கள் ஆவர்.
எங்கள் கிராமத்தில் இருந்து பரமக்குடிக்கு அன்றாடம் வயல் காட்டுப் பாதை வழியாகச் சென்று வருவோம். எங்கள் கிராமத்தின் சாலை என்பது பெரும்பச்சேரி கிராமத்தின் இரு குடியிருப்புகளுக்கு ஊடே சென்ற பரமக்குடி நயினார்கோவில் பிரதான சாலையில் இணைந்துள்ளது. மிதிவண்டி, மாட்டு வண்டியில் செல்லுகின்ற பொழுது அச்சாலை வழியேதான் செல்ல வேண்டும்.
பெரும்பச்சேரி கிராமத்தின் வழியே செல்லுகின்றபொழுது அட்டவணைப் பிரிவு சமூகத்தினர் காலில் செருப்பு அணிந்து செல்லவோ, மிதிவண்டியில் செல்லவோ, மாட்டு வண்டியில் மேலிருந்து ஓட்டிச் செல்லவோ அனுமதி இல்லை. தேநீர்க் கடைகளில் தனிக்குவளைதான். எனவே சாதி அடிப்படையிலான அனைத்து வகையான தீண்டாமைப் பாகுபாடுகளும் நடைமுறையில் இருந்து வந்தன.
நான் 8 ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுதியில் இருந்த எனது உடைமைகளை மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு பெரும்பச்சேரி கிராமம் வழியாகச் செல்லும்போது என்னை இறங்கிப் போகச் சொன்னார்கள். நான் வண்டியையும், உடைமையையும், அக்கிராமத்திலேயே போட்டுவிட்டு நடந்தே எங்கள் கிராமத்திற்குச் சென்றேன். அதன்பின்பு என் தந்தையும், மூத்த அண்ணனும் நான் போட்டுவிட்டு வந்த என் உடைமைகளையும், மிதிவண்டியையும் எடுத்து வந்தார்கள்.
இச் சம்பவத்தின் விளைவாகக் கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து சங்கம் ஏற்படுத்தி, தொடர்ந்து சங்கமாகக் கூடி, சந்தா வசூல் செய்து சங்கத்திற்கு நிதி சேர்த்தோம். இளைஞர்களை நகரத்தில் மிதிவண்டி பழக வைத்து, மிதிவண்டியில் பெரும்பச்சேரி வழியாக ஏறி வருவதாக முடிவு செய்து செயல்படுத்தினோம்.
அதில் ஏற்பட்ட சாதிப் பாகுபாடு சம்பந்தமாக இரு கிராமப் பெரியவர்கள் பேசியதில் வழக்கத்துக்கு மாறாக இளைஞர்கள் செய்வது தவறு என்றும், எனவே அதைச் செய்யக்கூடாது என்றும் முடிவானது. இம்முடிவை ஏற்காத இளைஞர்கள் என் தலைமையில் இளையான்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரிலிருந்து காவல் துறையினர் பெரும்பச்சேரி கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக இரு குடியிருப்புகளுக்கிடையே செல்லும் சாலைகளில் செல்வதற்கு மாறாக, வேறொரு வண்டிப் பாதையில் மிதிவண்டியில் ஏறிச் செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இம் முடிவின்படி நாங்கள் பலமுறை திருவிழாக் காலங்களில் பரமக்குடியிலிருந்து மிதிவண்டி எடுத்து வந்து ஓட்டுவது போன்ற நடவடிக்கை தொடர்ந்தது.
1970 ஆம் ஆண்டு பெரும்பச்சேரி கிராமத்தின் தெற்கில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள வைகை ஆற்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்துக் குழாய்கள் பதித்து பெரும்பச்சேரியின் இரு குடியிருப்புகளுக்கும் தலைக்கு ஒரு தரைமட்ட நீர்த்தொட்டியும், எங்கள் கிராமத்திற்கு ஒரு நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டியும் கட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின்மூலம் அரசு அனுமதி வழங்கியது. எங்கள் கிராமத்திற்கான குடிநீர் வாய்ப்பைச் சாதி அடிப்படையில் பெரும்பச்சேரி கிராமத்தினர் தடுத்து விட்டனர்.
1970ஆம் ஆண்டுகளில் தடுக்கப்பட்ட அத் திட்டத்தை 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை சட்டம் நடைமுறையில் உள்ளபோது பரமக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு வார விழாவில் எங்கள் இளைஞர் மன்றத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டு, தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. பெரும்பச்சேரி கிராமத்தினரால் தடுக்கப்பட்ட வைகை ஆற்றுக் குடிநீர் வழங்கும் திட்டத்தை மிகக் கடுமையான தொடர் போராட்டம் மூலம் எங்கள் கிராமத்திற்குத் தண்ணீர் தொட்டி கட்டித் தேக்கிப் பயன்படுத்துவதை நிறைவேற்றினோம்.
ஆனாலும், பெரும்பச்சேரி கிராமத்தின் வழியாக வரும் குடிநீர் குழாயை அவர்கள் அடிக்கடி உடைத்து விடுவதும், நாங்கள் அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டு அவர்கள் சரிசெய்து கொடுப்பதுமான நிலை நீடித்தது. ஒரு கட்டத்தில் அதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் நான் கொடுத்த கடுமையான போராட்ட நெருக்கடியால் சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியர் காவல் துறை உதவியோடு வைகை ஆற்றில் மின்மோட்டார்மூலம் நீர் ஏற்றம் நிலையத்தையே பூட்டுப் போட்டு, சீல் வைத்தனர். அதனை ஒட்டி பெரும்பச்சேரி கிராமத்தினர் குடிநீர்த் தேவையைப் போக்க அன்றாடம் அல்லல்பட்டனர்.
ஆனால், எங்கள் கிராம மக்கள் ஊரை ஒட்டியுள்ள கண்மாயில் தோண்டப்பட்ட கிணற்றுத் தண்ணீர் மூலம் குடிநீர்த் தேவையை நிறைவேற்றிக் கொண்டனர்.
பெரும்பச்சேரி கிராமத்தினர் குடிநீர்த் தேவைக்காக மாவட்ட ஆட்சியரை அணுகி பூட்டுப்போட்டு மூடப்பட்ட நீரேற்றும் நிலையத்தைத் திறந்து தண்ணீர் வழங்கக் கேட்டதோடு எங்கள் கிராமத்திற்குத் தண்ணீர் கிடைப்பதற்கு எவ்விதத் தடையோ, இடையூறோ செய்ய மாட்டோம் எனவும், மீறினால் அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் எனவும் இரு கிராம மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையின் எழுத்துமூலம் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டதன் விளைவாகத் தடை செய்யப்பட்ட தண்ணீர் இரு கிராம மக்களுக்கும் எவ்விதத் தடையும் இன்றி வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான எனது தலைமையிலான மக்கள் போராட்டத்தைக் கேள்விப்பட்டுப் பரமக்குடியில் உள்ள சி.பொ.க.(மா.இலெ) இயக்கத் தோழர்களில் முக்கியமானவர்கள் என்னை எங்கள் கிராமத்தில் வந்து சந்தித்துப் பேசியதன் தொடர்பாகப் பல்வேறு விளக்கங்களைப் பேசி புரிதலின் அடிப்படையில் அவர்களுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். நான் அறிந்த குறைந்த அளவிலான அரசியல் புரிதலின் அடிப்படையிலேயே நான் மேலே சொன்ன மின்வாரிய அரசுப் பணி, வருவாய்த்துறை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் அரசுப் பணிகளைச் செய்ய உடன்பாடற்ற நிலை ஏற்பட்டது.
இவ்வாய்ப்பு தொடர்ச்சியான நான் சமூக அரசியல் இயக்கங்களோடு முற்போக்கு அடிப்படையில் அரசியலில் செயல்பட வாய்ப்பை உருவாக்கிக் கொண்டோம்.
1980-களில் சிபொ.க.(மா.இலெ.) தமிழக மக்கள் முன்னணி, தாழ்த்தப்பட்டோர் உரிமைச் சங்கம் (தாவச) என 1985ஆம் ஆண்டு வரை இயக்கப் பணியாற்றினேன். 1985இல் தா.உ.ச. கலைக்கப்பட்டதுடன், எனக்கும் உரிய காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில் இயக்கத் தொடர்பு நின்று விட்டது.
1985 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை எமனேசுவரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இராமநாதபுரம், சிவகங்கை என இரு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு கிராமங்களை ஒருங்கிணைத்து ஒரு சங்கமாகச் செயல்பட்டு வந்தேன். இச் சங்கத்தில் பள்ளர் சமூகத்தினர் மட்டுமே இணைந்து கொண்டனர். இக் கிராமங்களில் உள்ள அருந்ததியர்கள் மற்றும் பறையர்கள் இச் சங்கத்தில் சேர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் மீதான அச்சமும் தங்களின் பொருளாதாரச் சூழல், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை போன்ற காரணங்களால் மறுத்து விட்டார்கள். வெளியூரில் உள்ள அவர்களைச் சமூகத்தின் முக்கிய நபர்கள் இவர்களை இச் சங்கத்தில் சேர வேண்டாம் என்று அறிவுரையும் வழங்கினர்.
நான்கு ஆண்டுக் காலம் சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும், காவல்துறை நீதியை நிலைநாட்ட மறுக்கும் செயலுக்கும், மற்றும் அரசுத் துறையினர் சாதி அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்குவதில் மெத்தனம் மற்றும் பாகுபாடு காட்டுவதை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராட்டங்கள் நடத்தினேன். அதன் விளைவாக ஆதிக்கச் சாதிகளிடம் இருந்தும், காவல் துறையினரிடமிருந்தும், பள்ளர் சமூகத்தில் அரசியல் செல்வாக்குள்ள சுயநலவாதிகளிடமிருந்தும் தொடர்ச்சியாக எனக்கு நெருக்கடிகள் தொடங்கின. அதன் காரணமாக இயக்கம் உருவாக்குவது, அதன் அடிப்படையில் முற்போக்கு மற்றும் சனநாயகச் சக்திகளோடு அரசியல் உறவுகளை வளர்த்துக் கொள்வது எனும் முடிவுக்கு வந்தேன்.
இக் காலக்கட்டத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த வளர்ப்பு மகள் பள்ளர் இனத்தைச் சேர்ந்த இளைஞனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், வளர்ப்புப் பெற்றோர்கள் தம் வளர்ப்பு மகளை கணவனிடம் இருந்து பிரிக்க முயன்று சில கூலியாட்களை வைத்து வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொண்ட பள்ளர் இனத்தைச் சார்ந்த இளைஞரைக் காணாமல் ஆக்கி விட்டனர். சுமார் ஒரு ஆண்டுக்குப் பின்பு அந்த இளைஞன் தன் துணைவியின் வளர்ப்புப் பெற்றோர்களால் ஆள் வைத்துக் கொலை செய்யப்பட்ட செய்தி தெரிய வந்தது. அது சம்பந்தமாக என் தலைமையில் சில இளைஞர்கள் துணையுடனும் காவல்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுச் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
இச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பள்ளர்களில் சிலர் தங்கள் சுயநலத்திற்காகத் தங்களுக்கு வேண்டாத சுமார் 10 பறையர் குடும்பத்தினரின் வீடுகளை அடித்து நொறுக்கி அவர்களை வீட்டைவிட்டு விரட்டி ஊரைவிட்டே ஓட வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, குற்றச் செயலைச் செய்தவர்களைக் கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டது. இவ்வாறான பள்ளர், பறையர் முரண்பாடுகள் சில சுயநல சக்திகளால் பெரியதாக ஆக்க விடாமல் தடுக்கப்படக் கூடுதலாக இயக்கமாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதன் விளைவாகத் தியாகி இமானுவேல் பேரவை தொடங்கப்பட்டது.
நான் பரமக்குடி வட்டார பள்ளர் சமூக இளைஞர்களைத் திரட்டிக் கூட்டம் போட்டுப் பரமக்குடியில் இரு சமூக மக்களுக்குள் எந்தவித பகையுமில்லை என்பதைப் புரிய வைத்து, பதட்டத்தைத் தணித்ததுடன் இளைஞர்களைத் திரட்டி இயக்கமாகச் செயல்பட முடிவு செய்த பொழுது அதில் சிலர் இயக்கத்திற்கு “தேவேந்திர குல வேளாளர் இளைஞர் பேரவை” என்ற பெயரையே வைக்க வேண்டும் எனக் கோரினர்.
அப் பெயரில் உடன்பாடில்லாத நான் சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரனைப் பற்றியும் அவரின் சமூக, அரசியல் பணிகளோடு இறுதியாக ஆதிக்கச் சாதிவெறிக் கொடுமையில் முப்பத்து மூன்றே வயதில் படுகொலை செய்யப்பட்டதையும், அதன் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் சாதியக் கலவரங்கள் நடந்ததைப் பற்றியும் எடுத்துக் கூறி, இறுதியாகச் சமத்துவப் போராளியாகவும், தீண்டாமை சாதி ஒழிப்புப் போராளியாகவும், களப் பணியாற்றி வீரமரணம் அடைந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் பெயரையே இயக்கப் பெயராக வைத்துக் கொள்ளலாம் எனக் கூறினேன்.
அதை ஏற்று முடிவிற்கு வந்ததால் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தியாகி இமானுவேல் பேரவையை ஆரம்பித்தேன். பேரவையின் முதல் நிகழ்வாக, தியாகியின் 33ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.
தியாகி இமானுவேல் சேகரன் வாழ்வு...
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமத்தில் சேது வாத்தியார் என்ற வேதநாயகத்திற்கும் ஞானசௌந்தரி என்ற இணையர்களுக்கும் 1924 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் நாளில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் இமானுவேல்.
பரமக்குடி (TELC) என்ற கிருத்துவ தொடக்கப் பள்ளியில் ஆரம்பப் பள்ளிப் படிப்பையும், இராமநாதபுரம் சுவார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் முடித்தவர். உயர்நிலைக்கல்வி படிக்கும்போதே தனது தந்தையுடன் “வெள்ளையனே வெளியேறு” என்ற நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்படுத்தப்பட்டவர்.
இவர் நேதாசியின் இந்தியத் தேசிய இராணுவப் படையில் சேர முயன்று அது முடியாமல் போன நிலையில் அண்ணல் அம்பேத்கரின் வானொலி உரை அறைகூவலின் விளைவாக இராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றி அவில்தார் என்ற பதவியில் பணியாற்றியவர்.
இவர் இராணுவத்தில் பணிபுரிகின்ற காலத்தில் அவர் பிறந்த கிராமத்திலும், சுற்றுவட்டார கிராமங்களிலும், சாதிவெறி, தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடியதை அறிந்து அக் கொடுமைகளைக் களைந்தெறியும் இலட்சியத்தோடு, இராணுவப் பணியைத் துறந்து சமூகப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
இவரது தீண்டாமை ஒழிப்பு, ஆதிக்கச் சாதி எதிர்ப்புப் போராட்டம், பள்ளர் சமூக மக்களுக்காக மட்டும் அல்லாது சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து வகுப்பினரின் உரிமைகளுக்காகவும் செயல்பட்டார். அதன் அடிப்படையில் அவர் ஒடுக்கப்பட்டோர் உரிமைக் கழகம் என்ற பெயரில் மக்கள் அமைப்பாகத் திரட்டிச் செயல்பட்டு வந்தவர். அப்பொழுது அப் பகுதியில் பள்ளர்கள், பூவைசிய இந்திரகுல வேளாளர் என்றும், தேவேந்திரகுல வேளாளர் என்றும் சாதிச் சங்கப் பெயர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் அறியாமையைப் போக்குவதும், அச்சத்துடன் வாழ்ந்து வருபவர்கள் சாதியக் கொடுமைகளுக்குத் தங்களின் தலைவிதியே காரணம் என எண்ணி வந்ததையும் தகர்த்து, புரிதலோடும் துணிச்சலோடும், சுயமரியாதையோடும், வாழ உணர்வூட்டியவர். ஒவ்வொரு கிராமத்திலும், திடகாத்திரமான உடல் அமைப்புள்ள இளைஞர்களுக்கு முறையான தற்காப்புப் பயிற்சிக் கலைகளைக் கற்றுக் கொடுத்து உள்ளத்தில் துணிச்சலை ஏற்படுத்தி ஆதிக்கத்திற்கு எதிராகவும், மக்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும் செயல்பட வைத்தவர். தீண்டாமை ஒழிப்பு மாநாடு, இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாடும், கோவில் வழிபாட்டில் சமஉரிமை கோரும் போராட்டங்களையும் நடத்தியவர்.
தேக்கம்பட்டி பாலசுந்தரராசு (தேனி மாவட்டம்) என்ற தலைவருடன் உறவு கொண்டு அவர் வழியாக அன்றைய காலத்தில் மதுரை வந்த அண்ணல் அம்பேத்கரை நேரில் சந்தித்து இங்கு நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி விளக்கியவர்.
திடகாத்திரமான உடல்வாகும், இராணுவ அதிகாரி என்ற பதவி இருந்ததும், தமிழ் மொழியுடன் இந்தி ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் இருந்ததால், அரசு அதிகாரிகளிடம் மக்கள் படும் கொடுமைகளைக் களையவும், சாதி வெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், போராடியவர். தீண்டாமை ஒழிப்பு - சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம் என்ற சமூக நீதிக்கான நிலையைப் புரிந்து போராடி வீர மரணம் அடைந்தவர்.
ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சிக்கான அடையாளம், 1956 டிசம்பர் 6-இல் அண்ணல் அம்பேத்கர் மறைவையொட்டி பரமக்குடியில் இரங்கல் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியவர்.
பார்ப்பனிய இந்துத்துவ சமூகக் கட்டமைப்பு, மனுதர்மத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத் தத்துவம் காரணமாக சாதிகளுக்குள் தமிழ்த் தேசிய எல்லைக்குள் இனரீதியாகவும், பல்வேறு வேலைப் பிரிவுகளைக் கொண்ட குழுக்களாகவும், வாழ்ந்து வந்தனர். முற்காலங்களில் சாதி, இறை நம்பிக்கை, மதங்கள், வழிபாடு, பூஜை, புனஸ்காரங்கள் எவையும் இல்லாமல் இன அடிப்படையிலே வாழ்ந்து வந்தனர்.
ஆரிய வருகை, பார்ப்பனிய இந்துத்துவம், மனுதர்மம் என்ற பெயரில் தமிழகச் சமூக மக்களைப் பல்வேறு சாதிகளாக வகைப்படுத்தினர். அச் சாதி மக்களில் ஒருவருக்கு கீழ் ஒருவராகவும், ஒவ்வொரு பிரிவினருக்கும் சாதியத் தொழில்களைக் கட்டமைத்து நடைமுறைப்படுத்தினர். மேலும், புனிதம், தீட்டு, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரித்ததோடு தீண்டாமை, அண்டாமை எனக் கொடுமையான முறையில் சமூக மக்களைப் பிரித்ததோடு ஒன்றின்கீழ் ஒன்றாக வகைப்படுத்தி ஏற்க வைத்து நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் பிறப்பதென்பது அவரவர் தலைவிதி. இதை மீறுவது ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய துரோகம் எனக் கடவுளின் பெயராலும் சாத்திரங்களின் பெயராலும் பிரித்து, ஏற்க வைத்து நீண்ட நெடிய காலங்களாக நடைமுறைப்படுத்தியும், பாதுகாத்தும் வருகின்றன. இவ்வாறான பார்ப்பனிய நலனுக்கான இந்துத்துவ மனுதர்ம கட்டமைப்பின் மூலம் சாதியக் குமுகங்களிடையே கலப்பு ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காகவே திட்டமிட்டு அகமணமுறை என்ற சுயசாதி திருமணத்தை ஏற்படுத்தியும், அதை நியாயப்படுத்தியும், அதை மீறுவது குமுகக் குற்றம், தண்டிக்கப்பட வேண்டியது என்ற வகையில் சாதியத்தைப் பாதுகாத்து வருகின்றன.
இச் சாதியக் கட்டமைப்பை நான்கு வர்ணங்களாக்கி மக்களைப் பிரித்தனர். இவ் வர்ணமுறையை ஏற்க மறுத்த கூட்டத்தினரை வர்ணமற்றவர்களாக்கி, அவர்களைச் சண்டாளர்கள் எனவும், தீண்டத் தகாதவர்கள் எனவும், தொடவோ, பார்க்கவோ தகுதி அற்றவர்கள் எனவும் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக ஒதுக்கி வைத்தனர்.
இவர்களுக்கு உடைமை மறுக்கப்பட்டு ஆயுதங்கள் மற்றும் கல்வியை மறுத்ததுடன் ஏனைய நால்வர்ணக் கூட்டத்தினர்களுக்கான இழிவான வேலைகளைச் செய்ய வைத்தனர்.
இக் கொடுமையால் பல ஆயிரம் ஆண்டுகாலமாக அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டப்பட்டவர்கள், பல்வேறு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும், சமூக மாற்றத் தலைவர்களாலும், வெள்ளையர்களின் ஆட்சி அதிகாரத்தாலும், மாற்றங்கள் தோன்றின. அதன் விளைவு ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் மனித மாண்பிற்காகவும், சம உரிமைக்காகவும், பொருளியல் உரிமைக்காகவும், விழிப்புணர்வு பெற்று, கிளர்ச்சிப் போராட்டம் மற்றம் தற்காப்பிற்காக எதிர்தாக்குதல் என முன்னேறினர்.
இவ்வாறான போராட்டங்கள் மனுதர்ம வர்ணக் கோட்பாட்டின்படி தீண்டத்தகாதவர்களைவிட மேலானவர்களாக என்னும் சூத்திர சாதிப் பிரிவினர்களை ஏற்க மறுப்பதுடன் அவர்களைக் கொடூரமாக ஒடுக்குவதும் உடைமைகளை நாசப்படுத்துவதுடன் கொள்ளையடித்துச் செல்வதும், ஊனமாக்குவதும், தேவைப்பட்டால் உயிரைப் பறிப்பது, குடிநீரில் கழிவுகளையும், நஞ்சையும் கலப்பது என்ற சாதிவெறிச் செயல்கள் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
இவ்வாறான அடக்குமுறைகளை எதிர்த்து இமானுவேல் சேகரன் மக்களை இயக்கமாகத் திரட்டிப் போராடி வந்தார்.
குறிப்பாக முதுகுளத்தூரின் தென்மேற்குப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் ஆப்பநாடு என்னும் மறவர் கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் முத்துராமலிங்கத் தேவர். இவர் தன் தந்தை, தாத்தா, பாட்டனார்களைப் போன்று அல்லாமல் கல்வி கற்றவராகவும், ஆங்கில அறிவுள்ளவராகவும், நாட்டுப் பற்றுள்ளவராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் விளங்கினார்.
இவர் தன்னைக் காங்கிரசு பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். இவரைவிடச் சாதியாலும், கல்வியாலும் பின்தங்கிய காமராசர் காங்கிரசு கட்சித் தலைவர், தமிழக முதல்வர் எனப் பதவி பெற்று வந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத முத்துராமலிங்கம் மேற்கு வங்கத்தில் நேதாசி சுபாசு சந்திரபோசால் ஆரம்பிக்கப்பட்ட “பார்வர்ட் பிளாக்” என்ற இடதுசாரி சித்தாந்த கட்சியை, வலதுசாரி சித்தாந்தத்துடன் தமிழகத்தில் காங்கிரசு கட்சிக்கு எதிராக ஆரம்பித்து அதன்மூலம் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு, தனது கட்சி சார்பில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதுடன் பட்டியல் வகுப்பினரில் தனது கட்சியையும், கொள்கைகளையும் ஏற்றுக் கொண்ட விசுவாசமான பள்ளர்களில் சிலரைத் தேர்தலில் நிற்க வைத்தார். அக் கட்சியின் சார்பில் மொட்டையன் குடும்பன் போன்றோரைச் சட்டமன்ற உறுப்பினராக்கினார்.
இவர் பெரும் தலைவராகவும், மூர்க்கமானவராகவும், விளங்கிய காலங்களில், தங்கள் சமூகத்தினர் செய்து வரும் சாதிய அடக்குமுறைகளையோ ஒடுக்கப்பட்ட மக்களின் குடிநீரில் விசம், மலம் கலந்து பாழ்படுத்துவதைத் தடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை.
மேலும் தன் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஓட்டுப் போடாதவர்களை, அவரின் விசுவாசிகள் தாக்குவதை தடுத்ததாகத் தெரியவில்லை. பள்ளர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர், காங்கிரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடுபவர்களாக இருந்தனர்.
தங்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்துக் கேட்ட இளைஞர்களை அமைப்பதாகத் திரட்டி, தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராய் களப் போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தி வந்த இமானுவேல் சேகரனைத் தலைவராக ஏற்றுக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் குறிப்பாகப் பள்ளர் சமூகத்தினர் திரண்டனர். இமானுவேல் தன்னைக் காங்கிரசுப் பேராயக் கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்பட்டதால் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பள்ளர்கள் காங்கிரசு கட்சியின் வேட்பாளர்களுக்கே தங்கள் வாக்குகளைப் போட்டு வந்தனர்.
இச் செயல் பார்வர்ட் பிளாக் கட்சியினருக்குப் பெரும் ஆத்திரத்தையும், கோபத்தையும், பள்ளர் சமூகத்தினர் மீதும், இமானுவேல் சேகரனார் மீதும் ஏற்படுத்தியது. அதன் விளைவாகக் கிராமங்களில் பள்ளர், மறவர் மோதல் பெரும் அளவிலும் விரிந்த தளத்திலும் நடைபெற்றன.
முதுகுளத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவிற்குப்பின், மக்களிடையே ஏற்பட்ட மோதலைப் பதட்டத்தைத் தணிக்கும் திட்டத்திலேயே 1957 செப்டம்பர் 10ஆம் நாள் முதுகுளத்தூரில் அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர், திரு.பணிக்கர் (IAS) அவர்கள் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரசுக் கட்சித் தலைவர்கள், பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அக் கூட்டத்தில் முத்துராமலிங்கம் பேசும்போது காங்கிரசுக் கட்சியும், நாடார்களும், பள்ளர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து மறவர்கள்மீது தாக்குதலை நடத்த வைத்தனர் என்றார். அதை மறுத்த இமானுவேல் மறவர்கள்தாம் எங்கள் கிராமங்களில் தாக்குதலை நடத்தி உடைமைகளைத் தீயிட்டும் கொள்ளையடித்தும் சென்றனர் எனத் தனது தரப்பு நியாயங்களைத் துணிச்சலாகக் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.
இதையட்டி 1957 செப்.11 ஆம் நான் இமானுவேல் சேகரனைப் பரமக்குடியில் இரவு நேரத்தில் ஒரு கும்பல் கொடிய ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் வீரமரணம் அடைந்தார். இக் கொலை என்பது சாதிவெறி வன்மத்துடனேதான் நடத்தப்பட்டது.
அமைதிப் பேச்சு வார்த்தை...
1957 இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரசுக் கட்சி மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பதை ஒட்டியே பெரும் கலவரங்கள் ஏற்பட அதைத் தடுத்து நிறுத்தி, சுமூகத் தீர்வு காணவே நடத்தப்பட்டதால் - இமானுவேல் சேகரன் கொலை அரசியல் அடிப்படையில் நடந்தாகப் புலப்படுகின்றது.
இம்மானுவேல் சேகரனாரின் வீரவணக்க நினைவுப் பேரணி, ஜெயந்தியாக சடங்குகளோடு நடத்தப்படுவது...
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிர்நீத்த கொடுஞ்சிறைத் தண்டனைகள் அனுபவித்த தேசபக்த தலைவர்களை அவர் பிறந்த சாதியை மட்டும் கணக்கில் எடுத்துக் காண்டு தங்கள் சாதித் தலைவராகச் சித்தரிப்பதும், அவர்களுக்குப் பிறந்த நாள், இறந்த நாள்களுக்கு விழா எழுப்பதும் நடைபெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் முத்துராமலிங்கத் தேவரைக் கடவுளாகச் சித்தரித்து பூசை நடத்துவது, முளைப்பாரி எடுப்பது, மொட்டை போடுவது, பால்குடம் எடுப்பது என்ற சடங்குகளோடு, அம் மக்கள் அவரின் பிறந்த, நினைவுநாள் விழாக்களைக் கொண்டாடி வருகிறார்கள்.
நீண்ட நெடிய நாட்களாகப் பல்வேறு சாதிய அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பெருவாரியாக மறவர்களால் பாதிக்கப்பட்ட பள்ளர்கள், அவ் அடக்குமுறைகளை எதிர்த்து அந்தந்தப் பகுதி மக்கள் போராடி வந்தனர்.
அப்படிப்பட்டச் சூழலில் ஒரு பகுதி முழுக்க மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி ஒரு தலைமையின் கீழ்ப் போராடியது என்று மாவீரன் இம்மானுவேல் சேகரனின் களப் போராட்டமே முதலில் அமைந்தது. அப் போராட்டத்தில் காலத்தில் மக்களைத் திரட்டி, அவர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமையைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தித் தீண்டாமைக்கு எதிராக, தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியதும் மற்றும் பெரிய அளவிலான மக்களைத் திரட்டி மாநாடு நடத்தியதும், இம்மானுவேல் சேகரனே முதன்மையானவர்.
இம்மானுவேல் சேகரனின் வீரம் செறிந்த மக்கள் இயக்கப் போராட்டம் சுமார் மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் அத் தலைவர் 33 வயதே ஆன இளம் தலைவரே. சாதி ஆதிக்கவெறி அவரின் உயிரைப் பறித்தது என்பது, பள்ளர் சமூகத்தை மட்டுமல்லாது சமத்துவத்தை விரும்பும் சனநாயகச் சக்திகளையும், நியாய உணர்வுள்ளவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் முதலமைச்சர் தலைமையிலான சட்டமன்றமும், அவரது படுகொலையைக் கண்டித்தது. கூடுதலாக அன்றைய இந்திய நாட்டின் பிரதமரான சவகர்லால் நேரு அவர்களும் இக் கொலையைக் காட்டுமிராண்டிச் செயல் என்று அகில இந்திய வானொலி மூலம் கண்டித்தார். இவ்வாறான சூழலில் மாவீரன் இம்மானுவேல் சேகரனை ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாகப் பள்ளர்கள் தலைவராக மட்டுமல்ல கடவுளாகவும் சமூக விடுதலைக்கு வித்திட்டவராகவும், பார்ப்பதோடு ஏற்றியும், போற்றியும் வருகின்றனர். அதன் அடிப்படையில் அவரைக் கடவுளாகப் பாவித்து செயந்தியாக்கி முளைப்பாரி, பால்குடம் எடுத்தல், மொட்டை போடுதல் போன்ற வழிபாடுகளை நினைவு நாள்களில் நிகழ்த்தி வருகின்றனர்.
தியாகி இம்மானுவேல் பேரவையைப் பொறுத்தளவில் செயந்தி, சடங்கு, சம்பிரதாயம், வழிபாடுகளை முற்றிலுமாக மறுதலிப்பதோடு, மாவீரன் நினைவுநாள் சாதிய அடக்குமுறைகளைத் தகர்த்தெரிந்து சாதிய ஒழிப்பு, சமூகநீதி என்ற இலட்சியத்திற்கான எழுச்சி நாளாகவே ஏற்று மக்கள் மத்தியிலே சமூக அரசியல், பொருளியல் விடுதலை உணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.
ஆண்ட பரம்பரைச் சாதிகள் என பறைசாற்றுவது குறித்து...
இக் கருத்தில் தியாகி இம்மானுவேல் பேரவையினருக்கு துளியேனும் உடன்பாடு இல்லை. ஆண்ட பரம்பரை என்று வருகிறபோது அரசன் என்பவன் தன் மக்களை அடக்கி வைப்பதும், அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதும் மன்னர் தருமமாகும். கூடுதலாகச் சனநாயகம் (மக்கள் நாயகம்) என்பதற்கு எள் முனையிலும் இடமில்லை. அரசனின் எவ்வகையான உத்தரவுகளாக இருந்தாலும் அவ் உத்தரவுகளை அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்; நடக்க வேண்டும். மீறினால் சிறைவாசம் மற்றும் கொடும் தண்டனை உண்டு. மேலும் அரசனாக இருப்பவரின் மூத்த மகன் மட்டுமே அடுத்த அரசர் பதவியை ஏற்கத் தகுதியானவன். அரசன் பெற்ற பிள்ளையானாலும் மற்ற பிள்ளைகளுக்கு அந்தத் தகுதி இல்லை.
கூடுதலாக உலக நாடுகளில் பெரும்பாலும் முடி மன்னர் ஆட்சி இல்லை. அதிலும் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும், மன்னர் ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டதுடன் படை, பரிவாரங்கள், கோட்டை, கொத்தளங்கள் என ஏதும் இல்லை. மாறாக மக்களே வாக்களித்து, தங்களுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, இந்நாட்டை ஆட்சி செய்வது என்பதற்கான அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஆன சனநாயக நாடாக உள்ளது.
தற்பொழுது நமது சனநாயகம் என்பது சாதி, மதங்களைப் பிரதானமாக நடைமுறைப்படுத்துகிறதாகவும், மக்களின் வளங்களை, தேசிய இனங்களை ஒடுக்குவதுடன், தேசிய இயற்கை வளங்களைச் சூறையாடுவதும், வல்லாதிக்கத்திற்குத் துணை செய்வதும், ஆரிய பார்ப்பனிய இந்துத்துவம் மூலம் தொடர்ச்சியாகத் தங்களின் அரசியல் அதிகாரத்தைச் செயல்படுத்தி வருவதுமான மக்கள் விரோத சனநாயகம் மட்டுமே இன்று நடைமுறையில் உள்ளது.
பள்ளர் (தேவேந்தி வேளாளர்) சமூகத்தினரைப் பட்டியல் இனப்பிரிவில் இருந்து நீக்குவது சம்மந்தமாக...
பார்ப்பனிய இந்துத்துவ சாதியக் கட்டமைப்பில் சமூக அரசியல், பொருளாதார, கலாச்சார ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கே இடஒதுக்கீடு என்ற சமூகநீதி கோட்பாடு, பிரிட்டீசார் ஆட்சிக் காலம் முதல் உள்ளது. குறிப்பாக 1950இல் இந்தியத் துணைக்கண்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களால் வடிவமைத்துக் கொடுக்கப் பட்ட இந்திய அரசியல் சாசனம், இட ஒதுக்கீடுகளை வழங்கிப் பாதுகாத்து வருகிறது.
பள்ளர் சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குறிப்பாக அரசியலில் உள்ள இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 20% விழுக்காட்டுக்குக் குறைவானர்களே முன்னேறி உள்ளனர்.
ஒன்றிரண்டு விழுக்காட்டுக்குக் குறைவான எண்ணிக்கையில் உள்ள பள்ளர்கள், உயர்கல்வி, அதன் வழியாக உயர்பதவி பெற்று பள்ளர் குமுகத்தில் பெரும் வசதி வாய்ப்பு உள்ளர்வர்களாக வளர்ந்துள்ளனர். இவர்கள் ‘கார்’ மற்றும் பங்களாக்களோடும் பெறும் வசதி வாய்ப்புகளோடும் வாழ்ந்து வருவதோடு தங்களுடைய பிள்ளைகள் பெற்ற இடஒதுக்கீட்டு உயர்கல்வி மூலம் வெளிநாடுகளில் உயர்பதவிகளில் அமர்ந்து இலட்சக் கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்கள். ஒரு சிலர் தேர்தல் அரசியலில் பதவிகளைப் பெற்று அதன் மூலம் பணம் மற்றும் புகழ் அடைந்துள்ளார்கள். இவர்களைப் போன்ற ஒரு சிறிய கும்பல் இடஒதுக்கீடு தங்களுக்குத் தேவை இல்லை என்ற நிலையில் இடஒதுக்கீடு என்பது இழிவானது என்றும், பள்ளர் குமுக மக்களுக்கு இடஒதுக்கீட்டைவிட சாதியப் பெருமையே முதன்மையானது என்ற கருத்தை உருவாக்கி அக் கருத்தைப் பார்ப்பன இந்துத்துவ சக்திகளின் துணையோடு வெகுமக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.
பட்டியலிலிருந்து, வெளியேற்றம் என்ற கருத்து என்பது பெருவாரியான குமுக மக்களை மீண்டும் குமுக அரசியல், பொருளியல், கல்வி மற்றம் வேலை வாய்ப்பைப் பெற விடாமல் அம் மக்களைப் பாதாளத்திற்குத் தள்ளும் சூழ்ச்சியாகும். சாதிய குமுகம் மற்றும் சுயசாதி திருமணங்கள் நீடிக்கும்வரை சாதிய முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படுவதை எக்கொம்பனாலும் தடுக்க முடியாது. மாறாகச் சாதி அமைப்பை வலுவாகப் பாதுகாக்கும். பட்டியல் வெளியேற்றம் என்ற சொல் சாதியம் நீர்த்துப் போக வைக்காது என்ற புரிதலில் தியாகி இமானுவேல் பேரவையினர் உறுதியாக உள்ளனர்.
சாதி ஒழிப்புப் போரில் இடைநிலைச் சாதிகள்...
இந்தியத் துணைக்கண்டம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்துச் சாதிகளும் பார்ப்பனிய இந்துத்துவத்தை நீண்ட நெடிய காலங்களாகத் தங்களின் அன்றாட வாழ்வியல் முறையில் பிரிக்க முடியாத அளவில் இரண்டறக் கலந்து விட்டனர். சாதிய உணர்வு ஒவ்வொரு மனிதர்களிடமும் ஓடுகின்ற குருதியிலேயே கலந்து விட்டது.
ஒவ்வொரு சாதியினரும் தங்களின் சாதியின் பெருமைகளைப் பேசிப் பாதுகாத்து வருவதுடன் தங்களைவிட மேலான சாதிகளைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்குக் கீழே ஒரு சாதி உண்டு என்றும், நாம் அவர்கள் முதுகிலே சவாரி செய்யலாம் எனக் கருதுவதோடு, பழக்க வழக்கங்களைச் சாதி அடிப்படையில் கடைப்பிடித்து, அதன்வழி வாழ்ந்து வருவதுமான நிலையை நீடிக்கச் செய்ய வேண்டும். இதை மீறும் அல்லது மறுதலிக்கும் சாதிகளை நாம் அடக்கி ஒடுக்கி வைக்கலாம் என்பதும் இதற்கான மேலாதிக்க உரிமைகளைத் தங்களுக்குச் சாதிய சமூக அமைப்பு வழங்கியுள்ளது என எண்ணி ஏற்று செயல்படுத்தியும் வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தங்களின் சாதிய அதிகாரப் பலத்தால், குமுக, அரசியல் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் வழிப்பட்ட சாதிய பழக்க வழக்கங்களையும் பாதுகாத்து செயல்படுத்தி வருவதுடன், இந்துத்துவப் பார்ப்பனியச் சாதிய குமுக அமைப்பின் அரண்களாகவும் அடியாட்களாகவும், செயற்பட்டு வருகின்றனர். இச் சாதியினர் மண்டலம், மண்டலமாகப் பெரும்பான்மை எண்ணிக்கையுடன் வாழ்ந்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் தென்பகுதியில் கள்ளர், மறவர், அகமுடையார் என்ற முக்குலத்தோரும் மேற்குப் பகுதியில் கவுண்டர்கள் என்ற பொதுச் சொல்லால் அழைக்கப்படுகின்ற பல்வேறு பிரிவு கவுண்டர்களும், வடபகுதியில் வன்னியர் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுகின்ற இருபதிற்கும் மேற்பட்ட பிரிவினரைக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து வரும் ஆதிக்கச் சாதிகள் தமிழக அரசியல், அதிகாரங்களையும் அரசு சார்ந்த அனைத்து வகையான நலத்திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படும் ஒப்பந்தங்களையும் கைப்பற்றி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் எந்தச் சாதியினர் பெரும்பான்மை எண்ணிக்கையுடனும், பொருளாதார முன்னேற்றத்துட னும் வாழ்ந்து வருகிறார்களோ, அவர்களே சாதி ஆதிக்கம் செய்பவர்களாகவும் உள்ளனர்.
மேலும், எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சாதிய குமுக அமைப்பில் உயர் சாதியினராகவும், மேல்சாதியினராகவும், வாழ்ந்து வருபவர்கள் “பாரம்பரியம்” என்ற பெயரில் சாதியப் பழக்க வழக்கங்களைப் பாதுகாத்தும் செயல்படுத்தியும் வருகின்றனர்.
ஆதிக்கச் சாதிகள், சாதிய ஆதிக்கவாதிகளின் உயர்சாதியினர், மேல்நிலைச் சாதியினர் என அனைவரும் சாதிய அமைப்பை மிகக் கடுமையாகப் பாதுகாத்து வருகின்றனர்.
சாதியடிப்படையில் உரிமைகள் மறுக்கப்படுவதுடன் மனித சமத்துவத்திற்காகவும் போராடுகிற ஒடுக்கப்பட்ட சாதியினரை ஆதிக்கச் சாதியினர்கள் பரந்த அளவிலும், ஆங்காங்கே சாதிய ஆதிக்கவாதிகள் ஒடுக்கப்பட்டவர்களை மிகக் கொடூரமாகத் தாக்கியும், அடக்கியும், ஒடுக்கியும் வருகின்றனர்.
இவ்வாறான சாதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் சாதி ஒழிப்பிற்குத் துணை நிற்கின்றனர். குறிப்பாக இடதுசாரிகளிலும் பெரியாரியவாதிகளிலும், தமிழ்த் தேசியவாதிகளிலும், சாதி ஒழிப்பிற்கான செயல்பாட்டாளர்கள் உள்ளனர்.
தென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்...
தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஒடுக்கப்பட்ட குமுகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் தேவேந்திரகுலம் என்ற பள்ளர்களும், ஆதிதிராவிடர் என்ற பறையர்களும், அருந்ததியர் பிரிவினரும், ஒடுக்கப்பட்டவர்களுள் மிகவும் பெரும்பான்மையினர்.
குறிப்பாகத் தேவேந்திரர் என்ற பள்ளர்கள் தென்மாவட்டங்களில் மிகுந்த எண்ணிக்கையிலும், கொங்கு மண்டலத்திலும், சோழ மண்டலத்திலும், பகுதி பகுதியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என்ற அடிப்படையில் அப்பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர். ஆதி திராவிடர்களும், அருந்ததியரும், தென் மாவட்டங்களில் எண்ணிக்கையில் குறைவாக வாழ்ந்து வருகின்றனர். ஆதி திராவிடர்களில் பெரும்பாலானவர்கள் கூலி விவசாயிகளாக உள்ளனர். அருந்ததியர்களில் கூலி விவசாயிகள் குறைவாகவும், மிகுதியாக உடல் உழைப்பின்மூலம் வருமானம் ஈட்டுபவர்களாகவும் உள்ளனர். ஒடுக்கப் பட்டவர்களில் பெரும்பான்மையான அருந்ததியர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேவேந்திர குலத்தினர் பெரும்பாலானவர்கள் சிறிய எண்ணிக்கையில், நில உடைமையுடன் வேளாண்மை செய்து வருகிறார்கள். மிகக் குறைவானவர்களே கூலி விவசாயிகளாக உள்ளனர். கூடுதலாக நாயக்கர் ஆட்சிக் காலத்திற்கு முன்புவரை பெரும் நிலவுடைமையாளராக வாழ்ந்து வந்தனர். இவர்கள் மற்ற குமுகத்தினரைச் சார்ந்து வாழ வேண்டிய சூழல் இல்லை. மேலும், அரைநூற்றாண்டு கால கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், பொருளாதார முன்னேற்றத்தால் தங்கள் பொருளாதாரத்திலும் வாழ்வியல் முறையிலும் மாற்றம் ஏற்பட்டதாலும், உடல் பலத்தாலும், சாதிய அடக்குமுறைகளை மூர்க்கமாக எதிர்ப்பதுடன் கிராமப்புற அதிகாரங்கள், அரசு ஒப்பந்தங்கள் போன்றவற்றில் தங்களுக்குரிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதில் முனைப்பாகவுமுள்ளனர்.
இப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதிகள் என்ற இடைநிலை சாதிகளும், சாதி ஆதிக்கவாதிகளும் இவர்களை உடல் பலத்தால் எதிர்க்க முடியாமல் ஆயுதபலம் கொண்டு ஒடுக்க முனைகிற பொழுது, பள்ளர்களும் அவர்களை ஆயுத பலத்துடன் எதிர்தாக்குதல் நடத்தி அழிக்கின்றனர். அடக்குமுறைக்கு அடக்குமுறை, பழிக்குப் பழி என எதிர்ப்பதில் உறுதியாக உள்ளனர். பாதிப்பு ஏற்படுகிற பொழுது அன்றாட வாழ்க்கையில் பொருளியல் நெருக்கடிகள் ஏற்படுவதில்லை. மேலும் தென்தமிழகத்தில் தொழில் வளங்கள், நீர்வளங்கள், இல்லை. பெருவாரியான கிராமங்களில் விவசாயம் பொழிகின்ற மழையை நம்பியே செய்யப்படுகிறது. பெரும்பான்மையான பகுதிகளில் விவசாயம் என்பது ஒருபோக சாகுபடி மட்டுமே. வேலைவாய்ப்புகள் குறைவு. எனவே இக் காரணங்களால் சாதிய வன்முறைகள் பெருகி வருகின்றன.
வட மாவட்டம், மேற்கு மாவட்டங்களில் வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர், அருந்ததியர்கள் சாதி அடக்குமுறைகளை எதிர்த்து, எதிர்த்தாக்குதல் நடத்துவது என்பது மிக, மிகக் குறைவு. இவ்விரு பகுதிகளிலும் உள்ள ஆதிக்கச் சாதிகள், தென் மாவட்ட ஆதிக்கச் சாதிகளைப் போன்று மூர்க்கமானவர்கள் இல்லை. இவ்விரு பகுதிகளில் நகர்மையம், தொழில்வளம், வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பெரியாரின் போராட்டமும், ஒடுக்கப்பட்ட மக்களும்...
நால்வர்ண சாதி அமைப்பில் சூத்திரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என இன்றைய பிற்படுத்தப்பட்ட சாதிகளும், கடுமையான பாகுபாட்டிற்கு ஆளாக்கப்பட்டனர். உயர்சாதிக்காரர்கள் நடத்தும் உணவகங்கள், தேநீர்க்கடைகள், கல்வி நிறுவனங்கள், சமய ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் அன்றைய சூத்திரர்களான இன்றைய பிற்படுத்தப் பட்டவர்கள் (70-க்கும் மேற்பட்ட சாதியினர்) நுழைய சாதிய அமைப்பு மறுதலித்தது. இவ்வாறான அனைத்து வகையான உரிமைகளும், கடவுளின் பெயராலும் மறுக்கப்பட்டன. மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
இதுபோன்ற புறக்கணிப்புகளை மீறுவது என்பது ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய பெரும் துரோகமாகும். மீறினால் இவர்கள் இறந்த பின்பு நரகத்தில் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் தள்ளிவிடப்படுவார்கள் என்றெல்லாம் உயர் சாதியர்களால் குறிப்பாகப் பார்ப்பனர்களால் கூறப் பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறான அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகள் மக்களின் மனத்தில் ஆழப் பதிந்து கிடந்தன. இக் கொடுமைகளால் சிறிய பாதிப்புக்கூட, அடையாத உயர்சாதி வகுப்பில் பிறந்த தந்தை பெரியார் கொதிதெழுந்தார். மக்களிடம் மண்டிக் கிடந்த அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும், அதனைப் பாதுகாத்து வந்த இதிகாசப் புராணங்களையும், மிகக் கடுமையாகச் சாடி, எதிர்த்துப் போராடியும், மக்களை அவ்வறியாமை மூடநம்பிக்கைகளிலிருந்து வெளியே கொண்டு வந்தார்.
மக்களிடம் இருக்கக்கூடிய பாகுபாடுகளுக்குத் தீண்டாமையும், அதற்கு அடித்தளமாக இருக்கும் சாதியையும், சாதியத்தை நியாயப் படுத்துகிற புராண, இதிகாசக் கட்டுக்கதைகளையும், அதன்வழியில் கடவுள்களையும் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். இவை திட்ட மிட்டு ஆரியப் பார்ப்பனர்களால் உருவாக்கித் திணிக்கப்பட்ட கட்டுக் கதைகள் எனப் போட்டுடைத்தார். மக்களை இவ்வறியாமையிலிருந்து புரிய வைத்து சிந்திக்க வைத்தார். கடவுளைவிட அறிவும், சுயமரியாதையுமே மனிதர்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தினார். இதனிடையே போராட்டங்களில் கடவுள் கொள்கைகள், இந்துத்துவம், புராணங்கள், இதிகாசங்கள், அதன்வழியான சாத்திர சடங்குகள், சாதியம், பெண்ணடிமை, குலத்தொழில் ஆகியவற்றை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடினார்.
சாதிய அடக்குமுறையில் பஞ்சமர்களுக்கு மேலானவர்களாக இருந்த சூத்திரர்கள் எண்ணிக்கையில் பெருமளவிலும், உடைமைவாதிகளாகவும், செல்வந்தர்களாகவும், ஓரளவுக்குக் கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்தனர்.
பஞ்சமர்களுக்கு உடைமை, கல்வி, ஆயுதங்கள், மறுக்கப்பட்டுக் கிராமங்களில் ஊர் ஓரங்களில், ஒதுக்கி வைக்கப்பட்டதுடன் அவர்கள் ஏனைய குமுகாயத்தினருக்கான இழிவான வேலைகளைச் செய்ய வைத்ததுடன் இவர்கள் தங்கள் பகுதியைவிட்டுப் பொது இடங்களிலோ, பொதுத் தெருக்களிலோ நடமாடுவதற்கான உரிமையற்று அடிமைகளாக நடத்தப்பட்டு வந்தனர்.
இவ்வாறான சூழலில், தந்தை பெரியாரின் போராட்டங்களில் சூத்திரர்கள் பெருவாரியாகத் திரண்டனர். பெரியாருடன் இணைந்து போராடினர். பயன்பெற்றனர். அதே நேரத்தில் சூத்திரர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதி ரீதியான பாகுபாடுகளைக் கடைபிடித்தே வந்தனர்.
தந்தை பெரியாரும், முன்னணித் தலைவர்களும், சாதி ஒழிப்பை ஓங்கி ஒலித்தனர். அதற்காகப் போராடினார்கள். ஆனால், பெருவாரியான பிற்படுத்தப்பட்டவர்கள் சாதியத்தை மறுதலிக்கவில்லை என்பதோடு ஒடுக்கப்பட்ட மக்களைத் தீண்டத் தகாதவர்களாகவே நடத்தினர். இன்றளவிலும் நடத்தி வருகின்றனர்.
தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு...
ஆணாதிக்க ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு போன்ற கருத்துகளாலும், போராட்டங்களாலும், ஒடுக்கப்பட்டவர்கள், சாதிய அடக்குமுறைகளை மறுத்தும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் கிளர்ச்சி செய்தனர். இவர்களின் கிளர்ச்சிக்குத் தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களும், துணை நிற்கின்றன.
சாதி ஒழிப்பு என்பது இந்துத்துவம் முற்றிலும் அழிக்கப்படுவதே ஆகும். இந்துத்துவ அழிப்பு என்பது இந்தியத் தேசிய ஆட்சி அதிகாரம் தகர்க்கப்படுவதோடு தொடர்புடையது. சாதியம் முழுமையாகத் தகர்க்கப்படும் பொழுதுதான் ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து நிலைகளிலும் முழு விடுதலை அடைய முடியும்.
ஒடுக்கப்பட்ட இயக்கமும், பெரியாருக்கு எதிரான போக்கும்...
ஒடுக்கப்பட்ட இயக்கத்திற்குப் பெரியாருடைய சித்தாந்தம் ஒருபோதும், பகையாக இருக்காது. அதே நேரத்தில் 'பெரியாரியம்' பேசுகிற இயக்கங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கான செயல்தளத்திலும், செயலாற்றுபவர்களாக இல்லை.
ஒடுக்கப்பட்ட இயக்கங்களும், இன்றைய தேர்தல் முறையும்...
இன்றைய தேர்தல் சனநாயகம் என்பது, சாதிய பலம், பொருளாதார பலம், வன்முறை, மக்கள் கூட்டத்திறன் என்பனவே, தேச நலனில், மக்களின் நலனில், கொள்கைகளில் நேர்மையற்றவர்களாக உள்ளவர்களே அரசியல் கட்சிகள் ஆரம்பித்துத் தலைமை தாங்கி நடத்தி வருகின்னர். இவர்களே தேர்தலில் பங்கும் கொள்கின்றனர்.
இன்றைய தேர்தல் சனநாயகம் என்பது சாதியத்தையும், இந்துத்துவத்தையும், இந்திய அரசியல் கட்டமைப்பையும், முழுமையாகப் பாதுகாத்து வருகின்றது. இவ்வாறான தேர்தல், அரசியலில் சாதிய பலம், பொருளாதார பலம் இல்லாததுடன், மக்கள் திரட்சியும் இல்லாத ஒடுக்கப்பட்ட இயக்கங்கள், மேலே சொன்ன அரசியல் கட்சிகளோடுதான் பேரம் பேசி, ஒரு சில இடங்களைப் பெற்று சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்குச் செல்லலாம். இவ்வாறாகச் செல்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் அவ்வுரிமைகள் மறுக்கப்பட்டு வருவதற்கு எதிராகக் குரல் மட்டுமே எழுப்ப முடியும்.
தேர்தலில் பங்கெடுக்கும் ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் தலைவர்கள், அதன் முண்ணனிகள் எனச் சிலர் மட்டுமே சட்ட விரோதமாக நியாய விரோதமாக ஒரு வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைக் காவு கொடுத்துத் தாங்கள் மட்டுமே சுகபோகமாக வாழலாம். மாறாக ஒடுக்கப்பட்ட இயக்கங்கள் தேர்தலில் பங்கு கொள்வதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சமூக அரசியல், பொருளாதாரங்களிலும், சாதிய ஆதிக்க வெறிகளாலும் அரச பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்படுகின்றன பெருவாரியான மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை.
ஈழப் போராட்டத்தில் தியாகி இம்மானுவேல் பேரவை...
தியாகி இம்மானுவேல் பேரவை தங்களின் இயக்க சக்திக்கேற்ப 1989ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றது. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், கண்டனக் கூட்டங்களையும் நடத்தியுள்ளோம். அவ்வாறான நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டைப் பாவாணன், கொளத்தூர் மணி, தோழர் தியாகு போன்றவர்களைக் கலந்து கொள்ள வைத்துப் போராடி இருக்கிறோம். மேலும், தியாகி இமானுவேல் பேரவையோடு, ஒத்த கருத்துள்ள தோழமை இயக்கங்களோடும், கூட்டமைப்பாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். தோழமை இயக்கங்கள் முன்னெடுத்த ஈழ ஆதரவுப் போராட்டங்களிலும் பங்களிப்புச் செலுத்தியுள்ளோம்.
இந்துத்துவச் சூழலில் தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியக் கருத்து...
இந்துத்துவம் இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் வழியாக அனைத்து வகையான ஒடுக்குமுறைகளைக் கட்டமைத்து, மூடநம்பிக்கைகளை வளர்த்து வருவதுடன், மனுதர்மக் கோட்பாட்டை முன்னெப்போதையும்விட வீரியமாகச் செயல்படுத்தி வருகிற சூழலில் பெரியாருடைய பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு உள்ளிட்ட சித்தாந்தம் என்பது கூடுதலாக வலுப்பெற்று மக்களைச் சென்றடைய வேண்டும். அதே நேரத்தில் இந்திய அரசக் கட்டமைப்பில் இருந்து தேசிய இனங்களின் விடுதலை என்பது மிக முக்கியமானது. தேசிய இனங்களின் விடுதலை இயக்கம் பார்ப்பனியச் சித்தாந்தத்தை மறுதலித்து இன உணர்வோடும், பெரியாரிய அம்பேத்கரிய, மார்க்சிய, கோட்பாடுகளை உள்ளடக்கியதாகவுமான நிலையில் அவ்வியக்கங்கள், சித்தாந்த அடிப்படையில் வலுப்பெற வேண்டும்.
இந்துத்துவ அதிகார வெறியும், இயக்கங்களின் தேவையும்...
இன்றைய இந்துத்துவ அதிகாரம், வெறியோடு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிற சூழலில் இந்துத்துவத்தை, முழுமையாக எதிர்க்கின்ற தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் கட்சிகளையும், இடதுசாரி இயக்கங்கள், தேசிய இன இயக்கங்கள், மதச் சிறுபான்மை இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்கள், அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் என வெவ்வேறு கொள்ளை வேறுபாடு உள்ள இயக்கங்களோடும், கூட்டமைப்பு, கட்டமைத்துச் செயல்படுவது என்பது வெகுமக்களின் நலனுக்கானதாக அமையும்.
தேவேந்திரர் என்ற சொல் குறித்து...
தேவேந்திரர் என்ற சொல்லைத் தியாகி இமானுவேல் பேரவை மறுதலிக்கிறது. (காரணம் அது இந்துத்துவத்தை உள்வாங்கிய சொல்லாக இருப்பதால்) தேவேந்திரர் என்று சொல்லக் கூடியவர்கள் பள்ளர்களாகவும், பன்னாடிகளாகவும், காலாடியாகவும், குடும்பன் மற்றும் மூப்பன் எனவும், பல்வேறு பெயர்களில் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கச் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாகவே தேவேந்திரர் என்று தங்களை அழைத்துக் கொண்ட செயல்பாடு இருந்து வந்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக அச் சொல்லானது வேகமாகப் பேசப்பட்டு வருகிறது.
பல பிரிவுகளாக உள்ள பறையர்களை “ஆதிதிராவிடர்” என்றும், பல்வேறு பிரிவுகளாக உள்ள சக்கிலியர்களை “அருந்ததியர்” என்றும், படையாச்சி என்று பல பெயர்களில் உள்ளவர்களை “வன்னியர்கள்” என்றும், கள்ளர், மறவர், அகமுடையர் ஆகியோர் பல்வேறு பிரிவினர்களாக இருந்தாலும் தங்களை முக்குலத்தோர் என்றும், தேவர் இனத்தோர் என்றும் பொதுப் பெயரைச் சூட்டிக் கொண்டார்கள். அதைப் போன்றே, செட்டியார், கவுண்டர், வெள்ளாளர் போன்ற சாதிக் கூட்டத்தினர் பல்வேறு பிரிவினர்களாக இருந்தாலும்கூட தங்களை ஒரு பொதுப்பெயரில் அழைத்துக் கொண்டார்கள். அதைப் போன்றுதான் தேவேந்திரர் என்று சொல்லாடலைப் பள்ளர் சமூகத்தின் மக்களும், தலைவர்களும் அப்பெயரை சட்டரீதியாக அரசு அறிவிக்கக் கூறுகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பின் தேவை...
கடந்த 80, 90ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளில் பெரும்பான்மையான மூன்று சாதிகளுக்குள்ளும் அனைத்துச் சமூகங்களில் உள்ள சாதியப் பாகுபாடுகளைப் போன்று இவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் அப் பாகுபாடுகள் பகை முரண்பாடாக இல்லை. அன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட இயக்கங்களில் உள்ள தலைவர்கள் குறைந்தபட்சம் மக்கள் நலன், கொள்கைப் பற்று, விடுதலைச் சித்தாந்த ஏற்பு உணர்வு, நிலையில் செயல்பட்டு வந்தனர். அரசு இயந்திரம், அரசியல் கட்சிகள், சாதிய வாதிகள், வெளிநாடுகளில் நிதிபெறும் தொண்டு நிறுவனங்கள், தங்களின் சுய நலனுக்காக ஒடுக்கப்பட்ட இயக்கத் தலைவர்களைப் பயன்படுத்திக் கொண்டு அதன்வழியாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே பகைமை உணர்வை வளர்த்து வந்தனர். இதில் ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் தலைவர்களும் தங்களின் சுயநலத்திற்காக இச்சூழ்ச்சிக்குத் துணைநின்று ஒரு சில பலன்களையும் அடைந்து வருகின்றனர்.
இன்னும் கொடூரமாக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற இந்துத்துவ இயக்கங்கள் பள்ளர்களில் சிலரைத் தங்களுக்கான சித்தாந்தத்தைப் பள்ளர்களிடையே பரப்புவதற்காக முழு நேரப் பணியாளர்களாக நியமித்துக் கொண்டு அவர்கள் மூலமாகத் தேவேந்திரர்கள், ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; இவர்கள் இந்திரன் வழிவந்தவர்கள்; இவர்களுக்கும் தீண்டாமைக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. அம்பேத்கர், பெரியாரின் சித்தாந்தங்கள் இம் மக்களுக்கு எதிரானது என்பதோடு அதன் அடிப்படையிலேயே எஸ்.சி. என்ற பெயரிலோ அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் (தலித்) என்ற பெயரிலோ தங்களை அழைப்பது அருவருப்பானது என்பதுடன், எஸ்.சி. என்ற வகையில் இடஒதுக்கீடு பெறுவதே இழிவானது, அது எங்கள் சாதிப் பெருமையைச் சீர்குலைக்கக் கூடியது என்ற நச்சுக் கருத்தை அதிவேகமாகப் பரப்பி வருகின்றனர்.
இக் கருத்தில் தேவேந்திர குல சமுதாய இயக்கத் தலைவர்கள், சிலர் தங்களின் சுயநலத்திற்காக இச் சதிகாரர்களோடு இணைந்து செயல்படுகிறார்கள்.
இவ்வாறான சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான நலனுக்கான, விடுதலைக்கான இயக்கங்கள், தமிழக அளவில் கூட்டமைப்பாக வலுப்பெற்று, சாதி ஒழிப்பிற்காக மிகக் கடுமையாக முன் எப்போதைக் காட்டிலும் கூடுதலாகச் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.