எதற்காகப் பார்ப்பனீயமும், ஆதிக்க சக்திகளும் காத்திருக்கின்றனரோ அது வேடசந்தூரில் நடந்துவிட்டது!

தலித் சமூக மக்களின் மீதான ஆதிக்க சக்திகளின் வன்முறையை எதிர்த்து அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற முழக்கத்தோடு, அனைத்துச் சாதிகளிலும் உள்ள ஜனசாயக சக்திகளை அணி திரட்ட முயற்சிகள் நடைபெறும் வேளையில், தலித் சமூக மக்களுக்கு இடையிலேயே மோதல், , அரிவாள் வெட்டு என்ற  அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.

உயர் சாதி என்று தங்களை நினைத்துக் கொண்டுள்ள ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணைத் தலித் சமூக இளைஞர் காதலித்தால், கைப்பிடிக்க நினைத்தால், கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் கொடூரம் நம் நாட்டில் அரங்கேறி வருகிறது. அதற்குச் சற்றும் சளைக்காமல், தலித் சமூகத்தினரிடம் உள்ள அடுக்குகளிலும் அந்தச் சாதி வெறி புறப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எவ்வளவு வேதனையானது!

இங்கும் காதல்தான் சிக்கலாக உள்ளது. வேடசந்தூர் அருகில் உள்ள விட்டல் நாயக்கன்பட்டியில்,  அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கும், ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நதியாவிற்கும் ஏற்பட்ட காதல், அரிவாள் வெட்டில் முடிந்துள்ளது. அந்த இளைஞனின் அண்ணன் போஸ்  என்பவரை, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 20 ஆம் தேதி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை அக்கட்சியினர் மறுத்திருந்த போதிலும், அதுதான் உண்மை எனத் தெரிகிறது. போஸ் இப்போது மருத்துவமனையில்.

எல்லோருக்கும் இன்னொரு அடிமை தேவைப்படுகிறது! ஒவ்வொருவரும் தங்களை மேல் சாதி என்றே கருதிக் கொள்கின்றனர். இந்த மனநிலை வேரோடு வெட்டி எறியப்படாதவரை, சாதிக்கு எதிரான போரை நம்மால் எளிதில் நடத்திவிட முடியாது.

இந்த வன்முறை மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.  சாதி வெறி எந்த அடுக்கில் இருந்தாலும் அது களைந்தெறியப்பட வேண்டிய ஒன்றே. நாம் எப்போதும் ஒடுக்கப்படுபவர்களின்  பக்கம். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை!

Pin It