“அந்த செய்தி சந்தேகத்திற்கிடமானது...நம்பும்படியாக இல்லை...”
“தமிழர்களின் போராட்டங்களை திசை திருப்புவதற்காக இப்படி கிளப்பி விடுகின்றனர்...”
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருவிழாவில் ஏற்பட்ட முன்பகை தான் காரணம்”
“இது ஒருத்தர் மேல இன்னொருத்தர் பண்ண தாக்குதல் இல்ல. இரு பிரிவுகளுக்கு இடையில் நடந்த மோதல்”
“கஞ்சா விற்பதை தடுத்தால் பொண்டாட்டி புள்ளையா இருந்தாலும் கொல்லத்தான் செய்வான். அதை செய்ததற்காகவே இவர்கள் கொல்லப்பட்டார்கள்”
கடந்த 28.5.2018 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் பழையனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எட்டு தலித் மக்கள் அதே ஊரைச் சேர்ந்த சாதி இந்துக் குடும்பத்தினரால் வெட்டி சாய்க்கப்பட்டனர். இதில் ஆறுமுகம் (68), சண்முகநாதன்(31), சந்திரசேகரன் (34) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கொடூரக் காயங்களுடன் அன்றே உயிரிழக்க, தனசேகரன் (52), மலைச்சாமி (50) சுகுமாரன் (22) மூவரும் ஒவ்வொருவர் உடம்பிலும் தலா 40-50 வெட்டுக் காயங்களுடன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெய்வேந்திரன் (45), மகேஸ்வரன் (18) இருவரும் தீவிரக் காயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(படுகொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடம்)
இந்த செய்தி கசியத் தொடங்கிய கணத்திலிருந்து மேற்கூறிய வகையிலான விவாதங்கள் நால்திசையிலிருந்தும் களைகட்டத் தொடங்கின. ஓர் அப்பட்டமான சாதியப் படுகொலையை, ’அது சாதிக்காக நடத்தப்பட்ட கொலையாக இருக்காது’ என நிறுவுவதற்கான முயற்சிகள் பொது வெளியில் பலமாக நடந்து கொண்டிருந்தபோது, கச்சநத்தம் என்ற அந்த சின்னஞ்சிறிய தலித் கிராமம், வீட்டு வீட்டிற்கு வெட்டி சாய்க்கப்பட்ட உறவுகளின் ரத்தத்தைக் கழுவும் திராணி கூட இல்லாமல் சிதைந்து உறைந்து கிடந்தது.
வன்கொடுமைகளுக்கும் கலவரங்களுக்கும் பெயர் போன சிவகங்கையில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் கச்சநத்தம் ஓர் உள்ளடங்கிய கிராமம். சுமார் ஆயிரம் அகமுடையார் (சாதி இந்துக்கள்) குடும்பங்கள் வசிக்கும் ஆவாரங்காடு மற்றும் மாரநாடு கிராமங்களைக் கடந்துதான் கச்சநத்தத்தை அடைய முடியும். கண்மாய், வயல்காடுகள், தோப்புகளுக்கு நடுவே, ‘வெட்டிப் போட்டால் ஏன் என்று கேட்க நாதியில்லாத வகையில்’ தலித் மக்களின் நிலப்பரப்பு அத்தனை நிராதரவாக இருக்கிறது.
35 பள்ளர் (தலித்) குடும்பங்களும் ஒரேயொரு அகமுடையார் குடும்பமும் கச்சநத்தத்தில் வசிக்கின்றன. பெரும்பான்மையின் பலம் என்பது எண்ணிக்கையில் அல்ல, கொண்டிருக்கும் அதிகாரத்தில் உள்ளது என்ற சனாதன விதியைப் புரிந்து கொள்ள இந்த 35:1 கணக்கு உதவக்கூடும். ஆம், சில நூறு தலித் மக்கள் மீது பத்திற்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட சாதி இந்துக் குடும்பம் பலவிதமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியே இந்தப் படுகொலை.
(படுகொலைகளுக்குக் காரணமான அகமுடையார் குடும்பத்தின் வீடு)
கடந்த 26.5.2018 சனிக்கிழமை அன்று கச்சநத்தம் தலித் மக்களின் குல தெய்வமான கருப்பண்ணசாமி கோவில் திருவிழா தொடங்கியதை முன்னிட்டு, வெளியூர்களில் வேலை பார்த்தவர்கள், உறவுக்காரர்கள் என எல்லோரும் கூடியிருந்தனர். அவ்வூரைச் சேர்ந்த கலைச்செல்வியின் வீட்டிற்கு வந்திருந்த அவரது உறவினரான பிரபாகரன், வீட்டிற்கு அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருக்க, அவ்வழியே வந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த சுமனும், அருண்குமாரும், ’ஏண்டா பள்ளப்பயலே, என்னடா வழியில நின்னு ஃபோன் பேசிட்டிருக்க’ என்று அடிக்கப் பாய்ந்தனர். இதைப் பார்த்த தெய்வேந்திரன் (கொல்லப்பட்ட ஆறுமுகத்தின் மகன்) ’சாதி பத்தி பேசினா போலீஸ்ல புகார் கொடுப்பேன்’ என்று சொல்ல சுமனும், அருண்குமாரும், பிரபாகரன் மற்றும் தெய்வேந்திரனைத் தாக்கத் தொடங்கினர். அதற்குள் கூட்டம் கூடி இருவரையும் விலக்கிவிட, ‘பள்ளப்பயல்களுக்கு இவ்வளவு திமிரா, உங்கள கொல்லாம விடமாட்டோம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர். கொலை மிரட்டல் விடுத்ததால், காவலராக வேலை பார்க்கும் பிரபாகரனும், ராணுவத்தில் பணிபுரியும் தெய்வேந்திரனும் தாமதிக்காமல் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளர், சுமன் மற்றும் அருண்குமாரைத் தேடி கச்சநத்தத்திற்கு வர அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். இதனால், இருவரின் தந்தையான சந்திரக்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வர நேர்ந்தது. ’உங்கள் மகன்கள் தேவையில்லாமல் சாதி ரீதியான வன்முறையில் ஈடுபடுகின்றனர். இப்படியே போனால் வழக்குப் பதிவு செய்து கைது பண்ண வேண்டி வரும்’ என ’எச்சரித்து’ அனுப்பினர். திருவிழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக் கிழமை எந்த பிரச்சினையும் இல்லாமல் போனதால், இனி பிரச்சினை இல்லை என்று நிம்மதியாக திருவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கினர் தலித் மக்கள். ஆனால் சாதி இந்துக்களின் அந்த ஒரு நாள் அமைதி மறுநாள் நடக்கவிருக்கும் கொலைவெறித் தாக்குதலுக்கான அவகாசம் என்பதை அவர்கள் துளியளவும் கணிக்கவில்லை.
மூன்றாவது நாள் திங்கட்கிழமை இரவு நடந்த கொடூரத்தை விவரிக்கிறார் தெய்வேந்திரன். “போலீஸ்ல புகார் கொடுத்ததால அவங்க என்னைத்தான் முக்கியமா குறி வச்சிருந்தாங்க. நான் ஆர்மில சோல்ஜரா இருக்கேன். இந்த திருவிழாக்காகவும் என் கல்யாணத்துக்காகவும் விடுப்புல வந்தேன். திருவிழா முடிஞ்சதும் குடும்பத்துல எல்லோரும் கல்யாண வேலையை கவனிக்கிறதுக்காக அன்னைக்கு ராத்திரியே மானாமதுரை கிளம்பிட்டோம். அப்பா ஆறுமுகம் மட்டும் அன்னைக்கு ராத்திரி வீட்டுல இருந்தார். 9 மணியளவுல திமுதிமுனு அரிவாள், கத்தினு ஆயுதங்களோட ஒரு கும்பல் வீட்டுக்குள்ள புகுந்து என்னை தேடியிருக்கு. நான் ஊர்ல இருக்குறதா எங்கப்பா சொன்னதும், சுமனோட அம்மா மீனாட்சி, ’புள்ள இல்லேன்னா என்னடா அப்பன வெட்டுங்க’னு கத்தியிருக்கா. உடனே அந்த வயசானவர வெளில இழுத்துப் போட்டு வாசல்லயே கண்டதுண்டமா வெட்டிட்டாங்க. என் அப்பா துடிக்கத் துடிக்க அங்கேயே செத்துட்டார். அதுமட்டுமில்ல, பீரோவை உடைச்சு என் கல்யாணத்துக்கு வச்சிருந்த 3 லட்சத்து எழுபதாயிரம் ரூபாயையும், 35 பவுன் நகையையும் திருடிட்டாங்க. வீட்டுல இருந்த பொருட்களை எல்லாம் அடிச்சு உடைச்சு நொறுக்கிட்டாங்க. நான் நாட்டைப் பாதுகாக்கற வேலைல இருக்கேன். ஆனால் என் நாட்டுல என் வீட்டிற்கும், எனக்கும் பாதுகாப்பு இல்லை” என்று கண் கலங்குகிறார்.
(கொல்லப்பட்ட ஆறுமுகத்தின் மகன் தெய்வேந்திரன் (இடதுபுறம்) மற்றும் அவரது குடும்பத்தினர்)
சுமனும் அருண்குமாரும் தன்னோடு சுமார் 20 பேர் கொண்ட கும்பலை அழைத்து வந்திருந்தனர். வரும் போதே தெருவிளக்குகளுக்கான மெயின் ஸ்விட்சை அணைத்துவிட்டதால் தெருக்கள் இருளில் மூழ்கின. வீட்டிற்குள் சிலர் டிவி பார்த்துக் கொண்டிருக்க, பலர் படுக்கையில் சாய்ந்துவிட்டனர். இருளில் பதுங்கி வந்த அந்த கும்பல் திடீரென கண்மண் தெரியாமல் கண்ணில் படும் அத்தனை பேரையும் வெட்டி சாய்த்தது. ’பத்து பள்ளப்பயலுக தலையாவது உருண்டா தான் போலீசுக்கு போக மாட்டானுங்க’ என கத்திக் கொண்டே அது வீடுகளுக்குள் புகுந்ததாகக் கூறுகிறார் காளீஸ்வரி.
இந்த கொலைவெறித் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சண்முகநாதன், கச்சநத்தம் மக்களுக்கு ஒரு கதாநாயகன். எம்.பி.ஏ பட்டதாரியான சண்முகநாதன் கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை ஒதுக்கிவிட்டு, தன் கிராமத்தில் இருக்கும் 20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து வந்தார். அவரது அப்பா அறிவழகன், அரசு ஐடிஐ நிறுவனத்தில் துணை பயிற்சியாளராக இருக்கிறார். அம்மா, பள்ளி ஆசிரியை. இளைஞர்களை வழி நடத்துவது, படிப்புக்கு உதவுவது, கல்விக்கடன் வாங்கித் தருவது, டியூஷன் நடத்துவது, விவசாயப் பயிற்சி அளிப்பது, ஊரணியை சுத்தம் பண்ணுவது என ஒரு தன்னார்வலராக செயல்பட்டு வந்திருக்கிறார். தன் சமூக இளைஞர்களிடம் கஞ்சா விற்க சாதி இந்துக்கள் முயன்றபோதும், ஆடு கோழிகளை திருடிச் சென்ற போதும் அதைக் கண்டித்து காவல்நிலையத்திற்குப் போனார் சண்முகநாதன்.
அன்றிரவு வீட்டிற்கு வந்தவர் அசதியில் தூங்கிவிட்டார். தூக்கத்திலேயே அவரை வெட்டிச் சாய்த்தது கொலைக் கும்பல். நடப்பதை உணரவோ, எழவோ, தடுக்கவோ அவருக்கு அவகாசமே அளிக்கப்படவில்லை. அவரோடு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சந்திரசேகர் ரத்தம் சொட்ட சொட்ட தப்பி மாடிக்கு ஓட முற்பட, அவரின் உயிர் போகும்படி கூறுபோட்டுவிட்டு நகர்ந்தது. ஒருவார காலமாகியும் சண்முகநாதனின் வீடு நடந்த கொடூரத்தின் உயிரற்ற சாட்சியாக நிற்கிறது. அவர் படுத்திருந்த இடமெங்கும் உதிரம். சந்திரசேகரன் உயிர் தப்பிக்க ஓடிய வாசற்படி, மாடிப் படிக்கட்டு, அவர் கைப் பதித்த சுவர் என எங்கும் ரத்தக்கறை.
(கொல்லப்பட்ட சண்முகநாதனின் வீட்டில் படிந்திருக்கும் இரத்தக் கறை)
சண்முகநாதனின் அம்மா மரகதம், மகன் கொலையான வீட்டிற்குள் போகவே இல்லை. ‘என் தங்க மகனோட ரத்தத்தை எப்படிப் பார்ப்பேன்’ என்று அழுகிறார். அவரது அப்பா, மகன் புதைக்கப்படும் வரை அவரது முகத்தைப் பார்க்கவில்லை. “என் மகனை அந்தக் கோலத்தில் பார்த்தா அப்புறம் என் வாழ்நாளுக்கும் நான் மீள முடியாது” என்று சொல்லும் போது தொண்டை அடைக்கிறது அவருக்கு. ’இப்படியொரு பையன் எங்க குடும்பத்துல இனி எப்போ பொறப்பான்’ என்று கதறுகின்றனர் அவரது உறவினர்கள்.
“எங்ககிட்ட நிலம் இருக்கு. வீட்டுக்கு வீடு பட்டதாரிங்க இருக்காங்க. நிறைய பேர் அரசாங்க வேலை பார்க்குறாங்க. போலீஸ், டீச்சர், எஞ்ஜினியர், விஏஓ, அரசு பஸ் ஓட்டுநர், நடத்துனர், சோல்ஜர் ஆடிட்டர்னு கவுரவமான வேலையில இருக்காங்க. ஒரு ஏழெட்டு பேர் வெளிநாட்டுல வேலை பார்க்குறாங்க. நமக்கு அடிமையா இருந்தவனுங்க படிச்சு, சம்பாதிச்சு நல்ல நெலைமைல இருக்குறத ஆதிக்க சாதிக்காரங்களால ஏத்துக்க முடியல. இந்த கிராமத்தை நாங்க சுயமா வளர்த்தெடுத்தோம். விவசாய சங்கம், பால் பண்ணை எல்லாம் அமைச்சோம். இதையெல்லாம் அவங்களால தாங்க முடியல. எங்களோட பொருளாதாரமும், படிப்பும் அவங்க கண்ணை உறுத்திட்டே இருந்துச்சு. அவங்க திருடுறதையும், கஞ்சா விக்கிறதையும், தப்பு பண்ணிட்டு இங்க வந்து பதுங்குறதையும் நாங்க தடுத்தோம். ஆனா எங்க பசங்களுக்கே மாத்திரை கொடுக்க முயற்சி பண்ணாங்க. இதெல்லாம் பத்தி என் பையன் விழிப்புணர்வு ஏற்படுத்தினான். அவனை கண்டந்துண்டமா வெட்டி சாய்ச்சுட்டானுங்க. அவனை ஒரு தடவை கூட நான் அடிச்சதில்லை. ஆயிரம் கேட்டா ரெண்டாயிரம் கொடுத்துதான் வளர்த்துருக்கேன். அவ்வளவு நியாயமானவன். என் செல்ல மகன் இந்த கிராமத்தையும், மக்களையும் அவ்ளோ நேசிச்சான். ஜாதிங்கற போதைக்கு இங்கயே அவன் பலியாகிட்டான்” இழப்பின் வலியை மென்று விழுங்க முயல்கிறார் அறிவழகன்.
(கொல்லப்பட்ட சண்முகநாதனின் தாய் மரகதம், தந்தை அறிவழகன் மற்றும் சகோதரர்)
அறிவழகனின் தம்பி தனசேகரன் மற்றும் அவரது மகன் சுகுமாரன் இருவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத வெட்டுக் காயங்களுடன் சிகிச்சையில் இருக்கின்றனர். ஐ.சி.யூவில் நினைவற்று இருக்கும் மகனையும், ஆர்த்தோ வார்டில் முற்றிலும் சிதைக்கப்பட்ட, கை கால்களில் பெரிய பெரிய கட்டுக்களுடன் படுத்திருக்கும் கணவரையும் ஓடி ஓடி கவனித்து சோர்ந்துவிட்டார் ஸ்ரீதேவி. “சுமன், அருண்குமார் மேல ஏற்கனவே நிறைய வழக்கு இருக்கு. ஆனா போலீஸ் அவனுங்ககிட்ட கமிஷன் வாங்கிட்டு பண்ற குற்றங்களை கண்டுக்கிறதில்லை. 3-4 தடவை புடிச்சுட்டுப் போய் 10 நாள்ல விட்டுட்டாங்க. நாங்க விவசாயம் பண்றவங்க. எங்க வீட்டுக்காரர் மண்வெட்டியக் கூட இனிமேல் பிடிக்க முடியாது. அந்தளவுக்கு 50 இடத்துல வெட்டிருக்கானுங்க. என் மகன் ஐ.ஏ.எஸ் ஆகனுங்கற கனவோட இருந்தான். இப்போ, பொழச்சு வந்தாலே போதும்னு இருக்கு. நாங்க இதுனால தான் புள்ளங்கள வெளியூர்ல படிக்க வைக்கிறோம். உழைச்சுப் படிச்சு கண்ணியமா நடந்துக்குற நாங்க சாகுறோம்! சாதி வெறிப்பிடிச்சு வெட்டி சாய்க்குறவனுங்க நல்லா வாழுறானுங்க. எங்க பசங்க மேல ஒரு கேஸாவது இருக்கானு விசாரிங்க. எந்த வம்புக்கும் போக மாட்டானுங்க. கத்தி எடுத்துட்டு வெட்ட வந்தப்போ கூட நாங்க போலீஸோட உதவியைத் தான் கேட்டோம். ஆனா போலீஸ் எங்களுக்கு கடைசி வரையும் உதவல” என்கிறார் ஆதங்கத்தோடு.
எட்டு பேர் வெட்டி சாய்க்கப்பட்ட இந்த வன்கொடுமை, எல்லோரும் நிறுவ முனைவது போல ஒரேயொரு குறிப்பிட்ட சம்பவத்தின் தூண்டுதலோ, எதிர்வினையோ அல்ல. மாறாக காலங்காலமாக ஊறி வந்த சாதிய வன்மத்தின் விளைவு என்பதை கச்சநத்தம் தலித் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பாகுபாடுகள் மற்றும் வதைகளின் வாயிலாகப் புரிந்து கொள்ளலாம்.
(வெட்டுப்பட்டு படுகாயங்களுடன் சிகிச்சை பெறும் தனசேகரன் மற்றும் அவரது மனைவி ஶ்ரீதேவி)
“இங்க எல்லோருமே விவசாயம் தான் பார்க்குறோம். மழை நல்லா இருந்தா நெல்லு, வாழை, கரும்புனு பயிர் செய்றோம். ஒரு குடும்பத்துகிட்ட குறைஞ்சபட்சம் ரெண்டு ஏக்கர் நிலமாவது இருக்கு. ஆதிக்க சாதிக்காரங்க நிலத்துல விவசாயக் கூலி வேலைக்கும் போறோம். அது அந்தக் காலத்துல இருந்து அப்படியே பழக்கிட்டாங்க. எங்க காட்டுல வேலை இருந்தாக் கூட அவங்க (சாதி இந்துக்கள்) கூப்பிட்டா செஞ்சிட்டிருக்க வேலையை அப்படியே போட்டுட்டு ஓடணும். இல்லன்னா துரத்தித் துரத்தி அடிப்பாங்க. அந்தக் காலத்துல மாதிரியே நாங்க அடிமையாவே இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க” என்கிறார் கொல்லப்பட்ட ஆறுமுகத்தின் மனைவி இருளாயி.
இந்தப் படுகொலை நடந்த மறுநாள் சுமன், அருண்குமார் என்ற இருவர் உட்பட ஐந்து பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காவல்துறை 17 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. ஆனால் இன்னும் எல்லோரும் கைது செய்யப்படவில்லை. இந்த சுமனும், அருண்குமாரும் கச்சநத்தத்தில் தனது பெற்றோர் மீனாட்சி மற்றும் சந்திரக் குமாருடன் வசிக்கின்றனர். உறவினர்கள் சுரேஷ் மற்றும் செல்வியோடு பங்காளிகள் சிலரும் இவர்களோடு அதே ஊரில் வாழ்கின்றனர் என்றாலும், இவர்கள் யாருக்கும் சொந்த ஊர் கச்சநத்தம் இல்லை. ஒரு தலைமுறைக்கு முன்பு இவ்வூரில் பிழைக்க வந்தவர்களுக்கு கொஞ்சம் நிலம் கொடுத்து உதவியதும் இந்த தலித் மக்களே. இந்த சாதி இந்துக் குடும்பம் இப்போது வசிக்கிற வீடு கூட ஒரு தாழ்த்தப்பட்டவருடையது தான். இந்த சாதி இந்துக் குடும்பம் குடிக்க, குளிக்க நீர் எடுப்பதும் கொல்லப்பட்ட சண்முகநாதனுக்கு சொந்தமான கிணற்றில்தான். எவ்வளவு தான் உதவிகள் செய்தாலும், எவ்வளவுதான் விலகி நடந்தாலும் சாதி இந்துக் குடும்பம் தலித் மக்களை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை. 20-22 வயதுகளில் இருக்கும் சுமனும், அருண்குமாரும் கட்டற்ற ஆதிக்க உணர்வோடு கண்ணில் படுவோரை தாக்குவதையும், தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் வழக்கமாகவே வைத்துள்ளனர்.
(வெட்டுக்காயங்களுடன் மலைச்சாமி மற்றும் அவரது மனைவி பச்சையம்மாள்)
பெண்கள் மோட்டார் பம்ப்பில் குளிக்கும் போது வெறும் உள்ளாடையோடு உள்ளே குதித்து கலாட்டா செய்வது, குடிநீர்த் தொட்டியில் குளிப்பது, இளைஞர்களை தகாத வார்த்தைகளில் சீண்டி வம்பிழுப்பது, பெண்களை ஆபாச வார்த்தைகளால் இழிவுபடுத்துவது, வெளியாட்களைக் கூட்டி வந்து கஞ்சா விற்பது, எந்த வீட்டிற்குள்ளும் நுழைந்து வேண்டிய பொருட்களை அடாவடியாக பிடுங்கிச் செல்வது, கோழிகளையும் ஆடுகளையும் திருடிச் செல்வது, ரோட்டில் நடந்து செல்லும்போது சாதிப் பெயர் சொல்லி இழிவாக சாடுவது, அணிந்திருக்கும் தங்க நகைகளைப் பிடுங்குவது, வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி இடிக்க வருவது, ரேஷன் கடையில் வரிசையில் முன்னரே இவர்கள் நின்றாலும் அவர்கள் வந்தால் முன்னுரிமை அளிப்பது என தினம் தினம் பல்வேறு வகையான வன்கொடுமைகளை அனுபவித்து வந்ததாகக் கூறுகின்றனர் கச்சநத்தம் தலித் மக்கள்.
“போன வருஷம் எங்க சமூகத்தைச் சேர்ந்த மலைச்சாமி, தனசேகரன், சந்திரசேகர், சதாசிவம்னு நாலு பேரை தேவையில்லாம வம்பிழுத்து, கத்தியை எடுத்துக்கிட்டு விரட்டி வெட்ட வந்தானுங்க. இதப் பத்தி போலீஸ்ல புகார் கொடுத்தோம். இங்க பாண்டினு ஒருத்தர மண்டையில அடிச்சு மயக்கம் போட வச்சிட்டு, அவர் வளர்த்த கோழிகளை மொத்தமா திருடிட்டுப் போயிட்டானுங்க. அதை தட்டிக் கேட்டதுக்கு, அவரை கத்தியால குத்த வந்தானுங்க. சதாசிவம் என்பவரை வீண் வம்பிழுத்து அடிச்சானுங்க. ராமுங்கறவர் எங்க ஊர் பூசாரி. அவரை பெல்ட்டால அடிச்சு மண்டைய உடைச்சானுங்க. ராக்குனு ஒரு அக்கா, அவங்க விதவைங்கறதால, ‘எங்க முன்னாடி வராத’னு கால்லயே அடிச்சு நடக்க முடியாம பண்ணிட்டாங்க. எங்கள ஒவ்வொரு தடவை சாதிப் பேரை சொல்லி அடிக்கிறப்பவும், கொல்ல வர்றப்பவும் நாங்க போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். ஆனா அந்தக் குடும்பத்து மேல இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்ல. அப்பவே நடவடிக்கை எடுத்திருந்தா, இப்போ இத்தனை உசிருகள நாங்க பறி கொடுத்திருக்க மாட்டோம்” என்கிறார் ரேவதி.
(கச்சநத்தம் கிராமம்)
கிராம மக்களை மிரட்டி வரும் சுமன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று 2.7.2017 அன்று காவல் ஆய்வாளரிடமும் , 20.7.2017 அன்று சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும், 31.7.2017 அன்று மக்கள் குறை தீர்க்கும் மன்றம், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரிடமும் கச்சநத்தம் கிராமப் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் கண்டிப்புகளுடன் காவல்துறை பிரச்னையை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் இவ்வளவு பெரிய படுகொலையை நிகழ்த்தும் துணிச்சலை குற்றவாளிகளுக்கு அளித்திருக்கிறது.
இந்திய அளவில் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் முதல் பத்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அண்மை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பதிவாகும் ஒவ்வொரு ஆறு வழக்குகளிலும் ஒன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவாகிறது. 2015-2017 வரை பதிவு செய்யப்பட்ட 32000 வழக்குகளில் 5300 வழக்குகள் தமிழகத்திற்கு சொந்தம். இதிலும் 2000 வழக்குகள் கொலை, வன்புணர்ச்சி மற்றும் உடல்ரீதியான தாக்குதல், இழிவாகப் பேசுதல் என மிகத் தீவிரமானவை. அரசு கொடுக்கும் இந்த புள்ளிவிபரங்கள் நாள்தோறும் தலித் மக்கள் அனுபவிக்கும் வன்கொடுமை மற்றும் பாகுபாடுகளை ஒப்பிடும் போது 5% கூட இருக்காது.
“இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களும் ஊராகவும், சேரியாகவும் இருக்கின்றன. ஊர்களில் சாதி இந்துக்கள் சேரிகளில் வாழும் தலித் மக்கள் மீது ஒவ்வொரு நொடிப் பொழுதும் வன்கொடுமையை ஏவுகின்றனர், தீண்டாமையைக் கடைபிடிக்கின்றனர். இவற்றில் எல்லாமே வழக்குகளாக மாறுவதில்லை. கச்சநத்தம் மக்கள் தினம் தினம் சாதிக் கொடுமையை அனுபவித்து வந்திருக்கின்றனர். இந்தக் கொலை என்பது அவர்கள் நாள்தோறும் எதிர்கொண்ட வன்கொடுமைகளின் நீட்சி. ஆனால், இந்த ஒற்றை சம்பவம் தான் ஆவணங்களில் பதிவாகுமே தவிர, அன்றாடக் கொடுமைகள் கணக்கில் வருவதில்லை. வன்கொடுமை என்பது இயல்பான விஷயமாக தலித் மக்களின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. அது கொலையாகவும் வன்புணர்ச்சியாகவும் வெளியில் தெரியும் போது மட்டும் தான் பொதுச் சமூகமும் ஊடகங்களும் எதிர்வினையாற்றுகின்றன” என்கிறார் தலித் முரசு இதழின் ஆசிரியர் புனித பாண்டியன்.
கச்சநத்தத்தின் அப்பட்டமான சாதிய படுகொலைகளைக் கூட அவ்வாறு செய்தியாக்க ஊடகங்கள் துணியவில்லை. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் போராட்டம் பல நாட்கள் தலைப்புச் செய்தியாக நீடித்தது. ஆனால் 8 பேர் வெட்டி சாய்க்கப்பட்ட இந்த சாதியப் படுகொலை ஒரு நாள் கூட தலைப்புச் செய்தியாகும் தகுதியைப் பெறவில்லை. ஆனால் தயங்கித் தயங்கி இரு சமூகத்தினரிடையே மோதல் என்றே பல செய்தித்தாள்கள் ரிப்போர்ட் செய்தன. ஊடகங்களின் இந்த செயலை கச்சநத்தம் மக்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். தலித் மக்களை வெட்டிய சாதி இந்துக்களுக்கு இருப்பது முன்பகைதான். ஆனால் அது மூவாயிரம் ஆண்டுகள் பழையது. மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்வது.
“அதென்ன மோதல்னு எழுதுறீங்க. மோதல்னா அவங்க தரப்புல நாங்க ரெண்டு பேரையாவது வெட்டிருக்கணும்ல. அமைதியா இருந்த எங்க மேல சாதி வெறியோட இவ்ளோ பெரிய தாக்குதலை நடத்தியிருக்கானுங்க. பள்ளர்களை அகமுடையார்கள் படுகொலை பண்ணினாங்கனு எழுதுங்களேன். இதுல என்ன ஒளிவு மறைவு? கோயில்ல மரியாதை கொடுக்கல, கால் மேல கால் போட்டு உட்கார்ந்தோம், கஞ்சா வித்ததை எதிர்த்தோம்னு ஏதேதோ எழுதுறீங்க. எங்க கோயில்ல அவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும் எந்த அதிகாரத்துல அவங்க எதிர்பார்க்குறாங்க? நாங்க கால் மேல கால் போட்டு உட்கார்ந்தா அவங்க மரியாதை குறையுறதா ஏன் தோணுது? இதுக்குப் பின்னாடி சாதிதான காரணமா இருக்கு! பள்ளப்பய அழியணும்னு சாதியச் சொல்லித்தான் வெட்டுனான். உங்கள அழிச்சுட்டு நாங்க ஆளப் பொறந்திருக்கோம்னு வெறி பிடிச்சா மாதிரி துரத்துனானுங்க. ஆனா சாதி தான் மோட்டிவ்னு யாரும் எழுதல” என்கிறார் கலைச்செல்வி.
வன்கொடுமை அதிகம் நடக்கக்கூடிய பகுதிகளாக மாநில அரசால் வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தமிழகத்தின் 28 மாவட்டங்களின் 275 பகுதிகள் அடக்கம். அரியலூர், சென்னை, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூரைத் தவிர எல்லா பகுதிகளிலும் தலித் மக்கள் மீதான தாக்குதல் தீவிரமாக நடந்தேறுகின்றன. அதிலும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த சிவகங்கைப் பகுதியில் சாதி இந்துக்கள் மிக வெளிப்படையான ஆதிக்கத் தன்மையோடு வலம் வருவதைப் பார்க்க முடியும். முக்குலத்தோர் (கள்ளர், அகமுடையார், மறவர் ஆகிய மூன்று பிரிவையும் இப்படி குறிப்பிடுகின்றனர். இவர்கள் தேவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்) அதிகம் வசிக்கும் மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அவர்களது சாதித் தலைவரான முத்துராமலிங்கத்தின் புகைப்படம் இல்லாத பேனர்களைப் பார்த்தல் அரிது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சாதியுணர்வு சோற்றைப் போல ஊட்டப்படுவதால், அவர்கள் பள்ளி பருவத்திலேயே வன்மத்தோடும், வெறித்தனத்தோடும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த துடித்திருக்கின்றனர். இவர்களுக்கு சாதி மட்டுமே கலாச்சாரமாக கற்பிக்கப்படுகிறது. 20 வயதே ஆன சுமனும் அருண்குமாரும் இதற்கான சாட்சிகள்.
கல்வியை விடவும், வேலை வாய்ப்புகளை விடவும், வேறெதை விடவும் சாதியே தங்களுக்கான அடையாளத்தையும், அதிகாரத்தையும் அளிக்க முடியும் என முக்குலத்தோர் நம்புகின்றனர். இவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களில் திருட்டுத் தொழில், ஆயுதக் கலாச்சாரம், கஞ்சா வியாபாரம், சாதி/குலப் பெருமை ஆகியவையே மையக் கருவாக முன் வைக்கப்படுகின்றன. கிராமப் பின்னணியை வைத்து திரைப்படங்களின் கதாநாயகக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் தேவர்களையே சித்தரிக்கின்றன. சென்ற தலைமுறையில் பாரதிராஜா தொடங்கி தற்போது சசிக்குமார் வரை இதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் குறிப்பிட முடியும். இப்படியான படங்கள் பி, சி செண்டர்களில் ஓடும் என கணக்குப் பார்க்கும் இயக்குனர்கள், அவை அச்சாதியினரிடையே உண்டாக்கும் சமூக - உளவியல் ரீதியான தாக்கத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. சாதிவெறி தலைக்கேறிய இளைஞர்கள், தனக்கு அடிபணிய மறுக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவரை எத்தருணத்திலும் வெட்டி சாய்க்கும் மனநிலையில் இருக்கும் போது, இந்த ஜனநாயக அமைப்புகள் எவ்வளவு கவனமாக இயங்க வேண்டும்?! ஆனால், அந்த அக்கறையும், பொறுப்புணர்வும் யாருக்குமே இல்லை என்பதை எல்லா நிலைகளிலும் உணர முடியும்.
“நான் அரசுப் பள்ளி ஆசிரியராக பல ஆண்டு காலம் பணிபுரிந்திருக்கிறேன். தென்மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் சாதிக் கூடங்களாகவே இயங்குகின்றன. 1957 இம்மானுவேல் சேகரன் கொலைக்குப் பின்பு முக்குலத்தோரின் சாதி வெறி, தீவிரத்தன்மையை எட்டிவிட்டது. தனது சாதியை அப்பட்டமாக பறைசாற்றும் வகையில் முத்துராமலிங்கத்தின் டாலரை கழுத்தில் அணிவது அல்லது அவர் உருவம் பதித்த பனியனை அணிந்து வருவது, கையில் முக்குலத்தோர் அமைப்புகளின் கொடி நிறங்களில் கயிறுகளைக் கட்டி வருவது, பெண் பிள்ளைகள் கூட நெற்றியில் வைக்கும் பொட்டை குல நிறங்களில் வைக்கின்றனர். அக்டோபர் 30 தேவர் ஜெயந்திக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பையன்களிடம் பதட்டம் தெரியும். தலைமுடியை மொட்டை அடிப்பதற்காக நீளமாக வளர்த்திருப்பார்கள். பசும்பொன்னை நோக்கி ஜோதி ஏந்தி வருவார்கள். இதில் வேதனை என்னவென்றால், அச்சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களை இதற்கு ஊக்கப்படுத்துவதுதான். முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என ஒட்டுமொத்த அரசியல் ஆளுமைகளும் இந்த வைபோகத்தில் போட்டி போட்டுக்கொண்டு பங்கேற்பதால், அதன் தாக்கம் பள்ளிகளிலும் வெளிப்படுகிறது. முத்துராமலிங்கத்தின் சிலைக்கு பள்ளியில் வைத்து மாலை போட முடியும். ஆனால் இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் பங்களித்த அம்பேத்கருக்கு அப்படி செய்துவிட முடியாது. ஆசிரியர்களே அதை எதிர்ப்பார்கள். அம்பேத்கரை பள்ளி மாணவர்களுக்கு சரியாகவும் முறையாகவும் அறிமுகப்படுத்தாததால்தான், வெளியில் அவர் மீதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் இருக்கும் சாதி வெறுப்பு நீங்காமல் தொடர்கிறது. சில பையன்கள் ஆசிரியரையே அடிக்கிற அளவுக்கு சமூக மற்றும் அரசியல் பலத்தோடு இயங்குகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத வகையில் அரசியல் பிரமுகர்கள் அவர்களைப் பாதுகாக்கின்றனர். சாதியைக் காப்பாற்றுவதற்கு பண்பாட்டு அமைப்புகள் தீவிரமாக வேலை செய்கின்றன. ஆனால் சாதியை ஒழிப்பதற்கு அப்படியான அமைப்புகள் இல்லை. நான் கல்வித் துறையில் இருப்பதால் அது பற்றிப் பேசுகிறேன். இப்படித்தான் அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சாதியை வளர்த்தெடுக்கின்றன” என்கிறார் தலித்திய செயற்பாட்டாளர் கே.எஸ்.முத்து.
வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளில் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளை எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பரிந்துரைத்திருக்கிறது. விதிகள் 3 மற்றும் 13 (2) ஆகியவை பல பரிந்துரைகளை அரசிற்கு அளிக்கின்றன. வன்கொடுமை நிகழும் பகுதிகளில் மாவட்டக் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்குவது, இரு சமூகங்களையும் வைத்து அமைதிக் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆதிக்க சாதியினரிடம் இருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்வது, தேவைப்பட்டால் உயிர் மற்றும் உடைமை பாதுகாப்பை முன்னிட்டு பட்டியல் சாதியினர்/ பழங்குடியினருக்கு ஆயுத உரிமங்கள் வழங்குவது, அரசு நிறுவனங்களில் குறிப்பாக காவல்துறையில் எஸ்.சி/எஸ்.டிக்கு போதுமான பிரதிநிதித்துவம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல், இது போன்ற பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பட்டியல் சாதியினரை நியமிப்பது என வன்கொடுமையைத் தடுப்பதற்கு பல நல்ல பரிந்துரைகள் சட்டத்தில் உள்ளன. ஆனால் அவற்றை அரசு நிர்வாகம் கண்டுகொண்டதே இல்லை.
“கச்சநத்தம் போன்ற லட்சக்கணக்கான கிராமங்களில் தலித் மக்கள் அன்றாடம் வன்கொடுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களால் எவ்வளவு முயன்றும் தம் மீதான ஒடுக்குமுறைகளையும் தாக்குதல்களையும் தடுக்க முடிவதில்லை. ஆதிக்க சாதியினரின் கூடாரமாக இருக்கும் காவல்நிலையங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் புகார்களைக் கூட ஏற்க மறுக்கிற அவலம் தான் இன்றும் நீடிக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ஒரு சதவீதம் கூட சரியாகப் பயன்படுத்தாத போது, அது தவறாக பயன்படுத்தப்படுவதாகச் சொல்லி அதில் திருத்தங்கள் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிக்கவோ, குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கவோ, சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுதோறும் அதிகரிக்கும் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த அதனிடம் எந்த வழியும் இல்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்தக் களநிலவரம் தெரியவில்லை. அரசமைப்புச் சட்டம் குற்றமெனக் கூறும் தீண்டாமையை ஒழிப்பதே இச்சட்டத்தின் உன்னத நோக்கம். உச்சநீதிமன்றத்தின் திருத்தம் தொடர்பான விசாரணை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணைக்கு வரும் போது மத்திய அரசு உண்மையான கள நிலவரத்தை அங்கே எடுத்துரைத்து இச்சட்டத்தை வலிமை நீர்த்துப் போகாமல் பாதுகாக்க வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் சத்தியச்சந்திரன்.
கயர்லாஞ்சி, கச்சநத்தம் போல கூட்டுப் படுகொலைகளோ, வன்புணர்ச்சிகளோ நடந்த பிறகு இழவு வீட்டில் ஒப்பாரி வைக்கும் வகையில் ஆளாளுக்கு அதை கண்டிக்கக் கிளம்பி விடுகின்றனர். அரச பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர்வினையாற்றும் பொதுச் சமூகம், சாமானியர்கள் சர்வசாதாரணமாக நிகழ்த்தும் வன்கொடுமை எனும் சமூக பயங்கரவாதத்தைக் கண்டுகொள்வதில்லை.
பரவலாக தென்மாவட்டங்களில் இருக்கும் தாழ்த்தப்பட்டப் பிரிவினரான பள்ளர்களை தேவேந்திர குல வேளாளர் என சமூக ரீதியாக ஒருங்கிணைக்கும் வேலையை சில அமைப்புகள் முன்னெடுக்கின்றன. சாதி இந்துக்களான தேவர்கள், பள்ளர்களை ஒடுக்குவதும், அவர்கள் அதற்கு எதிர்வினையாற்றுவதும் தொடர்ந்து நடக்கிறது. 1990களில் நடந்த தென்மாவட்டக் கலவரங்கள் இதற்கான ஆதாரம். இந்த மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் புதிய தமிழகம், தேவேந்திரர் தன்னார்வ அமைப்பு, மள்ளர் மீட்புக் கழகம் போன்ற அமைப்பினர், “எங்களுக்கு தீண்டாமையே கிடையாது. நாங்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. வேளான்குடிகளான எங்களை பிரிட்டிஷ் காலத்தில் தவறுதலாக எஸ்.சி பட்டியலில் சேர்த்துவிட்டனர். எங்களுக்கு இட ஒதுக்கீடும் வேண்டாம், எஸ்.சி பட்டமும் வேண்டாம்” என்று சொல்லி மாநாடு நடத்தி தீர்மானமும் நிறைவேற்றினர். சென்ற ஆண்டு நடந்த இந்த மாநாட்டில் பா.ஜ.க தேசியச் செயலாளர் அமித் ஷா கலந்து கொண்டார்.
தங்களுக்கு தீண்டாமையும், வன்கொடுமையும் இல்லை என்று இந்த அமைப்பினர் கூறினாலும் பள்ளர் சமூகத்தினர் நாள்தோறும் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கின்றனர் என்பதே உண்மை.
“காலந்தோறும் சாதி இந்துக்களுக்கு அச்சப்பட்டு வாழ்ந்து வந்த தலித் மக்கள், வெகு குறைவான சந்தர்ப்பங்களில் தான் சாதி இந்துக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்கள். ’நான் இந்துவாகப் பிறந்தேன், ஆனால் நான் இந்துவாக சாக மாட்டேன்’ என 1935 இல் அம்பேத்கர் பிரகடனம் செய்த போது இந்திய பொதுச் சமூகம் மிரண்டது. அதன்பின் 1981 இல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கு மதம் மாறிய போது அரசும் பொதுச் சமூகமும் பதறியது. அந்த மக்கள் ஓட்டுவீட்டில் தான் வசிக்கின்றனர். ஆனால் சாதி இழிவிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. அவர்களை யாரும் சாதிப் பெயர் சொல்லித் திட்டுவதோ ஒடுக்குவதோ இல்லை. இந்துக்களாக இருக்கிற வரை பட்டியலில் இருந்தாலும், வெளியேறினாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழிவு தான். அம்பேத்கர் சொன்ன மதமாற்றத் தீர்வை கையிலெடுத்தால் மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் இழந்த மாண்பை மீட்டெடுக்க முடியும்” என்கிறார் புனித பாண்டியன்.
“நாற்பதுக்கும் மேற்பட்ட கட்சிகளும் அமைப்புகளும் எங்களை வந்து பார்த்தாங்க. நாங்க மூணு உசிரைப் பறிகொடுத்துட்டோம். அது திருப்பிக் கிடைக்கப் போறதில்ல. ஆனா இனிமேல் எங்களுக்கு வன்கொடுமையே நடக்காதுங்கற உத்திரவாதத்தை யாராவது தர முடியுமா? நாங்க கல்வியை நம்புறோம், உழைப்பை நம்புறோம், அமைதியை நம்புறோம். எங்க வீட்லயும் கத்தி, அரிவாளெல்லாம் இருக்கு. ஆனா அதை வச்சு மனுசங்களை வெட்ட முடியும்னு எங்களுக்கு தோணினதில்ல. நாங்க பண்பட்டவங்க. பண்படாத சாதிக்காரங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதாவது பண்ணுங்க. சக மனுஷனை அடிமைப்படுத்தக் கூடாதுனு அவங்களுக்கு யாராவது சொல்லித் தாங்க. அது போதும்” என்கிறார் மகனைப் பறிகொடுத்த அறிவழகன். இந்த பக்குவத்தையும் நாகரிகத்தையும் கச்சநத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமுமே பார்க்க முடிந்தது. அவர்கள் யாரும் பழிக்குப் பழி வாங்குவோம் என முழங்கவில்லை. இவ்வளவு இழப்பிற்கு பிறகும் அவர்கள் நீதியிலும், சமாதானத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
கச்சநத்தம் தலித் மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுவிட்டது, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டனர், அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தாயிற்று. சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்தாயிற்று, உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிடுவார்கள், அமைதிப் பேச்சு வார்த்தையை மாவட்ட நிர்வாகம் அறிவித்தாயிற்று, இந்தப் படுகொலைக்கு எதிரான வன்மையான கண்டனங்களை அறிவுச் சமூகமும், கட்சிகளும், அமைப்புகளும் பதிவு செய்தாயிற்று. ஒருவார காலத்தில் எல்லாம்...எல்லாம் இயல்புநிலைக்கு திரும்பியாயிற்று. இனி, தீராத ஒடுக்குமுறைகள் நடந்து கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு சேரியிலிருந்து ’அய்யோ’ என்ற உயிர் வாதையின் பேரொலி எழும்புகிற வரை பொதுச் சமூகமே, அரசாங்கமே... அறிவுச் சமூகமே ஓய்வெடு! இழவு வீட்டிலிருந்து ஒப்பாரி கிளம்பட்டும். அது வரையிலும் எதையுமே பார்க்காதபடி, கேட்காதபடி புலன்களை பூட்டிக் கொள்ளுங்கள்.
(இதன் சுருக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு முன்னதாக தி வயர் இணையதளத்தில் வெளிவந்தது)
- ஜெயராணி