தமிழ்நாட்டில் சமூக உணர்வோடு போராடுகிற சில வழக்குரைஞர்களை கொலைகாரர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் நீதிபதிகளே சித்தரிக்கும்போக்கு வேதனையளிக்கிறது. ஓர் உண்மையை எல்லோரும் மறந்திருக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியது. வழக்குரைஞர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி ஒளிந்தனர். அவர்கள் ஒளிந்த இடம் நீதிபதிகளின் அறையாகவும் இருந்தது. அங்கு அந்நேரத்தில் நீதிபதிகளுமிருந்தார்கள். காவலரின் தடிகள் நீதிபதிகளை நோக்கிப் பாய்ந்தது. உயிருக்குப் பயந்து ஒளிய வந்த வழக்குரைஞர்கள் நீதிபதிகளைக் காப்பாற்றத் துணிந்தார்கள். தடியடிகளை தாங்கள் பெற்றுக்கொண்டு நீதிபதிகளுக்கு கவசமானார்கள்.
இதுதான் தமிழக முற்போக்கு வழக்குரைஞர்களின் பாத்திரம். காவல்துறையின் கொடுந்தாக்குதலிலிருந்து நீதிபதிகளைக் காத்த வழக்குரைஞர்களையா நீதிபதிகள் கொலைக்காரர்களாக சித்தரிக்கிறார்கள்?
வழக்குரைஞர்கள் குடும்பத்தோடு போராடுவது குற்றமா? நமது அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து நமக்கு எல்லோருக்கும் மட்டமான கருத்துதானிருக்கும். அங்கே முஷாரஃப் ஆட்சியிலிருக்கும்போது நீதிமன்றத்திற்கும், ஆட்சிமன்றத்திற்கும் இடையே கடுமையான மோதல் உருவானது. முஷாரஃப் தனது சர்வாதிகாரத்தின்மூலம் தலைமை நீதிபதியை பதவியிறக்கம் செய்தார். அந்த நாட்டின் வழக்குரைஞர்கள் வீதியிலிறங்கினர். அவர்களோடு சனநாயக சக்திகள் அனைவரும் கைகோர்த்தனர். வழக்குரைஞர்களின் குடும்பங்களும் களத்தில் நின்றனர். விளைவு முஷாரஃப் விரட்டப்பட்டார். நீதிபதி மீண்டும் பணியிலமர்த்தப்பட்டார். சனநாயகம் காப்பாற்றப்பட்டது.
அங்கு சனநாயகம் காப்பாற்றப்பட்டதற்கு வழக்கறிஞர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் பங்கு உண்டு. சென்னையில் குடும்பத்தோடு வந்து மிரட்டுவதாக சொல்லப்படுகிறதே அப்படி குடும்பமாக வந்த கணவனும், மனைவியும் வழக்குரைர்கள்தான். தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டுமெனத் தொடர்ந்துப் போராடிவரும் தோழர்கள் பகத்சிங்கும், பாரதியும்தான் அவர்கள்.
"எல்லோரும் வீட்டுக்குள்ளேயே போராட வேண்டும். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது!"
என்ன மனநிலை இது? சாலை மறியல் கூடாது. வேலைநிறுத்தம் கூடாது. முற்றுகை கூடாது. அப்புறம் எப்படித்தான் போராடுவது? எடுத்தவுடனேயே யாரும் இந்த வடிவங்களை கையில் எடுப்பதில்லை என்பதை எல்லோரும் மறைக்கிறார்கள்.
தமிழை தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென இந்த வழக்குரைஞர்கள் யாரும் கையில் கத்தியோடு நீதிபதிகள் முன்னால் பாயவில்லை. அவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடுகிறார்கள். கருத்தரங்கம், கோரிக்கைப் பிரச்சாரம் என்று தொடங்கிய போராட்டம், 2013-இல் சாகும்வரை உண்ணாவிரதமென வலுத்தது. உண்மையாய் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திய இவர்களில் சிலர் இன்னும் தீராத உடல் பிரச்சினைகளை சுமந்து திரிகிறார்கள்.
நீதிபதிகளையும், அரசையும் திரும்பிப் பார்க்க வைக்க இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்தார்கள். அதன்பின்தான் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி தமிழில் வாதாட அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார். தமிழக சட்டசபையும் வழக்கம்போல் தீர்மானம் நிறைவேற்றியது.
பரிந்துரையும், தீர்மானமும் என்னவாயிற்று?
பரிந்துரைப்பதோடும், தீர்மானம் நிறைவேற்றுவதோடும் கடமை முடிந்துவிடுகிறதா? அப்படித்தான் சொல்கிறார் தற்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. விசயம் இப்போது மத்திய சட்ட அமைச்சகத்திடமும், உச்சநீதிமன்றம் வசமும் இருப்பதாக கூறுகிறார்.
இதன் பொருள் என்ன? என்னை தொந்தரவு செய்யாதீர்கள், அங்குபோய் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதுதானே! இது எப்படி சரி? கல்வியில் ஒரு பிரச்சினை என்றால் மாணவர்கள் ஆசிரியரிடம் சொல்வார்கள். ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் சொல்வார். தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரி மூலமும், அதிகாரி கல்வி அமைச்சகம் மூலமும் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும். அதற்குதானே நிர்வாக அலகுகள்?
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டிய கடமை இப்போது அதைப் பரிந்துரைத்த நீதிபதி மற்றும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு ஆகியவற்றின் கைகளில்தானே உள்ளது? அதுகுறித்து உச்ச நீதிமன்றத்திலும், மத்திய சட்ட அமைச்சகத்திலும் என்ன செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது? எவ்வளவு காலமாகும்? என்பது குறித்து முறையான தகவல் அளிக்க வேண்டியது இவர்களின் பொறுப்புதானே? அதை ஏன் செய்யவில்லை என்பதுதான் இப்போதையப் போராட்டம். அதை செய்யத் தவறிய உயர் நீதிமன்றத்தையும், தமிழக அரசையும் கண்டிப்பதும், போராடுவதும் நியாயமானதே.
நீதிபதிகள் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கும் புனிதமானவர்களா? சனநாயகத்திற்கானவர்களா?
நீதிபதிகளிடம் எந்த கோரிக்கையும் வைக்கக்கூடாது என்றோ, கோரிக்கையின் பொருட்டு நீதிபதிகளை யாரும் சந்திக்கக்கூடாது என்றோ எந்த சட்டமும் இல்லை. ஒரு நீதிபதியின் கீழ்வரும் வழக்கில் வாதாடுகின்ற வழக்குரைஞர்கள் அந்த வழக்கு நடக்கும் காலகட்டத்தில் அந்த நீதிபதியை சந்திக்கக்கூடாது. அப்படியான சந்திப்புகள் அந்த வழக்கின் நடைமுறையில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்துவிடும் என்பதால் இது நடைமுறையாக உள்ளது.
அதேநேரத்தில் நீதிபதிகள் வழக்குரைஞர்களோடு நெருக்கமாக இருப்பதன் மூலமே சமூகத்தோடு நெருக்கமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை. சனநாயகத்தின் ஆட்சியை நாம் சட்டத்தின் ஆட்சியென்றே கூறுகிறோம். ஏனென்றால், சமூக நடவடிக்கைகள் (பேச்சுரிமை, கல்வி - வேலைவாய்ப்புரிமை, போராட்ட உரிமை, உயிர்வாழும் உரிமையென) அனைத்தையும் ஒழுங்குப்படுத்துகிற ஆட்சியென்பது அதற்கான சட்டங்களின் மூலம்தான் ஒழுங்குப்படுத்துகிறது. அப்படியான சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறதா? நடைமுறைப் படுத்தப்படுகிற சட்டங்களில் மாற்றங்கள் தேவைப்படுகிறதா? என்பதையெல்லாம் கண்காணிக்கின்ற கடமை நீதிமன்றங்களுக்கே உள்ளது. இதில் நீதிமன்றம் என்பது நீதிபதிகள் மட்டுமல்ல. வழக்குரைஞர்களும் சேர்ந்துதான்.
இப்படியான சனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கே நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் இணைந்த பல்வேறு குழுக்கள் அவசியப்படுகின்றன. சாதிவெறி, மதவெறி, லாபவெறி என அனைத்து சமூகவிரோத சக்திகளும் இந்தியாவை முழு சனநாயக நாடாக மாறவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் நீதிமன்றத்தின் கடமை விரிந்தளவில் செயல்பட வேண்டியதாக இருக்கிறது. இதுகுறித்து நீதிபதிகள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
நீதிபதிகள் தாமாக முன்வந்து சில வழக்குகளை நடத்தலாம். சமூகத்தை நிலைகுலைய வைக்கிற விசயங்களில் தலையிடலாம். நம் நாட்டில் அப்படிப் பல பிரச்சினைகள் தலைவிரித்தாடுகிறது. சாதி ஆணவக்கொலைகள், அளவில்லா ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மாநிலங்களுக்கிடையில் பல தகராறுகள், அண்டை நாடு நம் மீனவர்களை தாக்கிக் கொல்வது, இவையனைத்தும் அரசியல் லாபங்களுக்காக தொடர விடுவதென பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் நீதிமன்றம் தலையிட வேண்டிய தேவையுள்ளது. அப்படி தலையிடும்போது சனநாயகத்திற்கான வழக்குரைஞர்கள் நீதிபதிகளோடு இணைந்து நிற்பார்கள். இதுதான் நீதிமன்ற மாண்பைக் காப்பாற்றுவது என்பதாகும். இருவரும் சேர்ந்துதான் நீதிமன்ற மாண்பைக் காப்பாற்ற முடியும்.
அப்படி சேர்ந்து செயல்படுவதற்கான குழுக்கள் உருவாக வேண்டிய நிலையில் நீதிபதிகள் வழக்குரைஞர்களிடமிருந்து பாதுகாப்பு, அதுவும் சனநாயக கடமையாற்றும் வழக்குரைஞர்களிடமிருந்து பாதுகாப்பு கோருவது பொறுப்பற்றதாகும். சமூக நோக்கத்திற்காக போராடுவதை சட்டத்தின்பேரால் சமூகவிரோத நடவடிக்கையாக்கும் முயற்சியாகும்.
நீதிபதிகள் ஏன் போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்? அவர்கள் மக்களின்மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிற அரசின் அங்கமாக இருக்கிறார்கள். மொழிக்கொள்கை, தொழில்கொள்கை எல்லாவற்றிலும் அரசின் நடவடிக்கை சரியென்று ஒத்துப் போகிறார்கள். எந்த மாற்றமும் தேவையில்லையென நினைக்கிறார்கள். மாற்றத்தைக் கோரும் எல்லாவற்றையும் நசுக்க நினைக்கிறார்கள். அது வழக்குரைஞர்களாக இருந்தாலும் சரியென நினைக்கிறார்கள். நாங்கள்தான் நீதிமன்றம் என ஏகபோக உரிமை கொண்டாடுகிறார்கள். அந்த ஏகபோகத்தை நிலைநாட்ட மத்திய தொழில் பாதுகாப்புப்படை எனும் பங்காளியை அழைக்கிறார்கள்.
இப்போது ஆட்டம் போராடுகிற வழக்குரைஞர்களிடம் மட்டுமில்லை; சனநாயகம் வேண்டுகிற எல்லோரிடமும்தான். விரைவாய் முடிவெடுப்போம்!
- திருப்பூர் குணா