நீதிபதிகள் ஆகமங்களையே அறியாமல் தீர்ப்பு சொல்லுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கூறினார். வழக்கறிஞர் சிகரம் ச. செந்தில்நாதனின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு டிச.16 அன்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் நிறைவாக சிறப்புரையாற்றிய அவர்,

“நீதிபதிகளே ஆகமம் என்றால் என்னவென்று தெரியாமல் தீர்ப்பு வழங்குகின்றனர். காஞ்சி வைணவக் கோவிலில் தமிழில் பாசுரங்களை பாடக் கூடாது என்று ஒரு வழக்கு. அதன்மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆகம விதிப்படி தமிழில் பாட தடைவிதிப்பதாக தீர்ப்பளித்தார். அந்த நீதிபதியைத் தொடர்பு கொண்டு எந்த ஆகமத்தை படித்துப் பார்த்து தீர்ப்பு வழங்கினீர்கள்? ஏற்கெனவே ஆகமம் குறித்து நான் வழங்கிய தீர்ப்பைக் கூட படிக்கவில்லையா? என்று கேட்டேன். அவரிடம் பதில் இல்லை.

ஆகமங்கள், கோவில்கள் குறித்து செந்தில்நாதன் புத்தகம் எழுதியுள்ளார். அவற்றை முதலில் நீதிபதிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஒரு வழக்கு வருகிறதென்றால், நீதிபதிகள் அதை நன்கு படித்துப் பார்த்துவிட்டு, விசாரிக்க தமக்கு தகுதி இருக்கிறதா? என்பதை சுயபரிசோதனை செய்து கொண்டு விசாரிக்க வேண்டும் அல்லது வழக்கு தொடர்பான முழுவிவரங்களைத் தேடித் தெரிந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் பக்தி இலக்கியங்கள். ஆகமத்தில் மொழி பற்றி கூறப்படவில்லை. சில அமைப்புகள் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என்கிறார்கள். எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கத்தான் நீதிமன்றங்கள் உள்ளன.

சமூகத்தின் பழக்கவழக்கங்கள், சமூக நடைமுறைகள் மீது கருத்து கூற வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. நீதிபதிகள் அனுபவங்களின் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கின்றனர். இன்றைய தீர்ப்பு நாளைக்கு இருக்குமா? என்று தெரியவில்லை. மனம் புண்படும் வருத்தப்படும் என்று கருதாமல் கருத்தை ஆணித்தரமாக சொல்ல வேண்டும் என்றார்” முன்னாள் நீதிபதி சந்துரு.

Pin It