சிறைவாசி தண்டனைக் குறைப்புகளின் முழு தகவல்களையும் வழங்க ஆணையர் உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் நீதிமன்றங்களால் நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் 26 ஆண்டுகளாக சிறைக் கம்பிகளுக்குள் இருந்து உறுதி தளராது சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் பேரறிவாளன். டெல்லி அதிகார பீடத்தில்  ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் தங்கள் அதிகாரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், தனது முழுமையான அதிகாரச் செல்வாக்கையும் முறைகேடாகப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக குடியரசுத் தலைவர் வழியாக இவர்களின் விடுதலைக்கான தடையைப் பெற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது நடுவண் ஆட்சி.

perarivalan 330நாட்டைக் கெடுத்ததே நேருவின் குடும்பம் என்று பேசி வரும் பா.ஜ.க.வும், சங்பரிவாரங்களும் ராஜீவ் கொலைக் குற்றத்தில் நேரடி தொடர்பில்லாத சிறைவாசிகளின் விடுதலையை உறுதியாக மறுக்கின்றன என்றால் பார்ப்பன அதிகார வர்க்கம் ஆட்சிகளை தங்களின் பார்ப்பனிய திசையில் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

26 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் இப்போது சிறைவாசிகள். சிறைவாசிகளுக்கான தண்டனை குறைப்புக்கான அணுகுமுறை, அவர்கள் செய்த குற்றங்கள் எத்தகையது என்று பார்க்காமல், சிறையில் அவர்களின் நன்னடத்தை ஒன்றை மட்டுமே பார்ப்பதுதான். ஆனால் மோடி ஆட்சி, ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று பேசுவது, சிறைவாசிகள் விடுதலைக்குத் தொடர்பான கருத்தே அல்ல. காந்தி கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சேயை 15 ஆண்டுகளில், அதுவும் காங்கிரஸ் ஆட்சியிலேயே விடுதலை செய்ததை மறந்துவிட முடியாது.

பேரறிவாளன் 2010 ஜனவரியிலிருந்து 2015 டிசம்பர் வரை பல்வேறு சிறைகளில் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சிறைவாசிகளின் முழு விவரங்களையும் தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பு அதிகாரியிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்டார். அந்த அதிகாரி தகவல் தர மறுத்து விட்டார்.  “இந்தப் பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது தொடர்பாக எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது” என்று அதிகாரி பதிலளித்தார். தலைமை தகவல் ஆணையருக்கு பேரறிவாளன் மேல் முறையீடு செய்தார். தலைமை ஆணையர் யஷோ வரதன் பிரசாத், தகவல் தொடர்பு அதிகாரி தந்த மறுப்பு ஏற்கக் கூடியதல்ல. இதில் தனது சிந்தனையைப் பயன்படுத்த அவர் தவறியிருக்கிறார். அவர் தந்துள்ள மறுப்பு குழப்பமானதாகவும் தெளிவற்றதாகவும் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்ற காரணத்துக்குள் அதிகாரி பதுங்கிக் கொண்டுவிட்டார்.

“நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருப்பதாலேயே தகவல் தெரிவிக்க மறுக்கக் கூடாது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. தகவல்  பெறும் உரிமைச் சட்டத்தில் விதி விலக்கு தரப்பட்ட பிரச்சினைகளைத் தவிர, வேறு எந்தப் பிரச்சினையிலும் தகவல் தெரிவிப்பதற்கு தடை இல்லை. நீதிமன்றமும் இப்படித் தகவல்களை வழங்கக் கூடாது என்று குறிப்பாக எதையும் தெரிவிக்கவும் இல்லை. எனவே அதிகாரியின் மறுப்பு, சட்டப்படி மிகவும் கேடானது” - என்று கூறியிருக்கிறார், ஆணையர்.

உள்துறை அமைச்சகம் 2010 லிருந்து 2015ஆம் ஆண்டு வரை தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகளின் முழுமையான விவரங்களை அதன் இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை மறுத்த உச்சநீதிமன்ற ஆணையில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஆணையர், பொது நலன் என்ற கண்ணோட்டத்தில் இவை வெளிப்படையாக அனைவரும் அறிய வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

அரசியல் சட்டத்தின் 72 மற்றும் 73ஆவது பிரிவு; அதேபோல் கிரிமினல் சட்டம் 432 மற்றும் 435ஆவது பிரிவுகள் அடிப்படையில் அரசு உருவாக்கியுள்ள நடைமுறை விதிகள் இருந்தால் அதை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் சிறைவாசி முருகன் தனது விடுதலைக்காக தொடர்ந்த வழக்கில் இந்த விதிகள் பின்பற்றப்பட்டதா என்றும் பேரறிவாளன் கேட்டிருந்தார்.

பேரறிவாளன் உறுதியோடு தொடர்ந்து நடத்தி வரும் சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது.

இதற்கிடையே ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவின் கீழ் தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று  ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.  தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் தனது விடுதலை  கோரி தாக்கல் செய்த மனுவின் மீது இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்கப்படாததால்  பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் வாதாடினார்.

“கடந்த 24 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறேன். சிறைச்சாலை விதிப்படி ஆயுள் சிறை 20 ஆண்டுகள்தான். அதைத் தாண்டிய சிறைவாசிகள் விடுதலை கோர முடியும். அது தவிர, ராஜீவ் கொலை வழக்கில் ஆர்.டி.எக்ஸ் வெடி குண்டுகளை தயாரித்து கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஜெயின் ஆணையத்தின் அறிக்கையின் படி இந்தக் கொலையில் வெளிநாட்டு சதி அடங்கி உள்ளதா என்ற விசாரணையை சி.பி.அய். இன்னும் முடிக்கவில்லை” என்றும் அம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Pin It