அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ நம்ம பெரியண்ணன் அமெரிக்காவுக்கு நிச்சயம் பொருந்தும். இன்று அமெரிக்கா இருக்கும் நிலையில் யாராவது ஊசிவெடி வெடித்தால்கூட ஒண்ணுக்குப் போய்விடும். அப்படி ஒரு மரண பீதியில் உறைந்து கிடக்கின்றது. உலக நாடுகளையே தனது ஆயுத பலத்தாலும், டாலர் பலத்தாலும் மிரட்டிய அமெரிக்கா 9/11 க்கு அப்புறம் வானத்திலே காகத்தைப் பார்த்தால் கூட, மனித வெடிகுண்டுபோன்று இது காக்கா வெடிகுண்டாக இருக்குமோ என அஞ்சி சாகின்றது. இல்லை என்றால் ஒரு பதினான்கு வயது முஸ்லீம் சிறுவன் கண்டுபிடித்த கடிகாரத்தைப் பார்த்து வெடிகுண்டு என பயந்துபோய் அவனைக் கைது செய்திருக்காது.

ahmed mohamed அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் இர்விங் என்ற நகரத்தில் உள்ள மெக்ஆர்தர் உயர்நிலைப்பள்ளியில் 9 வகுப்பு படிக்கும் பதினான்கு வயது சிறுவன் அகமது முகமது. அறிவியலின் மீது ஆர்வம்கொண்ட அந்தச் சிறுவன் சொந்தமாக ஒரு மின்னணு கடிகாரத்தை உருவாக்கியுள்ளான். தான் உருவாக்கிய அந்தக் கடிகரத்தைத் தன்னுடைய ஆசிரியர்களுக்குக் காட்டி பாராட்டைப் பெறவேண்டும் என்று நினைத்து அதை பள்ளிக்கு எடுத்துச் சென்று தன்னுடைய ஆசிரியப் பெருமக்களிடம் காட்டிவுள்ளான்.

 அந்த மின்னணு கடிகாரத்தைப் பார்த்த ஆசிரியருக்கு, ஏற்கனவே அவரது பொதுபுத்தியில் பதிவாகியிருக்கும் முஸ்லீம்கள் என்றால் குண்டு போடுபவர்கள் என்ற சிந்தனை வேறுவிதமாக யோசிக்க வைத்துள்ளது. பெயரோ அகமதுமுகமது, எனவே அவன் கையில் வைத்திருப்பது நிச்சயமாக கடிகாரமாக இருக்காது, அது நிச்சயம் வெடிகுண்டாகத்தான் இருக்க வேண்டும் என முடிவுசெய்த அந்த ஆசிரியர் உடனே காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பிறகு கேட்கவா வேண்டும், உலகத்திற்கே ஜனநாயகத்தைச் சொல்லிக் கொடுக்கும் தனது வளமையான ஸ்டைலில் அந்த பதினான்கு வயது சிறுவனைக் கையில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்று சிறையில் அடைத்திருக்கின்றது.

 பதினான்கு வயது சிறுவனைக் கையில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ stand with Ahmed என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் பலர் அகமது முகமதுவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்பு அம்பலப்பட்டு உலகமே காரித் துப்ப ஆரம்பித்தவுடன் அமெரிக்க அதிகார வர்க்கம் இது ஏதோ தங்கள் கவனத்திற்கு வராமல் நடந்த சம்பவம் போன்று நாடகம் ஆடத் தொடங்கி விட்டது. அந்தச் சிறுவனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னால் வெளியுறவுத்துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் போன்றவர்கள் ட்விட் செய்துள்ளனர்.

 மேலும் அதிபர் மாளிகையில் நடக்க இருக்கும் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்தில் கலந்துகொள்ளவும் அகமது முகமதுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தாங்கள் நடத்தவுள்ள அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு கூறியிருக்கின்றது. மேலும் ட்விட்டர் நிறுவனம் அகமதை தங்கள் அலுவலகத்தில் இன்டர்ன்ஷிப் செய்யுமாறு கேட்டுள்ளது.

 இது எல்லாம் அகமது முகமதின் திறமையைப் பார்த்து அவர்கள் தரும் மரியாதை அல்ல. தங்கள் இஸ்லாமிய எதிர்ப்பும், கோழைத்தனமும் உலக மக்களிடம் அம்பலப்பட்டுவிட்டதை ஒரளவாவது சரிசெய்வதற்காகவேதான். உலகை பலமுறை அழிக்கவல்ல ஆயுதங்களை தன்வசம் வைத்திருக்கும் அமெரிக்கா இப்படி ஒரு கடிகாரத்தைப் பார்த்து பயந்து நடுங்கிப்போனது என்றால் அந்த உலகப் போலீசின் வீரம் எப்படிப் பட்டதாக இருக்கும்!.

 இதில் சிறப்பான செய்தி என்னவென்றால் அகமது முகமது தன்னைச் சஸ்பெண்ட் செய்த அந்தப் பள்ளியில் மீண்டும் தான் சேரப்போவதில்லை என்று அறிவித்து இருப்பதுதான். அந்தப் பதினான்கு வயது சிறுவனிடம் இருக்கும் மான உணர்ச்சி கூட பல நாடுகளுக்கும் அந்த நாட்டு தலைவர்களுக்கும் இருப்பதில்லை. குறிப்பாக இந்தியாவிற்கு, அதிலும் குறிப்பாக மோடிக்கு.

 கையிலே கத்தியையும், துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு ஊரையே மிரட்டும் ஒரு ரவுடி அது இல்லாதபோது சாமானிய மக்களால் தெருநாயைப்போல அடித்துக் கொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கின்றோம். ஒரு ரவுடியின் பலம் என்பது அவனது ஆயுதங்களும், அதன் மீதான மக்களின் பயமும்தான். அவன் எப்போது அந்த ஆயுதத்தை இழக்கின்றானோ அப்போது அவனது மரணத்துக்கான தேதி குறிக்கப்படுகின்றது.

 உலகில் பல நாடுகளைத் தன்னுடைய பெட்ரோலியத் தேவைக்காகவும், கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் சூறையாடிய அமெரிக்கா, லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தில் ஜனநாயகத்தின் மலர்களைப் பூக்கச்செய்த அமெரிக்கா இன்று ஒரு கோழையைப் போல நடுங்கிச் சாகின்றது. அது ஒவ்வொரு முஸ்லீமையும் ஒரு ஒசாமா பின்லேடனாக பார்க்கின்றது. அது தன்னை அழிப்பதற்காக இந்த உலகமே சதிசெய்வதாக நினைத்து, விடும் மரண ஓலம் மெதுவாக காற்றில் கலந்து அனைத்துத் திசைகளிலும் மிதந்து செல்கின்றது.  

- செ.கார்கி