சட்டம் என்றால் சட்டந்தான்! அறிவுக்கு முரணாயிருந்தாலுஞ் சரி; சட்டம் என்றால் சட்டந்தான்!

kuthoosi gurusamy 300“நீர் மேடைமீது நடக்காமல் ரோடில் இறங்கி நடந்தீரா?”

“ஆமாம்; நடந்தது உண்மைதான்! ஆனால் மேடை மீது பசு மாடுகள் காகிதத்தை மேய்ந்து கொண்டிருந்தன. பழக்கூடைகளை வைத்துச் சிலர் வியாபாரம் செய்த கொண்டிருந்தனர். நடப்பதற்கு இடமில்லை. ஆதலால் சுமார் 10-20 கெஜம் வரையில் கீழே இறங்கி நடந்து போனேன்!”

“சரி! குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்! -ழுரடைவல கூறடி சுரயீநநள! -(குற்றவாளி! இரண்டு ரூபாய்!)”

“நீ சைக்கிளுக்கு வெளிச்சமில்லாமல் போனியா?”

“காற்றடித்தபோது திடீரென்று சைக்கிள் விளக்கு அவிந்துவிட்டது. என்னிடம் தீப்பெட்டியில்லாததால் எதிரிலிருந்த வெற்றிலை பாக்குக் கடைக் குச் சென்று கொளுத்திக் கொள்ளலாம் என்று சென்றேன். அப்போது தான் இந்தப் போலீஸ்காரர் என்னைப் பிடித்தார். “சைக்கிள் விளக்கைத் தொட்டுப் பாருங்கள்; சுட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதுதான் அவிந்து விட்டது. இதோ ஏற்றி விடுகிறேன்!” என்று சொன்னேன்; அவர் கேட்கவில்லை.

“உன்னை அதெல்லாம் கேட்கவில்லை. போலீஸ்காரர் உன்னைப் பிடித்தபோது சைக்கிளில் விளக்கில்லை. அது போதும், ழுரடைவல கூhசநந சுரயீநநள! -(குற்றவாளி! மூன்று ரூபாய் அபராதம்!)”

இவை போலத்தான் பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்களில் தீர்ப்புகள் பிறந்து கொண்டே யிருக்கும்!

2-3 மணி நேரத்தில் 100-200 வழக்குகளை விசாரிக்க வேண்டி யிருக்கும்போது, நீதி - அநீதி; காரணம் - விவாதம் இவைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருப்பதற்கு நமது கவுரவ மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு நேரமேது, பாவம்!

பாம்பாட்டி யொருவர் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிரில் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவருடைய கீரிப் பிள்iயானது ஒரு பாம்பின் மீது பாய்ந்து கடித்துவிட்டதாம். இரத்தம் பீறிட்டதாம்! உடனே எஸ். பி. சி. ஏ. (S.P.C.A.) (பிராணிகளை வதைப்பதைத் தடுக்கும் சங்கம்) உத்யோகஸ்தர் ஒருவர் அந்தப் பாம்பாட்டியைப் பிடித்துக் கொண்டு போய் நீதிபதி முன்பு வழக்குத் தொடர்ந்தார். பாம்புக்குக் கொடுமை விளைவித்த குற்றத்துக்காக 20 ரூபாய் அபராதம் விதித்தார், நீதிபதி. தொகை கட்ட முடியாதபடியால் இரண்டு வார சிறைத் தண்டனையை ஏற்று பாம்பாட்டி சிறை சென்றுவிட்டார்.

(பாம்புகளையும் கீரியையும் சிறைக்கே எடுத்துச் சென்றாரா, அல்லது நீதிபதி முன்பே திறந்து கொட்டிவிட்டுச் சென்றாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை!)

பாம்புக்காகப் பரிந்த பேசுகிறவர்களைப் போலவே, பார்ப்பனருக்காகப் பரிந்து பேசுகிறவர்களும் பலர் இருக்கின்றனர். S.P.C.A. சங்கத்தின் விதிகளைத் திருத்தி, பார்ப்பனர் மனம் புண்படும்படி நடந்து கொள்கின்ற குற்றவாளிகளையும் அதன்படி தண்டிக்கக்கூடிய வழியை வகுப்பது நல்லது!

கன்றுக்குட்டி தன் தாயின் பாலைக் குடித்துவிடுகிறது என்பதற்காக அதன் பாலையும் சேர்த்துக் கறந்து விற்பதற்காக வேண்டி, சென்னை நகரப் பால்காரர்களிற் பலர் (இவர்கள் யாவரும் பசுவைக் கும்பிடுகின்ற பக்தர்கள் என்பதும், பகவான் கிருஷ்ணன் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!) அக்கன்றுகளின் உயிரை வைகுண்டத் துக்கு அனுப்பிவிட்டு, சதை - நரம்பு - எலும்பு - இரத்தம் முதலியவைகளைக் குடைந்து எறிந்து விட்டு, மேல் தோலை மட்டும் வைத்துக் கொண்டு, உள்ளே வைக்கோலைத் திணித்து நான்கு கால்களிலும் குச்சிகளைக் கட்டி நிறுத்தி, அதன் தாய் முன்பு வைத்துக் கொண்டு, பால் கறந்து வருகிறார்கள்! இது S.P.C.A. விதிகளின்படி குற்றமோ அல்லவோ எனக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சியை நான் இன்றும் அடிக்கடி பார்த்துக் கொண்டு தானிருக்கிறேன்!

மனிதன் தன் சுயநலத்துக்காக ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ கொலை செய்வது குற்றமல்ல; பாம்பைக் கீரி கடிப்பதுதான் குற்றம் - என்பது தான் S.P.C.A. விதிகளின் சாரம் போலும்!

அப்படியானால் என்னைக் கடித்த மூட்டைப்புச்சிகளில் இரண்டை (என் உணவுக்காக அல்ல!) நேற்று நசுக்கிக் கொன்று விட்டேன்! இதை யாரும் S.P.C.A. காரரிடம் சொல்லி விடாதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! ஏனெனில்,-

“உம் பெயர்தான் குருசாமியா?”

“ஆமாம், அய்யா!”

“நீர் இரண்டு மூட்டைப் பூச்சிகளைக் கொடுமைப்படுத்தி, நசுக்கிக் கொன்றதாக எழுத்துமூலம் ஒப்புக் கொண்டிருக்கிறீர் அல்லவா?”

“ஆமாம்! ஆனால் அவைகளை விளையாட்டுக்காகவோ, நசுக்கி நாக்கில் தடவிக் கொள்வதற்காகவோ நான் கொல்லவில்லை, அய்யா! அது என் இரத்தத்தைக் குடித்தது! நான் அதன் இரத்தத்தை வெளிப் படுத்தினேன்! தம்மைக் கொல்ல வருகின்ற பசுவையும் கொல்லலாம் என்றார், அகிம்சைத் தலைவரான காந்தியார்! நான் குற்றவாளியல்ல! மேலும், “கொல்லாமை” பற்றிக் கூறுகின்ற திருவள்ளுவரோ, தன் ஊன் பெருக்கற்குத்தான் பிறிது ஊண்....”

“போதும், உம் பிரசங்கம்! இது பொது மேடையல்ல! நீர் S.P.C.A. விதிகளின்படி குற்றவாளியே! இரண்டு மூட்டை பூச்சியல்லவா? சரி! ழுரடைவல குடிரச சுரயீநநள! -(குற்றவாளி! நான்கு ரூபாய் அபராதம்!)”

இப்படித்தான் கோர்ட்டில் நடைபெறும்! ஆதலால் S.P.C.A. காரரிடம் தயவுசெய்து சொல்லி விடாதீர்கள்!

குத்தூசி குருசாமி (28-1-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It