சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான சான்றுகள் உள்ளன என்று அண்மையில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது (இந்தி தமிழ்திசை நாளிதழ் செய்தி, நாள்: 25.10.2024).

சிதம்பரம் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு நிலம் தானமாகக் கொடுத்தவர்களின் வாரிசுகள் வசமுள்ள 1267.09 ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் கோயிலுக்கும், தர்ம காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், 271.97 ஏக்கர் நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் கோயிலுக்கு செலுத்தப்படுவதில்லை. அதே போல, கோயிலுக்கு வழங்க வேண்டிய தொகையை தீட்சிதர்களிடம் கட்டளைதாரர்கள் அளிக்கின்றனர். அதற்கு முறையான கணக்கு விவரங்கள் இல்லை. சில நாட்களுக்கு முன்பாக வேறொரு வழக்கில், தீட்சிதர்கள் தங்களைக் கடவுளைவிட உயர்வானவர்களாகக் கருதக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கண்டித்தது. அக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். தீட்சிதர்கள் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய நகைச்சுவையும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இது போல பல குழப்பங்கள் சிதம்பரம் கோயிலில் நடைபெறுவது தொடர்நிகழ்வாகி விட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சிதம்பரம் கோயிலின் நிர்வாகம் பொது தீட்சிதர்கள் என்ற குழுவின் கையில் உள்ளது. இந்த நிலைமையில் அண்மையில் நடைபெற்ற ஒரு தீட்சிதர் இடைநீக்கப் பிரச்சினையிலும், இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிடலாம் என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

கோயில்கள் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. அவை அரசால் நிர்வகிக்கப்படுவதே சரியானது. அரசு நிர்வாகத்தின் மூலமாகவே முறையாகத் தணிக்கை நடைபெறும். சான்றாக, அறநிலையத்துறை கையகப்படுத்தும் கோயில்களின் நகைகள் ஆண்டுதோறும் பரிசோதிக்கப்பட்டு தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. காலத்திற்கும், அந்த நகைகள் பாதுகாக்கப்படுகின்றன. இதன்மூலம் வெளிப்படைத் தன்மை (Transparency) உறுதிப்படுத்தப்படுகின்றது. இதை ஓர் அரசு அமைப்பால் மட்டுமே செய்ய முடியும்.

தில்லை நடராசர் கோயிலைத் தீட்சிதர்களிடமிருந்து மீண்டும் அரசு மீட்டெடுக்க வேண்டும். அப்போது மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

- கருஞ்சட்டைத் தமிழர்