குஜராத் அரசின் செயலற்ற தன்மைதான் பிப்ரவரி, 27, 2002-க்குப் பிறகான (கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப்பின்) வன்முறைச் சம்பவங்கள் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றதற்கானக் காரணம் என்று குஜராத் மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த மறுநாளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என குஜராத் கலவரங்களைப் பற்றி விசாரணை நடத்திவரும் சிறப்புப் புலனாய்வுக்குழு அறிவித்துள்ளது. குல்பர்க் சொசைட்டியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி மற்றும் சமூகசேவகி தீஸ்தா செடல்வாட் ஆகியோரின் மனுக்களின் மீதான இறுதி முடிவாக இத்தகைய இயந்திரத்தனமான முடிவுக்கு சிறப்புப் புலனாய்வுக்குழு வந்துள்ளது.

modi_360இஷான் ஜாஃப்ரியை நரேந்திரமோடியே வெட்டி, கூறாக்கி, தீயிட்டு எரித்துச் சாம்பலை காற்றில் பறக்கவிட்டிருந்தால்கூட, ஒருவேளை மோடி சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கருதுவதுகூட முட்டாள்தனமானது. ஏனென்றால் அப்போதும்கூட அச்சாம்பல் துகள்கள் காற்றில் பறந்து மறைந்ததைப்போல மோடிக்கு எதிரான சாட்சிகள் மறைந்துவிட்டிருக்கக்கூடும். குஜராத் அரசின் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியாவிடம் 'தெஹல்கா' பெற்ற ரகசிய குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின்படி, "கோத்ரா படுகொலை நிகழ்ந்ததும் ஆத்திரமடைந்த மோடி, முதல்வர் பதவியை மட்டும் வகித்திராவிட்டால் அகமதாபாத்தின் முஸ்லீம் குடியிருப்புப் பகுதியான ஜூஹாபூராவில் போய் வெடிகுண்டும் வீசியிருப்பார்". சில நாட்கள் சிறை சென்று, பின் பிணையில் மீண்டிருப்பார். 2002 வன்முறைகளின் ஆகக்கொடிய குற்றவாளியான பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியைப் போல பிணையில் வெளிவந்து சுதந்திரமாகச் சுழன்றுகொண்டிருப்பார்.

 ஆனால் அவர் ஒரு முதல்வர். அன்றைய 5. 5 கோடி குஜராத் மக்களைக் காப்பதற்காக இந்திய அரசியல் சாசனத்தின்மீது சத்தியப்பிரமாணம் செய்து முதல்வராகப் பொறுப்பேற்றவர். 55 லட்சம் குஜராத் முஸ்லீம்களுக்கும் அவர்தான் பாதுகாவலர். எரிந்துபோன சபர்மதி ரயில் பெட்டிகளைப் பார்வையிட்டபின்னர் அவருக்கு ஏற்பட்ட கோபம் அளவிடமுடியாதது. ஆனால் அக்கோபத்தை அவர் அடக்கியிருக்கவேண்டும். மறுநாள் பிப்ரவரி, 28, 2002 அன்று குஜராத்தில் முழு அடைப்புக்கு ஏற்பாடு செய்தார். பிப்ரவரி 27 முதல் பல நாட்களுக்கு சட்டத்தின் ஆட்சியை நிறுத்தி வைத்தார். இந்துக்களின் பக்கம் மட்டுமே இருக்கவேண்டும் என காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது. 'ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை கட்டாயம் நிகழ்ந்தே தீரும்' என நி யூட்டன் விதி பேசினார். அவ்விதியை முஸ்லீம்களின் மேல் செயல்படுத்திக்காட்டினார்கள் சங்பரிவாரத் தொண்டர்களும், காவல்துறையினரும். கொத்துக் கொத்தாக முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் வன்புணர்வுக்கு ஆட்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் தீயிடப்பட்டார்கள். காரணம் இஸ்லாமியர்கள் இறப்புக்குப் பின்னர் தீயிலிடப்படுவதை விரும்பாதவர்கள். எனவே இஸ்லாமிய சடலங்களையும்கூட வன்முறையாளர்கள் அவமதித்தார்கள்.

 2002-ல் குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஆஸ்விஸ்ட்ச் வதைமுகாம் கொடுமைகளுக்குப் பிறகான ஒரு படுபயங்கரமான நிகழ்வுகளாகக் கருதப்படுபவை. மதத்தின் பெயரால் தொடர்ந்து பல நாட்கள் கொடுமைகள் நிகழ அனுமதிக்கப்பட்டன. கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் ஊழித்தாண்டவம் எப்படியெல்லாம் நிகழ்த்தப்படவேண்டும் என்றத்திட்டங்கள் மிகக் கனக்கச்சிதமாகப் பின்னப்பட்டன. நிகழ்வுக்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே திரிசூலங்கள் குஜராத் முழுவதும் சங்பரிவார இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. 14 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்ட 'திரிசூல் தீக்சா' எனப்படும் திரிசூலங்கள் வழங்கப்படும் நிகழ்வின் மூலம் ஏறத்தாழ 2, 80, 000 இளைஞர்களுக்கு திரிசூலங்கள் வழங்கப்பட்டிருப்பதாக வி. எச். பி. யின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன(2002 தகவல்களின்படி). ஏப்ரல், 2003-ல் மேலும் 3000 இளைஞர்களுக்கு திரிசூலங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இந்திய ஆயுதச் சட்டத்தின்படி ஆயுதத்தின் கூர்முனைகள் 6 இஞ்ச் அளவைத் தாண்டினால்தான் குற்றம். ஆனால் திரிசூலங்களில் இவற்றின் அளவு 6 இஞ்சுக்கும் குறைவாக இருக்குமாறு மிகத் தந்திரமாக வடிவமைக்கப்படுகின்றன.

 வன்முறைகள் நடந்து 10-ம் ஆண்டு நிறைவை குஜராத் அனுசரித்தாலும் அதைப்பற்றிய வெட்கமோ, கழிவிரக்கமோ, அனுதாபமோ ஆளும் மோடி அரசாங்கத்திற்குக் கொஞ்சம் கூட இல்லை. வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் இன்னமும் சுதந்திரமாக உலவுகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயிட்டபின்பு அந்தப் பெண்ணையும் கொன்றுபோட்ட கொடும்பாதகன் 'தெஹல்கா' உளவுப்படக்கருவிக்கு முன் கையும் களவுமாகப் பிடிபட்டபின்னரும் அவன்மீது விசாரணை முடிந்து தண்டனை தரப்படவில்லை. குல்பர்க் சொசைட்டியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்குக் காரணமானவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. நரோடா பாட்டியாவில் கொடும் வன்முறைக்குக் காரணமானவர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர். பிப்ரவரி 27 முதல் ஜூன் வரை நீடித்த கலவரத்தில் 300 முதல் 400 பெண்கள் வரை வன்புணர்வுக்கு ஆட்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். 919 பெண்கள் விதவையாக்கப்பட்டிருக்கிறார்கள். 606 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டிருக்கிறார்கள். வன்முறை நடந்து ஒரு ஆண்டு வரை ஒன்றரை லட்சம் இஸ்லாமிய மக்கள் உள்நாட்டு அகதிகளாக அவதிப்பட்டிருக்கிறார்கள். சில அரசுச்சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு நடத்தப்பட்ட இம்முகாம்களை முதல் ஒரு வாரம்வரை அரசு எட்டிப்பார்க்கவில்லை. 6 வயது சிறுவன் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறான். கலவரக்காரர்கள் அவனுக்குக் குடிக்க பெட்ரோலைத் தருகின்றனர், வலுக்கட்டாயமாகக் குடிக்க வைக்கின்றனர். பின் அவன் வாயில் ஒரு தீக்குச்சி கொளுத்திப் போடப்படுகிறது. அவன் சின்னாபின்னமாகிறான். இந்நிகழ்வைப் பற்றி 'Human Rights Watch' பதிவு செய்துள்ளது.

 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்யவேண்டிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளைத் தப்புவிக்க அனைத்து வேலைகளையும் செய்தனர். 2002 வன்முறையில் அரசின் பங்கு, வன்முறையைத் தூண்டி வெறியாட்டம் போட்ட சங்பரிவாரங்களின் செயல்கள், போலீசாரின் ஒருபக்கச் சார்பு, முஸ்லீம் மக்களின் இடப்பெயர்வு பற்றியெல்லாம் ஏறத்தாழ 40க்கும் அதிகமான அறிக்கைகள் மற்றும் உண்மைத்தகவல்களை மனித உரிமை அமைப்புகளும், குடிமக்கள் அமைப்புகளும் கொண்டுவந்துள்ளன. வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய குஜராத் அரசை தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது. முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குடிமக்கள் தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளது: 

"2007-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் நாள் கோத்ரா சம்பவம் நடந்து சிலமணி நேரங்கள் கழித்து சபர்கந்தா மாவட்டத்தின் லூனாவாடா கிராமத்தில் கூடிய நரேந்திரமோடியின் மூத்த அமைச்சர்கள், சம்பவத்திற்குப் பழிவாங்கும் செயல்திட்டத்தைத் தயாரித்து அதனை பாரதீய ஜனதாக்கட்சி, ஆர். எஸ். எஸ். , பஜ்ரங்தள் மற்றும் வி. எச். பி. யின் முக்கியத் தலைவர்கள் 50 பேருக்கு விளக்கினர். இச்செயல்திட்டம்தான், பழிக்குப்பழி வாங்கும் இக்கொலைத்திட்டம்தான் சங்பரிவாரத்தாலும், மாநில போலீசாராலும் பின்பற்றப்பட்டது".

வன்முறையை நேரில் கண்ட சாட்சியங்கள் சங்பரிவார ஆட்களை அடையாளம் காட்டினாலும் போலீசார் அவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடத் தொடர்ந்து மறுத்தனர். 'கட்டுக்கடங்காத கலவரக்கும்பல்' அல்லது '10000 பேர் அடங்கிய கும்பல்' என்றுதான் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளைப் பற்றியப் பதிவு கூறியது. வன்முறையிலிருந்து எவ்வழியிலாவது தற்காத்துக்கொண்ட முஸ்லிம்களும் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் அவர்களின் மீதான விசாரணையைத் தாமதப்படுத்த அல்லது ஒன்றும் இல்லாமல் செய்துவிட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். "குற்றம் சாட்டப்பட்டு இன்னமும் சிறைத்தண்டனை அனுபவிப்போர் முஸ்லீமாகவோ, தலித்துகளாகவோ அல்லது பழங்குடி இனத்தவராகவோதான் இருக்கிறார்கள்" என்று Human Rights Watch தெரிவித்துள்ளது. வன்முறைக்குத் தப்பி தங்கள் வசிப்பிடங்களைவிட்டு நீங்கியவர்கள் மீண்டு(ம்) தங்கள் இருப்பிடங்களுக்கு வரும்போது வழக்குகளைத் திரும்பப் பெற அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதற்கு அரசு எந்திரங்களும் உடந்தையாகச் செயல்பட்டன.

 தொடக்கத்தில் நரேந்திரமோடிக்கு எதிராக முணுமுணுத்த பிரதமர் வாஜ்பாய் மே மாதம், 2002-ல் கோவாவில் நடைபெற்ற பாரதீய ஜனதாக்கட்சியின் சங்கமத்தில் குஜராத் கலவரங்களை நியாயப்படுத்திப் பேசினார். கோத்ராவிற்கான, தவிர்க்கமுடியாத எதிர்விளைவுகள்தான் கலவரங்கள் என்றார்.

 பிப்ரவரி 27, 2002 அன்று மாலை நரேந்திரமோடியின் இல்லத்தில் குழுமிய போலீஸ் அதிகாரிகளின் மத்தியில் பேசிய மோடி, "இந்துக்களின் கோபத்தை முஸ்லீம்களின்மீது வெளிப்படுத்த அனுமதியுங்கள்" என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார் என்று ஐ. பி. எஸ் அதிகாரியும் அன்று மோடியின் வீட்டில் குழுமிய அதிகாரிகளுள் ஒருவருமான சஞ்சீவ்பட் கூறுகிறார். நரோடாபாட்டியா வன்முறைச்சம்பவங்கள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி ராகுல் சர்மா, பிப்ரவரி 27 முதல் மார்ச் 4 முடிய கலவரக்காரர்கள் போலீஸ் அதிகாரிகளிடமும், சங்பரிவார உயர்தலைவர்களிடமும் பேசியது பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளார்.

 சஞ்சீவ் பட்டையும், ராகுல் சர்மாவையும் எதிரிகளாகப் பாவித்து அவர்கள்மீது தீவிர நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார்.

 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குக் காரணம் என நூற்றுக்கணக்கான முஸ்லீம்களின் மீது POTA சட்டம் ஏவப்பட்டது. ஆனால் 2000 அப்பாவி முஸ்லீம்களின் உயிரைக் காவு வாங்கிய வன்முறைகளுக்குக் காரணமான சங்பரிவாரத்தின் ஒரு ஆள்மீது கூட POTA சட்டம் பாயவில்லை. இஸ்லாமிய மக்களின் வீடு, உடைமை, வர்த்தகங்களுக்கு ஏற்பட்டிருக்கிற சேதங்கள் மட்டும் 3800 கோடி ரூபாய் என Human Rights Watch மதிப்பிட்டுள்ளது.

 கலவரத்திற்குப் பின்னரும்கூட குஜராத் சமூகம் தொடர்ந்து ஆயதமயமாகிக் கொண்டே போகிறது. சாஹாக்கள் தொடர்ந்து பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றன. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு திரிசூலங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இளைஞர்கள் இந்துத்வா கருத்துப்பட்டறைகளில் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். அலங்கரிக்கப்படும் பொய் ‘உண்மை’ என உருமாற்றம் செய்விக்கப்படுகிறது. குருதியில் மிதந்து, தேர்தல்களில் வென்று, காந்தி பாணி உண்ணாவிரதமும் இருந்து புகழ்பெற்றுவிட்ட மோடி பிரதமர் பதவிக்கும் முன்னிறுத்தப்படுவதுதான் இந்தியாவின் தற்கால வரலாற்றுச் சோகம்.

 கலவரத்திற்குப் பிந்தைய 10 வருடகால குஜராத்தில் நிலவும் மயான அமைதியையும், அதன் பொருளாதார முன்னேற்றத்தையும் கண்டு நரேந்திரமோடியை ஒரு மீட்பராக, வழிகாட்டியாக, ஆதர்சமாகக் கருதும் பலரும்(இவர்களுள் பல கார்ப்பொரேட்டுகளும், பல மாநில முதல்வர்களும் அடக்கம்)ஹிட்லர் கூட ஜெர்மனிக்கு 15 வருடங்களுக்கு அமைதியைத் தந்தார் என்பதையும் அதற்காக ஜெர்மன் மக்கள் என்ன விலைக் கொடுத்தார்கள் என்பதையும் மறந்தே போய்விட்டனர். ஜெர்மானிய இனத்தை, அதன் தூய்மையை ஹிட்லர் உயர்த்திப் பேசியது போலவே மோடியும் குஜராத்தி இனத்தையும், குஜராத்தி மக்களையும் புனிதப்படுத்திப் பேசுகிறார். "என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுப்படுத்திக்கொள்ளுங்கள், பரவாயில்லை. ஆனால் குஜராத்தையோ, அதன் மக்களையோ எதுவும் சொன்னீர்கள் என்றால் நான் சும்மா இருக்கமாட்டேன்"என்கிறார் மோடி. அவர் வர்ணிக்கும் குஜராத் என்பது கோத்ராவும், நரோடாபாட்டியாவும் இல்லாத குஜராத்தா? குஜராத்திகள் என்பவர்கள் 60 லட்சம் முஸ்லீம்களைக் கழித்தது போக எஞ்சியவர்களா? படுகொலை செய்யப்பட்ட 2000 இஸ்லாமிய மக்கள் குஜராத்திகள் இல்லையா?வன்புணர்வு செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் குஜராத்திகள் இல்லையா?

 குஜராத்தை மிகவும் நேசித்த, ஹிந்து - முஸ்லீம் கலாச்சாரங்களை இணைத்த 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குஜராத்தி கவி வாலிசுக்கானியின் கல்லறை அஹமதாபாத்தில் கலவரக்காரர்களால் சேதமாக்கப்பட்டது. மோடி அரசு அக்கல்லறையின் மீதே சாலையையும் போட்டது. அப்படியானால் வாலிசுக்கானி குஜராத்தி இல்லையா? சிறந்த இசைமேதை உஸ்தத் ஃபையாகானின் சமாதியை பரோடாவில் கலவரக்காரர்கள் சேதமாக்கினார்களே, அப்படியானால் உஸ்தத் ஃபையாகான் குஜராத்தி இல்லையா?மோடியின் குஜராத்திகள் என்பவர்கள் எவர்?

 ரயில் பெட்டிகளை எரித்ததனால்தான் எதிர்வினையில் 2000 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது சொத்தையான வாதம். ஏனென்றால் இவர்கள்தான் 1992-ல் பாபர் மசூதியை இடித்தபோது அதற்கு மூலகாரணம் பாபரின் செயல்கள் என்றார்கள். குஜராத்தியின் மிகச்சிறந்த இசைக்குயிலான முஸ்லீம் பாடகி ரசூலான் பாயின் வீட்டை கலவரக்காரர்கள் 1969-ல் எரித்தபோது பரிவாரக்காரர்களுக்கு 'கோத்ரா' சாக்குப்போக்கெல்லாம் அப்போது கிடைக்கவில்லை. பேரதிர்ச்சியில் உறைந்துபோன ரசூலான் பாய் அதன்பின்னர் எப்பாடலையும் உதிர்க்காமலேயே இறந்துபோனார். சொல்லுங்கள் பரிவாரங்களே! ரசூலான் பாய் குஜராத்தி இல்லையா?மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கவாதியாக இருந்து, பின்னர் காங்கிரஸில் இணைந்து, 1977 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, க்வாண்டில்(Lamp)என்ற கவிதைப் புத்தகத்தை 1994-ல் படைத்து, மோடி அவர்களே! உங்களுடைய ஆட்களால் குல்பர்க் சொசைட்டி கலவரத்தில் கண்டம் துண்டமாக உயிரோடு வெட்டப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகடுக்கில் எரியூட்டப்பட்டு, குஜராத்தின் காற்றோடு காற்றாகக் கலந்து போய்விட்ட இஷான் ஜாஃப்ரி ஒரு குஜராத்தி இல்லையா?

 உண்மையான குஜராத்திகளைக் கொன்றுபோட்டு, 'குஜராத்துக்கு உழைப்பது மட்டுமே என் வேலை' என உலகத்துக்கெல்லாம் வித்தைக் காட்டும் நரேந்திரமோடி அவர்களே! இஷான் ஜாஃப்ரியின் கீழ்க்கண்ட வரிகளையாவது வெட்கத்துடன் படித்துவிட்டு அரசியலைவிட்டு வெளியேறுங்கள்! அறம் தரும் தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

“Geeton se teri zulfon ko meera ne sanwara/Gautam ne sada di tujhe Nanak ne pukara/Khusro ne kai rangon se daaman ko nikhara/Har dil mein muhabbat ki ukhuwat ki lagan hai/Ye mera watan mera watan mera watan hai “

"உன் இதயக்கதவுகளை தன்
 பாடல்கள் மூலம் மீரா அலங்கரித்தாள்
 நானக் உன்னை எவ்வாறு அழைத்தாரோ
 அவ்வாறே கௌதமும் அழைத்தார்
 குஸ்ரோ உன் மகுடத்திற்குப்
 பொலிவைச் சேர்த்தார்
 அன்பும் பரந்த மனப்பான்மையும் இங்கு
 ஒவ்வொரு இதயத்தின் துடிப்பாகவே உள்ளது
 இது என்னுடைய நாடு
 என்னுடைய நாடு, என்னுடைய நாடுதான்"

(நன்றி - மொழிபெயர்ப்பு : ராஃபியா பாஸ்ரின்)

 -----------------------------

- செ.சண்முகசுந்தரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

நன்றி : அம்ருதா, மார்ச், 2012