குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான இனப் படுகொலையை நடத்தி சர்வதேச அளவில் கண்டனத்துக்குள்ளானவர் மோடி. உச்சநீதிமன்றம் அவரை ‘நீரோ’ மன்னருக்கு இணையானவராக கூறியது. (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, ரோம் மன்னர், அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது ‘பிடில்’ வாத்தியக் கருவியை மீட்டுக் கொண்டிருந்தார் என்று வரலாறு கூறுகிறது)

இப்போது, அவர் ‘மதச் சார்பின்மை’ வேடம் போடுகிறார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவியை தட்டிப் பறித்துவிட கனவு கண்டு வருவதால் இத்தகைய நாடகங்களை நடத்தி வருகிறார். இப்போது முஸ்லிம் மக்களிடம் “கடந்த காலத்தை மறந்து விடுங்கள். உங்களின் தேவைகளுக்கான கோரிக்கைகளை குறைத்துக் கொண்டு பெரும் பான்மை சமூகத்துடன் (இந்துக்களுடன்) கலந்து விடுங்கள்; மத அடையாளங்களை கை விடுங்கள்; பிறகு குஜராத் முன்னேறுவதை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று பேசி வருகிறார்.

உதட்டளவில் முஸ்லிம்களிடம் பரிவு காட்டு வதாக அவர் பேசினாலும், அவரது ஆட்சியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை. குடியிருப்பு பாதுகாப்பு சட்டத்தில் மோடி ஒரு திருத்தம் கொண்டு வந்துள்ளார். இதன்படி குஜராத்தில் கலவரப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் அசையா சொத்துகளை (வீடு, நிலம்) ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினருக்கு விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பான்மை இந்துக்கள் வாழும் பகுதிகளில் அச்சத்துடன் வாழ விரும்பாத முஸ்லிம்கள் வீட்டை விற்றுவிட்டு, வேறு பகுதிக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். அச்சத்தினால், தங்கள் வீடுகளை விற்றுவிட்டு, முஸ்லீம்கள் வெளியேற விரும்பும்போது, ‘அடிமாட்டு’ விலைக்கு விற்கப் படும் சூழ்நிலை உருவாகிறது என்பதும் உண்மை தான். எனவே இது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான சட்டம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், மோடி அரசு கொண்டு வந்த மற்றொரு சட்ட திருத்தத்தில் யாருடைய சொத்தை எவருக்கு விற்க வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்யும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி முஸ்லீம் தனது வீட்டை அல்லது நிலத்தை ஒரு முஸ்லீமுக்கு மட்டும் விற்க முடியும். தலித் ஒரு தலித்துக்கு மட்டுமே விற்க முடியும். இந்து மற்றொரு இந்துவுக்கே விற்க முடியும் என்ற நிலையை மோடி அரசு உருவாக்கிவிட்டது. மாறி விற்பதற்கு தடை போடும் அதிகாரத்தை அரசு தன் வசம் வைத்திருக்கிறது. இதனால் சமூகத்தை மீண்டும் மதத்தின் அடிப்படையில் மோடி கூறு போட்டுள்ளார். இந்த விற்பனையில் சட்ட மீறல் நடப்பதாக, அதாவது, மதம் மாறி விற்பதாக ஏதேனும் புகார் வந்தால், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடி யாக தலையிட்டு சொத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட முடியும். இந்த சட்டத் திருத்தத்தினால் முஸ்லிம் குடியிருப்பு, இந்து குடியிருப்பு, அதிலும் உயர்சாதி குடியிருப்பு, தலித் குடியிருப்பு என்று குடியிருப்புகள் “அக்கிர காரங்கள்”, “சேரி”கள் போல தனித்தனியே சட்ட ரீதியாகவே பிரிக்கப்பட்டுவிட்டன.

பார்ப்பனியம் திணித்திருந்த வர்ணாஸ்ரம பாகுபாடுகளுக்கு மோடி தனது ஆட்சியில் சட்டவடிவம் தந்துள்ளார். அகமதாபாத் நகரத்தில் அகமதாபாத் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றுப் பகுதியில் ஒரு முஸ்லிம் வீடு கூட கிடையாது என்கிறார், அகமதாபாத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவை யாளர் அச்யுத் யக்னிக். அகமதாபாத் நகரில் முஸ்லிம்கள் தாங்கள் விரும்பும் பகுதிகளில் குடி யிருக்க முடியாது. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சில குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே குடியிருக்க முடியும். அகமதாபாத் புற நகர்ப் பகுதியான ஜீகாபுரா பகுதியில் முஸ்லிம்கள் வேறு வழியின்றி குடியேறும் நிலை உருவாகிவிட்டது. ஓரளவு வசதிப் பெற்று முன்னேறி வரும் நடுத்தர ‘தலித்’ பிரிவினருக்கு ‘இந்து’க்கள் வாழும் பகுதியில் வீடுகள் வாங்குவதற்கு தடையிருப்பதால், அகமதாபாத் நகரின் வெகுதூர புறநகர்ப் பகுதியான ‘சந்த்கேடா’ என்ற பகுதியில் தங்களுக்காக, தனியாக குடியிருப்பு கூட்டுறவு அமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டு தனியாக வீடுகளைக் கட்டியுள்ளனர்.

அகமதாபாத் நகரில் ஓடும் சபர்மதி ஆறு நகரை இரண்டாக பிரிக்கிறது. ஆற்றுக்கு ஒரு புறம் நகர் பழமையானதாக எவ்வித வசதியுமின்றி கிடக்கிறது. இந்தப் பகுதி முழுதும் முஸ்லிம்கள் ஏழ்மையில் மனிதர்கள் வாழவே முடியாத மோசமான சுகாதார மற்ற குடியிருப்புகளில் உழலுகிறார்கள். சபர்மதி ஆற்றின் மறுபுறம் நவீன வசதிகள், மின்சாரம், சாலை வசதிகளுடன் பல்கலைக்கழகங்கள், ஓட்டல்கள், பல அடுக்கு அங்காடிகளுடன் காட்சி அளிக்கிறது. அங்கே வாழ்வோர் ‘இந்துக்கள்’. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிளவு, 2002 இல் முழுமை பெற்று முஸ்லிம்கள் நவீன வாழ்க்கையிலிருந்து விலக்கப் பட்டுவிட்டனர் என்கிறார், அக்யுட்எக்னிக். கல வரத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ள முஸ்லிம் குடும்பங்கள் ‘சிட்டிசன் நகர்’ என்ற பகுதியில் குடியேற்றப்பட்டார்கள். இந்தப் பகுதிதான் நகரின் குப்பைகள் முழுதும் கொட்டப் படுகிற பகுதியாகின்றன. மலை மலையாக குப்பைகள் குவிந்து கிடக்கும்; பேருந்து வசதி கிடையாது. “எனது 5 வயது மகள் நாள்தோறும் ஒரு மணி நேரம் நடந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதுவே எங்கள் வாழ்க்கை” என்கிறார் சிட்டிசன் நகரில் குடியிருக்கும் பாரூனா என்ற பெண், 2002 ஆம் ஆண்டு கலவரத்தில் இவர் தனது தந்தை, சகோதரரை இழந்தவர்.

மத்திய அமைச்சரவையில் பிரதமர் அமைச்சகத் தில் மைனாரிட்டியினருக்கான பிரிவு ஒன்று செயல் பட்டு வருகிறது. கல்விக்கான உதவித் தொகையை இந்த மைனாரிட்டிப் பிரிவு செயலகம் மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை மோடி தனது மாநிலத்தில் வழங்க மறுத்துவிட்டார். இந்த கல்வி உதவித் திட்டம் பாகுபாடானது என்றும், இதை தமது அரசு ஏற்கவில்லை என்றும், மோடி கூறி விட்டார்.

மதச் சிறுபான்மையினருக்கு தனிச் சலுகை காட்டப்படுவதை ஏற்க முடியாது என்று, மோடி கூறு கிறார். ஆனால், பார்ப்பனர்கள் தங்களை மைனாரிட் டிகளாக ஒதுக்கிக் கொண்டு தங்களது ஆதிக்கப் பண்பாட்டை ‘பாரம்பரியம்’, ‘கலாச் சாரம்’ என்ற போர்வையில் மக்கள் மீது திணித்து, சமூக மேலா திக்கம் செய்வதை மட்டும் ஏற்றுக் கொள்கிறார்.

ராஜேந்திர சச்சார் குழு மைனாரிட்டிகள் நிலை பற்றி 2008 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் பள்ளிப் படிப்பை பாதியில் விடும் குழந்தைகள் எண்ணிக்கை முஸ்லிம் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரைவிட அதிகமாக இருப்பதை கண்டறிந்து அறிவித்தது. அதற்குப் பிறகு தான் மத்திய அமைச்சரவை மதச் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியது. மத்திய அரசின் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தை எதிர்த்து அரசின் தூண்டு தலோடு குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசின், இந்த திட்டம், சட்டப்படி சரியானதுதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஆனாலும் மோடி, இத் திட்டத்தை அமுல்படுத்த தயாராக இல்லை. இப்படி, மத்திய அரசு அளிக்க வந்த உதவித் தொகை ரூ.10 கோடி. அதை மோடி திருப்பி அனுப்பிவிட்டார். மோடியின் இனப்படுகொலைக்கு எதிராக ‘நீதிக்கான குடிமக்கள்’ என்ற அமைப்பின் வழியாக தீரத்துடன் போராடி வரும் தீட்சா செதல்வாட், மோடியின் முஸ்லிம் வெறுப்பை கடுமையாக சாடி வருகிறார்.

குஜராத்தில் 4000 பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர் பதவிகளில், இவர்களுக்கு உரிய இடங்கள் வழங்கப்படுவதில்லை. அதேபோல், காவல்துறையிலும் ஆசிரியர் நியமனங் களிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகிறார்கள். பள்ளிப் படிப்பில் மெட்ரிக்குலேசன் வரை செல்லக் கூடியவர்கள் முஸ்லிம்களில் 26 சதவீதம் மட்டுமே. மற்றவர்கள் 41 சதவீதம். பள்ளிப் படிப்புக்கு வரக்கூடிய குழந்தைகள் முஸ்லிம்களில் 75 சதவீதம். ஏனையோர் 79 சதவீதம். நகரங்களில் ஏழ்மையில் வாடும் முஸ்லிம்கள், உயர்சாதி இந்துக்களைவிட 800 மடங்கு அதிகம். மாநிலத்தில் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள முஸ்லிம்கள் 12 சதவீதம். ஆனால் வங்கிக் கடன் பெற்றவர்கள் 2 புள்ளி 6 சதவீதம்தான் என்று புள்ளி விவரங்களை அடுக்குகிறார், செதல்வாட்.

குஜராத் வேகமாக முன்னேறி வருகிறது என்று திட்டமிட்டு நடத்தப்படும் பரப்புரையையும் அவர் மறுக்கிறார். 1999 ஆம் ஆண்டு சோகை நோயிலும், ஊட்டச் சத்து இல்லாமையாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் 46 புள்ளி 3 சதவீதம். 2004 இல் இது 55 சத வீதமாக அதிகரித்துவிட்டது. தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய மைனாரிட்டிகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவை, குழந்தைகள் பெண்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களில் மோடி ஆட்சி மோசமாக உள்ளது என்று, தங்களது அறிக்கைகளில் கூறியுள்ளன.

‘துக்ளக்’ சோ-க்கள் மோடியை பிரதமராக்கத் துடிப்பது நாட்டை மதவெறிக் காடாக்கி பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி, சூத்திர, பஞ்சம இஸ்லாமிய, கிறித்தவர்களான திராவிடர்களை அடிமைப்படுத்துவதற்குத்தான்.

Pin It