பில்கிஸ் பானோ! இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் எவராலும் மறந்துவிட முடியாது. மதவெறி பிடித்த மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 21 வயது பெண். அந்த கும்பலில் ஒருவன் அவரின் 3 வயதுக் குழந்தையைப் பிடுங்கி சுவரில் அடித்ததால் துடிதுடித்து இறந்த குழந்தையைக் கண்டு கதறிய இளம் தாய். அவருக்கு இந்தக் கொடுமைகள் நேர்ந்தபோது அவர் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்தார். 

நாகரிமடைந்த மனித இனம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத இந்த காட்டுமிராண்டித் தனத்தை நிகழ்த்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், விசுவ இந்து பரிசத் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் மதவெறியர்கள். மனிதத்தன்மையே இல்லாமல் பில்கிஸ் பானு குடும்பத்தினர் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட மேலும் 14 பேரை படுகொலை செய்த இவர்களைத்தான் கடந்த ஆகஸ்ட் 15, 2022 சுதந்திர தினத்தன்று கருணையின் அடிப்படையில் குஜராத் பாஜக அரசு விடுதலை செய்துள்ளது.

gujrat victimsகாட்டுமிராண்டி தாக்குதல்

கடந்த 2002-ல், குஜராத் மாநிலம் கோத்ராவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜா.க மதவாத கும்பல்கள் திட்டமிட்டுச் செய்த கலவரத்தில் தப்பித்து, பில்கிஸ் பானோ தன் மகள் மற்றும் உறவினர்களுடன் தாஹோடில் உள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் தஞ்சம் அடைந்தார். மார்ச் 3, 2002 அன்று 20-30 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த 60 இஸ்லாமியர்கள் வீடுகளை தீ வைத்து எரித்தனர். அந்த சம்பவ இடத்திலிருந்து தன் மகளுடன் தப்பிச் செல்ல முயன்ற பில்கிஸ் பானோவை இந்துத்துவ வாதிகள் தாக்கி அவரின் மூன்று வயதுக் குழந்தையைத் தரையில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தனர். பில்கிஸ் பானோ ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாகக் கெஞ்சியும் அவரை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்தனர். 

அவர் இறந்துவிட்டதாக நினைத்து அக்கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. பிறகு, 3 மணி நேரம் கழித்துத் தான் அவருக்கு நினைவு வந்திருக்கிறது. சுற்றிலும் தனது குடும்பத்தினர் பிணங்கள் கண்டு நிலைகுலைந்து போயிருக்கிறார். தனது துணியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு ஒரு பழங்குடியினர் வீட்டில் அடைக்கலமாயிருக்கிறார். பில்கிஸ் அதிகம் படித்தவரோ, பொருளாதாரரீதியாக வசதி படைத்தவரோ அல்ல. எனவே, இவர் அளித்த புகாரை காவல்துறை தலைமை அதிகாரி சோமாபாய் கோரி பதிவு செய்ய மறுத்துவிட்டார். மேலும், சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்களை அழித்து அவரின் வாக்குமூலத்தில் முரண் உள்ளதாக காவல்துறை நீதிமன்றத்திடம் கூறியது. இதன் காரணமாக இவ்வழக்கு மார்ச் 2003ல் தள்ளுபடியானது. 

இதைத்தொடர்ந்து டிசம்பர் 2003ல் இந்தியத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுகி நீதி கேட்டு உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பானோவின் சட்டப்போராட்டம்

ஜனவரி 2004 அன்று சிபிஐயின் விசாரணையில் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு அடையாளம் தெரியாமல் இருக்கச் சடலங்களின் தலை துண்டிக்கப்பட்டும், சடலங்களை வேகமாகச் சிதைப்பதற்காக அதன்மீது உப்பு தூவப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. 

2004 ஆகஸ்ட்டில் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைக் குஜராத்திலிருந்து மாற்றி அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஜனவரி 2008ல் வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவியல் சதி, கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றம் செய்ததாக 13 நபர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்தது. அதில், 11 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஜூலை 2011ல் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. 2016 ஜூலை மாதம் 11 குற்றவாளிகளுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மும்பை உயர் நீதி மன்றம் விசாரிக்கத் தொடங்கியது. செப்டம்பர் மாதம் இவ்வழக்கில் சில சாட்சியங்களை மறுவி சாரனைச் செய்யக்கோரி குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த விண்ணப்பத்தை மும்பை உயர் நீதிமன்றம் மறுத்தது. மேலும், இந்த வழக்கின் தன்மை கருதி சிபிஐ சார்பில் மரண தண்டனை வழங்கக்கோரித் தாக்கல் செய்த மனுவின் உத்தரவையும், குற்றவாளிகள் சார்பாகத் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பையும் டிசம்பர் 2016-ல் மும்பை உயர்நீதி மன்றம் ஒத்தி வைத்தது.

மே 2017ல் பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு எதிரான ஆயுள் தண்டனை உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இவ்வழக்கு நடைபெற்று வந்த காலம் முழுவதும் இந்துத்துவாதிகள் தொடர்ந்து பில்கிசை அச்சுறுத்தி வந்தனர். 2 வருடத்தில் 20 முறை வீடு மாற்றும் அளவிற்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. கடந்த 20 வருடங்களாகக் கடுமையான அலைக்கழித்தலுக்குப் பின்னரும் சட்டத்தின் மீது நம்பிக்கை வைப்பதாகக் கூறி தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக அவர் போராடினார். 2019 ஏப்ரலில் பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையும், அரசு வேலை வாய்ப்பும், தங்குவதற்கு இடமும் வழங்க வேண்டும் என்று குஜராத் அரசாங்கத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

gujrat brahmin rapists

(குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு நிகழ்ச்சி.)

நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் கொடூர வன்செயலைச் செய்த ஜஸ்வந்த் நை, கோவிந்த் நை, ஷைலேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜுபாய் சோனி ஆகிய இந்துத்துவ சனாதன காட்டுமிராண்டிகளைத் தான் குஜராத் மாநில பாஜக அரசு விடுதலை செய்து மீண்டுமொரு அநீதியை இழைத்திருக்கிறது.

20 ஆண்டுகள் போராட்டத்திற்கான அநீதி

சுதந்திர தினத்தன்று பில்கிஸ் பானுவிற்கு இழைத்த அநீதியைப் போலவே; தன் கணவருடன் எரித்துக் கொல்லப்பட்ட 69 இஸ்லாமியர்களின் மரணத்திற்காக, 20 ஆண்டு சட்டப்போராட்டம் நடத்திய ஜாக்கியா ஜாஃப்ரிக்கும் குஜராத் அரசு அநீதி இழைத்துள்ளது. 

பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு நடைபெற்ற மறுநாள் இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிகளுக்குள் இந்து மதவெறியர்கள் நுழைந்து கலவரக் காடாக்கினர். விசுவ இந்து பரிசத் அமைப்பினரால் பல இஸ்லாமியக் குடியிருப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. நரோடா பாட்டியா, குல்பர்க் குடியிருப்பு போன்ற இடங்களில் அவர்கள் நடத்திய வெறியாட்டம் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய உயிர்களைக் காவு வாங்கியது. குல்பர்க் குடியிருப்பு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. இங்குப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இஸ்லாமியரான எஹ்சன் ஜாப்ரி குடும்பத்துடன் வசித்து வந்தார். பிப்ரவரி 28, 2002 அன்று 1000 பேர் கொண்ட பெரும் கும்பல் ஒன்று கையில் ஆயுதங்கள், எரிபொருள்களுடன் இப்பகுதிக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலைக் கண்டு அச்சப்பட்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்தில் தஞ்சமடைந்தனர். வீடுகளுக்கு தீ வைத்த கும்பல் இவரின் வீட்டிற்கும் தீ வைத்தது. பலரை உயிரோடு கொளுத்தியது. 69 பேர் இறந்ததாகவும் பலர் காயமடைந்ததாகச் சொல்லப்பட்டது. தனது கணவர் இறப்பிற்கும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கும் நியாயம் கோரி எஹ்சன் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி வழக்குத் தொடுத்தார். 

அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும் அவர் தொடர்ந்து முயற்சிகளைக் கைவிடாது நீதி விழையும் அமைப்புகளுடன் இணைந்து போராடினார். 2008-ம் ஆண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) முன்னாள் சிபிஐ இயக்குநராக இருந்த ராகவன் தலைமையில் அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழு 2009-ம் ஆண்டு அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கை ரகசியமாக வைக்கப்பட்டது. மீண்டும், 2010-ம் ஆண்டு எஹ்சன் ஜாஃப்ரி மனைவி குற்றச்சாட்டை மையமாக வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டது. அந்த குழு மோடியைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே தனது விசாரணையை நடத்தியது என்று ஜாக்கியா ஜாஃப்ரி, குஜராத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.பி.சிறீகுமார், மோடியால் பணிநீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை துணை ஆணையர் சஞ்சீவ் பட், ‘தெகல்கா’ செய்தியாளர் ஆசிஷ் கேதான் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டினர். அதன்படியே, மோடிக்கு எதிரான “ஆதாரம் இல்லை” என்கிற அறிக்கையை 2013-ல் புலனாய்வுக் குழு சமர்ப்பித்தது. 2017-ல் மோடி மற்றும் பிறரையும் குஜராத் உயர்நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து விடுவித்தது. 

இதன் தொடர்ச்சியாக, சோர்வடையாமல் நீதிக்கான களத்தில் ஜாஃப்ரி மற்றும் “நீதி - அமைதிக்கான குடிமக்கள்” அமைப்பைச் சார்ந்த தீஸ்தா செதால்வட் மற்றும் பலர் நீதியைப் பெறப் பல சாட்சியங்களைத் திரட்டினர். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்தனர். இந்த வழக்கில் மோடி உட்பட 60 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பலமுறை நிராகரிக்கப்பட்டும் தொடர்ந்து 20 வருடங்கள் ஜாக்கியா ஜாஃப்ரி போராடி வந்தார். இந்நிலையில் தான் கடந்த 24 ஜூன் 2022 அன்று, “(குஜராத்) அரசு நிர்வாகத்தின் செயலற்ற தன்மையையோ, தோல்வியையோ வைத்து சதித்திட்டம் என்று சொல்லிட முடியாது” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

மேலும், போலி சாட்சியங்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டி, கலவரத்தில் பாதிக்கப்பட்ட பல வழக்குகளை எடுத்துக் கொண்ட ஜாக்கியா ஜாஃப்ரியின் இணை மனுதாரரான தீஸ்தா செதல்வாட் மற்றும் முன்னாள் குஜராத் ஏடிஜிபி ஆர்.பி.சிறீகுமார் ஆகியோர் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, செதல்வாட், சிறீகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதாவது, நீதி கோரியவர்கள் சிறைச்சாலையில் இருக்க, குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். 

மோடி குற்றமற்றவரா?

கோத்ரா ரயிலில் எரிந்த சடலங்களை அரசின் நடைமுறைக்கு மாறாகத் தலைநகருக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல மோடி அனுமதி வழங்கினார். கலவர வெறியாட்டத்தில் ஒரு அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு!" என எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல மோடி பேசினார். பல பத்திரிக்கைகள் கலவரம் தூண்டும்படி எழுதியதை அவர் கண்டு கொள்ளவில்லை. பிப் 28, 2002 அன்று கலவரம் மூளும் எனத் தெரிந்தும் விசுவ இந்து பரிசத் அழைப்புவிடுத்த "முழு அடைப்பிற்கு'' தடை விதிக்கவில்லை. காவல்துறையின் தொடர்பு சாதனங்கள், ஆவணங்கள் என அனைத்தையும் மோடி தலைமையிலான குஜராத் அரசு அழித்துவிட்டது என உண்மை அறியும் குழுக்கள் கண்டறிந்தன. 

கலவரத்தின்போது மோடி நடத்திய அவசரக்கூட்டத்தில் சஞ்சய் பட் என்கிற காவல்துறை உயரதிகாரி இருந்தார். குஜராத் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்தாமல் விடுமாறும், இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்கும்படியும் காவல்துறை உயர் அதிகாரிகளை மோடி அறிவுறுத்தியதாக சஞ்சய் பட் குற்றம் சாட்டினார். மற்றொரு அதிகாரி ஆர்.பி. ஸ்ரீகுமார், மோடியின் குஜராத் அரசின் அலட்சியத்தால் 154 தொகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றன எனத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதனால், முன்கூட்டி நடைபெற இருந்த தேர்தல் ரத்தானது. மேலும், இவர் நானாவதி ஆணையம் முன்பு குஜராத் அரசின் அலட்சியம் குறித்து சாட்சியம் அளித்தார். இதன் விளைவாக அவர் பதவி பறிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார்.

“தெகல்கா” புலனாய்வுப் பத்திரிக்கை, இந்த வன்முறையின் உண்மையான கோரமுகத்தை வெளிப்படுத்திடத் தீவிர இந்துத்துவ மதவாதிகளைப் போல வேடமிட்டு படம் பிடித்த காட்சிகள் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது. கேட்போர் நெஞ்சம் பதைபதைக்கும் குரூரங்களை இந்துத்துவ மத போதை ஏறிய அவர்கள் பெருமிதமாய் சொன்னதைக் கண்டு உலகமே அதிர்ந்து போனது. மேலும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவனாக இருந்த பஜ்ரங்கி மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்பைச் சார்ந்த ராஜேந்திர வியாஸ், சுரேஷ் ரிச்சார்ட் போன்றோருடன் நடந்த உரையாடலை தெகல்கா வெளியிட்டது. மூவரும் மோடியின் நோக்கம் கோத்ரா ரயில் எரிப்பிற்குப் பழிவாங்குவதாகத் தான் இருந்தது என உணர்ச்சி பொங்கக் கூறினார்கள்.

அடுத்தடுத்த மூன்று நீதிபதிகள் தன்னை தூக்கிலிடக் கூறியபோது, அந்த நீதிபதிகளை மோடி மாற்றியதாகவும், தன்னை காவல்துறை கண்டுபிடிக்க ஆணை பிறப்பித்தபோது மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் மோடி தன்னை தங்க வைத்ததாகவும் பஜ்ரங்கி பெருமையுடன் கூறினான். இவற்றைச் செய்ததற்காக எங்களை மோடி புகழ்ந்தார் என ரிச்சார்டு கூறினான். முன்னாள் எம்.எல்.ஏ அரேஷ் பட் என்பவன் மோடி மூன்று நாட்களை எங்களுக்குத் தருவதாக வெளிப்படையாகவே சொன்னார் எனக் கூறினான். குஜராத் முதல்வர் என்பதைவிட ஆர்.எஸ்.எஸ் தொண்டராகப் பழி வாங்கும் முனைப்பில் செயல்பட்ட மோடியின் எண்ணத்தை தெகல்கா புலனாய்வுப் பத்திரிக்கை தெளிவாக அவர்கள் விளக்கியதைக் காட்சிப்படுத்தி வெளியிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் நீதி வழங்கிட இந்த சாட்சிகள் போதவில்லை எனவே தெரிகிறது!

பார்ப்பனருக்கு மட்டுமா நன்னடத்தை?

குஜராத் மாநிலத்தின் 2014 கொள்கை திட்டத்தின்படி (1992) 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்யலாம் என்கிற அடிப்படையிலும், அவர்களின் நன்னடத்தை காரணமாகவும் சிறையிலிருந்த கோத்ரா கலவரக்காரர்களை ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று, குஜராத் பாஜக அரசு விடுதலை செய்தது.

”அவர்கள் பிராமணர்கள். பொதுவாகவே நல்ல பழக்கம் உடையவர்கள். சிறையிலும் அவர்கள் நடத்தை நன்றாகவே இருந்துள்ளது. அதனால் விடுதலை செய்கிறோம்” என்று குஜராத் மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராவுல்ஜி பேட்டி அளித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் “சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது” என்றும் “பெண்களின் வீரத்தை நினைவுகூர வேண்டும்” என்றும் பேசினார். ஆனால், அதே தினத்தன்று தான் இந்த கொடூர கூட்டுப் பாலியல் குற்றவாளிகள் 11 பேரையும் மோடியின் சொந்த மாநிலத்தின் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.

இப்படியாக, 5 மாத கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து அவளின் 3 வயதுக் குழந்தையை சுவரில் அடித்துக் கொன்ற சனாதன பார்ப்பன காட்டுமிராண்டிகளை மாலை அணிவித்தது, இனிப்பு வழங்கி சிறை வாயிலில் வரவேற்றனர். இந்த, இந்துவெறி “குஜராத் மாடலை” தான் மோடி இந்தியா முழுவதும் நிறுவிடப் பதைக்கிறார்.

பில்கிஸ் பானுவின் வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டதால் சட்டப்படி அவர்களை விடுதலை செய்வதாகக் குஜராத் அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்திய ஒன்றியத்தில் இஸ்லாமியர்கள் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வதைக்கப்படுகின்றனர். இதில், 80% பேர் விசாரணைக் கைதிகள் ஆவர். இந்துத்துவக் குற்றவாளிகள் மீது காட்டப்படும் பரிவு இஸ்லாமியர்கள் மீது காட்டப்படுவதில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இந்நிலையே நீடித்தது. ஏனென்றால், இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் போக்கில் எந்த அரசும் பாகுபாடு பார்ப்பதில்லை.

குஜராத் மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்துத்துவ காட்டுமிராண்டிகளை சட்டப்படி விடுதலை செய்திட வாய்ப்பிருக்கும்போது தமிழகச் சிறைகளில் 35 ஆண்டுகளுக்கு மேல் வாடும் அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்யப் பெரியாரின் வழி வந்த திராவிட மாடல் அரசுக்கு என்ன தடை இருக்க முடியும்? மேலும், 6 நிரபராதி தமிழர்களை விடுதலை செய்திடவும் உறுதியளித்தபடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொடுங்குற்றங்களை புரிந்தவர்களையே “இந்துத்துவ மாடல்” அரசு விடுதலை செய்ய முனையும்போது சமத்துவம் சமூகநீதி பேசும் திமுக “திராவிட மாடல்” அரசு தமிழக சிறைகளில் வாடும் நெடுங்கால சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.

- மே பதினேழு இயக்கம்

Pin It