மதக் கலவரங்களை கட்டுப்படுத்தும்போது, சட்டத்திற்குட்பட்டு சில உத்திகளை கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கட்டளையிட வேண்டும் என டி.ஜி.பி. சக்கரவர்த்தியிடம் சிறீகுமார் அறிவுறுத்தினார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இக்காலகட்டத்தில், கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு டி.ஜி.பி. சக்கரவர்த்தியின் அலுவலகத்தில் மூத்த அமைச்சர் அய்.கே. ஜடேஜா இருந்தது, கலவர இடங்களைப் பார்வையிடுவதற்கு இடைஞ்சலாக இருந்தது என விமர்சித்தார். நெருக்கடியான காலகட்டத்தில், ஆளும் கட்சித் தலைவர்கள் வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பிப்பதால்-தங்களால் நீதிமன்ற வழிமுறைகளைப் பின்பற்ற முடியாமல் போனது என்றார்.

கூடுதல் டி.ஜி.பி. பதவி வகித்து வந்த சிறீகுமார், இந்நேரத்தில் குஜராத் அரசின் உளவுப் பிரிவு தலைவராக ஏப்ரல் 2002 முதல் செயல்பட்டு வந்தார். அன்று முதல் செப்டம்பர் வரை, மோடி மற்றும் அவருடைய துறை தலைவர்கள் பிறப்பித்த சட்டத்திற்குப் புறம்பான கட்டளைகளை, தன்னுடைய சொந்த குறிப்பேட்டில் ஒன்றுவிடாமல் பதிவு செய்து வந்தார். இவர்கள் பிறப்பித்த கட்டளைகள் எல்லாம்-வன்முறை யாளர்களையும், பொய்யான ஆதாரங்களை உருவாக்குவதாகவும் இருந்தன. இவருடைய குறிப்பேடு ஆவணத்தை, தனக்கு மேலதிகாரியாக இருந்த அய்.ஜி. ஓ.பி. மாத்தூர் அவர்களிடம் காண்பித்து, ஒப்புதல் கையெழுத்தும் பெற்றுள்ளார்.

இப்பதிவேட்டில், 7.6.2002 அன்று முதலமைச்சரின் முதன்மைச் செயலாளரும், முதல் தகவல் அறிக்கையில் 31ஆவது நபராக குற்றம் சாட்டப்பட்டவருமான பி.கே. மிஷ்ரா தன்னிடம் (உளவுத் துறை தலைவர்) வி.ஆர். கிருஷ்ணய்யர் அங்கம் வகித்த தனி விசாரணை ஆணையத்திற்கு, மோடி அமைச்சரவையில் உள்ள எந்த அமைச்சர் சென்று வந்தார் என்று கண்டுபிடிக்குமாறு கூறினார். அப்போதைய வருவாய்த் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா தான் இவ்வாணையத்திற்கு சென்று வந்தவராக சந்தேகிக்கப்படுகிறவர் என்று மிஷ்ரா சிறீகுமாரிடம் கூறியிருக்கிறார். மேலும், அவர் ஒரு செல்பேசியின் எண்ணைக் கொடுத்து (98240 30629) அந்த எண்ணிற்கு வரும் இணைப்புகளை எல்லாம் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்.

அய்ந்து நாட்களுக்குப் பிறகு, 12.6.02 அன்று, சிறீகுமார் மிஷ்ராவிடம் ஹரேன் பாண்டியா என்ற அமைச்சர்தான் தனிநபர் ஆணையத்தை சந்தித்ததாக நம்பப்படுகிறது என்றும், இப்பிரச்சினை மிகவும் சிக்கலான ஒன்று என்றும், உளவுத் துறையின் எல்லைக்குட்பட்ட பணி அல்ல என்றும் வலியுறுத்தியிருக்கிறார். மேற்குறிப்பிடப்பட்ட செல்பேசி, ஹரேன் பாண்டியாவினுடையதுதான். அது குறித்த தகவல்களும் அய்.ஜி. ஓ.பி. மாத்தூர் மூலம் மிஷ்ராவுக்கு அளிக்கப்பட்டது. தன்னுடைய அமைச்சரவை அல்லது உயர் அதிகாரிகள் மூலம் எதிர்ப்புகளோ, தகவல் கசிவுகளோ நடைபெறுகிறதா என்பதை மிகவும் கவனமாக நரேந்திர மோடி கண்காணித்து வந்தார்.

வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய அரசின் உயர் அதிகாரிகள் மீதோ, அப்போதைய குஜராத் டி.ஜி.பி. சக்கரவர்த்தி, பி.சி. பாண்டே மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அசோக் நாராயணன் ஆகியோர் மீதோ அல்லது இன்னும் இத்தகைய முறைகேடுகளை செய்த பல அதிகாரிகள் மீதோ மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு தவறான, முழுமை பெறாத அறிக்கைகளை இவர்கள்தான் அளித்திருந்தனர்.

நரேந்திர மோடியின் பிற குற்றங்கள் :

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மோடி, நியூட்டனின் மூன்றாவது விதியை, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த மேற்கோள் காட்டினார் : “ஒவ்வொரு செயலுக்கும் நேர் எதிரான, இணையான எதிர்வினை நடைபெறும்.'' 28.2.2002 அன்று இந்து அமைப்புகள் நடத்திய முழு அடைப்பிற்கு முதல்வர் மோடி எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. v 27.2.2002 முதலே அகமதாபாத்தில் உள்ள வதோதராவிலிருந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பினும், ராணுவத்தை அந்த இடங்களுக்கு அனுப்புவதில் தேவையற்ற சுணக்கம் காட்டப்பட்டது. v மதவெறியை தூண்டும் வகையில் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்ட ஊடகங்கள் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. அரசின் உள்துறைதான் தவறு செய்யும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்ற துறை. இன்று போலவே அன்றும் குஜராத்தின் உள்துறை மோடியிடமே இருந்தது.

2002 கலவரம் உச்ச கட்டத்தில் இருந்தபோது, களத்தில் இருந்த நிர்வாக அதிகாரிகளை டி.ஜி.பி. ஆட்சேபனை தெரிவித்த பிறகும் அவர்களை வேறு பகுதிகளுக்கு மாற்றிய மோடி, நேரடியாகவே அரசு ஊழியர்களின் பணிகளிலும் குறுக்கிட்டார். முக்கியப் பணிகளில் இருந்த அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளில் யாரெல்லாம் முறைகேடாக நடக்கத் தயாராக இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். அதேபோல, நானாவதி-ஷா ஆணையத்திற்கு முழுமை பெறாத அறிக்கையை அளித்த அதிகாரிகளுக்கெல்லாம் மோடி இதுபோன்ற பரிசுகளை அளித்தார்.

மோடிக்குப் பிடித்த பி.சி. பாண்டே என்ற அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சராக அத்வானி இருந்தபோது, சி.பி.அய்.க்கு (பிப்ரவரி 2004) மாற்றப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம், குஜராத் 2002 வழக்குகளை பி.சி. பாண்டே விசாரிக்கக் கூடாது என்று அக்டோபர் 2004 இல் மிகத் தெளிவாக அறிவுறுத்தியது குறிப்பிடத்தகுந்தது. 2006 இல் அவரை சட்டத்திற்குப் புறம்பாக மாநில அரசின் டி.ஜி.பி.யாக நியமித்தார்-அவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு வாரத்திற்கு முன்பு! இந்நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, பிப்ரவரி 2009 இல் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்னொரு மிக முக்கியமான மீறல், அப்போதைய கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த அசோக் நாராயணன், இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் வகையில் அவர் மாநில கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவி அதற்குப் பிறகு அய்ந்து முறை நீட்டிக்கப்பட்டது.

குஜராத் அரசின் உளவுத்துறை, விரிவான எச்சரிக்கை அறிக்கைகளை மாநில அரசின் உள்துறைக்கு அனுப்பியது. இத்துறையை கூடுதல் தலைமைச் செயலõளரான அசோக் நாராயணனும், உள்துறை அமைச்சரான மோடியும்தான் கவனித்து வருகின்றனர். இந்த அறிக்கைகள் ஏப்ரல் 24, சூன் 15, ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 28, 2002 ஆகிய நாட்களில் அனுப்பப்பட்டு இருந்தன. இந்த அறிக்கைகளின் மீது உள் துறை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இவ்வறிக்கைகளின் நகல்கள் சிறீகுமாரால் அக்டோபர் 6, 2004 அன்று நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு அளிக்கப்பட்டது. இந்த அறிக்கைகள் எல்லாம் சாதாரணமாக அரசால் அலட்சியப்படுத்தப்படவில்லை. முதலில் மோடி, சிறீகுமாரை அழைத்து, மாநில அரசின் கொள்கைகளுக்கேற்ப அவரது அறிக்கையை வடிவமைக்கச் சொன்னார். இதற்கு முந்தைய உளவுத்துறை தலைவரின் பதிவுக் குறிப்பேட்டில் இது பதிவாகியிருக்கிறது. இதற்கெல்லாம் சிறீகுமார் கட்டுப்படவில்லை. மாறாக, அவர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கும் (பெஜராஜி என்ற இடத்தில் மோடி ஆற்றிய உரை குறித்து) பாரபட்ச முறையில் அறிக்கை அளித்ததால், அவர் இப்பதவியிலிருந்து வேறு பதவிக்கு மாற்றப்பட்டார்.

சிறப்பு புலனாய்வு அறிக்கை கூறியது என்ன?

24.4.2002 : 5 பக்கங்களைக் கொண்ட இந்த ரகசிய அறிக்கை, மாநில அரசின் ஆதரவுடன் முஸ்லிம்களின் வாழ்க்கையும் உடைமைகளும் கடும் பாதிப்பிற்கு ஆளானது குறித்த சிறுபான்மையினரின் கடும் மனக்கசப்பை வெளிப்படுத்தியது. அந்த அறிக்கையின்படி, “ஏப்ரல் 23, 2002 அன்று, 636 முஸ்லிம்கள் கலவரங்களில் கொல்லப்பட்டனர் (இதில் 91 பேர் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்); 181 இந்துக்கள் கொல்லப்பட்டனர் (இதில் 76 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள்). தீ வைப்பு நிகழ்வுகளில் 329 முஸ்லிம்களும், 74 இந்துக்களும் காயமடைந்தனர். இதில் முக்கியமாக, முஸ்லிம்களுக்கு கடும் உயிரிழப்புகளும், அவர்களுடைய உடைமைகளுக்கு கடும் சேதமும் ஏற்பட்டன. அகமதாபாத்தில் மட்டும் 278 முஸ்லிம்களும், 91 இந்துக்களும் கொல்லப்பட்டனர். தீ வைப்பு மற்றும் கத்திக்குத்து நிகழ்வில் 408 முஸ்லிம்களும், 329 இந்துக்களும் காயமடைந்தனர்.''

முதல் தகவல் அறிக்கை திருத்தப்பட்டது (குற்றவாளிகளின் உண்மையான பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை); இரு முதல் தகவல் அறிக்கைகளையும் ஒன்றாக இணைத்தது; அதன் மூலம் குற்றத்தின் தீவிரத்தை குறைத்து செயல்பட்டிருந்ததும் இவ்வறிக்கையில் விரிவாக இடம் பெற்றிருக்கிறது. 

-அடுத்த இதழிலும்

நன்றி : "கம்யூனலிசம் காம்பட்'