தாராளமயம், தனியார் மயம், உலக மயத்துள்ளும் மிகுந்த கவலை கொள்ள வேண்டிய இன்னொரு மயம் ‘காவி’மயம். ‘குஜராத் 2002- மதவெறிப் படு கொலைகளை’ அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இப்போது கோத்ரா தொடர் வண்டி எரிப்புக் குறித்துத் தீர்ப்பு வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில் 2002 பிப்ரவரி 27 அன்று சபர்மதி விரைவு வண்டியில் எஸ்-6 பெட்டியில் திடுமெனத் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயில் அயோத்தியில் கரசேவை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த அப்பாவி பக்தர்கள் 58 பேர் உயிரோடு எரிந்து சாம்பலா னார்கள்.
தீவிபத்து நேரிட்டதற்கான உண்மையான காரணம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. குஜராத்தை ஆண்டுவரும் பாரதியஜனதா கட்சியின் முதல்வரான நரேந்திரமோடி அம்மாநிலத்தை இசுலாமியர்க்கு எதிரான கொலைக்கள பூமியாக ஏற்கெனவே மாற்றி வைத்திருந்தார். கொதிநிலையில் இருந்த இந்துமத வெறியர்களுக்குக் கோத்ரா எரிப்பு நிகழ்ச்சி, எண்ணெய்க் கிணறுகளைப் பற்ற வைக்கும் தீச்சுடராக வாய்த்து விட்டது.
சபர்மதி வண்டியின் பெட்டி எரிந்தபின் குஜராத்தில் நடந்த மனிதஇனப் படுகொலைகளை எழுத்தில் வடிக்க இயலாது. செய்தியேடுகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மக்கள் குடிநாயகக் குழுக்கள் கண்டு சொன்ன உண்மைகளைவிட, இந்துமத வெறியர்களே கொடுத்த வாக்குமூலங்கள் குருதியை உறையச் செய்தன.
2007 நவம்பர் முதல் கிழமையில் ‘தெகல்கா‘ இணைய இதழ் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட மோசமான மதவெறிப் படுகொலைகளை ‘நமது காலத்தில் மிக முதன்மை கதைப்பு: குஜராத் 2002-ஓர் உண்மை’ என்ற தலைப்பில் ஒரு புலனாய்வுத் தொகுப்பை வெளியிட்டு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எதிரிகளின் கூற்றாகவே அதில் வெளிப்பட்ட சில உண்மைகளாவன:
இராசேந்திர வியாஸ் (விசுவ இந்து பரிசத் அகமதாபாத் தலைவர்)
“நாம் பழி தீர்த்துக் கொள்வோம்” இதுதான் மோடியின் வாயிலிருந்து வெளிவந்த முதல் சொல். மோடி முதல்வ ராய் உள்ளார். ‘எல்லா இசுலாமியர்களையும் கொல் லுங்கள்’ என்று அவரால் சொல்ல முடியாது. இதை நான் சொன்னேன். அதன் பிறகு நான் உண்ண வில்லை. ஒரு சொட்டு நீரும் அருந்தவில்லை. கண்ணீர் விட்டேன். ஆத்திரங் கொண்டு எதிரிகளைத் திட்டித் தீர்த்தேன். மோடி என்னிடம் அமைதியாய் இரு. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அவர் அவ்வாறு சொன்னதற்கு என்ன பொருள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டோம். ஆமாம் நானும் உணர்ந்து கொண்டேன்,”
அரேஸ் பட் (சட்டமன்ற உறுப்பினர்)
மோடி வெளிப்படையாகக் கூறினார். ‘நமக்கு மூன்று நாட்கள் இருக்கின்றன. நம்மால் முடிந்த அனைத்தும் செய்வோம். அதன்பின் கால நீட்டிப்புத் தரமுடியாது?’ என்றார். மூன்று நாட்களில் என்னவெல் லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து முடித்தோம்.
சுரேஷ், பிரகாஷ் ரத்தோடு (விசுவ இந்து பரிஷத் தலைவர்கள்)
‘இசுலாமியப் பெண்கள் பழங்களைப் போல இருப்பார்கள் நாங்கள் அவர்களைச் சுவைத்தோம். இதோ என் எதிரில் சாமி படம் இருக்கிறது. என் அருகில் என் மனைவி இருக்கிறார். நான் பொய் கூற மாட்டேன். நான் ஒருத்தியைச் சுவைத்துவிட்டுப்பின் அவளைக் கொன்றுவிட்டேன்.’
எல்லோரையும் எரித்தபின் காவல்துறை எங்களை அழைத்தது. சில இசுலாமியர்கள் சாக்கடைக் குழியில் பதுங்கியுள்ளதாகச் சொன்னார்கள். நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. அந்தக் குழியை மூடி போட்டு மூடி விட்டோம். அத்தனை பேரும் செத்துப் போனார்கள். உள்ளூர் எம்.எல்.ஏ. மாயாபென் தெருத் தெருவாய்ச் சுற்றி வ்ந்தார். கொல்லுங்கள், இன்னும் பல இசுலாமியர்களைக் கொல்லுங்கள் என்று அவர் கத்திக் கொண்டே இருந்தார். எல்லாம் முடிந்தபிறகு மோடி கருப்புப் பூனைப் படையோடு அங்கு வந்தார். எங்கள் பெண்கள் அவருக்கு மாலை போட்டு வரவேற்றார்கள். எங்கள் செயல்களை மோடி வாயாரப் புகழ்ந்தார்.”
பாபு பஜ்ராங்கி (சிவசேனைத் தலைவர்)
நாங்கள் இசுலாமியர்களைத் துரத்திச் சென்றோம். ஒரு பெரிய குழிக்குள் தள்ளினோம். அவர்கள் ஒரு வரையொருவர் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டனர். நாங்கள் திடுமென அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி னோம். எரியும் டயர்களை வீசினோம். அவர்கள் எல்லோரையும் எரித்தே அழித்தோம். ஒரே நாளில் 95 இசுலாமியர்களை நான் ஒருவனே கொன்றழித் தேன். ஒரு இசுலாமியனை மணந்து கருவுற்றிருந்த ஓர் இந்துப் பெண்ணின் வயிற்றைக் கிழித்தேன். அக்குழந்தையை இரண்டாக வெட்டி வீசி எறிந்தேன்”.
நினைக்கவே நெஞ்சு நடுங்கும் இப்படியான ஏராளமான வாக்குமூலங்கள் குற்றவாளிகளின் வாய் மொழியாகப் பதிவு செய்யப்பட்டவை ஆகும். இத்தனைக் கொலைகளையும் நடத்த உதவிய நரேந்திர மோடியை இந்தியாவின் தலைமை அமைச்சராக்க பா.ச.க. வின் ஒரு பகுதியினர் துடிக்கின்றனர். இந்த நாட்டின் நீதித்துறை மோடியின் மீது கைவைக்க எள் மூக்களவும் முனையவில்லை.
ஆனால் கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு வழக்கில் இப்போது குஜராத் சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்குச் சாவுத் தண்டனையையும், 20 பேருக்கு வாழ்நாள் சிறையும் அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 94 பேரில் 63 பேரைப் போதிய சான்றுகள் இல்லை என்று சொல்லி விடுதலை செய்திருக்கிறது. ‘இரயிலை எரிப்பது என்று இந்த இசுலாமியர்கள் முதல் நாளே திட்டம் தீட்டி மறுநாள் அந்தச் சதியை நிறைவேற்றினர்’ என்பதே தீர்ப்பின் சாரம்.
மோடியின் தலைமையில் ஆன குஜராத் காவல் துறையும் நாடு முழுவதிலும் உள்ள இந்துமதவெறி அமைப்புகளும் கூறிவந்த ஒரே பொய்யைத்தான் இப்போது சிறப்பு நீதிமன்றமும் தீர்ப்பாகச் சொல்லி யுள்ளது. ஆனால் இவ்வழக்கில் ஏராளமான உண்மை கள் மறைக்கப்பட்டுள்ளன.
இசுலாமியத் தீவிரவாதிகள் பெட்ரோலை வெளியில் இருந்து வாங்கிவந்து, ‘எஸ்-6’ பெட்டியில் ஊற்றித் தீவைத்ததார்கள் என்பதுதான் அடிப்படை குற்றச்சாட்டு. ஆனால் குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை ‘தீப்பற்றிய முறையில் அய்யம் இருக்கிறது. வெளியி லிருந்து தீ உள்நுழைய வாய்ப்பில்லை. உள்ளுக்குள் இருந்துதான் தீ தோன்றியுள்ளது’ என்று குறிப்பிட்டது.
வெளியில் இருந்து பெட்ரோல் வாங்கப்பட்டது என்பதும் உண்மையில்லை. பெட்ரோல் நிலைய ஊழியர்களான பிரபாத் சிங், ரஞ்சித் சிங் என்ற இருவரும் “தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்பட வில்லை. உதவிக் காவல் கண்காணிப்பாளர் நோயல் என்பவர் ரூ.50,000 தங்களிடம் கொடுத்து அவ்வாறு சொல்லச் சொன்னார்” என்று தெகல்கா வீடியோப் பதிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இவ்வழக்குத் தொடர்பாக நியமிக்கப்பட்ட கே.ஜி.ஷா- நானாவதி விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளித்த பலரும் வெளியாட்கள் எவரும் பெட்டிக்குள் ஏறவில்லை என்றே கூறியுள்ளனர்.
எஸ்-6 மற்றும் எஸ்-7 ஆகிய இரண்டு பெட்டி களையும் இணைக்கும் தோல் கூடு இணைப்பைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்த கொலைக்காரர்கள் பெட்டிக்குள் பெட்ரோலைக் கொட்டி விட்டு, அதன்பின் வெளியேறித் தீவைத்து விட்டார்கள் என்ற மற்றொரு குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை.
பானர்ஜி குழுவின் முன் சாட்சியம் அளித்த தொழில் நுட்ப வல்லுநர்கள் இரயில் பெட்டிகளை இணைக்கும் வெஸ்டிபூல் இணைப்பை கிழிக்கவோ, உடைக்கவோ, வழி ஏற்படுத்தவோ முடியாது என உறுதிபடக் கூறியுள்ளனர். மேலும் வெளியிலிருந்து பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் வீசி எறியப்பட்டிருந்தால் அவை உடனே தீப்பற்றி இருக்கும் ஆனால் பெட்டியில் இருந்த பயணிகள் முதலில் கரும்புகை மூட்டம் எழுந்தது. சிலமணித் துளிகள் கழிந்தபிறகுதான் தீப்பிடித்துக் கொண்டது என்று சாட்சியம் வழங்கியுள்ளனர்.
ஆக, நீதியின் கண்களை முற்றிலுமாக மறைத்து விட்டுத்தான், குஜராத் சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பி னை வழங்கியுள்ளது. இரயில் எரிப்பு நடத்து முடிந்த உடனே குஜராத் முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்களைக் கொன்ற கொலைக்காரர்கள் மீது இன்றுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் காங்கிரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இசான் ஜெப்ரி. இவர் 1979-80களில் எம்.பி. ஆக இருந்தவர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக் காலத்தில் குஜராத்தின் பெரும்பாலான இடங்களில் காங்கிரசு தோற்றுங்கூட அகமதாபாத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைக்கு உரியவராய் இவர் விளங்கினார். கலவரம் மூண்ட போது முசுலீம்களில் பலர் இவர் வாழ்ந்து வந்த குல்பர்க் சொசைடி என்னும் பகுதிக்குள் ஓடித் தஞ்சம் புகுந்தனர். ஜெப்ரி தங்களைக் காப்பாற் றுவார் என்று அந்த அப்பாவி மக்கள் நம்பினர். ஆனால் இந்துமத வெறிக் கொலைக்காரர்களோ ஜெப்ரியையே வெளியே இழுத்து வந்தனர். அவரின் கைகால்களுடன் ஆண் உறுப்பையும் வெட்டிச் சிதைத்து அப்படியே உயிரோடு எரித்துவிட்டனர். அக்குடியிருப்புக்குள் ஓடித் தஞ்சம் புகுந்த ஏறக்குறைய 100 பேரில் 68 பேர் அதே இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
தனக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு மறைந்த இசான் ஜெப்ரியின் மனைவி சக்கியா ஜெப்ரி இன்னமும் நீதிமன்றப் படிகளின் முன் நிற்கிறார். “என் கணவரையும், எங்கள் பகுதியில் தஞ்சம் புகுந்த மக்களையும் காப்பாற்ற வருமாறு எத்தனையோ முறை ஈனக்குரல் எழுப்பியும் ஒரே ஒரு காவலர் காதிலும் எங்கள் கதறல் ஏறவில்லை” என்று குமுறும் 70 வயதான சக்கியா ஜெப்ரி மோடி மீதும் மற்ற 62 பேர் மீதும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் வைத்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 27-03-2010 அன்று நரேந்திரமோடி நேரில் வந்து சாட்சியம் அளித்தார். ஆனாலும் எந்தப் பலனும் விளையவில்லை.
இந்திய நீதித்துறை காவியமாகி வருவது முன் எப்போதையும்விட இப்போது விரைவாக நடந்து வருகிறது. இந்துத்துவம் என்பது ஏற்றமிக்க ஒரு வாழ்க்கை நெறி என்று உச்சநீதிமன்றம் இதற்கு முன்பே முத்து உதிர்த்துவிட்டது. ‘இராம ஜென்ம பூமி’ வழக்கில் வழங்கப்பட்டுள்ள கேடான தீர்ப்புப்பற்றி விளக்கத் தேவையில்லை.
2000க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் கொல்லப்பட காரணமாய் இருந்த நரேந்திரமோடி மீது முதல்தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு பதியப்பட்டால் அவர் எந்த நேரத்திலும் கைசெய்யப் படலாம் என்ற அச்சமே இதற்குத் காரணம். குஜராத் படுகொலைகளை மூடி மறைக்க இமாலய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் ஆணை யின் பேரில்தான் மூடிமறைக்கப்பட்ட பல வழக்குகள் மறுவிசாரணைக்கு வந்தன.
அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பின் தலைவர், மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் தீஸ்மா செதல்வாத் கோத்ரா வழக்கிற்காக வாதாடிய போது அந்நாளின் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் “யார் இந்த தீஸ்மா செதல்வாத்?” என்று மண்டையில் தேள் கொட்டியது போல் எரிந்து விழுந்தார். ‘அவர் தொடர்புடைய எந்த வழக்கையும் இந்த நீதிமன்றம் கேட்க விரும்பவில்லை ‘என்று நெருப்பைக் கக்கினார். நீதியரசர் இவ்வாறு சினங்கொள்ளக் காரணம் இல்லாமல் இல்லை’. ‘வெட்கக் கேடு; நீதி கேலிக் கூத்தாக்கப்படும் வெட்கக்கேடு’ என்ற தலைப்பில் செதல்வாத் எழுதிய ஒரு கட்டுரையில் ‘கொடிய கிரிமினல் குற்றவாளிகள் எல்லாம் நொடியில் பிணையில் வந்துவிடுகிறார்கள். ஆனால் கோத்ரா நிகழ்வு நடந்த பல ஆண்டுகள் கடந்தவிட்டபின்பும், குற்றஞ்சாட்டப்பட்ட 84 இசுலா மியர்கள் இன்னமும் ஏன் பிணையில் விடுவிக்கப்பட வில்லை?’ என்று காட்டமாகக் கேட்டிருந்தார்? பொறுத்துக் கொள்ளுமா நீதிமன்றம்?
அலைக்கற்றை ஊழலும், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் எனக் காங்கிரசின் ஊழல் முகம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. அதற்கு மாற்றாக அதிகாரத்தைக் சுவைக்கத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அத்வானியின் பாரதிய சனதா கட்சி. இதற்கு உதவியாக நரேந்திர மோடியின் போலித் தோற் றம் ஊதிப் பெரிதாக்கப் படுகிறது. ‘நாட்டின் வளர்ச் சிக்கு நல்லதோர் எடுத்துக் காட்டு நரேந்திர மோடி முதல்வராய் இருந்து ஆளும் குஜராத்’ என்று மதவெறியர்கள் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.
குஜராத்தில் ஒரு சிற்றூருக்குள் நுழைந் தால் ‘நீங்கள் இந்து ராஷ் டித்திற்குள் நுழைகிறீர்கள்; ‘நானோ கார்’’ என்ற அறிவிப்புப் பலகை வரவேற் கிறது. மேற்கு வங்காளத்திலிருந்து விரட்டப்பட்ட டாடா குஜராத்தில் தொழில் தொடங்க ஓடுகிறார்.
ஆனால் அம்மாநில மக்கள் உணவு, உடை, உறைவிடம், வேலை வாய்ப்பு என்கிற எந்த அடிப்படைத் தேவையும் நிறைவு செய்யப்படாமல் அடிமை மக்களாகவே வாழ்க்கின்றனர். வெளிநாடு களுக்குச் சென்று கொள்ளையடித்துக் கொண்டுவரும் ஒரு சில பனியாக் கும்பலைக் காட்டி குஜராத் ஒளிர்வதாகக் கதை விடுகிறார்கள் பெரு முதலாளிகள் ஆளும் மோசடிக் கும்பலின் மாநிலமாகவே குஜராத் திகழ்கிறது. அங்குத் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை நாளும் தொடர்கிறது. தலித் மாணவர்களையும் பிற சாதி மாணவர்களையும் ஒன்றாக அமரவைத்து ஒற்றுமை பற்றிக் கற்பித்த ஆசிரியை உடனடியாகப் பணிமாற்றப் படும் சர்வாதிகாரப் போக்கு குஜராத்தில் கோலோச்சு கிறது.
கோத்ரா நிகழ்வுக்குப்பிறகு, இனஒழிப்பால் இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்ப இயலாமல் ஏதிலிகள் போல வாழ்கின்றனர். ஒரு கைப்பேசி இணைப்புக்கு உரிமம் பெறுவதற்குக்கூட அவர்கள் கள்வர்கள் போல நோக்கப்படுகிறார்கள். அச்சம், வெறுமை, எதிர்காலம் பற்றிய இருள் கவ்விய அவலம் இவற்றோடுதான் அவர்கள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் கோத்ரா இரயில் எரிப்புத் தீர்ப்பு அவர்கள் குரல் வளையை மேலும் இறுக்கியுள்ளது. மக்களாட்சி மாண்புகள் பற்றிப் பேசும் மற்ற பகுதி மக்களாகிய நாம் அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம்?