தண்டனைகள் என்பது குற்றவாளி என்று கருதப்படுவோர், தங்களது தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வதற்கே அன்றி, ஒரு போதும் பழி வாங்குவதற்கல்ல. நாகரிகம் மிக்க சமூகத்தைக் கட்டமைக்க முயலும் சீர்திருத்தவாதிகள் இதனையே விரும்புவர். மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்தில் கொலைக்குக் கொலை, கைக்குக் கை, காலுக்குக் கால் என்று பழி கொண்டு அலைந்தான். தற்போது கோட்பாடு, பகுத்தறிவு, நீதி, சட்டம், ஒழுங்கு, தார்மீகம் என்ற வரையறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிற புத்தியக் கால மனிதர்களாகி விட்டான். இப்போதும் மனிதனை, மனிதனே கொல்கின்ற காட்டுமிராண்டித்தனம் எதற்கு? சிறைச்சாலைகளெல்லாம் அறச்சாலைகளாய் மாறுவது எப்போது? என்ற கேள்வியின் பின்னேதான் மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் பல்லாண்டுகளாய் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் திரு.இராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக, சிறப்புப் புலனாய்வுத் துறையின் 'அதிவிரைவான' விசாரணையின் மூலம் 'கண்டுபிடிக்கப்பட்ட' திரு.முருகன், திரு.சாந்தன் மற்றும் திரு.பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை தொடர்பான அண்மைப் பரபரப்பு, தேசிய அளவில் பெரும் சலசலப்பைத் தோற்றுவித்திருக்கிறது. இதன் விளைவாக தூக்கு என்ற கொடிய தண்டனை முறை, மக்களாட்சி நடைபெறுவதாக நம்பப்படும் இந்தியத் திருநாட்டிற்கு இனியும் தேவைதானா என்ற கலந்துரையாடலும் வேகம் பெற்றுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் அவை, உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனை விதிக்கும் தங்கள் நாட்டுச் சட்டங்களை நீக்கிவிட வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியது. ஆனால் இத்தீர்மானம் கட்டுப்படுத்தப்படாத ஒன்றாக இருந்த காரணத்தால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாடுகள் இது குறித்துக் கவலை கொள்ளவேயில்லை. உலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய 60 விழுக்காட்டிற்கும் மேல் கொண்டுள்ள இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் அய்.நா.வின் தீர்மானத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

2003ஆம் ஆண்டு உலகிலுள்ள 91 நாடுகளில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இம் மரண தண்டனைகளில் சீனா, ஈரான், அமெரிக்கா மற்றும் வியட்நாம் நாடுகளின் பங்கு 84 விழுக்காடாகும். 2010ஆம் ஆண்டு சீனா, ஈரான், சவூதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ஏமன் நாடுகளில் 527 மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நாடுகளில் 2009 ஆம் ஆண்டில் 714 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டன. போதைப்பொருள், பாலியல், பொருளியல் மற்றும் வன்முறை தொடர்பான குற்றச் செயல்பாடுகளுக்கே அந்நாடுகள் இத்தண்டனையை வழங்கியுள்ளன என்று பன்னாட்டு மன்னிப்பு அவையின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, சூடான் மற்றும் அய்க்கிய அரபு நாடுகள் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்த அவை குற்றம் சாட்டியுள்ளது.

அதிகமாக மரண தண்டனை விதித்த நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 5ஆம் இடத்திலும் உள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்காவில் மட்டும் 46 பேர் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். தற்போது உலகின் 118 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது என்ற பொழுதும் அனைத்து நாடுகளும் இத்தண்டனையை நீக்கியே தீர வேண்டும் என்று உலகெங்கும் மரண தண்டனைக்கு எதிரான போர்க்குரல் தீவிரமாக எழுந்துள்ளது. 'மனிதனின் நீதி பிறழாத தீர்ப்புத் திறன் எனக்கு முழுமையாக உறுதி செய்யப்படும் வரை நான் மரண தண்டனைக்கு தடை விதிக்கவே கோருவேன்' என்கிறார் பிரஞ்சுப் புரட்சியாளர் மார்க்விஸ் டெ லாஃபயட்.

குற்றச்செயல் புரிந்த ஒருவரை கொலை செய்வதன் மூலமாக, குறிப்பிட்ட அக்குற்றச் செயல்பாட்டை சமூகத்திலிருந்து அறவே நீக்கிவிட முடியும் என்பது முதிர்ச்சியற்ற சிந்தனை. ஒரு கொலையை அமைப்பு, நீதி, நிர்வாக முறையாக்கி நடைமுறைப்படுத்துவதென்பது நாகரிக சமூகத்தின் மிக இழிவான செயலன்றி வேறென்ன? 'கொடிய குற்றம் புரிவோர் சாதாரண மனிதனைப் போன்று யோசிப்பதில்லை. அவர்கள் தங்கள் செயலுக்கும் அதன் மூலம் பின்னர் கிடைக்கப்போகும் மரண தண்டனையைப் பற்றியோ துளியேனும் சிந்திக்கும் நிலையில் இல்லை. நிறைய குற்றங்கள் கோபத்தின் தாக்கத்தினாலோ, வன்முறையில் ஊறிய கிராமங்களில் வளர்ந்ததாலோ, மது, மாது, போதை போன்ற அவாவினாலோ, பசி, பட்டினி, சமூகத்தின் மீதுள்ள அளவற்ற கோபத்தினாலோ, சிறு வயதில் நடைபெற்ற பாலியல் பலாத்கார செயல்களினாலோ, மன வளர்ச்சிக் குன்றினாலோ அல்லது ஒரு கொள்கைப் பிடிப்பினால் எவ்வாறேனும் ஒரு கொலையைச் செய்துவிடத் துடிக்கும் திடீர் உணர்வினாலோ நடப்பதேயாம். ஆக மரண தண்டனை துளியேனும் இக்குற்றங்களைத் தடுப்பது கிடையாது' (நன்றி மரண தண்டனையின் அவசியமின்மை பற்றி ஓர் குறள் கண்ணோட்ட ஆய்வு, திரு.ரெக்ஸ் சகாயம் அருள் மற்றும் முனைவர்.முத்துசாமி, அமெரிக்கா)

'உயிரைத் துன்புறுத்தாமை' (அகிம்சை) என்ற கோட்பாட்டின் வழியே நின்று விடுதலை பெற்ற இந்தியத் திருநாடு, அறவழியில் போராடி வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்த மண்ணை மீட்ட மகாத்மாக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் பாரத நாடு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது. திரு.இராஜீவ்காந்தியின் கொலைக் குற்றவாளியாகச் சொல்லப்படும் அம்மூவரின் குற்றச் செயல்பாடுகள் என்று புலனாய்வுத்துறை அளித்துள்ள அறிக்கையை வாசித்துப் பார்த்தால், மிகவும் அபத்தமாகத்தான் இருக்கிறது. இது போன்ற அபத்தங்கள் நம் நீதிமுறையில் நிறையவே உள்ளன என்பதை பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் வாயிலாக அறியலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிகார் மாநிலத்திலுள்ள கயா மாவட்டத்தில் நானூறு பேர் கொண்ட கும்பலொன்று ஓர் உயர்சாதியைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றது. இதற்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் வேளாண் கூலிகள் நால்வர் சிறையிலடைக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி அந்நால்வருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கொலையைச் செய்த நானூறு பேரில் இந்நால்வர் மட்டும் குற்றவாளிகள் என்று சட்டம் எப்படி வரையறுத்தது என்பது தான் நம் முன் உள்ள கேள்வி. அதே போன்று மற்றொரு வழக்கில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு குடியரசுத் தலைவரின் கருணையால் ஒருவருக்கு விடுதலை கிடைத்தது. மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் ஒருவர் தூக்கு மேடையேற்றப்பட்டார். ஒரே மாதிரியான குற்றம் புரிந்த மூவருக்கு வெவ்வேறு விதமான தண்டனை முறைகள் என்பது அபத்தமில்லையா?

இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஆயுள்தண்டனையோ அல்லது தூக்குத் தண்டனையோ விதிக்கப்படலாம். இது குற்றத்தின் தன்மையைப் பொருத்தது. தீர்ப்பளிக்கும் நீதிபதியையும் பொருத்தது. இராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் திரு.முருகன், திரு.சாந்தன் மற்றும் திரு.பேரறிவாளன் ஆகியோர் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் தனிமைச் சிறையில் முடக்கப்பட்டு தண்டனை பெற்றுவிட்டனர். இதற்கும் மேலாக மற்றொரு கொடும் தண்டனையாக தூக்குத்தண்டனை விதிப்பது, இவர்களின் தூக்குத்தண்டனையை ஆதரிப்போரின் 'வக்ர புத்தி'யையே காட்டுகிறது. அக்குறிப்பிட்ட வழக்கு விசாரணையின் தன்மை குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தும் கூட, தற்போதைய நிலையில் இம்மூவரின் மரண தண்டனையை அவசர அவசரமாக நிறைவேற்றத் துடிப்பது யாரை மகிழ்விக்க..?

அறம் கொன்ற தீயோரால் தான் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பாண்டிய மாமன்னன் நெடுஞ்செழியன், நீதி வழுவியதால்தான் கொலைக் களத்தில் வெட்டுண்டு செத்தான் கோவலன். தனது தவறான தீர்ப்பால் உயிரை இழந்து, மதுரை மக்களையும் இன்னலுக்கு ஆட்படுத்தினான். ஆதி காலம் தொட்டு பழுதற வழங்குகின்ற தீர்ப்பு முறையும், அதற்குரிய திறனும் மனிதர்களிடம் இல்லை. அதனால்தான் மரண தண்டனை வேண்டாம் என்று கூப்பாடு போடுகிறார்கள் அதன் எதிர்ப்பாளர்கள். தண்டனைக்குரியவன் தூக்கிலிடப்பட்ட பின்பு, குற்றமற்றவன் என்று உறுதி செய்யப்பட்டால், இறந்தவனை உயிர்த்தெழ வைக்கும் மந்திர சக்தி நீதிபதிகளுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, ஆளும் வர்க்கத்திற்கோ உண்டா? 'நூறு குற்றவாளிகள் தப்பிச் செல்லலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்பது நம் நீதிமான்கள் சொல்லும் புனித வாக்கு. ஆனால் இங்கோ எதிர்மறைச் சூழலே நிலவுகிறது.

இரஷ்ய நாட்டின் நாவலாசிரியரும், பொதுவுடமையாளருமான பியொடார் தஸ்தாயெவ்ஸ்கி, 'தண்டனைக்காக ஒரு கொலை என்பது அக்குற்றத்தினை விடவும் தீயது ஆகும். சட்டரீதியாக ஒரு கொலை என்பது ஒரு கொலையாளியால் நிகழ்த்தப்படும் கொலையைக் காட்டிலும் கொடூரமானதாகும்' என்கிறார். மிகப் பெரிய எழுத்தாளரான தஸ்தாயெவ்ஸ்கி மரண தண்டனைக் கைதியாவார். 18ஆம் நூற்றாண்டில் இரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னன், இவரை மன்னித்திருக்காவிட்டால், இந்த உலகம் நல்ல சிந்தனையாளனை இழந்திருக்கும்.

குற்றங்களுக்கெல்லாம் நடைமுறைத் தீர்வு அதைச் செய்கின்ற குற்றவாளிகளை அழித்தொழிப்பதில் அல்ல. அக்குற்றங்களே நடைபெறா வண்ணம் நமது அனைத்து செயல்பாடுகளும் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் வள்ளுவர்,

'ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை' (குறள் 541)

என்கிறார். குற்றம் செய்தவரின் தன்மையையும், சூழலையும், அவரின் உரிமைகள், கடமைகள் அனைத்தையும் ஆய்ந்து, சட்டத்தின் முன்னர் அனைவரும் நிகர் என்ற பார்வையில் பிசகற்ற முறையில் வழங்குவதே தீர்ப்பு என்பதே இக்குறளின் பொருள். குற்றவாளி வருந்தித் திருந்துதற்கான சட்டமுறைகளே, குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும். அப்படியொரு பார்வையில் தவறு செய்தவர்களை அணுகினால், நமது நீதிமன்றங்கள் அறமன்றங்களாகவும், சிறைச்சாலைகள் அறச்சாலைகளாகவும் மாறும்.

- இரா.சிவக்குமார்

Pin It