ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சிறை வைக்கப்பட்டதால் தனது தொழில் வருவாய் பெற்ற மகள் என்ற அனைத்தையுமே இழந்தவர் ‘சுபா’ சுந்தரம் என்று படத்தைத் திறந்து வைத்து பழ.நெடுமாறன் குறிப்பிட்டார். மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த பத்திரிகையாளர் புகைப்படக் கலைஞர் ‘சுபா’ சுந்தரம் படத் திறப்பு - இரங்கல் கூட்டம் - 21.7.2005 மாலை 5 மணியளவில் - சென்னை பத்திரிகையாளர் குடியிருப்பு விளையாட்டரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் பழ.நெடு மாறன், ‘சுபா’ சுந்தரம் படத்தைத் திறந்து வைத்தார். அவரது உரையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் பொய்யாக சிக்க வைக்கப்பட்டார். அதனால் அவரது குடும்பமே அழிந்தது. தனது ஒரே மகளை இழந்தார். அவர் நடத்தி வந்த தொழிலும் சின்னாபின்னமானது. அவர் யாருக்கும் மனத்தாலும் தீங்கு நினைக்காதவர். எதையும் எதிர் பாராமல், எல்லாருக்கும் உதவியவர்.
அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர்கள் பலர். அவர் இந்தப் பொய் வழக்கில் சிக்க வைக்கப்படாமல் இருந்தால் - தனது தொழிலை இழந்திருக்க மாட்டார். ஒரே மகளையும் இழந்திருக்க மாட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து நாங்கள் போராடினோம். இயக்கம் நடத்தினோம். மூத்த வழக்கறிஞர் நடராசன் அவர்களை வைத்து வழக்கை நடத்தினோம்.
நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை பெற்று என்னை சந்தித்தபோது அவர் சிறு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதார். யாருக்கும் இத்தகைய அநீதி இழைக்கப்படக் கூடாது. இத்தகைய அநீதிகளுக்கு உள்ளாகும்போது, நாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவும் கூடாது. நீதிக்காகக் குரல் கொடுக்க முன் வரவேண்டும். அதைத் தான் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு எனது வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார் பழ.நெடுமாறன்.
பத்திரிகையாளர் ‘அலைஓசை’ மணி பேசுகையில் “தமிழ்நாடு” பத்திரிகையில் நானும் அவனும் ஒன்றாக வேலை செய்தோம். அங்கு தான் எங்கள் நட்பு துவங்கியது. பிறகு நான் வேலை இல்லாமல் இருந்தபோது, எனக்காக அழுதவன் ‘சுபா’ சுந்தரம். அவனுக்காக ஒலி பெருக்கி முன்னே நிற்காத நான், இப்போது வந்து நிற்கிறேன்” என்று கூறி உரையைத் தொடர முடியாமல் முடித்துக் கொண்டார்.
மூத்த பத்திரிகையாளர் அரங்கையன் பேசுகையில், “சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவன் ‘சுபா’; தமிழ் நாட்டிலே இரண்டாவதாக தேர்ச்சிப் பெற்றான். உதவி என்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லக் கூடாது என்று அவன் எனக்கு சொல்லிக் கொடுத்தான். பத்து ரூபாய் இருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்பான். அதற்கு பதிலாக பத்து ரூபாய் கொடு என்று உரிமையோடு கேட்டால், உடனே கொடுத்து விடுவான். அப்படி உரிமையோடு கேட்க வேண்டும் என்று தான்அவன் விரும்புவான். எத்தனையோ புகைப்படக்காரர்களை அவன் வளர்த்தான், உருவாக்கினான். அவனைப் போன்ற மனிதநேயமிக்க பத்திரிகையாளனை நான் பார்த்த தில்லை. சுபாவுக்கு இணை சுபா தான்” என்றார்.
“நான் மிக அதிகமாக அவரிடம் பழகியதில்லை. அறிமுகம் உண்டு. சுபா ஒரு மிகச் சிறந்த மானுடன்” என்று தோழர் ஜவகர் குறிப்பிட்டார்.
“சுபா சுந்தரத்தின் பிரம்மாண்டத்தை நாம் உணரவில்லை” என்றார் ‘தீம்தரிகிட’ ஆசிரியர் ஞாநி. அவர் தனது உரையில்,
‘போட்டோ ஜர்னலிசம்’ என்ற ‘புகைப்பட இதழியல்’ நிறுவனத்தை, முதன்முதலாக ஒரு தனி நபராகத் துவக்கி, வளர்த்த அவரது பிரமாண்ட சாதனை சரித்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பிரம்மாண்டத்தை நாம் உணரவில்லை என்றே நினைக்கிறேன். ‘சுபா’விடம் சென்று எந்தப் படம் கேட்டாலும் சரி, ‘இல்லை’ என்ற பதிலே கிடைக்காது. யாரிடமும் கிடைக்காத படங்களையெல்லாம் - தன்னிடம் ‘இல்லை’ என்று சொல்லாதவர். அவ்வளவு அரிய புகைப்படங்களை சேமித்தார். ‘ஆனந்த விகடனும்’, ‘குமுதமும்’ தான் அவரது படங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.