தலையங்கம்

‘மரண தண்டனைக் கைதிகளை மன்னித்து வாழவிடுங்கள்’ என்று குடியரசுத் தலைவர் கலாம், தன்னிடம் வந்துள்ள 50 கருணை மனுக்கள் மீதும், ஒட்டு மொத்தமாக தனது மனித உரிமைக் கருத்தை மத்திய அரசிடம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்! 

20 பேர் கருணை காட்ட முடியாதவர்கள் என்று உள்துறை அமைச்சகம் திருப்பி எழுதிய போது, மீண்டும், குடியரசுத் தலைவர் தனது கருத்தை உறுதிப்படுத்தி எழுதியிருப்பதன் மூலம், மனித உரிமை வரலாற்றில் மகுடம் பதித்து விட்டார்.

மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று அய்.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறது. உலகின் 118 நாடுகள் மரண தண்டனைக்கு விடைகொடுத்து விட்டன. இன்னும் 78 நாடுகளில்தான் இந்தத் தண்டனை அமுலில் உள்ளது. சில நாடுகள் சட்ட புத்தகத்தில் தண்டனையை வைத்துக் கொண்டு, நடைமுறையில் அதை அமுல்படுத்தாமல் இருந்து வருகின்றன. குற்றவாளிகள் திருத்தப்பட வேண்டியவர்களே தவிர, ‘பழிக்குப் பழி’ வாங்கக் கூடியவர்கள் அல்ல என்ற மனித உரிமை சிந்தனை உலகம் முழுதும் முகிழ்த்து வருகிறது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ‘தீவிரவாதி’ என்று குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட - “இந்தியருக்கு” தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று மனித உரிமையோடு இந்திய வெளிநாட்டுத்துறை அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும்போது, இந்தப் பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள்நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி!

குறிப்பாக  ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கருணை காட்டுவதற்கு, பல்வேறு நியாயங்கள் உண்டு. அவற்றை பட்டியலிடலாம்.

1) காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘தடா’ சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதை அனுபவத்தின் வழியாக உணர்ந்து  அதே போன்ற ‘பொடா’ சட்டத்தை வாஜ்பாய் ஆட்சி கொண்டு வர முயன்றபோது அதை நிறைவேறாமல் தடுக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தான்! ‘தடா’வும்  ‘பொடா’வும் மனித உரிமைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ். அதே ‘தடா’வின் கீழ் தான், ராஜிவ் கொலை வழக்கு விசாரணையும் நடந்தது; விசாரணை நேர்மையானதாக எப்படி நடந்திருக்க முடியும்?

2)  ராஜிவ் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ள தாணு என்ற பெண், அதே இடத்தில் இறந்து விட்டார். உடன் சென்ற பலரும் - சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் - (நளினியைத் தவிர) சம்பவம் நடந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்கள், சூழ்நிலை சந்தர்ப்பத்தின் அடிப்படையில் சதிக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான்!

3) ராஜிவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை - சோனியாவிடம் முன் வைத்த போது, எனது கணவர் மரணத்துக்காக, எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பமோ விரும்பவில்லை என்று மனித நேயத்துடன், சோனியா குறிப்பிட்டாரே! அந்தக் கருத்தை, மனித உரிமை அமைப்புகள் எல்லாம் பாராட்டி வரவேற்றனவே!

4) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, நளினிக்கு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அப்போது தமிழகத்தில் கலைஞரின் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைத்தது. இப்போது மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க. - தூக்குத்தண்டனை கூடாது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டது என்பதால், இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.

5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி... அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், சிலருக்காவது தூக்குத் தண்டனைத் தரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று, கருத்துக் கூறியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

6) இதேபோல் வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு - தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில்  3 வழக்குகளை ‘தடா’ நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. எஞ்சிய ஒரே வழக்கில், அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் விதித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆயுள் தண்டனையை எதிர்த்துத் தான், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனார்கள்.

தண்டனையைக் குறைப்பதா வேண்டாமா என்று தீர்ப்பளிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் என்பவர் - கருநாடக சிறையில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், தான் இறப்பதற்கு முன் வீரப்பனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி வீரப்பனையே பார்த்திராதவருக்கு, வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாகத் தூக்கு தண்டனை தரப்பட்டுள்ளது.

7) 1980 இல் நடந்த வழக்கு ஒன்றில் (பச்சன்சிங் - பஞ்சாப் மாநில அரசுக் கிடையிலான வழக்கு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை தரலாம்” என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறையையும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தகவல் உரிமை பெறும் சட்டம், வேலை உத்திரவாத சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம் போன்ற சமூக உரிமைகளுக்கான சட்டங்களைக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வரும் மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் கலாம் கொடுக்கும் மனித உரிமைக் குரலின் நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதுவே மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மானுடரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Pin It