நண்பரின் சொந்த ஊரான கிராமத்திற்கு ஒரு திருவிழாவின்போது சென்று இருந்தேன். திருவிழாவைப் பார்த்துவிட்டு, ஊர் திரும்புவதற்கு முதல்நாள், நானும் அவரும் ஆற்றங்கரையில் இருக்கும் வீரபத்திரர் கோயில் வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஆல மரநிழலில் அந்த சிறிய கோவில் அமைந்திருந்தது. சற்றுத் தொலைவில் வயல் வெளியில் பசுமையும், மஞ்சளும் கலந்த நெற்பயிர்கள் காற்றில் சிலுசிலுத்தன. அப்போது பத்துப்பதினைந்து பேர் அடங்கிய சிறிய கூட்டம் அங்கே வந்தது. அதில் சில ஆண்களும் பெரும்பாலும் பெண்களும் இருந்தனர்.

வந்தவர்கள் திருமணம் பேச கோவிலுக்கு வருகின்றனர் என்றார் நண்பர்.

பெண்ணையும் பிள்ளையையும் காணவில்லையே என்றேன் நான்.

இரண்டு தரப்பினருக்கும் விருப்பம் இருக்கிறது, ஆனால் வீரபத்திரர் கோவிலில் பல்லி சம்மதம் கொடுத்தால் தான் மேற்கொண்டு திருமணப் பேச்சுக்கள்  நடக்கும். இல்லை என்றால் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று முடிவு செய்து விடுவார்கள். அதற்காகத் தான் இங்கே வருகின்றனர் என்றார் நண்பர்.

கோவிலின் முன்னால் கவிந்திருந்த மரநிழலில் அனைவரும் அமர்ந்தனர். சிறியதாக பூசையும் போடப்பட்டது. அதிக ஆரவாரம் இல்லாமல் இன்னார் பிள்ளைக்கும், இன்னாருடைய பெண்ணுக்கும் நிச்சயம் செய்யலாம் என்ற விருப்பத்தை தெரிவித்தனர்.

பிறகு சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர். கோவிலின் கல்தூணில் இருந்தோ அல்லது கருவறையில் இருந்தோ பல்லி கத்துகிறதா என்று உற்றுக் கவனித்தனர். பல்லி கத்தவில்லை. எனவே மேலும் சிறிது நேரம் திருமணம் பற்றிய பேச்சுக்களை பேசிவிட்டு மறுபடியும் காத்திருந்தனர். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் பல்லி கத்தவில்லை. இரண்டு  வீட்டாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுடைய முகங்களில் அவநம்பிக்கை துளிர்விட்டது.

மேலும் அரைமணி அதிக சத்தம் இடாமல் சிறிய குரலில் ஒருவருடன் ஒருவர் பேசியபடியே அமர்ந்திருந்தனர். அரைமணிநேரம் கழிந்ததும், ஒரு பெரியவர் எழுந்தார். சரி, இன்னிக்கி கவுளி நல்ல பலன் சொல்லலே, பிள்ளைகளுக்கு வேற இடம் பார்த்துக்குவோம் என்றார். அவர் சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்துவிட்டு, எழுந்து சென்றனர்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நான் இந்த திருமணம் நடக்காதா என்று கேட்டேன்.

"ஏதாவது ஒரு நல்ல சகுனம் இருந்தால் தான் திருமணத்தை நடத்துவார்கள், பல்லி சொல்லாவிட்டாலும், ஏதாவது அசரீரி எழுந்தால் கூட பரவாயில்லை. அதுவும் கிடைக்காத காரணத்தினால் சகுனத்தடையாகக் கருதுகிறார்கள்" என்றார் நண்பர்.

அசரீரி என்பது வானத்தில் இருந்து வரும் தேவதையின் குரல் அல்ல. ஒரு காரியத்தை செய்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கின்றபோது, தெய்வத்திடம் முறையிட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்போது  பக்கத்தில் நடந்து செல்பவர்களிடம் இருந்து, ஒரு குறையும் வராது செய் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டு போகின்ற குரல் நமக்குக் கேட்கும் அல்லவா. இதை தெய்வவாக்காக எடுத்துக் கொள்வார்கள். அந்தக் காரியத்தை செய்யலாம் என்று தெய்வமே மனித வடிவில் வந்து சொன்னதாக நம்பிக்கை. இதைத் தான் அசரீரி என்கிறார் நண்பர்.

இவ்வாறு நல்ல வார்த்தைகள் எதுவும் கிடைக்காத நிலையில், அந்த திருமணம் வார்த்தையின்றியே முடிந்து விட்டது. இது என்ன மூட நம்பிக்கை என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும் மனித இனம் தோன்றியதில் இருந்து இது போன்ற நம்பிக்கைகள் காட்சி அளிக்கின்றன.

இதைப்பற்றி  அன்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை நினைவுக்கு வந்தது. 

 குடத்திலே பிறைஊற்றிய பால் தயிராக உறையவில்லை. குவிந்த திமிலை உடைய காளையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது. உறியிலே இருந்து இறக்கிய நல்ல வெண்ணெயை உருக்கினால் உருகவில்லை. இதுமட்டுமா ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடவில்லை, பசுக்கள் நடுங்கி நின்று வருந்துகின்றன, பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகள் தானே அறுந்து தரையில் விழுகின்றன. இவை எல்லாம் பின்னால் நிகழவிருக்கும் தீமையை அடையாளம் காட்டுகின்ற அறிகுறிகள், துர்நிமித்தங்கள். ஆதலால், மக்களும் கறவை கன்றுகளும் தீங்கின்றி வாழ, கண்ணனை வேண்டிக் குரவை கூத்தாடுவோம் என்று மாதரி என்பவள் கூறுவதை சிலப்பதிகாரம் காட்டுகிறது.

சகுனம் பார்க்கின்ற பழக்கம் இன்று நேற்றல்ல, சங்க காலம் தொட்டே இருந்து வருவதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. நல்ல நாள் , நல்ல நேரம் பார்த்து ஒரு காரியத்தை தொடங்குவது அன்று முதல் இன்றுவரையில் நடந்து வருகிறது.

இவை தவிர பறவை சகுனம் பார்ப்பது, பல்லி சொல்லுக்குப் பலன் அறிவது, அசரீரி கேட்பது என்று சகுனம் பார்க்கின்ற முறைகள் நீண்டு கொண்டே செல்லுகின்றன.

இது குறித்து புறநானூற்றுப் பாடல் ஒன்று மிக அருமையாக ஒரு அரசனின்  கொடைத்தன்மையை போற்றுவதில் பார்க்கலாம்.

எல்லா காரியங்களையும் நல்ல நேரமும், நல்ல சகுனமும் பார்த்து செய்தால் தான் வெற்றி கிடைக்கும். ஆனால் இவைகளை அறியாமல் சென்றாலும், வெற்றி பெறுவது உறுதி. எங்கே என்றால், மலையமான திருமுடிக்காரி என்ற மன்னனிடம். அவன் இருப்பிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடும் புலவர்கள் சகுனம் சரியாக இல்லாவிட்டாலும் , பறவை போகாதே என்று தடுத்தாலும், காலம் அல்லாத காலத்தில் சென்றாலும் பரிசு பெற்றுத் திரும்புவது மிகவும் உறுதி. அவன் அத்தகைய வள்ளல் என்கிறது  124 ஆம் பாடல்.

பசுக்கூட்டத்தை கவர்ந்து செல்வதற்காக சில வீரர்கள் புறப்படுகின்றனர். தங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊருக்குச் சென்று ஒரு பாதுகாப்பான இடத்தில் இரவு நேரத்தில் தங்குகின்றனர். அந்த இடத்தில் நல்ல பறவையின் ஒலியைக் கேட்டாலும் அல்லது அந்தப் பக்கமாக வருவோர் போவோர் பேசிக்கொள்ளும் நல்ல சொற்களைக் கேட்டாலும் அவற்றை நல்ல சகுனமாகக் கொண்டு , நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பிக்கையோடு புறப்படுவார்கள். தொல்காப்பியத்தில் இது விரிச்சி என்ற பெயரில் சொல்லப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியே நல்ல காரியத்திற்காக வெளியே புறப்படும் நேரத்தில் பல்லி கத்தினால் தயங்குவதும், பேசிக்கொண்டிருக்கும் போது பல்லி கத்தினால் மூன்று முறை சொடக்குப் போடுவதோ அல்லது தரையில் தட்டுவதோ இன்றும் பலரிடையே இருந்து வருகின்ற பழக்கம்.

இந்தப் பழக்கம் இன்று நேற்று வந்தது அல்ல, இதுவும் கூட சங்க காலத்துப் பழக்கம் தான் என்பது அகப்பாடலினால் உறுதி செய்யப்படுகிறது.

உச்சியிலே செழித்து முற்றி இருக்கிறது தினையின் கதிர்கள். அவற்றை உண்ண புறப்படுகிறது ஒரு இளம்பன்றி. அப்போது நல்ல திசையில் இருந்து சிவந்த வாயை உடைய பல்லி ஒன்று குரல் கொடுக்கிறது. பல்லி கத்துவதை கேட்ட இளம்பன்றி, இது நல்ல நிமித்தம் நமக்கு ஆபத்து இருக்காது என்ற நம்பிக்கையோடு தினைப்புனத்துக்குள் நுழைகிறது. இதனை

முதைச்சுவல்; கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லி--------குறுகும்
----பன்றி.     என்று விளக்குகிறது அகம் 88 ஆம் பாடல். மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கும் இந்த சகுனம் பார்க்கின்ற பழக்கம் இருப்பதாக அகப்பாடல் குறிப்பிடுவது சுவையான கற்பனை. இந்த சகுன நம்பிக்கை என்பது நமக்கு பரம்பரையாக கடத்தப்பட்டு வருகிறது என்பதை இலக்கியங்கள் நிரூபிக்கின்றன.

இதனால் நல்லது நடக்கிறதா என்பதே நம் கேள்வி. ச‌குன‌ம், சோதிட‌ம், குறி சொல்லுத‌ல் என‌ ந‌ம்மிடையே ப‌ர‌வியிருக்கும் மூட‌ ந‌ம்பிக்கைக‌ளுக்கு அளவில்லை. எத்த‌னை நல்ல ச‌குனங்கள் கிடைத்தாலும், தொழில்நுட்ப‌த் தேர்ச்சி இல்லையென்றால் விண்க‌ல‌ங்க‌ள் க‌ட‌லில்தான் விழும். ப‌குத்த‌றிவின் துணை கொண்டு, வாழ்வை ந‌ட‌த்துவ‌துதான் என்றும் ப‌ய‌ன் த‌ரும். 

Pin It