நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டம் (Sustainable Development) என்ற கருத்துரு உலக அரங்கில் 1991 ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்டது. அப்பொழுது "நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டம் என்பது எதிர்காலத் தலைமுறையினர் தங்களுடைய தேவைகளை இயற்கை மூலாதாரங்களில் இருந்து பெறும் திறனுக்குப் பங்கம் வராத விதமாக இன்றைய தலைமுறையினர் இயற்கை மூலாதாரங்களை அளவாகப் பயன் படுத்திக் கொள்வது" (Sustainable development is the development that meets the neeeds of the present generation without compromising the ability of the future generation to meet their demands) என்று வரையறுக்கப்பட்டது.
 
     இது திட்டமிடுதலின் மிகச் சரியான அணுகுமுறை. "இன்றைய தலைமுறையினர் இயற்கை மூலாதாரங்களை அளவிற்கு மீறிப் பிழியக் கூடாது; வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட பின் மீண்டும் பழைய நிலைக்குக் குறைத்துக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கக் கூடாது. தேவையானால் மக்கள் தொகையைக் குறைத்துக் கொண்டு தான் வாழ்க்கைத் தர உயர்வைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே யொழிய, இயற்கை மூலாதாரங்களை அளவிற்கு அதிகமாகப் பிழிவதன் மூலம் அப்படிச் செய்யக் கூடாது." என்று அருமையான வழிகாட்டுதல் நெறிகளை உள்ளடக்கியது இவ்வரையறை.
 
     எப்படிப்பட்ட மகா அமிழ்தமே ஆனாலும் அதைப் பொது நன்மைக்கு எதிராகவும் பார்ப்பன நலன்களுக்குச் சாதகமாகவும் மாற்றி விளக்கம் கூறி, அதை நம் கண்மூடிச் சூத்திரர்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் சாமர்த்தியம் பார்ப்பன அரசு அதிகாரிகளுக்கு உண்டு. இந்த நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டம் என்பதன் வரையறை சென்னைப் பெருநகரில் 1997 ஆம் ஆண்டில் எப்படி உருமாற்றம் அடைந்தது தெரியுமா? "நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டம் என்பது திட்டச் செயலாக்கத்தில் ஈடுபாடு உடையோரை ஒன்று திரட்டிப் பங்கு கொள்ள வைப்பதற்காக அவர்களுடைய பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவது ஆகும்" (Sustainable development is focussing on cross sectoral issues to mobilise stakeholders population) என்று வரையறையை மாற்றி அமைத்தார்கள்.
 
     உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை, இயற்கை மூலாதாரங்களை அளவுக்கு மீறிப் பிழியக் கூடாது என்ற வழிகாட்டுதலாக அமைந்தது. ஆனால் அப்படிச் செய்தால் முதலாளிகளுக்கு மூலதனத்தை ஈடுபடுத்தும் வழி குறுகிவிடுவதால், அது செயல்படுத்தப்படாமல் கருத்தரங்குகளை நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றி அறிவுரைகளை வழங்குவது என்பதுடன் நின்று விட்டது.
 
     ஆனால் சென்னையில் மாற்றியமைக்கப்பட்ட வரையறை வெற்றி உலா வந்து கொண்டு இருக்கிறது. இந்த வரையறையில் சொல்லப்பட்ட, 'திட்டத்தில் ஈடுபாடு உடையவர்கள்' என்று 'தொண்டு நிறுவனங்கள்' (Non Governmental Organisations) மிகப் பெரிய அளவில் அடையாளம் காணப்பட்டன. அரசாங்கம் தன் கொள்கையை முடிவு செய்யும் பொழுது மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள "பொதுமக்கள் பங்கு கொள்ளல்" (Public participation) எனும் நடைமுறை, தொண்டு நிறுவனங்களின் கருத்தறிந்து நடப்பது என்பதாக உருமாற்றம் அடைந்துள்ளது.
 
     இப்படி ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டதன் பின்னணி என்ன? அதுவும் தமிழ் நாட்டில்/சென்னையில் இப்படிப்பட்ட கருத்து உருவாக்கப்பட்டது எப்படி?
 
     மற்ற மாநிலங்களை விட, தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு முறை ஓரளவிற்குச் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகார வட்டத்திற்குள் நுழையும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பொழுது அவர்களை ஆசைக்கு அடிமையாக்கி வைத்துக் கொள்ள முடிகிறது. அப்படி ஆசைக்கு அடிமையாகாதவர்களை அச்சுறுத்தியும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடிகிறது. இரண்டிற்கும் அடங்காதவர்கள் பழி வாங்கப்பட்டு செயல்படாத நிலையில் வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை சற்று அதிகமாகும் பொழுது இந்த உத்திகள் பயன்படாமல் போய்விடுகின்றன. அப்பொழுது வேறு உத்திகள் தேவைப்படுகின்றன. இந்தத் தேடலில் தான் பார்ப்பனர்கள் திட்டச் செயலாக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்று தொண்டு நிறுவனங்களை அடையாளம் காட்டுகிறார்கள்.
 
     தொண்டு நிறுவனங்கள் என்றால் மக்களைப் பாதிக்கும் பிரச்சிகைளுக்குத் தீர்வு காண்பனவாக இருக்க வேண்டும். இந்திய நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேர் பார்ப்பன ஆதிக்கம் தான். பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளைச் செய்ய வாய்ப்பு கிடைப்பதால் நிர்வாகம் சீரழிவதும், சூத்திரர்களில் உள்ள திறமைசாலிகள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய நேர்ந்து மனித வளம் வீணாவதும் ஒன்றும் பிரம்ம ரகசியம் அல்ல. இந்நிலை மாறினாலேயே நாட்டின் பல பிரச்சினைகளுக்குத் தானாகவே தீர்வுகள் கிடைத்து விடும்.
 
     ஆனால் தொண்டு நிறுவனங்கள் என்று சொல்லிக் கொள்ளும் எந்த ஒரு நிறுவனமும், உலகில் எங்குமே இல்லாத கொடுமையான பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றி மூச்சு விடுவது கூட இல்லை. ஏனெனில் அவை பார்ப்பனர்களாலும் பார்ப்பனர்களால் மூளை வெளுப்பு செய்யப்பட்டவர்களாலும் தான் இயக்கப்படுகின்றன. பார்ப்பன ஆதிக்கம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று செயல்படும் எந்த நிறுவனமும் அரசின் திட்டச் செயலாக்கத்தில் ஈடுபாடு உடைய நிறுவனமாக அடையாளம் காணப்படுவதே இல்லை.
 
     அதாவது மக்களின் வாழ்க்கைப் போக்கை நிர்ணயிப்பதில், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்காத (உண்மையில், மறைமுகமாக, பார்ப்பன ஆதிக்கத்தை வலப்படுத்த விழையும்) தொண்டு நிறுவனங்கள் எவ்வித ஓசையும் இன்றி மிக மிக முக்கியமான இடங்களில் நிலை கொண்டுள்ளன.
 
     அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள், பார்ப்பன ஆதிக்கத்தின் வலியை உணர்ந்து, அதை எதிர்கக வேண்டும் என்ற நிலையைச் சென்று அடைவதற்கு முன்பேயே, தங்களுக்கு வேண்டுவனவற்றைப் புரிந்து கொண்டு சொல்வதற்கான ஆரம்ப நிலையை அடைவதற்கு முன்பேயே, அவர்களின் குரல் வளையை நெரிக்கும் உத்திகள் பார்ப்பனர்களால் கையாளப்படுகின்றன.

- இராமியா

Pin It