கடந்த இரு மாதங்களுக்கு மேலாக இந்திய நேபாள எல்லையை ஒட்டியுள்ள ரக்சுல், பிர்குஞ் ஆகிய நகரங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவுடனான 70 %-க்கு மேற்பட்ட வாணிகம் நடைபெறும் இந்த எல்லை மூடப்பட்டிருப்பதால், எரிபொருள், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு, நேபாள மக்களுக்கு கடுமையான வேதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நேபாளம் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும். எனவே, எல்லா பொருட்களையும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், எல்லா ஏற்றுமதிக்கும் இந்தியா மற்றும் சீனாவின் மூலம் சாலைப் போக்குவரத்தை அது முக்கியமாக சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. தற்போதைய சூழ்நிலைக்கும், ஒரு போரைக் காட்டிலும் மனிதாபிமானமற்றதாக முக்கிய எல்லைப்புறங்கள் இந்தியாவால் தொடர்ந்து மூடிவைக்கப்பட்டிருப்பதற்கும் இந்திய அரசே காரணமென நேபாளத்தின் பிரதமர் திரு.கே.பி.சர்மா ஒலியும் பிற உயர் அதிகாரிகளும் திட்டவட்டமாக குறை கூறியிருக்கின்றனர். இந்த முற்றுகை, 1989-இல் இராஜீவ் காந்தி அரசாங்கம் நேபாளம் மீது விதித்து நேபாள மக்களுக்கு மிகுந்த இடர்ப்பாடுகளை ஏற்படுத்திய முற்றுகையைப் போன்றதென அவர்கள் ஒப்பிட்டிருக்கின்றனர்.

இந்த முற்றுகையின் காரணமாக முக்கிய சமூக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் மருத்துவ மனைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளும், பொருட்களும் தீர்ந்துவிட்டன என்றும் கடந்த இரு மாதங்களாக 16 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன. பொருளாதாரமானது சீரழிக்கப்பட்டுவிட்டது, தொழிற் சாலைகளை மூட வேண்டியதாகிவிட்டது. சுற்றுலாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேபாளம் எங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த முற்றுகையில் தனக்கு எந்தப் பங்கும் இல்லையென இந்திய அரசு அதிகார பூர்வமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் இது உண்மையில்லையென போதுமான சான்றுகள் காட்டுகின்றன. சுங்கச் சாவடிகள் 'மெதுவாக' செயல்படுதல், ஏகபோக வழங்குனராக இருக்கும் இந்தியன் ஆயில் கார்பரேசன் நேபாளத்திலிருந்து வந்துள்ள எரிபொருள் வாகனங்களை நிரப்ப மறுப்பது, 1,700 கி.மீ எல்லையை மேற்பார்வை செய்து வரும் துணை இராணுவப் படைகள், பொருட்களின் போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டுமென்றும், வாகனங்கள், ஆட்களின் அசைவுகளை தீவிர சோதனை செய்ய வேண்டுமெனவும் சொல்லப்பட்டிருப்பதாக இந்திய ஊடகமான சசாஸ்திர சீமா பால் செய்தி வெளியிட்டிருப்பது ஆகியன இதை உறுதி செய்கின்றன.

முடியரசைத் தூக்கியெறிந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், நேபாளத்தின் அரசியல் சட்ட நிர்ணய அவை ஒரு புதிய அரசியல் சட்டத்தை செப்டம்பர் 20, 2015 இல் பிரகடனப்படுத்தியது. உடனடியாக இதைத் தொடர்ந்து நேபாளத்தின் முற்றுகை தொடங்கியது. இந்தியாவை ஒட்டியுள்ள டெராய் பகுதியில் வசித்துவரும் மாதேசி மக்களிடையில் செயல்பட்டுவரும் சில அரசியல் சக்திகள் இந்த அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இது முழுக்கவும் நேபாளத்தின் உள்நாட்டுப் பிரச்சனையாகும்.

நேபாள மக்களுடைய பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்வதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக, இந்திய அரசு அதில் மூர்க்கத்தனமாக தலையிட்டு வருகிறது. அது நேபாளத்தில் உள்ள தன்னுடைய வெளிப்படையான மற்றும் மறைமுகமான முகவர்களைப் பயன்படுத்தி அங்குள்ள நிலைமையை மேலும் ஊதிப் பெரிதாக்கி வருகிறது. நேபாளத்தின் மாதேசி மக்களைப் பற்றி கவலைப்படுவது போல அது நடிக்கிறது. உண்மையில், அது அவர்களுடைய மனக்குறைகளை சூழ்ச்சியோடு இழிவான முறையில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நேபாளத்தில் தன்னுடைய மேலாதிக்க நோக்கங்களை மேலும் முன்னெடுத்துக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது.

நேபாளம் தனக்கென ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்க முயற்சித்து வந்த இந்த ஒன்பது ஆண்டு காலம் முழுவதும், இந்திய அரசு அதில் தொடர்ந்து தலையிட்டு வந்துள்ளது. 2008, 2013 அரசியல் சட்ட நிர்ணய அவைத் தேர்தல்களின் போது, நேபாளத்தின் சமவெளி மற்றும் மலைப் பகுதி சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளிடையே ஒப்பந்தங்களுக்கு இந்தியா ஒரு உத்திரவாதம் அளிப்பவராக இருந்திருக்கிறது.

புதிய அரசியல் சட்டத்தை அறிவிப்பதற்கு முன்னரும், அது அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்த அரசியல் சட்டத்தின் பிரிவுகளில் செல்வாக்கு செலுத்த நெருக்குதல்களையும் முயற்சிகளையும் இந்திய அரசு தீவிரப்படுத்தியது. தேசப் பாதுகாப்பு அறிவுரையாளர் அஜித் டோவல் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் போன்ற உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் நேபாளத்தின் முக்கிய அரசியல் கட்சிகளோடும், மாதேசி மற்றும் தாரு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளோடும் பேசுவதற்கு காட்மண்டுக்கு விரைந்திருக்கின்றனர். அரசியல் சட்டம் சமவெளியிலுள்ள சமூகங்களுக்கு எதிராக பாரபட்சமாக இருப்பதாகக் கூறிக் கொண்டு, நேபாளத்தின் அரசியல் சட்டத்தை மேலும் தாமதப்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

புதிய அரசியல் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, வெளிப்படையாகவே அது பற்றி இந்திய அரசு தொடர்ந்து வேறுபட்ட கருத்தை வெளியிட்டு வந்திருக்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் புதிய அரசியல் சட்டத்திற்காக நேபாள அரசாங்கத்தை உடனடியாக பாராட்டியிருக்கையில், இந்திய அரசு அந்த நிகழ்ச்சியை குறிப்பாக உதாசீனப்படுத்தியது. நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தை பல நாட்களுக்குப் பின்னரே இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டது.

நேபாளத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், தூதரக அதிகாரிகள், இதழியலாளர்கள், பெண்ணுரிமைத் தலைவர்கள், மருத்துவர்கள், முன்னாள் ஐநா அதிகாரிகள் உட்பட நேபாள குடிமக்களுடைய ஒரு கூட்டணி, ஐக்கிய நாடுகள் அவையிடம் நேபாளத்தின் மீது போடப்பட்டுள்ள பொருளாதார முற்றுகையை அகற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் கடந்த இருமாத கால பொருளாதார முற்றுகையின் காரணமாக மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடி நேபாளத்தில் எழுந்திருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட, பிரதிநிதித்துவ, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் சட்ட நிர்ணய அவையின் மூலம் ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்கியதற்காக, இந்தியா நேபாளத்தைத் தண்டித்து வருகிறது என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

நேபாளம் போன்ற அண்டை நாடுகளை இந்திய அரசு எப்போதும் தன்னுடைய புழக்கடையாகக் கருதி வந்திருக்கிறது. இந்த நாடுகளுடைய அரசாங்கங்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டுமென்பதை உறுதி செய்வதற்காக, அது அந்த நாடுகளுடைய உள்நாட்டுப் பிரச்சனைகளில் மூர்க்கத்தனமாக தலையிட்டு வந்திருக்கிறது.

அது, இந்த நாடுகளுடைய இறையாண்மையையும், வெளியிலிருந்து எந்த சக்தியின் தலையீடும் இன்றி தங்களுடைய சொந்த வேலைகளை மேற் கொள்ளும் அவர்களுடைய உரிமையையும் அங்கீகரிப்பதில்லை. இந்திய அரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நேபாள அரசாங்கத்தையும், மக்களையும் நெருக்குவதற்காக அது எல்லைகளை முற்றுகையிடுவது மற்றும் கையை முறுக்கும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரணத்திற்காக இந்திய அரசை, நேபாள மக்களும் பெரும்பாலான அண்மை நாடுகளும் பரவலான அளவில் வெறுத்து வருகின்றனர்.

நேபாள மக்களோடு, இந்தியத் தொழிலாளி வகுப்பினரும், மக்களும் நீண்ட காலமாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கின்றனர். நேபாளம் இறையாண்மை கொண்ட ஒரு நாடாகும். வெளியிலிருந்து எந்தத் தலையீடும் இன்றி தங்களுடைய வேலைகளை நடத்திச் செல்லவும், உள்நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளவும் நேபாள மக்களுக்கு உரிமை உண்டு. இந்திய அரசு, நேபாளத்தை முற்றுகையிட்டிருப்பதை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் கண்டிக்கிறது. அதை உடனடியாக நீக்க வேண்டுமென அது கோருகிறது.

Pin It