நமது நாட்டில் ஒரு கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள், உழவர்கள், பழங்குடியினர், பெண்கள், பல்வேறு தேசிய இனங்கள் உள்ளிட்ட நமது நாட்டு மக்கள் ஒடுக்குமுறையையும், சுரண்டல் நிலைமைகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறார்கள். இந்த நிலைமைகளில் ஒரு மாற்றம் வர வேண்டுமென அவர்கள் கோரி வருகின்றனர்.

ஆனால் மக்களைப் பிளவுபடுத்தவும், நசுக்கி வைப்பதற்காகவும் மக்களுக்கு எதிராக இந்திய அரசு வகுப்புவாத, பாசிச பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது. சனநாயகம் என்ற தோற்றத்தையும், அது அனைவருடைய நலன்களையும் பாதுகாத்து வருகிறது என்ற நாடகத்தையும் நடத்திக் கொண்டு ஆளும் வகுப்பினர் இந்த அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய பாசிச ஆட்சியை எதிர்க்கும் மக்களுடைய எல்லா போராட்டங்களையும் நசுக்குவதை சட்ட ரீதியாக ஆக்குவதற்காக அவர்கள் முயன்று வருகின்றனர்.


உலகின் மிகப் பெரிய சனநாயகமாக இந்தியா இருக்கிறது என்று பறைசாற்றிக் கொள்வதற்கு, ஆளும் வகுப்பு அரசியல் சட்டத்தையும், பல கட்சி அரசியல் அமைப்பையும், அவ்வப்போது தேர்தல்கள் நடத்தப்படுவதையும் ஆதாரமாகக் காட்டுகிறது. அதே நேரத்தில் அதனுடைய ஆட்சிக்கு எதிராக எழும் எந்தத் தீவிர எதிர்ப்பையும் நசுக்குவதற்காக, நாட்டின் "ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும்" கட்டிக் காப்பது என்ற பெயரிலும், "சட்டம் ஒழுங்கை" நிலைநாட்டுவது என்ற பெயரிலும் பாசிச சட்டங்களை அது பயன்படுத்துகிறது.


இந்தப் பின்னணியை மனதில் கொண்டு, அண்மையில் மராட்டிய மாநில அரசாங்கம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையையொட்டி ஒரு பொது விவாதம் நடந்து வரும் வேளையில், இந்த தேச துரோக சட்டத்தை நாம் மீள்பார்வை செய்ய வேண்டும். ஆகஸ்டு 27, 2015 அன்று வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை, "அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பற்றி வேறுபட்ட கருத்துகளை வாய் வார்த்தைகளாலோ அல்லது எழுத்து வடிவத்திலோ அல்லது பிற வடிவங்களிலோ வெளியிடுபவர்கள்" மீது இந்திய குற்றவியல் சட்டம் (தேச துரோகச் சட்டம்) பிரிவு 124-ஏ வின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறது.


இந்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, மும்பை உயர் நீதி மன்றம் பின்னர் தடை விதித்தது. வெளியிடப்பட்ட எந்த கருத்தும் சட்ட ரீதியாக நிறுவப்பட்ட மத்திய அல்லது மாநில அரசாங்கத்தை "வன்முறையால்" தூக்கியெறிவதாகவோ, அல்லது சீரழிப்பதாகவோ இருந்தாலன்றி, அதைத் தேச துரோகமெனக் கருத முடியாதென அது தெளிவுபடுத்தியிருக்கிறது.


உயர் நீதி மன்றம், தேச துரோகச் சட்டத்திற்கு எதிராக எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது அரசுக்கும், அதனுடைய பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயகத்திற்கும் உள்ள நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டுமென மட்டுமே அரசு இயந்திரத்தைக் கேட்டிருக்கிறது. ஏனெனில் இந்த அமைப்பு செயல்படுவதற்கு, எதிர்க் கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சியையும், அதனுடைய அரசாங்கத்தையும் எல்லா வகையான பிரச்சனைகளிலும் குற்றஞ்சாட்டி அதை மதிப்பிழக்கச் செய்வது தேவைப்படுகிறது.

உயர் நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பில், இந்தியாவிற்கான கண்ணோட்டம் குறித்து நாட்டு குடிமக்கள் கருத்துக்களைக் கொண்டிருக்கவும், அவற்றை எடுத்துரைக்கவும் சிந்தனைக்கான உரிமை குறித்து அது எதுவும் கூறவில்லை. இந்த அரசியல் சட்டத்தாலும், மற்ற சட்டங்களாலும் இன்றுள்ள சூழ்நிலைகள் சட்ட ரீதியாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை எதிர்க்கும் தனிப்பட்டவர்களுக்கும், எந்த ஒரு அமைப்பினுடைய உறுப்பினர்களுக்கும் எதிராக 1870-லிருந்து இருந்துவரும் இந்த தேச துரோகச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


வரலாற்றுப் பின்னணி


தேச துரோகச் சட்டமானது ஆங்கிலேய பேரரசின் சட்டக் குழு சட்ட எண் 27, 1870-ஆல் இந்திய குற்றவியல் சட்டத்தில் நுழைக்கப்பட்டது. 1857 கெதர் எழுச்சியிலிருந்து, பெரும்பாலான இந்திய மக்கள் ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவிலிருந்து தூக்கியெறிய விரும்புகிறார்கள் என்பது தெளிவு. காலனிய ஆட்சிக்கு எதிரான கருத்துக்கள் பரவுவதை குற்றவியலாக்குவதும், இன்னொரு கிளர்ச்சிக்கு மக்களைத் தட்டியெழுப்பும் நாட்டுப்பற்றாளர்களின் எந்த முயற்சியையும் நசுக்குவதும் இந்த சட்டத்தின் நோக்கமாகும். (சட்டத்தின் பயன்பாட்டிற்கு பெட்டியைப் பார்க்கவும்). இச்சட்டமானது 1896-இல் திருத்தப்பட்டது. இப்போதுள்ள சட்டமானது பெரும்பாலும் அந்தச் சட்டமாகவே இருக்கிறது.


தற்போதுள்ள இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124-ஏ - "இந்தியாவில் சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பை உருவாக்குவதற்காகவோ அல்லது அதைத் தூண்டிவிடுவதற்காகவோ பேச்சாலோ, எழுத்தாலோ, அறிகுறிகளாலோ, மற்ற முறைகளிலோ முயற்சிப்பவர்கள் அல்லது செய்பவர்களை வாழ்நாள் முழுவதுமோ அல்லது மூன்றாண்டுகளுக்கு மேலோ சிறையிலடைத்தும், கூடவே அபராதம் விதித்தும் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறது.


நமது நாட்டைச் சூறையாடுவது என்ற ஒரு நோக்கம் மட்டுமே ஆங்கிலேயர்களிடம் இருந்தது. 1858-இல் அவர்கள் நிறுவிய காலனிய இந்திய அரசானது இந்திய மக்கள் மீது ஒரு பயங்கரவாத சர்வாதிகாரமாகும். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் எழும்போது அவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக நசுக்குவதற்கான ஒரு கருவியே இந்த தேச துரோகச் சட்டமாகும். தன்னை ஒரு குடியரசாக அறிவித்துக் கொள்ளும் சுதந்திர இந்திய அரசுக்கு இப்படிப்பட்ட ஒரு சட்டத்திற்கான அவசியம் என்ன என்ற நியாயமான கேள்வி எழுகிறது.


இதற்கான பதில், காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து இந்திய அரசை பெற்றுக் கொண்டவர்கள், இந்தியாவையும், அதனுடைய மக்களையும் காலனியவாதிகள் பார்த்து போலவே பார்த்தனர் என்பதில் இருக்கிறது. நாட்டையும், நமது மக்களுடைய உழைப்பையும், வளங்களையும் ஈவு இரக்கமின்றிக் கொள்ளையடிக்கும் அதே நோக்கத்தை இவர்களும் கொண்டிருந்தனர். இந்த காரணத்திற்காகவே அவர்கள் காலனிய அரசின் எல்லா ஆயுதங்களையும் இறுத்தி வைத்துக் கொண்டு, அதை 1950 அரசியல் சட்டத்தில் சட்டரீதியாக ஆக்கினார்கள். இந்த ஆயுதங்களில் ஒரு அங்கமாக தேச துரோகச் சட்டம் அன்றும் இன்றும் இருந்து வருகிறது.


எதிர்ப்பை நசுக்குவதையும், கருத்து வேறுபாட்டைக் குற்றவியலாக்குவதையும் சட்டரீதியாக ஆக்குதல்


1947-லிருந்து இந்த தேச துரோகச் சட்டமானது நாடெங்கிலும் எண்ணெற்றவர்கள் மீது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும், தொழிலாளி வகுப்புப் போராளிகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

அண்மைக்காலத்தில் இச் சட்டமானது, 1980-களில் பஞ்சாபில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் காணாமல் போன போது அல்லது எதிர் மோதல்களில் கொல்லப்பட்ட போது அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக குரலெழுப்பிய மனித உரிமை செயல்வீரர் மீதும், கூடங்குளத்தில் அணுஉலை துவக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீதும், காசுமீரம், வடகிழக்கு, சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் அரசு பயங்கரத்தைக் கண்டித்தவர்கள் மீதும், சில மாநிலங்களையும், பகுதிகளையும் வலுக்கட்டாயமாக இணைப்பதன் மூலம் இந்த இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டதன் நியாயத்தைக் கேள்வி கேட்கும் எவர் மீதும், விடுதலைப் புலிகள் மீது சிரிலங்க அரசு போர் தொடுத்து தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது குறித்து இந்திய அரசின் நிலைப்பாட்டைக் கேள்வி கேட்ட ஒரு அரசியல்வாதிக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (சில எடுத்துக் காட்டுகளுக்கு பெட்டியைப் பார்க்கவும்.)


மக்கள் தங்களுடைய நிலைமைகளுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு சட்டம் கொஞ்சமும் நியாயமற்றதாகும். இது இந்திய அரசு, சட்டத்திற்கு புறம்பானது என்பதைக் காட்டுகிறது. இந்திய அரசின் அதிகாரமானது, இந்திய மக்களிடமிருந்து பெறப்பட்டதல்ல. அது மக்களுடைய உயர்ந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டதல்ல.

பெரும்பான்மையான மக்களுடைய ஒடுக்குமுறையான மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு அதுவே பொறுப்பாகும். இந்திய அரசோடும், அதனுடைய இந்த முழு அமைப்போடும் பெரும்பான்மையான மக்களுக்கு வெறுப்பும் விரக்தியும் இருப்பதற்கு இந்த நிலைமைகளே காரணமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைமையில், மக்கள் எந்தக் கருத்தைச் சொல்லலாம் அல்லது எழுதலாம், அவர்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து என்ன கருத்தை அவர்கள் கொண்டிருக்கலாம் என்றெல்லாம் கட்டளையிடுவதற்காக அரசு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.

தன்னுடைய அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் எதிர்ப்பை நசுக்குவதற்கு இந்த தேச துரோகச் சட்டம் அரசுக்கு ஒரு இறுதி ஆயுதமாக தன்னுடைய "சட்டபூர்வமான" செயல்பாட்டை நியாயப்படுத்த அதிகாரம் அளிக்கிறது. அரசின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்பவர்கள், குற்றவாளிகள் போல காட்டப்படுகிறார்கள்.


இன்று, ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப, கருத்துரிமை அப்பட்டமாக மீறப்படுகிறது. குறிப்பிட்ட சமூகங்களைத் தாக்கியும், மக்களுடைய மதிப்பை சிறுமைப்படுத்தும் விதத்திலும் வகுப்புவாத, பாசிச, இனவாத, பாலியல் கருத்துக்களைக் கூறி வருபவர்கள் நச்சை உமிழ்வதற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம், அமைதியாக வாழ்வதற்கும், நியாயத்திற்கும் முன்னேற்றத்திற்கும் போராடி வருபவர்கள் தேச துரோகச் சட்டம் போன்ற சட்டங்களால் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள்.


இனவெறி, பாசிசம், வகுப்புவாதம் அற்ற, பிற வழிகளில் மக்களுடைய மதிப்பை சிறுமைப்படுத்தாத கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், அவற்றை வெளிப்படுத்துவதற்குமான கருத்துரிமை மீறப்படக் கூடாததாகும். தங்களுடைய கருத்துரிமையைப் பயன்படுத்துவதற்காக யாரேனும் ஒடுக்கப்படுவார்களேயானால், அது கொஞ்சமும் நியாயமற்றதாகும். அதை நாம் முழுவதுமாக கண்டித்து எதிர்க்க வேண்டும்.


தேச துரோகச் சட்டத்தை இந்திய சட்டப் புத்தகத்திலிருந்து அகற்றுவதற்கான போராட்டமானது, கருத்துரிமை உட்பட எல்லா மக்களுடைய மனித உரிமைகளுக்கும் உத்திரவாதமும், நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும் கொண்டதாக ஒரு நவீன இந்தியக் குடியரசை நிறுவுவதற்கான போராட்டத்தின் ஒரு அங்கமாகும்.

1947-க்கு முன்னர் இந்தியாவில் இச்சட்டத்தின் பயன்பாடு


அன்னிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பிவந்த இந்துஸ்தானி கெதர் கட்சி உறுப்பினர்களாலும், பல்வேறு புரட்சிகர இந்திய குழுக்களாலும் 1915 இல் ஏற்பாடு செய்த கிளர்ச்சிக்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் பல நெருக்கடிநிலை வழிகளை சட்டத்தில் ஏற்படுத்தினர். இந்திய பாதுகாப்புச் சட்டம் 1915 இன் முக்கிய இலக்குகளில் ஒன்று கெதர் கட்சியாகும். இச்சட்டம், தடுப்புக் காவல், விசாரணையின்றி சிறையில் அடைத்தல், எழுத்து, பேச்சு உரிமைகளையும், இடம்பெயர்தலையும் கட்டுப்படுத்துதல் போன்ற பல அதிகாரங்களை காலனிய ஆட்சியாளர்களுக்குக் கொடுத்தது.

இச்சட்டமானது இந்திய புரட்சியாளர்களுக்கு எதிராக பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. 1915 கெதர் கிளர்ச்சி தோற்ற பின்னர் நடைபெற்ற முதல் லாகூர் சதி வழக்கின் போது இது முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது. பஞ்சாபில் கெதர் இயக்கத்தையும், வங்காளத்தில் அனுசிலன் சமிதியையும் நசுக்குவதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.


இந்திய பாதுகாப்புச் சட்டத்திற்கு மிகவும் கருணை கொண்ட மாற்றாகக் கூறி ரௌலட் சட்டம் 1919 கொண்டு வரப்பட்டது. அது அரசியல் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த தூக்கு தண்டனையை ஆதரித்தது. தேச துரோகத்தை எதிர்கொள்வதற்காக, இரகசிய விசாரணை நடத்தும் வாய்ப்போடு கூடிய தனி தீர்ப்பாய அமைப்பை ரௌலட் குழுவின் 1918 அறிக்கை பரிந்துரை செய்தது. ஆணை எதுவுமின்றி, சோதனைகள் செய்யவும், சிறைப்படுத்தவும் ரௌலட் சட்டம் அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியது. நீதிபதிகள் இல்லாமலேயே இரகசிய வழக்குகள் நடத்துவதை இச் சட்டத்தின் சில பிரிவுகள் நியாயப்படுத்தின. தீர்ப்பு இறுதியானதாகவும், மேல் முறையீடு செய்ய வழியில்லாததாகவும் இருந்தது.


தேச துரோக குற்றச்சாட்டு முதலில் பால கங்காதர திலகருக்கு எதிராக இரண்டு முறை கொண்டுவரப்பட்டது. அவருடைய பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும், அதன் விளைவாக இரண்டு ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் கூறி 1897-இல் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் 1898-இல் அவருக்கு பிணை கிடைத்தது. செய்தியிதழ்களில் அவருடைய எழுத்துக்கள் தேசத்திற்கு துரோகமாக இருந்ததாகக் கூறி 1908-இல் அவர் மீது மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டது. அவநம்பிக்கை என்றால் வெறுப்பு, பகைமை, விரோதம் மற்றும் அரசுக்கு எதிராக எல்லா வகையான மனப்பான்மை என்று அந்த வழக்குக்கு தலைமை வகித்த ஆங்கிலேய அதிகாரி கூறினான். அவநம்பிக்கையை அவன் விசுவாசமின்றி இருப்பதற்கு சமமாகக் கருதினான். இச் சட்டமானது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கூறப்படும் கருத்துகளுக்காக மட்டுமின்றி, அரசாங்கத்தையும், அது இருப்பதையும், அதனுடைய முக்கிய குணநலன்களையும், அதனுடைய நோக்கங்களையும் அல்லது மக்களைப் பற்றிய அதனுடைய உணர்வுகளையும் தாக்கும் எந்த எழுத்திற்கும் எதிராக இச்சட்டம் பாயுமென அவன் கூறினான்.

தேச துரோக சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சில எடுத்துக் காட்டுக்கள்.


பஞ்சாப் - அரியானா உயர் நீதி மன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.பெயின்சு மீது தேச துரோக குற்றம் 1992 இல் சாட்டப்பட்டது. கலிஸ்தானுக்காக நீதிபதி பெயின்சு அறைகூவல் விடுத்ததாக கூறப்பட்டது. காவல்துறை மற்றும் அதிகாரபூர்வமான ஆதாரங்கள், அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, மிகவும் தீயை மூட்டிவிடக்கூடிய அல்லது தேச துரோக கருத்துக்களை கூறி இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசாங்கம் கருதினால், அவரைக் கைது செய்ய எல்லா உரிமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது என்கின்றன. உண்மையில் நீதிபதி பெயின்சு மனித உரிமைப் போராளியாவார். அவர் பஞ்சாபில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்படுவதையும், காணாமல் போவதையும் கண்டித்திருக்கிறார்.


டாக்டர் பினாயக் சென் சத்தீஸ்கரில் ஒரு மருத்துவராகவும், மனித உரிமை செயல் வீரராகவும் இருந்து வந்திருக்கிறார். தேச துரோக கருத்துக்கள் கொண்டவற்றை வினியோகித்ததற்காகவும், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையும், அவநம்பிக்கையையும் பரப்பியதற்காகவும், தேச துரோகச் செயல்களில் பங்கேற்றதற்காகவும் சென் மீது 2007 மே-யில் சத்தீஸ்கர் நீதி மன்றம் தேச துரோக குற்றஞ்சாட்டியது. எண்ணெற்ற ஆதிவாசி மக்களைப் படுகொலை செய்த, அரசின் ஆதரவோடு செயல்படும் சால்வா ஜுடூம் என்ற பயங்கரவாதக் குழுவை சென் கடுமையாக விமர்சித்தவர் ஆவர்.


சிரிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போர் நிறுத்தப்படவில்லையானால், இந்தியா ஒரு நாடாக இருக்காதென 2009-இல் தன்னுடைய பேச்சில் எச்சரிக்கையை எழுப்பியதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தேச துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். "திரு வைகோ, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகப் பேசியது மட்டுமின்றி, இந்தியாவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதனுடைய தலைவர் பிரபாகரனை போற்றியும் பேசியிருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கு, இறையாண்மைக்கும் எதிராக பேசியிருக்கிறார்" என்று கூறி குற்றச்சாட்டு நியாயப்படுத்தப்பட்டது.


கர்நாடகாவில் போலி எதிர் மோதல் கொலைகள் நடைபெறுவதாக வார்த்தபத்திரா-வின் ஒரு கட்டுரையில் எழுதிய காரணத்திற்காக வர்த்தாபத்திரா-வின் ஆசிரியர் இ.ராதி ராவ் 2010 பிப்ரவரியில் மைசூரில் தேச துரோகச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய டாக்டர் சுப.உதயகுமார் உள்ளிட்ட பதினோரு முன்னணி செயல் வீரர்கள் மீது 2012 மார்ச்சில் தேச துரோக குற்றஞ்சாட்டப்பட்டது. 2011 செப்டெம்பர் - டிசம்பருக்கு இடைப்பட்ட நான்கு மாத காலத்தில் 6000 பேர் மீது அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்ததற்காக இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 121-இன் கீழும், தேச துரோகத்திற்காக பிரிவு 124-ஏ வின் கீழும் கூடங்குளம் காவல் நிலையத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டது.
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் இந்திய இராணுவத்தைக் கொண்டு நிசாமின் ஐதிராபாத் இந்தியாவோடு இணைக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பியதற்காக டிஆர்எஸ் மக்களவை உறுப்பினர் கே.கவிதா மீது தேச துரோக வழக்கு 2014 இல் பதிவு செய்யப்பட்டது. கவிதா ஒரு நேர் முகத்தில் ஜம்மு காசுமீரமும், தெலுங்கானாவும் இந்தியாவின் ஒரு அங்கமாக முன்னர் இருக்கவில்லை என கூறியதாகக் சொல்லப்படுகிறது.


பெரும்பாலான தமிழக மக்கள் கோரும் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டுமென பாடல் எழுதிய 'குற்றத்திற்காக', மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைஞர் கோவன் தேச துரோகச் சட்டத்தின் கீழ் 2015 அக்டோபர் 30 அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Pin It