இந்திய வரலாறு இனி எப்படி இருக்கப் போகின்றது என்ற கேள்வி, குறைந்த பட்ச அரசியல் அறிவுள்ள, நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியனையும் பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கின்றது. சோற்றுக்காக அந்நிய நாடுகளிடம் பிச்சை எடுக்கும் காலத்தை மோடி அரசு மாற்றி இருக்கின்றது. இனி இந்திய மக்கள் கெளரவமாக தங்களின் சொந்த நாட்டு முதலாளிகளிடம் மண்டியிட்டு பிச்சை எடுத்து உயிர் வாழ்வதற்கான இனிய சூழலை மோடி ஏற்படுத்தி இருக்கின்றார். இந்திய ஜனநாயகத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஓட்டுக்கும் சரிசமமான ஒரே மதிப்பு உள்ளது. அந்த மதிப்பு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் அவர்களது வாழ்க்கையை நிர்மூலமாக்குவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கின்றதே ஒழிய ஒருபோதும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவியதில்லை.
சாமானிய மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காகவே தாங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கேட்கின்றோம் என வீதிகள் தோறும் ஓட்டுப் பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்த கும்பல்கள், தங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த கோடான கோடி சாமானிய உழைக்கும் மக்களுக்கு இந்த நாட்டின் வளங்களில் எத்தனை சதவீதத்தை பங்கிட்டுக் கொடுத்தார்கள்? அவர்களின் கல்விக்காகவும், உடல்நலத்திற்காகவும், ஒரு கெளரவமான வாழ்க்கைக்காகவும் என்ன செய்தார்கள்? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் இன்று அசமத்துமான வளர்ச்சியால் திண்டாடிக் கொண்டு இருக்கின்றன. குறைந்தபட்ச வளர்ச்சியை அடைந்துள்ள மாநிலத்தை நோக்கி வளர்ச்சியற்ற மாநில மக்கள் தொடர்ச்சியாக படையெடுப்பதும், அதனால் உள்ளூர் தொழிலாளர்களின் சம்பளம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைவதும், இன வெறி அரசியல் துளிர்விடுவதும் ஒரு மோசமான கட்டமைப்பு நெருக்கடிக்கான அறிகுறிகள் ஆகும். இப்படியான நிலைக்கு இந்திய மாநிலங்களைத் தள்ளிய அயோக்கியர்கள் இன்னமும் தங்களை யோக்கியர்கள் என்று சொல்லிக் கொண்டு கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் மீண்டும் உங்களிடம் ஓட்டு கேட்க வருவார்கள். அரசியல் அறிவற்ற கூட்டம், சாதிக்கும் மதத்திற்கும் மூடப் பழக்க வழக்கங்களுக்கும் தன்னுடைய மூளையை தொலைத்துவிட்ட கூட்டம் மீண்டும் ஓர் அயோக்கியனுக்கு, தன்னை கார்ப்ரேட்டுகளிடம் கூட்டிக் கொடுக்கும் அரசியல் தரகனுக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைக்கும்.
இங்கே இருக்கும் கார்ப்ரேட் ஊடகங்களும், கார்ப்ரேட்களின் காலைக் கழுவி உயிர்வாழும் மானங்கெட்ட அறிவுஜீவி வர்க்கமும் தொடர்ந்து உங்களிடம் அது போன்ற அயோக்கியர்களின், பாசிஸ்ட்டுகளின் முகத்தை கடவுளுக்கு நிகராகக் காட்டி நம்பச் சொல்லும். இந்து மத வெறியர்கள், மாட்டுக்காக மனிதனை அடித்துக் கொன்ற கொலைகாரக் கும்பல்கள் மறந்தும்கூட இந்திய மக்களின் வளங்களை பெருமுதலாளிகளுக்கு கூட்டிக் கொடுக்கும் அவர்களது தலைவர்களைப் பற்றி பேச மாட்டார்கள். பேசினால் எலும்புத் துண்டுகள் கிடைக்காது என்பது நாய்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்தியா ஒரு பெரும் அசமத்துவமான காலத்திற்குள் பிரவேசித்து இருக்கின்றது. இந்தப் பிரவேசம் மோடியின் துணையுடன் மிக வேகமாக நடந்தேறி இருக்கின்றது. ஏழைத்தாயின் மகன் என்று கண்ணீர்விட்டு ஊரை ஏமாற்றி, பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த மோடி இந்த ஐந்தாண்டுகளில் பெருமுதலாளிகளுடன் சேர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் இரக்கமற்று கொள்ளையடித்துள்ளார். சாமானிய உழைக்கும் இந்திய மக்களின் ரத்தத்தை ஈவு இரக்கமற்று உறிஞ்சி, அதை பெருமுதலாளிகளின் கல்லாப்பெட்டியில் பணமாக கொண்டுபோய் சேர்த்துள்ளார். இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் நாட்டின் மொத்த சொத்துக்களில் 77 சதவீதத்தை வைத்திருக்கின்றார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? அதிலும் வெறும் 9 கோடீஸ்வரர்கள் 50 சதவீத சொத்துக்களை அபகரித்து வைத்திருக்கின்றார்கள் என்றால் அதன் குரூர, கொடிய, மனிதாபிமானமற்ற கொள்ளையை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? அடிமட்டத்தில் உள்ள 60 சதவீத மக்கள் நாட்டின் மொத்த சொத்தில் வெறும் 4.8 சதவீதத்தை மட்டுமே கொண்டு உயிர்வாழ்ந்து வருகின்றார்கள் என்பதில் இருந்து, இந்திய மக்களை இந்த அரசு எவ்வளவு இழிவான வாழ்க்கை வாழ நிர்பந்தித்து இருக்கின்றது என்பதை உணர முடிகின்றதா?
ஆண்டுதோறும் உலக அளவில் பணக்காரர்கள்,ஏழைகளின் சொத்து மதிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டுவரும் ஆக்ஸ்பாம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில முக்கியமான தகவல்கள், இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த வருடம் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ 2,200 கோடி என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 325.20 பில்லியன் டாலராக இருந்த இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து கடந்த 2018 ஆம் ஆண்டு 440.10 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒரு சதவீதம் பேரின் சொத்துக்கள் மீது 0.5 சதவீத வரி விதித்தாலே நாட்டு மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்கான செலவை 50 சதவீதம் உயர்த்துவதற்கான நிதி கிடைக்கும். இந்தியாவில் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குள் இறக்கும் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியா 18 கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 119 பெரும் கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள், இவர்களின் சொத்து மதிப்பு மட்டும் 28 லட்சம் கோடியாகும். 2018-2019 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 24 லட்சத்து 42 ஆயிரம் கோடி என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் மோடி இந்த ஐந்து ஆண்டுகளில் யாருக்காக வேலை பார்த்திருக்கின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் 50 சதவீத சொத்துக்களை வைத்திருக்கும் அந்தக் குறிப்பிட்ட ஒன்பது நபர்கள்தான் இன்று மோடிக்கு மட்டுமல்லாமல் நாட்டில் சாதி ரீதியான, மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தி, மக்களின் கவனத்தை சிதறடித்து, மோடியின் துணையுடன் நாட்டைக் கொள்ளையடித்து சொத்து சேர்ப்பதை தடுக்க கலவரக் கும்பல்களுக்கு நிதியுதவியும் செய்பவர்கள். இவர்கள் கொடுக்கும் நிதி மூலம்தான் இத்தனை நாட்களாக இவ்வளவு பெரிய கொள்ளையில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலால் திசை திருப்ப முடிந்தது.
அம்பானி, அதானி, மிட்டல், திலீப் சங்வி, சிவ் நாடார், சைரஸ் பூனவாலா, அஜிம் பிரேம்ஜி, ஆர்ச்சார்யா பாலகிருஷ்ணா, உதய் கோடக், சாவித்ரி ஜின்டால் & குடும்பம் போன்ற இந்த பத்து குடும்பத்துக்காகத்தான் மோடி ஐந்த ஆண்டுகளில் ஓடி ஒடி உழைத்தார். இன்று அவர்கள் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 50 சதவீத சொத்துக்களை கொள்ளையடித்து தங்களது உடைமையாக மாற்றி வைத்திருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் மேல் மோடி வைத்திருக்கும் அன்பும், ஆதரவும்தான். இப்போது மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என சில விபச்சார ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிடுவதன் நோக்கம் இந்தியாவில் 77 சதவீத சொத்துக்களை வைத்துள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் தவிர, இன்னும் சாகாமல் அற்பத்தனமான வாழ்க்கை வாழ்ந்துவரும் கோடான கோடி இந்திய மக்களிடம் இருந்து அந்த 4.8 சதவீத சொத்துக்களையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை சாகடிக்கவே ஆகும். சாகடிப்பது எப்படி என்பதைப் பற்றி நாம் இந்தக் கைக்கூலி கும்பலுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?
அப்படி என்றால் இந்த ஐந்து ஆண்டுகளில் மோடி இந்தியாவுக்கு எதுவுமே செய்யவில்லையா எனக் கேட்டால் செய்திருக்கின்றார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ 54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்த இந்தியாவின் கடனை 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிய ரூ 82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக உயர்த்தி இருக்கின்றார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை 58 ரூபாயில் இருந்து 68 ரூபாயாக உயர்த்தியிருக்கின்றார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டின் வளர்ச்சியை 2 சதவீத அளவிற்குக் குறைந்திருக்கின்றார். முதலாளிகள் மீதான சொத்து வரியை ரத்து செய்திருக்கின்றார், ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்கு குறைவான விற்பனை மதிப்பு உள்ள கம்பெனிகளுக்கு கார்ப்ரேட் வருமான வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்து இருக்கின்றார். ஆண்டுக்கு மூன்று கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்னதற்கு மாறாக மொத்தமாகவே மூன்று ஆண்டுகளில் வெறும் 11 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கி இருக்கின்றார். ஆயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியுள்ளார், கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களை வேலையற்றவர்களாக அலைய விட்டிருக்கின்றார். சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டி இருக்கின்றார். இதற்கு எதிராக எல்லாம் போராடிய, நாடு முழுவதும் உள்ள இடதுசாரி அறிவு ஜீவிகள் பலரை வேட்டையாடியிருக்கின்றார், இன்னும் வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றார். இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாட்டை மோடி நாசம் செய்து இந்திய மக்களை சொந்த நாட்டுக்குள்ளேயே பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டார் என்பது எந்தளவு உண்மையோ, அதே அளவு உண்மை, உங்கள் பாக்கெட்டில் இருக்கும் கடைசி ஒரு ரூபாயையும் எடுத்து அந்த பத்துக் குடும்பங்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வரை மோடி தன்னுடைய ‘ஏழைத்தாய் மகன்’ வேசத்தை நிச்சயம் கலைக்கப் போவதில்லை என்பதும்.
- செ.கார்கி