பெரியாறு அணை 1895இல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த அணையின் மேல் விளிம்பு 155 வரை நீர் தேக்கினாலும் தாங்கக் கூடிய வகையில் வலுவாகக் கட்டப் பட்டது. எனினும் அதிக பட்சம் நீர்தேக்கும் அளவு 152 அடியாகத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி பயன் படுத்தப்பட்டு வந்தது. 
 இன்றைய தேதியில் முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப் படும் நீரின் மூலமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இரண்டரை இலட்சம் ஏக்கர் விவசாயம் நடை பெறுகிறது.

 இதன் மூலமாக பத்து இலட்சம் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

 தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங்களில் 60 இலட்சம் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்கிறது. ஆண்டுக்கு ரூ400 கோடிக்கு உணவு உற்பத்தி செய்யப் படுகிறது.

  முல்லைப் பெரியாறு அணை கட்டப் பட்டு அணை பயன் பாட்டுக்கு வந்து 85 ஆண்டுகள் வரை அதாவது 1979 வரை ஒரு சிக்கலும் இல்லை. இதில் ஒன்றிரண்டு ஆண்டுகள் அணையின் நீர் 155 அடியாக அணையின் விளிம்பையும் தாண்டி மறுபக்கம் வழிந் தோடியுள்ளது. அதனால் அணைக்கு எந்தச் சேதமும் இல்லை.

 இதற்கிடையில் கேரள அரசு முல்லைப் பெரியாற்றில் இந்த அணைக்குக் கீழே 50 கி.மீ தொலைவில் 1976 ஆம் ஆண்டு இடுக்கி அணையைக் கட்டியது. இடுக்கி அணை கேரளாவின் மின் உற்பத்திக்காக கட்டப்பட்ட அணை. முல்லைப் பெரியாறு அணையைப் போன்று 10 மடங்கு பெரியது.

 இந்த அணைக்கு அவர்கள் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை. எனவே முல்லைப் பெரியாறு அணை அவர்கள் கண்ணை உறுத்தத் தொடங்கிற்று.

 இதன் தொடர்ச்சியாக 1979 இல் இப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாகப் புரளி கிளப்பி அணை வலுவிழந்து விட்டதாகக் கூறி அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்து விட்டனர். 136 அடி மட்டத்திற்கு மேல் வரும் நீர் அணையின் மதகு வழியாக வழிந்தோடி இடுக்கி அணையை அடைந்து விடும். நடுவண் நீர் வள ஆணையத்தின் (இஞுணtணூச்டூ ஙிச்tஞுணூ இணிட்ட்டிண்ண்டிணிண) பரிந்துரைப்படி கேரள அரசின் ஒப்புதலுடன் தமிழக அரசுப் பொதுப் பணித்துறை மூலமாக 1981இல் தொடங்கி 1994 வரை 3 கட்டமாக ரூ18 கோடியில் அணையை வலுப்படுத்துவதற்குக் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன.

 சில சில்லரைப் பணிகளை முடிக்கவிடாது கேரள வனத்துறை தடுத்து ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப் பணித்துறைப் பொறியாளர்கள் மீது பீர்மேடு காவல் நிலையத்தில் பொய் வழக்குத் தொடுத்தனர். (இவ்வழக்கு அண்மையில்தான் தள்ளுபடி செய்யப்பட்டது).

 இந்தச் சில்லரைப் பணிகளால் அணையின் வலு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. ஆனால் இதனைக் காரணம் காட்டி அணையின் நீர் மட்டத்தை மறுபடியும் 152 அடியாக நிலை நிறுத்த மறுத்தது கேரள அரசு. இதனடிப்படையில் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் நீதி மன்றத்தை நாடியது. பின்னர் தமிழக அரசு தன்னையும் வழக்கில் இணைத்துக் கொண்டது.

 இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் 6 ஆண்டுகள் நடந்தது. பின்பு உச்ச நீதி மன்றம் அமர்த்திய வல்லுனர் குழு (தொழில் நுட்ப வல்லுனர்கள்) அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2006 பிப்ரவரி 27ஆம் நாள் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் எஞ்சியுள்ள சில்லறைப் பணிகளை (சிற்றணையை வலுப்படுத்துதல்) முடித்த பின்பு, முன்பு போல், 152 அடியாக நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வந்த இரண்டாவது சோதனை:

 உச்சநீதிமன்றத் தீர்ப்பு தனக்கு சாதகமாக இல்லை என்றதுமே கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்கெனவே 2003இல் போடப்பட்ட “கேரள நீர்ப்பாசன மற்றும் அணைப் பாதுகாப்புச் சட்டத்தில்” ஒரு திருத்தம் கொண்டு வந்து கேரள சட்டமன்றத்தில் முன் மொழிந்தது. சி.பி.எம். தலைவர் அச்சுதானந்தன் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி, மிகுந்த ஆரவாரத்துடன் அதனை ஆதரித்து கேரளச் சட்ட மன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் முழு ஆதரவுடன் 15.03.2006இல் அது நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது.

 திருத்தப் பட்ட இச் சட்டத்தின்படி கேரளாவில் உள்ள 22 அணைகளின் முழுக் கொள்ளளவு மட்டத்தை வரையறுப்பதற்கு கேரள அரசிற்குத்தான் முழு அதிகாரம். இதில் மற்ற எந்த அரசும் (இந்திய அரசு உட்பட) மற்றும் நீதி மன்றங்களின் ஆணையும் (உச்சநீதி மன்றத் தீர்ப்பு உட்பட) குறுக்கிட முடியாது. இதன்படி கேரளாவில் உள்ள 22 அணைகளில் முதலாவது அணை முல்லைப் பெரியாறு அணை எனவும், அதன் அதிகபட்ச நீர் மட்டம் 136 அடி எனவும் சட்டப்பதிவு செய்தது. இவ்வாறாக உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பைக் கேரள அரசு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.

 கேரள அரசின் முறை கேடான சட்டத்தை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தை அணுகியது. அதனடிப்படையில் தற்சமயம் உச்சநீதி மன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவினை அமைத்து அணையின் வலுவை ஆராய்ந்து கொண்டி ருக்கிறது.

 ஐவர் குழுவில் பெரும்பாலோர் முன்னாள் நீதிபதிகள்தாம். ஒருவரும் தொழில் நுட்ப வல்லுநர் இல்லை. இரண்டு பக்கமிருந்தும் அணையின் வலு குறித்த அறிக்கைகள் பெறப்பட்டு ஐவர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் ஒரு சராசரி அறிவுள்ள மனிதனுக்கு ஏற்படும் ஐயங்கள்:

1. உச்சநீதி மன்றம் 27.2.2006ல் வழங்கிய தீர்ப்பிற்கு உயிர் உள்ளதா? இல்லையா?

2. மேற்கண்ட தீர்ப்பு உச்சநீதி மன்றம் நியமித்த தொழில் நுட்ப வல்லுனர் அளித்த அறிக்கையின் படி வழங்கப்பட்டது. இப்பொழுது மறுபடியும் ஒரு குழு அமைத்து அணையின் வலு குறித்து ஆராய்ச்சி நடத்துவது என்றால் தான் முன்னர் அமைத்த வல்லுனர் குழுவை உச்சநீதி மன்றமே தள்ளுபடி செய்து விட்டதா?

3. கேரள அரசு தனிக் குடியரசாகி விட்டதா? உச்ச நீதி மன்றத்தையோ, இந்திய அரசையோ மதிக்கத் தேவையில்லையா?

4. கேரள அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா?

 மேற்கண்ட வினாக்களுக்கு உச்சநீதி மன்றம்தான் விடை காண வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் வலு குறித்து கேரளம் கூறும் வல்லடி வழக்கிற்கு நிரந்தரமாக முடிவு கட்ட நடை முறையில் அணையில் ஒரு பரிசோதனை செய்து பாரர்க்கலாம்.

நடைமுறைச் சோதனை

 முல்லைப் பெரியாறு அணைக்கு ஆண்டில் குறைந்தது 10 மாதங்கள் நீர் வரத்து உண்டு. எனவே இந்த சோதனையை இந்த 10 மாதங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் செய்து பார்க்க முடியும்.

 அணைக்கு வரும் நீர்வரத்தில், அணையிலிருந்து எடுக்கப்படும் நீரினை தேக்கடி மதகு மூலமாகக் கட்டுப் படுத்தி அணையின் நீர் மட்டத்தை ஒரு நாளைக்கு அரை அடி வீதம் உயர்த்தலாம். அணையின் வடிகால் வழிப் பாதையில் நவீன தொழில் நுட்பக் கருவிகளை தேவையான இடங்களில் பொருத்தி அணையின் நீர் அழுத்தத்தால் அணையில் ஏற்படும் தகைவினை அளவிட முடியும். இந்த அணைக் கட்டுமானம் தாங்கக் கூடிய தகைவு, தொழில் நுட்ப வல்லுனர்களுக்குத் தெரியும். தகைவு மானி பாதுகாப்பான தகைவு அளவினை எட்டும்போது சோதனையை முடித்துக் கொண்டு அந்த நீர் மட்டத்தை அணையின் நீர் மட்டமாக முடிவு செய்யலாம். இந்த ஆய்வினை (கேரளா, தமிழகத்தைச் சாராத) நடுவண் நீர்வள ஆணையப் பொறியாளர்களைக் கொண்டு எளிதாகச் செய்ய முடியும்.

 அணையின் வலு குறித்த அனைத்து வாதங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்க இந்த நடைமுறை ஆய்வு ஒன்றே வழி.  

 இதனைத் தமிழக அரசு நீதியரசர் ஆனந்த் தலைமையிலான குழுவிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத் தொழில் நுட்ப வல்லுனர்களைப் பொறுத்தவரை, அணையில் 155 அடி வரை நீரைத் தேக்கினாலும் அணை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்ற உண்மை நிலையில் உள்ளனர்.

அணைக்கு வந்த மூன்றாவது சோதனை :

 கேரளாவின் அடாவடித் தனத்தால் 1979 ஆம் ஆண்டிலிருந்து அணையின் நீர் மட்டம் 152 அடியிலிந்து 136 அடியாகக் குறைக்கப் பட்ட பின்பும் இந்த 30 ஆண்டுகளில் கேரள அரசு எதிர் பார்த்த அளவு நீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு மிகுதியாக வழிந்தோடி வரவில்லை.

 எனவே அச்சுதானந்தன் தலைமையிலான இடது சாரிக் கூட்டணி அரசு முல்லைப் பெரியாறு அணையை அழித்து விட்டு அனைத்து நீரையும் எடுத்துச் செல்ல திட்டமிட்டு புதிய அணை கட்டும் முயற்சியில் உள்ளது.

 உச்சநீதி மன்றம் அமைத் துள்ள குழு ஒரு பக்கம் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் கேரள அரசு புதிய அணை கட்டும் பணியில் இறங்கிவிட்டது.

 முதல் கட்டமாக மண் பரிசோதனை 3 இடங்களில் நடத்தி தற்சமயம் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே 350 மீட்டரில் இடத் தேர்வு செய்துள்ளது.

 இந்த அணையின் உயரம் 140 அடியாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று (தினமணி, நாள் 16.09.2010) கூறப் படுகிறது. இப்பொழுது உள்ள அணையில் 100 அடி வரை உள்ள நீரை தமிழகப் பயன்பாட்டுக்கு எடுக்க முடியாது

 தற்போது திட்டமிட்டுள்ள அணை இன்னும் 100 அடி பள்ளத்தில் கட்டப்படும் பொழுது தமிழ கத்திற்குத் தண்ணீர் எடுக்கக் கூடிய வாய்ப்பே இல்லை.

 கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேம சந்திரன் மனச்சாட்சி சிறிது உறுத்தியதோ என்னவோ புதிய அணை கட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் தருவோம் என்று பொய் கூறுவதை நிறுத்தியுள்ளார்.

 கேரள அரசு அணை கட்டத் தேர்வு செய்துள்ள இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கு ஒரு மரத்தை வெட்டுவதற்குக் கூட உச்சநீதி மன்ற அனுமதி வேண்டும் என்று இந்திய அரசின் வனப்பாதுகாப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால் இப்பகுதியில் கேரள நீர்ப்பாசனத் துறை மரங்களை வெட்டி கள ஆய்வும் நிலத்தில் ஆழ் துளையிட்டு மண் பரிசோதனையும் செய்துள்ளது.

 கேரள அரசை இந்திய அரசின் எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாதா?

 உலகம் முழுவதுமுள்ள பாட்டாளி வர்க்கத்தினை ஒன்றிணைக்கும் “சமாதான, சகோதரத்துவ சகவாழ்வே” பொதுவுடைமை சித்தாந்தம் என வாய்கிழியப் பேசும் இயக்கத்தைச் சார்ந்த தோழர் அச்சுதானந்தன் அண்டை மாநில உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலை முதலில் நிறுத்தட்டும். மாறாக அடாவடிதான் “தோழர்களின்” வழி எனக் கேரள அரசு தொடருமானால் அவர்களை வழிக்குக் கொண்டுவர எளிய வழி முறை ஒன்றுள்ளது.

 தமிழகத்திலிருந்து கேரளாவிற்குத் திருட்டுத்தனமாகக் கடத்தப்படும் ஞாய விலைக்கடை அரிசியையும் திருட்டு மணலையும் தடுத்தாலே போதும்.

....

ஐவர் குழுவிலிருந்து தமிழகம் வெளியேற வேண்டும்

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதி மன்றம் அணையின் வலிமையை ஆராயப் புதிதாக ஐவர் குழு அமைத்தது. இது 2006 பிப்ரவரி 27 உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு எதிரானது என்றும், கேரளத்துக் கோரிக்கையை ஒருதலைச் சார்பாக ஏற்றுக் கொண்டது ஆகும் என்றும் அக்குழுவிற்குத் தமிழக அரசு தனது பிரதிநிதியை அனுப்பக் கூடாது என்றும் த.தே.பொ.க. கூறியது.

 இப்பொழுது ஐவர் குழு அமைக்கப்பட்டதன் தீய விளைவுகள் தெரியத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே கேரள அரசு தன்னிச்சையாகத் தமிழகத்தின் பங்கேற்பு இல்லாமல் ரூர்க்கி ஐ.ஐ.டி. யைச் சேர்ந்தோரைக் கொண்டு ஒரு வல்லுநர் குழு அமைத்து அணையின் வலிமையை ஆராயச் செய்தது. அக்குழு நில நடுக்கம் வந்தால் அணை உடைந்து விடும் என்றும் அணை பலவீனமாக உள்ளதென்றும் தவறான அறிக்கை கொடுத்தது.

இப்பொழுது அந்த ரூர்க்கி அறிக்கையை ஏற்குமாறு ஐவர் குழுவைக் கேரளம் வலியுறுத்தி வருகிறது. இந்தக் கட்டத்திலாவது தமிழக அரசு ஐவர் குழுவிலிருந்து வெளியேற வேண்டும்.

 - த.தே.பொ.க. 

Pin It