illam thedi kalviதமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம் ‘இல்லம் தேடிக் கல்வி'. இதன் திட்ட இயக்குனர் மாநில அளவில் நடக்கும் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாட்டுக்கான பயிற்சியாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பொதுப் பள்ளிகளில் சமூகப் பங்கேற்பை உறுதி செய்வதைப் பற்றி கருத்துரையாற்றுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். நல்ல வாய்ப்பு விட்டு விடக் கூடாது என்று, அன்று எனக்கு வேறு ஒரு வேலை இருந்தும், அதனைத் தள்ளி வைத்துவிட்டு நவம்பர் 19ஆம் தேதி முசிறிக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் கொங்கு நாடு பொறியியற் கல்லூரிக்குச் சென்று சேர்ந்தேன். அங்கு பொதுப்பள்ளி பாதுகாப்புக்கும், குழந்தைகள் நலனுக்கும் செயல்பட்டு வரும் களச் செயல்பாட்டாளர்களைச் சந்திக்கும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் சற்றுநேரம் உரையாடியதில் நம் பொதுப்பள்ளிக் குழந்தைகள் எந்தச் சூழலில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதை யூகிக்க முடிந்தது.

ஒரு சிறிய அறிமுகத்துடன் அந்த நிகழ்வு தொடங்கியது. அந்த நிகழ்வில் என்னுடைய உரை முதலாவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு ‘பொதுப்பள்ளிக்கூடச் செயல்பாடுகளில் சமூகப் பங்களிப்பு'. இந்த இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டம் எப்போது வெற்றிபெறும் என்றால் இதனைச் சமூகம் பிடித்துக் கொண்டு தன் பங்கினை முழுமையாக புரிதலுடன் ஆற்றினால் மட்டுமேதான். இதனைப் புரிந்த காரணத்தினால் பங்கேற்பு ஜனநாயகம் பற்றி 25 ஆண்டு காலமாக பொதுவெளியில் விவாதித்துக் கொண்டேயிருக்கும் என்னை அழைத்தார்கள். இதற்கு ஒரு சமூகத் திரட்டு தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல ஏழை எளிய மக்களின் மேம்பாட்டை உறுதி செய்ய பங்களிப்பு என்பது அத்தியாவசியமாகிறது. சமூகப் பங்களிப்பு என்பதனைப் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்தி விட்டால், மிகப் பெரிய சமூக மாற்றம் ஏற்பட்டுவிடும். அது ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இன்று அதிகாரத்தைச் சுவைப்பவர்கள்.

இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த புதிய உள்ளாட்சி அமைப்புக்களை பங்கேற்பு ஜனநாயகமாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் அதனை வடிவமைத்தவர்கள் தலைவர் கையில் அதிகாரத்தைக் கொடுக்காமல் கிராம சபையில் அதிகாரத்தைக் கொடுத்து, கிராமசபை எடுக்கின்ற முடிவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை கிராம ஊராட்சி மன்றத்திற்குத் தந்துள்ளனர். அது மட்டுமல்ல அந்த நிர்வாகத்தையும் அந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அந்த அவையைத் தாண்டி ஐந்து நிலைக் குழுக்களை உருவாக்கி ஒரு கூட்டுத் தலைமையில் மக்கள் செயல்பாடாகக் கொண்டு வர வடிவமைத்தனர் நம் ஊரக உள்ளாட்சியை.

இன்றைய ஊராட்சி என்பது தலைவரை மையப்படுத்தியது அல்ல மக்களை மையப்படுத்தியது. மக்களை மையப்படுத்தி வடிவமைத்ததற்குக் காரணம், ஒரு பங்கேற்பு ஜனநாயகத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணிய காரணத்தால். பங்கேற்பு ஜனநாயகம்தான் ஏழை எளிய மக்களைப் பாதுகாக்கும் அரண். பிரநிதித்துவ ஜனநாயகம் என்பது இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் நடைபெற்று வருபவைதான். இன்று உலகம் முழுவதும் இந்த மக்களாட்சி தேக்க நிலையை அடைந்திருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் இந்த மக்களாட்சி முறையை கைக்கொள்ளத் தேவையான புரிதலும், ஆற்றலும், தெளிவும் சாதாரண குடிமக்களிடம் வளர்த்தெடுக்கப்படவில்லை. அது மட்டுமல்ல பொதுமக்கள் அரசாங்கத்தை கண்காணிக்கவும் தவறி விட்டார்கள், இந்த மக்களாட்சியை பங்கேற்பு மக்களாட்சியாக மாற்றி விட்டால் மக்களுக்குப் பக்கத்தில் அரசு செயல்படும். அரசின் மேல் மக்களுக்கு உள்ள பயம் போய்விடும். அரசு என்ன செய்கின்றது என்பதை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நம் போன்ற நாடுகளில் ஒரு போராட்டத்திற்குப் பின்தான் இது செயல்படும். ஏனென்றால் நம் சமூகம் ஏதாவது ஒரு வகையில் ஆதிக்க மனோபாவத்தில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால். ஆதிக்க மனோபாவம் செயல்படும் இடத்தில் பங்கேற்பு ஜனநாயகம் என்பது பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டும். அப்பொழுதுதான் அதன் முழுப் பயனைப் பெறமுடியும்.

நாம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் இந்த இடத்தில். விவாத ஜனநாயகத்தை முன்னெடுத்த சாக்ரடீசுக்கு கிடைத்த பரிசு மரண தண்டனை. கேள்வி கேள் என்றதுதான் அவர் செய்த மாபெரும் தவறு. அதேபோல்தான் பங்கேற்பு ஜனநாயகத்தை கருத்தியலில் முன்னெடுக்கத்தக்கதாகவே ரூசோ என்ற சிந்தனையாளனை தூக்கிலிடப்பட வேண்டும் என்றனர் அன்றைய ஆட்சியாளர்கள். இந்த விவாத ஜனநாயகமும் பங்கேற்பு ஜனநாயகமும் அதிகாரத்தில் இருப்போரை அசைத்து ஆட்டி கீழே தள்ளும் தன்மை கொண்டது. ஆகையால்தான் சட்டம் என்ன சொன்னாலும், அதிகாரத்தை வைத்திருப்போர் தங்கள் போடுகின்ற மற்றும் வடிவமைக்கின்ற தந்திரத் திட்டத்தின் மூலம் அந்த அமைப்புக்களை வலுவிழக்கச் செய்து விடுகின்றனர்.

அரசியல் சாசனத்திலிருந்து, ஏழைகளை, ஒடுக்கப்பட்டவர்களை, விளிம்புநிலை மக்களை, சிறுபான்மையினரைக் காக்க இயற்றப்பட்ட 200க்கும் மேற்பட்ட சட்டங்கள், புதிய உள்ளாட்சி அரசாங்கத்திற்கான அரசியல் சாசன திருத்தச் சட்டங்கள், மேம்பாட்டு உரிமைகளுக்கான சட்டங்கள் என, ஏழை எளிய மக்களின் ஆயுதமாக உருவாக்கப்ப்டடு அவைகள் துருப்பிடித்த வண்ணம் இருக்கின்றன. காரணம் இவைகள் அனைத்தும் யாருக்காக உருவாக்கப்பட்டதோ அவர்களுடைய கண்ணில் படாமலும், அவர்களுக்கு இவை பற்றிய புரிதலும் பார்வையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர் அதிகாரத்திலிருப்போர் அல்லது அதிகாரத்தைச் சுவைப்போர். எனவே இந்த அதிகாரப் பரவலை, ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் சென்று எங்கெல்லாம் இதற்கு எதிர்மறைக் கட்டமைப்புகள் உள்ளனவோ அவைகள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.

அடுத்த ஒரு புரிதல் அனைவருக்கும் வேண்டும். நம் அரசியல் தளத்தில் எது விவாதமாக்கப்படுகின்றது என்றால் மக்களுக்கு அரசு தரும் பயன்கள் மட்டுமே. அரசு செய்ய வேண்டிய சேவைகளை முறையுடன் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அரசின் பயன்கள் தொடர் விவாதத்தில் வைத்திருக்கும்போது, பொதுமக்களின் சிந்தனை பயன்களை நோக்கியதாக இருக்குமேயன்றி, அரசியல் சாசனம் தந்திருக்கின்ற உரிமைகளைப் பெறுவது பற்றிய விவாதம் இருக்காது. இந்த உரிமைகள் சார்ந்து செயல்பட வேண்டும் என்றால் பொதுமக்கள் குடிமக்களாக பொறுப்புடன், கட்டுப்பாடுடன், செயல்படும் நிலைக்கு மன ஓட்டத்தில் தயார் செய்திடல் வேண்டும். அது ஒரு சுதந்திரப் போராட்ட மக்கள் இயக்கச் செயல்பாடு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தச் சூழல் மாற அமைச்சர்களிடம் மனுக் கொடுத்து நடைபெறுவது அல்ல. இது நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்குப்பின் நடைபெறும் நிகழ்வாகும். இதனை யார் நிகழ்த்த வேண்டும் என்றால் பொது நிறுவனங்களால் பயன் பெரும் குடும்பங்கள் இதைச் செய்தாக வேண்டும். இது கேரளத்தில் நடைபெறுகிறது. ஏன் இங்கு நடைபெறவில்லை. பொதுப்பள்ளி இன்று யாருக்கானதாக இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம் யாருக்கானதாக இருக்கிறது, ஏழைகளுக்கானது. இவைகளை ஏழைகளாகிய நாம்தான் சரி செய்ய வேண்டும். அதற்கான இடம் எங்கே இருக்கிறது என்றால், அது பஞ்சாயத்துக்களில் இயங்கும் நிலைக் குழுக்களில். அத்துடன் கிராம சபையில் பங்கேற்பதன் மூலம் இதனைச் செய்திட முடியும்.

எனவே நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைத்து அவர்கள் வாழ்வில் மேம்பட வேண்டுமென்றால் முதலில் அரசுப் பள்ளிக்கூடங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு கல்விக்குழுவும், பள்ளி மேலாண்மைக் குழுவும் செயல்பட்டாக வேண்டும். இதைப் பற்றிய விவாதத்தை கிராம சபையில் உருவாக்க வேண்டும். அதேபோல் ஏழை வளர் இளம் பெண்கள் ரத்த சோகை பாதிக்காமல் இருந்தால் மட்டுமே ஏழைகள் வீட்டில் வளமான, நலமான குழந்தைகள் பெற்றெடுக்க முடியும். அப்படி அந்த வளர் இளம் பெண்களை பாதுகாக்கவில்லை என்றால் திருமணத்திற்குப் பின் நலிந்த குழந்தையைத்தான் அவர்கள் பெற்றுத் தருவார்கள். அந்தக் குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்து இன்றி நலிவுறும். எனவே அந்தக் குழந்தைகளின் ஆரோக்யம் மட்டுமல்ல எதிர்கால வாழ்வே பிரகாசமாக இல்லாமல் போய்விடும் என்ற புரிதலை கிராமசபையில் ஏழைகளுக்கு உருவாக்க வேண்டும்.

எனவே இன்று இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மக்களை இணைப்பதற்கான வழிமுறை கிராமசபையில் பொது மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு விழிப்புணர்வையும், தன்னார்வலர்களிடத்தில் உணர்வையும் உருவாக்கி, கிராமத்தில் உள்ள நிலைக்குழுக்கள் அனைத்தையும் உருவாக்கப் பணித்து கிராமப் பஞ்சாயத்தை ஒரு மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே இவைகள் அனைத்தும் சாத்தியப்படும். இன்று தமிழக அரசு எல்லாக் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் இந்த நிலைக்குழுக்களை உருவாக்க ஆணையிடப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களை உருவாக்குவதுடன் அவைகளை செயல்பட வைக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்தத் திட்டத்தை மக்கள் கையில் திணிக்க வேண்டுமெனில் கிராமப் பஞ்சாயத்தில் உள்ள மூன்று குழுக்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உறுப்பினராக சேர்ந்து அந்தக் குழுக்களை துடிப்புமிக்கதாக இயக்க வேண்டும். அது மட்டுமல்ல அந்தக் கிராமப் பஞ்சாயத்துக் குழுக்களில் இன்னும் பல துணைக் குழுக்களை உருவாக்கிக் கொண்டு செயல்படலாம். இந்தத் திட்டத்திற்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்குச் செயல்பட முடியும். அதில் கல்வி மேம்பாடு என்பது ஒரு அம்சம். இந்தச் செயல்பாடுகளுக்கு நமது பல்கலைக் கழகங்கள், நமது கல்லூரிகள் பஞ்சாயத்துக்களுடன் இணைந்து இந்தத் திட்டச் செயல்பாடுகளுக்கு உதவிடமுடியும். அதற்கு அவர்களுக்குக் கிடைத்த உன்னத் பாரத் அபியான் 2.0 என்ற திட்டத்தினை பயன்படுத்தி கிராமப் பள்ளிக்கூடங்களில் உருவாக்க வேண்டிய பள்ளி மேலாண்மைக் குழுவை உருவாக்கி அதை செயல்பட வைக்க வேண்டும். இதற்கு நாம் ஒரு புரிதலை பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் ஏற்படுத்தி, அந்தக் குழுவில் உறுப்பினராக எப்படிச் செயல்படுவது என்பதை புரிய வைக்க வேண்டும்.

கிராமசபையை வலுவாக்குவதற்கு செயல்படுவதும், கிராமப் பஞ்சாயத்தில் உள்ள நிலைக்குழுக்களை உருவாக்கி செயல்பட வைப்பதும் ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. கிராமப் பஞ்சாயத்தைப் பற்றிய விசாலமான புரிதல் வந்துவிட்டால் பஞ்சாயத்தை தலைவர் தன் கைக்குள் பஞ்சாயத்து நிர்வாகத்தை வைத்திருக்க மாட்டார். சட்டமும், அரசு ஆணைகளும் என்ன கூறுகின்றதோ அதன்படி நிலைக் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து தொடர்ந்து செயல்பட தலைவர் முனைந்து செயல்பட வேண்டும். சற்று ஒரு படி மேலே சென்று கிராமசபையில் முதலில் மக்களுக்கு இதன் வலிமை என்ன, இதன் மூலம் என்னவெல்லாம் கிராமத்திற்கு நாம் சேவை செய்திடலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, கிராமசபையை சடங்காக ஆக்காமல் உயிரோட்டமுள்ள மக்கள் சபையாக மாற்றினால் கிராமம் சிறிது சிறிதாக மக்கள் கைக்கு வந்துவிடும்.

அந்தச் செயல்பாடுகள் வந்துவிட்டால் மக்களும் பள்ளிக்கூடம் எங்களது என்பார்கள், சாலை எங்களுடையது என்பார்கள், சத்துணவுக் கூடம் எங்களுடையது என்பார்கள், விளையாட்டுத் திடல் எங்களுடையது என்பார்கள். இதுபோல் அனைத்து சொத்துக்களையும் எங்கள் ஊர் சொத்து என்று கூறுவது மட்டுமல்ல, எப்படிக் கோவிலைப் பாதுகாக்கின்றார்களோ அப்படிப் பாதுகாப்பார்கள். அது மட்டுமல்ல எல்லாப் பொதுச் சொத்துக்களையும் தங்கள் சொத்துக்கள்போல் பாதுகாக்க ஆரம்பிப்பது மட்டுமல்ல, பாதுகாத்துப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அப்படிப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது புதிய அணுகுமுறைகளை உருவாக்கி சட்டம் எதிர்பார்க்காத விளைவுகளையெல்லாம் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஒரு கிராமப் பஞ்சாயத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அந்தப் பஞ்சாயத்திற்கு ஊக்கத்தொகையாக ஒரு குறிப்பிட்ட நிதியைத் தந்து அதை எதற்குச் செலவிடப் போகிறீர்கள் என்று நிதியைத் தந்த நிறுவனம் கேட்டது, அதற்கு பஞ்சாயத்துத் தலைவர் சமுதாயக் கூடத்திற்குப் பக்கத்தில் கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டனர், அப்படிக் கட்டிவிட்டால், இந்த சமுதாயக் கூடத்தை ஏழை எளிய மக்களின் குடும்ப சுப நிகழ்வுகளை அங்கு நடத்த அனுமதித்து அதன் மூலம் பஞ்சாயத்துக்கு வருமானம் ஈட்டிவிடுவேன் என்றார். அதேபோல் அந்த நிறுவனம் தந்த நிதியைப் பயன்படுத்தி கழிப்பறைகளைக் கட்டி, திருமணங்கள், மற்றும் எல்லா சுப நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ளுங்கள் என்று மக்களை அனுமதித்து அதற்கான கட்டணத்தையும் கிராமசபை ஒப்புதல் மூலம் நிர்ணயித்து விட்டார். அத்துடன் அவர் நிற்கவில்லை, ஒரு பல்கலைக் கழக மாணவர்கள் அந்தக் கிராமத்திற்கு வந்தபோது அவர்களை அந்த சமுதாயக் கூடத்தில் தங்க வைத்து அந்த மாணவர்கள் காலையிலும் மாலையிலும் சரீரதானம் செய்து உடல் உழைப்பின் மேன்மையை புரிந்து கொள்வதற்கு செயல்படுவார்கள். அதைப் பயன்படுத்தி ஊரில் உள்ள இளைஞர்களைத் திரட்டி அந்தப் பஞ்சாயத்திற்குச் சொந்தமாகக் கிடந்த நிலங்களை சுத்தப்படுத்தி தென்னங்கன்றையும், தேக்கு மரக் கன்றுகளையும் நட்டு வளர்க்க ஆரம்பித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தென்னை மரம் காய்க்க ஆரம்பித்த பின் குத்தகைக்கு விட்டு பஞ்சாயத்துக்கு வருமானம் சேர்த்தார்.

கல்லூரி மாணவர்கள் தங்கள் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் அவர்களை தங்கள் கிராமத்தின் மேம்பாட்டுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்தப் பஞ்சாயத்துத் தலைவர் திட்டம் போடுவார். மாணவர்கள் அந்தக் கிராமத்திற்கு வருவதற்கு முன்பே அந்த பல்கலைக் கழகத் துறைக்கு அவர் சென்று அந்தக் கிராமத்தில் மாணவர்கள் என்னென்ன பணிகளை மாணவர்களின் கற்றலுக்காகச் செய்ய முடியும் என்று கூறுவார். அப்படி கல்லூரிக்கு பயிற்சிக் கூடமாகவே அந்த கிராமத்தை மாற்றி விட்டார். இரண்டு முறை தலைவராக இருந்து பல்வேறு விருதுகளை அந்தப் பஞ்சாயத்துக்குப் பெற்றுத் தந்தார்.

இந்த வாய்ப்பு எனக்கு மக்கள் அளித்தது, எனவே மக்களுக்காக உழைப்பதுதான் சுதர்மம். நான் ஏழையாக இருக்கலாம் அது ஒன்றும் குற்றமில்லை. ஏழையாக வாழ்வது ஒன்றும் அவமானமில்லை. ஆனால் என் ஏழ்மையை விரட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுப் பொதுப்பணிகளில் காசு பார்ப்போமேயானால் அதைவிட ஒரு கொடிய செயல் இருக்க முடியாது என்று கூறி ஒரு குட்டிக் காமராசராக அந்தத் தலைவர் மக்களிடம் அன்பைப் பெற்றார். எனவே கிராமத்தை என்று மக்களிடம் கொண்டு வந்து நமது கிராமமாக ஆக்க வேண்டும் என்று எண்ணுகிறோமா அன்றுதான் கிராமங்கள் விடுதலை அடையும். இல்லை என்றால் பொதுமக்கள் அரசுத் துறைகளின் பயன்களைப் பெற்றிடும் பயனாளிப் பட்டாளங்கள் வாழுமிடமாகத்தான் கிராமங்கள் இருக்கும். இங்குதான் ஒரு கேள்விக்கு விடை தேட வேண்டும். கிராமங்களை உரிமைகள் பெற்ற மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்ந்திடும் குடிமக்கள் வாழும் இடமாக மாற்றப்போகிறோமா அல்லது பயனாளிப் பட்டாளம் வாடும் இடமாக வைத்துக்கொள்ளப் போகிறோமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். இதைத்தான் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும் உபதலைவரும், வார்டு உறுப்பினர்களும் முடிவு செய்ய வேண்டும்.

கிராமம் நமதே என்றால் கிராமப் பஞ்சாயத்து மக்கள் பஞ்சாயத்தாக மாற வேண்டும். மக்கள் பஞ்சாயத்தாக மாற கிராமசபையை வலுவாக்க வேண்டும், கிராமப் பஞ்சாயத்தில் உருவாக்க வேண்டிய நிலைக் குழுக்களை உருவாக்க வேண்டும். இந்த அமைப்புக்களை உயிர்ப்பித்து செயல்பட வைக்க வேண்டும். வலுப்பெற்ற கிராமசபையும், வலுப்பெற்ற நிலைக்குழுக்களும், பெருங்கூட்டமாக கூடும் கிராமசபையும்தான் பஞ்சாயத்துக்களை மக்கள் நிறுவனமாக மாற்றும். இந்த அணுகுமுறைதான் இன்று நமக்குத் தேவைப்படும் ஒன்றாகும். இந்த நிலை வரும்போது கல்வி மட்டுமல்ல அனைத்து அமைப்புகளும் முறையுடன் பணி செய்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்.

- க.பழனித்துரை

Pin It