உலகெங்கும் மீயுயர் சொத்து மதிப்பு கொண்ட நபர்களின் எண்ணிக்கை(3 கோடி அமெரிக்க டாலருக்கு மேல்) 2020 முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் 27 சதவீதம் அதிகரிக்கும் என்றும் ஆனால் இந்தியாவில் அதி உயர் சொத்து மதிப்பு கொண்ட நபர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 63 சதவீதம் உயர்ந்து 11,198 ஆக அதிகரிக்கும் என நைட் ஃபிராங்க் இந்தியா என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார சமமின்மையையே இது வெளிப்படுத்துகிறது.

ஐக்கிய முடியரசின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உபெர் தொழில்நுட்ப நிறுவனம், அதன் ஓட்டுநர்களை "தொழிலாளர்களாக" கருத வேண்டும் என்றும் அவர்களுக்கு விடுமுறை ஊதியம், ஓய்வு இடைவெளி, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதன் பிறகு, சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பானது இணைய தொழில் நுட்பங்களால் ஊழியர்களுக்கும், சுயதொழில் முனைவோருக்குமான வேறுபாடு மழுங்கடிக்கப் பட்டுள்ளதாகவும், தொழிலாளர் நலன்களை உறுதிசெய்யும் வகையில் முறைசாரா பொருளாதாரத்தை ஒழுங்குமுறை செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்தியாவில் பாஜக ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு தொழிலாளர்களையும், விவசாயிகளையும் சட்டப் பூர்வமாக ஒடுக்குமுறை செய்யும் படுபிற்போக்கான நிலை தான் உள்ளது.

உலகிலே இந்தியத் தொழிலாளர்கள் மிக நீண்ட நேர உழைப்பில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள் என்றும் உலகளாவிய ஊதிய அறிக்கையின்படி, சில சஹாராவின் கீழுள்ள ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர, இந்தியாவின் குறைந்தபட்ச ஊதியம் உலகிலேயே மிகக் குறைவாக உள்ளதாக சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏழைகளின் எரிபொருள் மண்ணெண்ணெய் மீதான மானியத்தை பாஜக அரசு நீக்கியுள்ளது, பொது விநியோக முறையிலும் சந்தை விலையிலே வழங்கப்படுகிறது. சமையல் எரிவாயு உருளையின் விலை 200ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.பெட்ரோலின் விலை பல இடங்களில் 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன, அரசின் கையில் ஒன்றுமே இல்லை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இப்போதைய எரிபொருள் விலை உயர்வுக்கு தமிழக அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு 2020-21 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டதை விட 80 விழுக்காடு அதிகமாக ரூ .2.3 லட்சம் கோடி வருவாயை பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி மூலம் திரட்டியுள்ளது. எரிபொருள் விலையை நியாயமான அளவில் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளை குறைக்கவேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர், பெரும் எண்ணிக்கையில் சிறுகுறு, நடுத்தர தொழிலகங்கள் பல மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு துரும்பை கூட நகர்த்தாத பாஜக அரசின் நிதியமைச்சர் இது ஏழைகளுக்கான அரசு; பணக்காரர்களுக்கான அரசு எனத் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது என எதிர்க்கட்சிகளை சாடுகிறார்.

உண்மை தான் ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கான எந்த திட்டமும் அளிக்காது, ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும் பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு தானே!. விடுதலை என்பது வெளி நாட்டுக் கருத்தியலாம் கூறுகிறது பாஜக அரசு.'புதிய நேரடி அன்னிய முதலீடு என்ற பெயரில் வெளிநாட்டு அழிக்கும் கருத்தியலில் இருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சோசியலிஸம் போன்ற வெளிநாட்டுக் கருத்தியல்களை நமது நாட்டில் பொருத்த முயற்சிக்கும் போது, அது அமைப்பை இறுக்கமானாதாக ஆக்கிவிடுகிறதாம் கூறுகிறார் நிதியமைச்சர். அதனால் தான் ‘சோசலிச சுமை’ என்று கூறி மக்களின் பொதுத்துறை சொத்துக்களை எல்லாம் விற்றுவருகிறார்கள்.

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்று கூவிவரும் பிரதமர் நரேந்திர மோடி பணமாக்குதல், நவீனமயமாக்குதல் என்ற மந்திரத்துடன் நான்கு மூலோபாயத் துறைகளைத் தவிர்த்து 100 பொதுத்துறை நிறுவனங்களை விற்று பணமாக்கப்படும் என்றும், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல பயன்படுத்தப்படாத சொத்துக்களை விற்று 2.5லட்சம் கோடி திரட்டப்படும் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளார்.

1.அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு; 2. போக்குவரத்து, தொலைத்தொடர்பு; 3. ஆற்றல், பெட்ரோலியம், நிலக்கரி, பிற தாதுக்கள்; 4. வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் ஆகிய நான்கு மூலோபாய துறைகளை தவிர அனைத்துமே தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது பேராசையை தவிர வேறொன்றுமில்லை சென்ற ஆண்டில் தனியார்மயத்தின் மூலம் 2.1லட்சம் கோடி திரட்டப்படும் என இலக்கு நிர்ணயித்திருந்தார்கள்.ஆனால் 40355 கோடி மட்டுமே திரட்ட முடிந்தது. ‘பிஸினஸ்’ - வணிக அலுவல் மேற்கொள்வது அரசின் ‘பிஸினஸ்’ - வணிக அலுவல் அல்ல என பிரதமர் கூறியுள்ளார். தனியார்மயம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களை விற்பதும் வணிக அலுவல் தானே.

அரசு பங்குகளை தனியாரிடம் விற்பது நிதி பற்றாக்குறையை குறைப்பதற்காக அல்ல, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டே செய்யப்படுவதாக முதலீடு,பொதுச் சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் கூறுகிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவே பொதுத் துறை நிறுவனப் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மோசடியான ஒரு அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்!.

23 விழுக்காடு இந்தியக் குடும்பங்களில் மட்டுமே இணைய-கல்விக்கான வாய்ப்பு உள்ளதாக யுனிசெப் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் பெருந்தொற்று காரணமாக எந்தக் குழந்தையும் இணையக் கல்வி பெறுவதில் இழப்பைச் சந்திக்கவில்லை என்று பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம் கொள்கிறார்.

அரசு தொடர்பான வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் தனியார் வங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தனியார் துறையானது பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக இருப்பதாகவும், வர்த்தகத்தை எளிமைப்படுத்துவதற்கான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி தனியார் துறை அதிக முதலீடுகளை செய்து இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் தனியார்துறை செவி மடுத்ததா? இல்லையே…

வேளாண் உள்கட்டமைப்பு, மேம்பாட்டு செஸ் மூலம் வசூலிக்கப்படும் ரூ .30,000 கோடி மாநிலங்களுக்குச் செல்லும், என்றும் இதனால் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். இதை எப்படி நம்புவது நிதியமைச்சர் அவர்களே! முதலில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதற்கு தான் செஸ் அளவை அதிகரித்து வருகிறது பாஜக அரசு.

தனியார் மயப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாயானது தேசிய முதலீட்டு நிதியாக (NIF) சேமிக்கப்படுகிறது, இதிலிருந்து கிடைக்கும் வருவாயை மக்களுக்கான சமூகத் துறைகளுக்காக செலவு செய்யவேண்டும் என்பதே நியதி. ஆனால் இதிலிருந்தே நெடுஞ்சாலைகளை ஏற்படுத்துவதற்கான நிதி பெறப்படுகிறது.

மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியில்( CRIF) இருந்து குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கான நிதி அளிக்கப்படுகிறது!. இப்படியிருக்கையில் வேளாண் உள்கட்டமைப்பு, மேம்பாட்டு செஸ் நிதி மட்டும் என்ன இதில் விதிவிலக்கா.

''மின்சாரம் என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. இலவசமாகவோ சலுகை விலையிலோ மின்சாரம் வழங்குவது மாநில அரசின் பொறுப்பு என மக்களவையில் மத்திய இணை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

பிறகு எதற்காக மின்சாரத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்துகிறது. பொதுப்பட்டியலிலுள்ள விவசாயத் துறையின் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் விதமாகவே புதிய வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது மத்திய அரசு.

கிரெட்டா துன்பெர்க், பாடகர் ரிஹானா என உலகெங்கிலும் பலர் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். கேடு கெட்ட பாஜக அரசு கிரெட்டாவின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளது. ஒரு கருத்தை பகிர்ந்ததற்காக சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை சிறையில் அடைத்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, போராட்டக்காரர்களைத் தடுக்க சாலையில் ஆணிகளை அறைந்து தடுக்கும் முறையை தான் கண்டதில்லை. இப்போது, இந்தியாவுக்கு வெளியே இருக்கும் மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆதலால், மத்திய அரசு தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பல முறை நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். காதி, கிராமத் தொழில்கள் தொழில்நுட்ப மாற்றங்களின் மூலம் வருவாயை உயர்த்த வேண்டும் என்றும் 5 ஆண்டுகளுக்குள் ரூ.5 லட்சம் கோடிக்கு வருவாயை உயர்த்த வேண்டும் என்றும் நிதின் கட்காரி அறிவுறுத்துகிறார். ஆனால் இந்தாண்டு சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்டது வெறும் ரூ.15,700 கோடி மட்டுமே.

மத்திய அரசு தன் வருவாயை குறைத்து மதிப்பிட்டுள்ளதே ஒழிய அதிகமாக மதிப்பிடவில்லை என்றும் 2021 நிதிநிலையறிக்கையில் 5.54 லட்சம் கோடி அளவிற்கு அதிகமாக மூலதன செலவுகளுக்கான ஒதுக்கீடானது பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

ஆனால் நிதி நிலை அறிக்கையில் மூலதன முதலீடுகளுக்காக 4.39 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதான அறிவிப்பு ஒரு தோற்ற மாயை என்கிறார். முன்னாள் நிதிச் செயலாளர் கார்க். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதி நிலையறிக்கை உரையில் 2021-22 மூலதன செலவுக்கான ஒதுக்கீட்டை சென்ற ஆண்டை விட 34.5 விழுக்காடு உயர்த்தி ரூ .5.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2020-21ஆம் ஆண்டிற்கான ரயில்வே துறைக்கான ரூ. 108,398 கோடி மூலதனச் செலவினங்களில், ரயில்வே துறையில் ஏற்பட்ட வருவாய் இழப்புக்காக அளிக்கப்பட்ட 79,398 கோடி ரூபாய் தொகையும் மூலதன செலவினமாகக் காட்டப்பட்டுள்ளது.

இதைக் கழித்தோமானால் வெறும் ரூ .29,000 கோடி மட்டுமே 2020-21ல் ரயில்வே துறைக்கு மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இது அல்லாமல் 12,000 கோடி கடன் தொகையும் மூலதன செலவினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் நீக்கிப் பார்த்தால் திருத்தப்பட்ட மூலதன செலவு மதிப்பீடு ரூ .347,765 கோடியாகக் குறைகிறது, எனவும் தெரிவித்துள்ளார்.

2020-21ல் அரசு செலவினங்களின் உயர்வு கணக்கிடப்பட்டதைப் போல் 28.4 சதவீதமாக இருக்காது, 17.3 சதவீதமாக இருக்கலாம். ரூ .30.4 லட்சம் கோடி அரசு செலவிற்கான ஒதுக்கீடாக 2020-21 நிதி நிலை அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்டது, இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ. 34.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது, ஆனால் 2019-20 ல் 26.9 லட்சம் கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது எனவும், 2021ல் அரசு செலவினம் திட்டமிடப்பட்டதை விட மிகக் குறைவானதே என்றும் அது வேண்டலை தூண்டாது என்றும் இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் உணவு மானியமாக அளிக்கப்பட்ட ரூ.2.4 லட்சம் கோடியில் பகுதியளவு, இந்திய உணவு கழகத்துக்கு ஏற்கெனவே செலுத்த வேண்டிய கடன் தொகையே என்பதையும் குறிப்பிடவேண்டும்.

பணவீக்கம்:

டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு 4.06 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 1.89

விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 15.84விழுக்காடு குறைந்துள்ளது. தானியங்களின் விலைவாசி 0.07 விழுக்காடு அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 13.39 விழுக்காடு அதிகரித்துள்ளது.

முட்டையின் விலை 12.85 விழுக்காடு உயர்ந்துள்ளது.எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 19.71 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன்,இறைச்சியின் விலை 12.54 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.27விழுக்காடு உயர்ந்துள்ளது.

டிசம்பரில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி நவம்பரில் மொத்த உற்பத்திக் குறியீடு ஒரு விழுக்காடு சரிவடைந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறையில் உற்பத்தி 4.8 விழுக்காடு சரிவடைந்துள்ளது. செய்பொருளாக்கத் துறையில் உற்பத்தி 1.6 விழுக்காடும், மின்சார உற்பத்தி 5.1 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் முதன்மை பொருட்களின் உற்பத்தி 0.3 விழுக்காடு சரிவடைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 0.6 விழுக்காடும் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 0.9 விழுக்காடும், நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 4.9 விழுக்காடும் அதிகரித்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்கள் (2.0%), இடைநிலைப் பொருட்கள் (0.4%), ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

2020-21 நிதியாண்டின் தேசிய வருவாய்:

தேசிய புள்ளியியல் அலுவலகம் 2020-21 நிதியாண்டின் தேசிய வருவாய் குறித்த இரண்டாவது மதிப்பீடுகளையும் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது.

2020-21ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 134.09 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ல் 4.0 விழுக்காடாக அதிகரித்த வளர்ச்சி விகிதம் 2020-21ல் 8 விழுக்காடு குறுக்கமடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர் வருவாய் 9.1 விழுக்காடு குறுக்கமடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2020-21 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 விழுக்காடு வளர்ச்சியுடன் 36.22 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் காலாண்டில் மொத்த மதிப்புக் கூட்டலின் மதிப்பு 6.5 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி 3.9 விழுக்காடும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி 1.6 விழுக்காடும், மின்சாரம்,நீர் வழங்கல், பிற சேவைகளின் வளர்ச்சியானது 7.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

சுரங்கத் தொழில்துறையின் வளர்ச்சி 5.9 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது, வர்த்தகம், போக்குவரத்து, ஹோட்டல், தகவல் தொடர்புதுறைகளின் வளர்ச்சி 7.7 விழுக்காடும், பொது நிர்வாகம், பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி 1.5 விழுக்காடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜனவரியில் தொழில்துறை வளர்ச்சி:

தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக்குறியீடு ஜனவரியில் 0.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜனவரியில் நிலக்கரி உற்பத்தி 1.8 விழுக்காடும், கச்சா எண்ணெய் உற்பத்தி 4.6 விழுக்காடும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.0 விழுக்காடும் குறைந்துள்ளது.

பெட்ரோலிய சுத்திகரிப்பு தயாரிப்புகள் 2.6 விழுக்காடு குறைந்துள்ளது.உரங்கள் உற்பத்தி 2.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.எஃகு உற்பத்தி 2.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி 5.9 விழுக்காடு குறைந்துள்ளது. மின்சார உற்பத்தி 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அதிக உதவி கிடைக்காவிட்டால் ஒரு தலைமுறையையே இழக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார். கோவிட்-19 தாக்குதலுக்குப் பிறகு வளர்ந்து வரும் நாடுகளில் 6 விழுக்காட்டிற்கும், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் 2விழுக்காட்டிற்கும், வளர்ந்த நாடுகளில் 24 விழுக்காட்டிற்கும் நிதி அளிக்கப்பட்டுள்ளன. 50 விழுக்காடு வளரும் நாடுகள் பின்தங்கியிருக்கும் அபாயம் உள்ளது. பெரிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, பணக்கார நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் உதவி செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் ஏழை நாடுகள் குறைந்தபட்சமாக கோவிட்-19 தடுப்பு மருந்துகளை கிடைக்கப்பெறச் செய்வதைக் கூட பணக்கார நாடுகள் தடுத்துள்ளன. கொரோனா தடுப்பு மருந்து நிறுவனங்களுடன் பணக்கார நாடுகள் நேரடியாக செய்து கொள்ளும் ஒப்பந்தத்தால் ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுவது பாதிக்கப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.வெறும் 10 நாடுகளுக்கு மட்டும் சுமார் 75 விழுக்காடு கரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது இந்தியா மனிதகுலத்திற்கு சேவை செய்ய முடிந்தால், அது தனியார் துறையின் பங்கே காரணமாகும் என்று கூறுகிறார் பிரதமர். அதனால் தான் பாஜக அரசு இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிட், ராஜஸ்தான் ட்ர்கஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் என்ற இரு அரசு பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடவும், 3 பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்குகளை விற்கவும் திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை முக்கியமானது என்றால், தனியார் துறையின் பங்கும் மிக முக்கியமானது என்ற பிரதமர் , "தனியார் துறைக்கு எதிராக முறையற்ற சொற்களைப் பயன்படுத்துவது கடந்த காலங்களில் ஒரு சிலருக்கு வாக்குகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் அந்த காலம் கடந்து போய்விட்டது வாக்குகளுக்காக தனியார் துறையை ”அவதூறு” "துஷ்பிரயோகம் செய்யும்" கலாச்சாரம் இனி ஏற்றுக் கொள்ளப்படாது தனியார் துறையை துஷ்பிரயோகம் செய்யும் கலாச்சாரம் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்கிறார் நரேந்திர மோடி.

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்னும் பாஜக அரசின் கொள்கையானது, குறைந்தபட்சம் மக்களுக்கு, அதிகபட்சம் பெரும் தனியார் துறைக்கு என்பதையே குறிப்பிடுகிறது.

- சமந்தா